Sunday, June 18, 2006

எடின்பரோ குறிப்புகள் - 19

இங்கிலாந்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. ஓவர்கோட், கம்பளிக் கோட்டு, ஸ்வெட்டர் இத்யாதிகளுக்கு இப்போதைக்குப் பிரியாவிடை கொடுத்துப் பரணிலே ஏற்றிவிட்டு, டீ ஷர்ட்டோடும், பெர்மூடாவோடும் பிரின்சஸ் தெருவில் சனிக்கிழமை மதியக் கூட்டம் அலைமோதுகிறது.

எல்லா டீ ஷர்ட்டிலும் கிட்டத்தட்ட ஒரே வாசகம் - ‘எனக்குப் பிடித்த அணி, இங்கிலாந்தை எதிர்த்து விளையாடும் அணி’.

உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் இங்கிலாந்து கடந்த வியாழக்கிழமை டிரினிடாட் - டுபாகோ அணியை எதிர்த்து விளையாடி இரண்டு - பூஜ்யம் கோல் கணக்கில் வெற்றி பெற்றது ஏற்படுத்திய ஏமாற்றத்தை, பியர் கடை ஸ்டூலில் உட்கார்ந்து குடித்து விவாதித்து முடித்து ஸ்காட்லாந்து சகித்துக் கொண்டாகிவிட்டது.

டேவிட் பெக்கம் ரைட் பாக்வேர்டாக பின்வரிசைக்கு இடப்பெயர்ந்து ஜாக்கிரதையாகத் தடுத்தாட உத்தேசித்தாலும், வரும் செவ்வாய்க்கிழமை நடக்கும் அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் முதுகில் ஸ்வீடன்காரர்கள் டின் கட்டிவிடுவார்கள்; அதோடு இந்தப் பசங்க ஆட்டம் க்ளோஸ் என்று தற்போதைய விவாதம் பிரின்சஸ் தெரு முனை, தோட்ட பெஞ்சுகளில் உற்சாகமாகத் தொடர்கிறது.

மாசேதுங்க் தாராள மனசோடு கைகாட்டிய ஆயிரம் மலர்களோடு கொசுறாக இன்னும் இருபது முப்பது பூ வகைகள் எல்லா நிறத்திலும் பூத்துக் குலுங்கி எடின்பரோ கோட்டைப் பகுதியை வண்ணக் களஞ்சியமாக்கியிருக்கும் நேர்த்தியை ரசிக்க நேரமில்லாமல், குரேஷியாவை எதிர்த்து பிரேசில் ஆட்டக்காரரன் காகா போட்ட அற்புதமான கோலை ஒருத்தன் செடிகொடிகளுக்கு நடுவே பசும்புல்லை மிதித்துத் துவைத்தபடி நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருக்கிறான்.

ரொனால்டோ, ரொனால்டின்ஹோ யாரும் இந்த வருடம் ஹீரோ இல்லை, இது காகா வருடம் என்று ஒரு சின்ன மஞ்சள் பூவைத் துடிக்கத் துடிக்கக் கிள்ளி எடுத்து இதழ் இதழாக வாயில் வைத்துக் கிழித்துத் துப்பியபடி இன்னொருத்தன் உற்ச்காகமாக குரலை உயர்த்துகிறான்.

உலகக் கோப்பை எப்போ முடியும் என்று கேட்டபடி மிச்ச மலர்கள் காற்றில் ஆடிக் கொண்டிருக்கின்றன.
888888888888888888888888888888888888888888888888888888888888888

பிரின்சஸ் தெரு ராயல் ஸ்காட்டிஷ் அகாதமி வாசலில் பெரிய சைஸ் கன்னட சினிமா பேனர் தட்டுப்பட்டபோது மூக்குக் கண்ணாடியை மாற்ற வேளை வந்துவிட்டது என்றுதான் முதலில் தோன்றியது.

ஆனாலும் சந்தேகம் நிவர்த்தியாகாமல் இன்னும் அருகில் போய்ப் பார்க்க, அது பேனர் தான். பெரிய சைஸ் தான். கன்னடமே தான்.

பேனரில் நூறு வருடத்துக்கு முந்தைய கெட்-அப்பில் ஆணும் பெண்ணுமாக இரண்டு பேர் - முகமும் கழுத்தும் மட்டும். தலைக்கு மேல் நீளமாகப் பேனரின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிவரை நெளியும் கன்னட எழுத்துக்கள். இரண்டு முகத்திலும் கண் இமைகளுக்குக் கீழே ஓட்டை. ஓட்டை வழியாகப் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் யாருக்கோ சொந்தமான இரண்டு ஜோடி நிஜக் கண்களும் பார்வையில் படுகின்றன. சர்ரியலிசச் சாயலைப் பூசிக்கொண்டு ஒரு சாயங்கால நேரம் மெல்ல நகர்ந்து வந்து கொண்டிருக்கிற உணர்ச்சி.

ராயல் ஸ்காட்டிஷ் அகாதமிக்குள் படியேறும்போது பேனருக்குப் பின்னால் கட்டிய சாரத்தில் இன்னொரு வெள்ளைக்கார ஜோடி ஜாக்கிரதையாகக் குதித்தேறி, மரப்பலகையில் செதுக்கியிருந்த ஓட்டைகளுக்குள் கண் வைத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தது.

அகதாமியில் இந்த வாரம் ஸ்காட்டிஷ் கலைஞர்கள் மன்றத்தின் (சொசைட்டி ஓஃப் ஸ்காட்டிஷ் ஆர்ட்டிஸ்ட்) 109-வது வருடக் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. நூற்றொன்பது வருடமாக விடாமல் கலைக் கண்காட்சி நடத்தும் இந்தக் கலைஞர் பேரவையை இந்த ஒரு சாதனைக்காகவே எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நுழைவுச் சீட்டோடு காட்சி அட்டவணையையும் விலை கொடுத்து வாங்கிக்கொண்டு புரட்ட, இந்த ஆண்டுக் கண்காட்சியில் சிறப்பம்சம் - இந்தியக் கலைஞர்களின் பங்களிப்பு.

கொல்கத்தா ரொபீந்த்ர பாரதி பல்கலைக் கழகக் கலை வரலாற்றுப் பேராசிரியரும் நீர் வண்ண ஓவியவருமான சோஹினி தார், mixed media படைப்புகளில் சாதனை படைக்கும் கவிதா ஜெய்ஸ்வால், களிமண் பிரதிமைகள் மற்றும் ப்ரிண்ட் மேக்கிங், புகைப்படக்கலைஞரான சென்னை நாகசாமி ராமச்சந்திரன், இன்னொரு சென்னை ஓவியரான ரவிசங்கர் ஆகியோரின் படைப்புகள் இந்த ஆண்டு ஸ்காட்லாந்து கலைக் கண்காட்சியில் இடம் பெற்றுக் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

முக்கியமாக திருவல்லிக்கேணி ஓவியரான ரவிசங்கரின் செறிவும் அடர்த்தியும் கொண்ட பேனா - மசி ஓவியங்கள் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். கொஞ்சம் இந்திய மரபு ஓவியச் சாயலோடு இவர் வரைந்து காட்சிக்கு வைத்திருக்கும் இரண்டு ஓவியங்களுமே ஸ்காட்லாந்து பற்றியவை.

ஸ்காட்லாந்தின் தேசிய உடையான கில்ட் அணிந்தவன் குதிரையில் ஆரோகணித்திருக்கும் I had my heart set on the dark horse ஓவியத்தின் கருப்பு வெளுப்பு உருவாக்கும் eerie சூழல், குதிரையின் உடல், ஆரோகணித்திருப்பவனின் முகம் இவற்றின் பரப்பில் இயைந்தும் அல்லாமலும் நுணுக்கமாக நிரப்பப்பட்ட visual தகவல் செறிவால் கூடுதலாக தீவிரமடைகிறது. ஸ்காட்லாந்தின் தேசிய நாதசுவரமான பேக்-பைப் வாசிக்கும் கலைஞனைச் சித்தரிக்கும் Bagpipes wrapped around my memories ஓவியத்தில் வாத்தியக் கலைஞனைச் சுற்றிக் குழல் போல வளைந்து நெருக்கும் வளையங்களில் ஒன்று முதுகுக்குப் பின்னாலிருந்து பாம்புத் தலையாக எட்டிப் பார்க்கிறது.

பாரம்பரிய உடையான கில்ட்டின் மேல் சட்டைப்பையில் லா கோஸ்ட்டே உடை தயாரிப்பாளரின் முத்திரை எழுதியிருந்த நினைவு.

வாசலில் வைத்திருக்கும் கன்னட பேனர்? பெங்களூரில் பேனர் ஆர்ட்டிஸ்டாக எத்தனையோ கன்னட, இந்தி, தமிழ்ப் படங்களுக்கு பேனர் எழுதிய மூர்த்தி முத்து, லாசர் என்ற கலைஞர்களின் ஒத்துழைப்போடு, எடின்பரோ சிற்பக் கலைஞர் ஏனியஸ் வைல்டர் உருவாக்கியது. எட்வர்ட் ஸ்டூவர்ட் சார்லஸ், ப்ளோரா மக்டொனால்ட் என்ற நூறு வருடத்துக்கு முற்பட்ட ஸ்காட்லாந்துப் பிரபுவும் சீமாட்டியும் இடம் பெறும் இந்த பேனர், ‘To see ourselves as others see us’ என்ற கவிஞர் ராபர்ட் ப்ரவுனின் கவிதை வரிகளுக்கு உயிர் கொடுப்பது. பேனரின் கண் துவாரங்கள் வழியாகப் பின்னாலிருந்து உலகத்தைப் பார்க்கும்போது, ‘பார்வையாளர்கள் - காட்சிப் பொருள் இரண்டும் கலந்த தற்கால உலகளாவிய கலாச்சாரம் சார்ந்த அடையாளத்தை அடையும் அனுபவம் கிட்டுவதாக’ கண்காட்சியின் காட்சிப் பட்டியல் அறிவிக்கிறது.

‘காட்சியும் நானே, காண்பதும் நானே’.
8888888888888888888888888888888888888888888888888888888888888888

அண்மையில் காலமான எடின்பரோ எழுத்துக்காரியும் பின் நவீனத்துவத்துவப் படைப்பாக்கத்தின் முக்கியமான முன்னோடியுமான மூரியல் ஸ்பார்க் பற்றி இந்தப் பகுதியில் சில வாரங்கள் முன்னால் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

ஸ்பார்க்கின் புகழ்பெற்ற நாவலான The Prime of Miss Jean Brodie (பெங்குவின் வெளியீடு) படிக்கக் கிடைத்தது.

நிஜவாழ்க்கை, அதைச் சார்ந்தும், விலகிப் படர்ந்தும் பந்தலிட்டுப் போகும் புனைவு என்று நகரும் நாவல் 1930-களின் ஆரம்பத்தில் எடின்பரோ நகரப் பெண்கள் பள்ளியைக் களமாகக் கொண்டது. மிஸ் ப்ராடி என்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியை கல்வி, அறிவுத் தேடல், இவற்றோடு வாழ்க்கையின் தொடர்பு பற்றிய மரபான சிந்தனைகளோடு வேறுபட்டவள். இவளுடைய வகுப்பு மாணவி ஒருத்தியின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது.

கதை நடைபெறும் கிட்டத்தட்ட முப்பது வருட காலத்தை வளைத்து நெகிழ்த்திச் குறுக்கி கதையாடலோடு சிரமமில்லாமல் கலக்க வைக்கும் முயற்சியில் மூரியல் ஸ்பார்க் பெற்றிருக்கும் வெற்றி அசாதாரணமானது. ‘முப்பது வருடம் கழித்து ஹோட்டல் தீ விபத்தில் இறக்கப் போகிற மேரி வகுப்பில் டீச்சரைப் பார்த்துக் கேட்டாள்’ என்று சகஜமான ஆரம்பிக்கும் வாக்கியங்கள். இந்த foretelling-ல் குறித்த எதிர்காலம் அடுத்த வாக்கியத்தில் நிகழ்காலமாகிறது.

அங்கே இருந்து flash-back-ல் ஒரு பத்து வருடம் பின்னால் போய் ஒரு விவரிப்பு. அது வளைந்து திரும்பி அடுத்த வாக்கியத்தில் வகுப்பில் மேரியோடு டீச்சருக்கு முன்னால் மறுபடியும் பாடம் கேட்க உட்கார்ந்து விடுகிறது.

இந்த மாணவிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை. டீச்சருக்கு அவளுடையது. மாணவிகள் டீச்சர் கோடிகாட்டிய அவளுடைய பழைய கால அனுபவங்களைத் தங்கள் கற்பனையால் முழுமைப்படுத்த முற்படுகிறார்கள். அதை எல்லோருடைய நிகழ்கால அனுபவங்களும், அவை ஏற்படுத்தும் புதிய கற்பனைகளும் பாதித்துக் கொண்டிருக்க, எல்லாமே காலத்தோடு நகர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒரு சின்னக் குழப்பம் கூட ஏற்படுத்தாமல் பக்கங்கள் நகர, விறுவிறுவென்று நாவல் பாய்ந்து, சட்டென்று முடியும்போது மூரியல் ஸ்பார்க்கின் படைப்பாற்றல் ஏற்படுத்திய பிரமிப்பு இன்னும் அடங்கிய பாடில்லை.

புதிய சிந்தனைகளோடும் படைப்பாக்கம் குறித்த உற்சாகத்தோடும் உலக இலக்கியப் போக்குகளை உள்வாங்கி மாற்றி, படர்த்தி, ஆழப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் இம்மாதிரிப் படைப்புகள் எல்லா மொழிகளிலும் அவற்றுக்கு உரிய கவனிப்பையும், வரவேற்பையும் பெற்றிருக்கின்றன - தமிழைத் தவிர.

Monday, June 12, 2006

எடின்பரோ குறிப்புகள் - 18

முதல் ஆட்டத்தில் 1 - 0 goal கணக்கில் வெற்றி பெற்று ஒரு வழியாக இங்கிலாந்து உலகக் கோப்பை கால்பந்தாட்டத்துக்குள் நுழைந்திருக்கிறது. ஆட்டம் ஆரம்பித்து ஐம்பத்தைந்தாம் நிமிடம் விழுந்த கோல் எதிர்பார்த்தபடி டேவிட் பெக்கமோ, இந்த ஆண்டின் புதிய கண்டுபிடிப்பான ஆறு அடி ஏழு அங்குல உயர ஆட்டக்காரர் பீட்டர் கிரவுச்சோ போடாதது. மான்சஸ்டர் யுனைடட் குழுவின் நட்சத்திர ஆட்டக்காரரான வெயின் ரூனிக்குக் காலில் அடிபட்டதைப் பற்றிக் கவலைப்படாமல், அவரை ஜபர்தஸ்தாக ஆட்டக் களத்தில் இறக்கிய இங்கிலாந்து கோச் ஸ்வென் எரிக்ஸன் எதிர்பார்த்தபடி ரூனியும் போடாதது. ஜெர்மனி ப்ராங்பர்ட் பந்துகளி மைதானத்தில் ஐம்பதாயிரம் ரசிகர்களும், டெலிவிஷன், ப்ராட்பேண்ட் இண்டர்நெட் மூலம் உலகம் முழுக்க எத்தனையோ கோடி ரசிகப் பெருமக்களும் கண்டு களித்தபடி இருக்க, இந்த எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் வெற்றி கோலைப் போட்டது இங்கிலாந்தை எதிர்த்து விளையாடிய பராகுவே நாட்டுக்காரரான கார்லோஸ் காம்மரா.

பெக்கம் முப்பத்தைந்து கஜ தூரத்திலிருந்து உதைத்து விட்ட ஃப்ரீ கிக்கைத் தலையால் முட்டி காம்மரா அனுப்பியது சொந்த அணியான பராகுவேயின் கோல்போஸ்டுக்கு. அத்ரயே உள்ளூ. அப்புறம் மருந்துக்குக் கூட யாரும் கோல் போடாததால், இங்கிலாந்து மகத்தான வெற்றி.

எடின்பரோவிலும் ஸ்காட்லாந்தின் மற்றப் பகுதிகளிலும் பெருத்த ஏமாற்றம் நிலவுகிறது. இங்கே இருக்கப்பட்ட எல்லா வயதுக்கார கால்பந்தாட்ட ரசிகர், அ-ரசிகர்களும் ஒரு பத்து பதினைந்து நாளாக பராகுவே நாட்டுக் கொடிகளை வாங்கி ஸ்டாக் செய்து வைத்திருந்தார்கள். பராகுவே ஜெயித்து அந்த வெற்றியை விடிய விடியக் கொண்டாடப் போட்ட திட்டமெல்லாம் தவிடுபொடியாக, இங்கிலாந்துக்கு வெற்றி.

எடின்பரோ மற்றும் இதர ஸ்காட்லாந்து பிரதேசங்கள் இங்கிலாந்தின் பகுதியில்லையா என்று யாராவது கேட்டால் ஆமா-இல்லை. ஸ்காட்லாந்து இன்னும் இங்கிலாந்தில் தான் இருக்கிறது.

ஸ்காட்லாந்துக்காரர்களின் முன்னூறு வருட இங்கிலாந்து வெறுப்பும் அதேபோல் இன்னும் தணியாமல் சதா அடக்கி வாசிக்கப்பட்டபடிதான் இருக்கிறது. உலகக் கோப்பை கால்பந்தாட்டம் போன்ற முக்கியமான தருணங்களில் ‘எழவெடுத்த இங்கிலாந்து தோற்கட்டும்’ என்று ஒட்டுமொத்தமாக ஸ்காட்லாந்தின் குரல் ஓங்கி ஒலிப்பது லண்டன் வரை கேட்கும்.

இவ்வளவுக்கும் ஸ்காட்லாந்துக்குக் கிட்டத்தட்ட இன்னொரு நாடு போல் அந்தஸ்தைத்தான் இங்கிலாந்து அளித்துக் கவுரவித்திருக்கிறது. மாநிலத் தலைநகர் எடின்பரோவில் கூடுவது சட்டப் பேரவை இல்லை. ஸ்காட்லாந்து நாடாளுமன்றம். இது தவிர ஸ்காட்லாந்துக்குத் தனியாக கரன்சி நோட்டு அடித்துக் கொள்ள உரிமை உண்டு. எலிசபெத் மகாராணிக்குப் பதிலாக வால்டர் ஸ்காட் படம் போட்ட ஐந்து, பத்து, இருபது பவுண்ட் கரன்சி நோட்டுகள் இங்கே பரவலாகப் புழங்குகிறவை. இங்கிலாந்திலும் இவை செல்லுபடியாகும். லண்டன் டாக்சி டிரைவர்களிடம் ஸ்காட்லாந்து பணத்தை நீட்டினால் ஒரு வினாடி சங்கடம் முகத்தில் தெரிய, கடனே என்று வாங்கிச் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு டிப்ஸ் கூட எதிர்பார்க்காமல் வண்டியைக் கிளப்பி விடுவார்கள். அவ்வளவு அந்நியோன்னியம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கும்.

ஸ்காட்லாந்துக்குக் கரன்சி அச்சடிக்க மட்டும் உரிமை இல்லை. உலகக் கோப்பை கால்பந்தாட்டத்துக்கு ஸ்காட்லாந்து அணியை அனுப்பி வைக்கவும் சகல உரிமையும் உண்டு. 1978 உலகக் கோப்பை சமயத்தில் இங்கிலாந்து அணி நுழைவுக்குத் தகுதியில்லாமல் போக, ஸ்காட்லாந்து அணி தேர்வு பெற்று ஆட்ட பாட்டத்தோடு கிளம்பிப்போனதாக உள்ளூர்ப் பெரிசுகள் நினைவு கூர்கிறார்கள். கோப்பையை வென்று வரப்போகிறார்கள் என்று ஏகப்பட்ட நம்பிக்கையோடு ஸ்காட்லாந்தில் விசேஷ தபால்தலை எல்லாம் அச்சடித்து (இதுக்கும் உரிமை உண்டு) தயாராக வைத்திருக்க, போன அணி முதல் ஆட்டத்திலேயே மண்ணைக் கவ்வி ஓசைப்படாமல் திரும்ப வந்து சேர்ந்தது இன்னொரு தனிக்கதையாக்கும்.

ஆக, இந்த வருட உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து ஜெயித்தால் என்ன? எடின்பரோவில் அச்சாகும் உள்ளூர்ப் பத்திரிகைகள் பரபரப்பாக டிரினிடாட் - டுபாக்கோ நாட்டு கால்பந்தாட்ட வீரர்களைப் பற்றிய நுணுக்கமான தகவல்களையும் படங்களையும் வாங்கிப் போட்டு அடுத்த பரபரப்பை ஆரம்பித்து விட்டார்கள். வரும் வியாழக்கிழமை ஜெர்மனி ந்யூரம்பர்க் நகரில், இங்கிலாந்து அடுத்த மேட்ச் விளையாடப் போவது டிரினிடாட் - டுபாக்கோ அணியை எதிர்த்து.

கமான் இங்க்லா..சாரி, கமான் ட்ரினிடாட் டுபாகோ. நோ ஓன் கோல்ஸ் ப்ளீஸ்.
8888888888888888888888888888888888888888888888888888888888888888

வியாபாரம் நஷ்டத்தில் முடிந்தோ அல்லது வேறு காரணத்துக்காகவோ இழுத்து மூடப்படும் கடைகளைக் கட்டுக்கடை என்று சொல்கிற பழைய வழக்கம் நினைவுக்கு வருகிறது. புதுசாக வாங்கி வந்த துணி சாயம் போனால், கட்டுக்கடைத் துணியைத் தலையிலே கட்டிட்டான் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டு கட்டுக்கடை பற்றி மனதில் இருந்த இளக்காரமான நினைப்பு, புத்தக விஷயத்தில் தலைகீழாக மாறி விட்டது.

எடின்பரோவில் ஷட்டரை இறக்கிய ஒரு புத்தகக் கடையில் வெறும் மூணு பவுண்டுக்குக் கிடைத்த பொக்கிஷங்கள் - சாம்யுவெல் பெக்கெட்டின் ‘காடோவுக்காகக் காத்திருத்தல்’ (Waiting for Godot), ஹெரால்ட் பிண்டரின் ‘பிறந்த நாள் விருந்து’ (The Birthday Party), நவீன ஐரீஷ் கவிதைத் தொகுப்பு, எடின்பரோ பவுண்டன்பிரிட்ஜ் பகுதியின் மைக்ரோ-ஹிஸ்டரி வரலாறு.

‘காடோவுக்காகக் காத்திருத்தல்’ cult status எட்டிய நாடகத்தின் பிரதி. இரண்டே இரண்டு காட்சிகள். மொத்தமே ஐந்து கதாபாத்திரங்கள். அதில் ரெண்டுபேர் திருவாளர் காடோ என்றவரின் வருகைக்காகக் காத்திருக்கும் கிட்டத்தட்டப் பஞ்சைப் பராரிகளான நபர்கள். அப்புறம் வேலைக்காரனைச் சந்தையில் விற்கக் கயிறு கட்டி அழைத்துப் போகும் ஒருத்தன், சதா பெட்டியைச் சுமந்தபடி நிற்கும் அந்த வேலைக்காரன். தவிர ‘காடோ ஐயா நாளைக்கு வர்றதாச் சொல்லச் சொன்னார்’ என்று அறிவித்துப் போகிற பையன். அவ்வளவுதான்.

காடோவுக்காகக் காத்திருப்பவர்கள் யார்? காத்திருக்கக் காரணம் என்ன? காடோ நாளைக்கு வருவார் என்று சொல்லிப் போகிற பையன் அவருடைய செம்மறியாடுகளை மேய்க்கிறவன். அவனுடைய சகோதரன் காடோவின் வெள்ளாடுகளை மேய்க்கிறவன். இவர்கள் ‘நல்ல மேய்ப்பர்களின்’ உருவகமா? காடோ யார், கடவுளா? காடோவுக்காகக் காத்திருத்தல் எக்சிஸ்டென்சியலிசப் படைப்பா? இதையெல்லாம் பற்றி ஐம்பத்து மூன்று வருடமாக நடக்கும் தர்க்கம் இன்னும் ஓய்ந்தபடியாக இல்லை.

ஒருத்தரின் ஷூவைக் கழற்ற இன்னொருவர் உதவி செய்து குப்புற விழுவது, தற்கொலை செய்து கொள்ளக் கயிறு கிடைக்காமல் பைஜாமா நாடாவை உருவ, உடுப்பு அவிழ்ந்து விழுவது என்று பொதுவாக ஸ்லாப்ஸ்டிக் காமெடி தளத்தில் இயங்கும் இந்த நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் - படித்துக் கொண்டிருக்கும்போதே, கண்கட்டு வித்தை போல் அந்த வடிவத்தின் விளிம்புகளை எவ்விக் கடந்து உயர்கிறது. காடோவின் வரவுக்குக்காகக் காத்திருக்கும் இரண்டு பேரும் தொப்பி மாற்றிக் கொள்வதை லாரல்-ஹார்டி செய்கை ரக வர்ணணையாகச் சளைக்காமல் சொல்லும் பெக்கட் சட்டென்று ஒற்றை வரி வசனங்களாக அவர்களைப் பேசவிடும்போது ஏற்படும் அழுத்தம் அசாதாரணமானது.

நபர் 1(எஸ்ட்ரகன்) - செத்துப் போனவங்களோட குரலுங்க

நபர் 2(விளாடிமிர்) - எல்லாரும் ஒரே நேரத்தில் பேசறாங்க.

எஸ்ட்ரகன் - சலசலன்னு பேசறாங்க.

விளாடிமிர் - என்ன சொல்றாங்க?

எஸ்ட்ரகன் - அவங்க இருந்ததைப் பத்தி

விளாடிமிர் - உசிரோட இருந்தது போதாது அவங்களுக்கு

எஸ்ட்ரகன் - அதைப் பத்திப் பேசணுமாம்

விளாடிமிர் - செத்துப் போனது போதாது அவங்களுக்கு.

எஸ்ட்ரகன் - பத்தாதாம்.

ஆட்டன்பரோவின் படத்தில் காந்தியாக நடித்து ஆஸ்கர் விருது வாங்கிய சர் பென் கிங்க்ஸ்லி உட்பட எத்தனையோ தரமான நடிகர்கள் காடோவுக்காகக் காத்திருத்தல் நாடகத்தின் பாத்திரமாக மேடையேறியிருக்கிறார்கள். சாம்யுவெல் பெக்கட்டின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த நேரத்தில் நாடகம் இன்னும் தீவிரமாக இங்கிலாந்தில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. பார்க்க வேண்டாம்.

படித்தாலே தீவிரமான வாசக அனுபவத்தை ஏற்படுத்தும் நாடகம் இது.
மற்ற கட்டுக்கடைப் புத்தகங்கள் பற்றி சாவகாசமாக.
888888888888888888888888888888888888888888888888888888888

போன நூற்றாண்டுக் கவிஞர் வால்ட்டர் த லாமேர் பற்றிப் படிக்க நேர்ந்தது.

ஓங்கி உயர்ந்த
குதிரைகளின் குளம்படிச் சத்தம்
தேய்ந்து மறைய
பின்னோக்கிப் பொங்கி நகரும்
மவுனம்

போன்ற வரிகளின் சொந்தக்காரரான இந்தக் கவிஞரின் தகப்பனார் 1827-ல் லண்டனில் பேங்க் ஓஃப் இங்கிலாந்தில் வேலை பார்த்தாராம். லண்டன் புறநகர்ப் பகுதியில் குடியிருந்த இவர் தினசரி குதிரை சவாரி செய்து அலுவலகம் போனவர்.

த லாமேரின் கவிதையை விட்டுவிட்டு மனம் அவருடைய தகப்பனாரின் குதிரையோடு தறிகெட்டு ஓடுகிறது. இந்தக் காலத்தில் புற நகரில் வசிப்பவர்கள் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டரில் ஆப்பீஸ் போவதுபோல, அந்தக் காலத்தில் குதிரை சவாரி. பேங்க் ஓஃப் இங்கிலால்ந்து கட்டிடத்தில் குதிரை பார்க்கிங்க் இருந்ததா?

அடுத்தமுறை லண்டன் ஊசிநூல் தெருப்பக்கம் போகும்போது கட்டிடத்தைக் கவனித்துப் பார்க்க வேண்டும்.

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது