Sunday, December 16, 2007

ஒரு நவம்பர் கச்சேரி

மியூசிக் அகாதமி – உஸ்தாத் ஃபத்தே அலிகான் – நவம்பர் 10 இரா.முருகன்

சென்னை நகரத்துக்கும் இந்துஸ்தானி சங்கீதத்துக்கும் தாயாதி பங்காளி உறவு. டிசம்பர் இசைவிழாவின் போது மூக்கில் நுழைத்து உறிஞ்ச விக்ஸ் இன்ஹேலர், கம்பளி மப்ளர், இருமல் மாத்திரை சமாச்சாரங்களோடு ராத்திரி கச்சேரியாக பீம்சென் ஜோஷியைக் கேட்க பெருந்திரளாக ஆஜாராகி விடுவார்கள் நம்ம மக்கள்.

‘இதான் கிரானா கரானா சங்கீத பாணியா? அட, இந்த ஆலாபனை பூர்ய தனாஸ்ரீ போல இருக்கு, ஆஹிர் பைரவியிலே நம்மளை விட கம்பீரமான சோகம் பாருங்க’. இப்படி கண்டக்டட் டூரில் தாஜ்மஹாலைப் பார்க்க ஆக்ரா போகிற டூரிஸ்ட்கள் போல் எட்டி நின்று பார்த்துக் கேட்டு நாலு கிளாப்ஸ் உதிர்த்துவிட்டு மியூசிக் அகாதமிக்கு வெளியே ஆட்டோ பிடிக்க நின்று அடுத்து கைதட்டுவார்கள்.

பாட்டியாலா பாணி பாகிஸ்தானி பாடகர் பத்தே அலிகானின் நவம்பர் பத்தாம் தேதி கச்சேரிக்கு, பீம்சிங் இயக்கிய பா-வரிசை படங்கள் போல் படைதிரண்டு மியூசிக் அகாதமிக்குள் படியேறியவர்களும் இவர்களே.

பாட்டியாலா கரானா சென்னை ரசிகர்களுக்குப் பழக்கமானதே. வாக்கிங் ஸ்டிக், வைரக் கடுக்கன் பெரிசுகள் இன்னும் சிலாகிக்கும் படே குலாம் அலிகான், பத்து இருபது வருடம் முன்னால் பைரவியில் ‘பவானி தயாநி’ பாடி மார்கழிக் குளிரில் ஐஸ்கட்டியாக ரசிகர்களை உருக வைத்த பர்வீன் சுல்தானா எல்லாம் பாட்டியாலா பாணி சங்கீதக்காரர்கள் தான். ஆனாலும் இந்தக் கச்சேரி வேறே தினுசு.

இந்து பத்திரிகையின் வெள்ளிகிழமை விமர்சனப் பகுதி ஏற்பாடு செய்திருந்த கச்சேரியை உஸ்தாத் பத்தே அலிகானும், அவர் மகன் ருஸ்தம் பத்தே அலிகானும் ரொம்பவே சாத்வீகமாக ஆரம்பித்தார்கள். யார் யோசனையோ, மேற்கத்திய பாணியில் மேடையில் மட்டும் விளக்குப் போட்டு, அரங்கமே இருளே என்று அந்தகாரத்தில் ஆழ்த்தப்பட்டிருந்தது. “விளக்கைப் போடுங்கப்பா, கேட்கறவங்க முகத்தைப் பார்க்காம எங்க ஊர்லே பாடிப் பழக்கம் இல்லே” என்று வித்வான்கள் ஆட்சேபிக்க, ரசிகர்களின் உற்சாகமான கரவொலியில் நாலு விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிச்சம் போட்டன.

அப்பா கான் குரலையும், பக்கவாத்தியமாக உட்கார்ந்திருக்கிற சாரங்கி வித்வான் வாத்தியத்தின் தந்திகளையும் டெஸ்ட் டிரைவ் செய்து கொண்டிருக்க “உங்க ஊர்லே இந்த ராகத்தை கல்யாணின்னு சொல்றதாக் கேள்விப்பட்டிருக்கோம். எங்க ஊர்லே இதோட பேரு யமன்” என்று அறிவிப்போடு ருஸ்தம் கானும் இதர பாகிஸ்தான்காரர்களும் யமுனா கல்யாணி ராகத்தைக் கதவு திறக்கலானார்கள்.

நாலு நோட் முன்னே போனதும் பிள்ளை கான் மைக்கைப் பிடித்து, “எங்க ஊர்லே பாடறபோது வாஹ் வாஹ்ன்னு உரக்கச் சொல்லி உற்சாகப்படுத்தறது ரசிகர்கள் வழக்கம். சத்தம் போடுங்கப்பா” என்று குரல் கொடுத்தார். அதிருதில்லேன்னு கேட்டுக் கேட்டு ஆமான்னாலும் இல்லேன்னாலும் விடாமல் அப்புறம் ரசிகர்களை சங்கீத மழையில் புரட்டியெடுத்து விட்டார்கள் அப்பாவும் பிள்ளையும்.

யமன் வெற்றிகரமாக அரங்கேறிய பிறகு கவர்னர் பர்னாலா சிரமப்பட்டு மேடையேறி தம்பூராக்காரரையும் விடாமல் பூச்செண்டு கொடுத்தார். பஞ்சாபியில் பாடச்சொல்லி பர்னாலா ‘ஆளுநர் விருப்பம்’ வெளியிட்டதோடு இண்டர்வெல்.

இடைவேளை முடிந்து கச்சேரி தொடரும் முன்னால், திரும்ப அரங்கத்தில் இருட்டுக்கடை. “பாகிஸ்தான்லே தான் இருட்டுன்னு பார்த்தா இங்கேயுமா?” ஜூனியர் கான் சமயம் பார்த்து அடித்த ஜோக் முஷாரப் காதில் விழுந்திருக்காது.

பர்னாலா கேட்டபடிக்கு பஹாடி ராகத்தில் பாட ஆரம்பித்தார்கள் கான் ஜூனியரும் சீனியரும். முகமத் ரஃபி ‘சவுத்வி கா சாந்த் ஹை’ இந்தி சினிமா பாட்டு மூலமும், தமிழில் பி.சுசீலா கர்ணனில் ‘கண்ணுக்குக் குலமேது’ மூலமும் ரசிகர்கள் மனதில் அழியாத இடத்தைப் பிடித்த மலைப் பிரதேச ராகம் இது. பத்தே கான் “கித்தே சங்கா மேரே டோல்” என்று தொடங்கிய பகாடி வித்தியாசமாக இருந்தது.

சீனியர் கான் பகாடியில் இமயமலைத் தென்றலோடு ஆல்ப்ஸ் சிகரங்களின் குளிர்காற்றையும் கலந்தார். கிழக்கில் புறப்பட்டு, மேற்கத்திய சங்கீத முறைக்கு ஜிவ்வென்று ஷண்டிங் ஆகி தடம் புரளாமல் அவர் சஞ்சரிக்கும் இனிமையில் மெய்மறந்திருக்கும் போது மைக்கைப் பிடுங்கி திரும்ப ஜூனியர் கான் – “நாங்க பஞ்சாபிக்காரங்க. சத்தமா, வாய்விட்டுப் பாடாட்ட சரிப்படாது. பாருங்க, எங்கப்பா எப்படி இந்துஸ்தானியிலே அழகா வெஸ்டர் மியூசிக்கை கலக்கறார்னு”.

மெய்மறக்க வைக்கும் பாட்டுக்கு நடுவே சதா பேசுவது பாகிஸ்தானில் வழக்கம் போல இருக்கிறது. தொடவேண்டும் உச்சத்தை என்று கணவனும் மனைவியும் அந்தரங்கமாகும் நேரத்தில் “இந்த மாசம் எலக்ட்ரிசிட்டி பில் கட்டியாச்சா?” என்று விசாரிக்கிறது போன்ற தொந்தரவான சமாச்சாரம் இல்லியோ இது.

பஹாடிக்கு அப்புறம் வந்த கமாஸ் தும்ரி (அவங்க பாணியிலே கமாஜ்) இன்னொரு வித்தியாசம். சங்கராபரணத்தில் ‘ப்ரோசேவா ரெவருரா” என்று மஞ்சு பார்க்கவி சிருங்காரம் காட்டிய கமாஸ் இல்லையாக்கும் இந்த கான் சாகேப் கமாஜ்.

பாட்டியாலா கரானாவில் படேகுலாம் அலிகான், பர்வீன் சுல்தானா என்று ஒரு அமைதியான பிரிவும், பத்தே அலிகான் குடும்பத்தின் த்ரூபத், தாத்ரா, தும்ரி, கயால் என்று ஃபாஸ்ட் பீட் ஆன இன்னொரு பிரிவும் உண்டு என்பது கொஞ்சம் தாமதமாகத்தான் தெரிந்தது. இவர்கள் துணிந்து சோதனை முயற்சியில் ஈடுபடுகிறவர்கள். வேகமே மூச்சு. மேல் ஆக்டேவ்களில் குரல் கிட்டத்தட்ட அபஸ்வரமாகக் கீச்சிடும் வரை நிறுத்துவதில்லை என்று ஜூனியர் கான் ஒரு முடிவோடு தான் சென்னைக்கு மூட்டை கட்டியிருக்கிறார் என்று தெரிகிறது.

தொடர்ந்து வந்த கலாவதி நம்ம ஜேசுதாஸ் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ‘அதிசய ராகம் ஆனந்த ராகம்’ என்று ஆரம்பித்து, பைரவிக்கு ட்ராக் மாறுவதற்கு முன் பொழிவது. சுருதி சுத்தமாகக் காதில் விழுந்து மனசு முழுக்க கலாவதி நிறைந்தது.

ரசிகர்களை பாட்டோடு ஒத்தாசையாகக் கைதட்டும்படி ஜூனியர் கான் கேட்டுக் கொள்ள அப்புறம் சூஃபியானா கலாம் என்ற ஆன்மீகத் தேடலைப் பற்றிய இனிமையான பஞ்சாபிப் பக்திப் பாடல்கள். ஜூனியரை மட்டும் பாட விட்டுவிட்டு சீனியர் ஓய்வெடுத்துக் கொண்ட நேரம் அது. கிட்டத்தட்ட முப்பது வருடமாக உலகம் முழுக்கச் சுற்றிச் சீடர்களுக்குப் பயிற்சி அளித்துக் களைத்தவர் அவர்.

“இன்னும் கொஞ்சம் பலமாக் கைதட்டுங்க”

ஜூனியர் கான் ஆர்மோனியக் கட்டைகளை பலமாக அழுத்தியபடி கடைசிப் பாட்டாக எடுத்து விட்டது “தமாதம் மஸ்த் கலந்தர்”. பங்களாதேஷ் பாடகி ரூனா லைலா இருபது வருடம் முன்னால் மெல்லிசை மேடைகளில் பிரபலமாக்கிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஸ்பீட் பாட்டு இது. ஆனாலும் இந்துஸ்தானி இசைக் கச்சேரியில் மங்களம் பாட இந்தக் கிட்டத்தட்ட டப்பாங்குத்து வேணுமா?

இதே ரீதியில் சுத்தபத்தமாக ஏலநீ தயராதாவில் ஆரம்பித்து, ராதா காதல் வராதா ரீமிக்ஸ் வழியே மன்மத ராசா என்று முடிக்க நம்ம வித்வான்களுக்குத் துணிச்சல் வர இன்னும் இரண்டு தலைமுறையாவது கடந்து போக வேண்டியிருக்கும்.




4 Comments:

At 8:42 am, Blogger Costal Demon said...

//தொடவேண்டும் உச்சத்தை என்று கணவனும் மனைவியும் அந்தரங்கமாகும் நேரத்தில் “இந்த மாசம் எலக்ட்ரிசிட்டி பில் கட்டியாச்சா?” என்று விசாரிக்கிறது போன்ற தொந்தரவான சமாச்சாரம் இல்லியோ இது.//


//இதே ரீதியில் சுத்தபத்தமாக ஏலநீ தயராதாவில் ஆரம்பித்து, ராதா காதல் வராதா ரீமிக்ஸ் வழியே மன்மத ராசா என்று முடிக்க நம்ம வித்வான்களுக்குத் துணிச்சல் வர இன்னும் இரண்டு தலைமுறையாவது கடந்து போக வேண்டியிருக்கும்.//


;-) கார்டூன் ஜோக்குகள் நினைவுக்கு வருகின்றன.

 
At 9:58 am, Blogger சகாதேவன் said...

இந்துஸ்தானி இசையையும் இவ்வளவு அழகாக ர்சித்து விமர்சனம் செய்திருக்கிரீர்கள். கை தட்டுவது கூட பாடகர்கள் கேட்டுதான் ர்சிகர்கள் செய்தது சங்கடமாக இருக்கிறது.

சகாதேவன்.

 
At 3:45 am, Blogger Unknown said...

நன்றி உங்கள் விமர்சனத்திற்கு! மீதம் உள்ள டிசம்பர் கச்சேரிகளை நீங்கள் கேட்டு, தகுந்த விமர்சனம் எழுத, உங்களுக்கு வேண்டிய அவகாசமும், ஒத்துழைப்பும் எல்லோரும் தர எல்லாம் வல்லவனை வேண்டுகிறேன்.

 
At 3:47 am, Blogger Unknown said...

நன்றி உங்கள் விமர்சனத்திற்கு! மீதம் உள்ள டிசம்பர் கச்சேரிகளை நீங்கள் கேட்டு, தகுந்த விமர்சனம் எழுத, உங்களுக்கு வேண்டிய அவகாசமும், ஒத்துழைப்பும் எல்லோரும் தர எல்லாம் வல்லவனை வேண்டுகிறேன்.

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது