Sunday, January 29, 2006

எடின்பரோ குறிப்புகள் - 8

பனி பெய்யாமலேயே கூடுதலாகப் படரும் தணுப்பும், சூரியன் தட்டுப்படாத வானமும், வானத்தில் அவ்வப்போது நீள ஓசையிட்டுப் போகிற ஒற்றைப் பறவையும், ஆள் அரவம் இல்லாத தெருக்களும், அடைத்த கடைவாசல்களில் சாப்பாட்டு மிச்சங்களும், காகிதக் குப்பையுமாக லண்டனில் இந்த கிறிஸ்துமஸ் கடந்து போனது.

கென்சிங்டன் வீதி வழியாக ஒற்றை நபர் ஊர்வலமாக நடந்தபோது ஆயிரம் வருடம் சரித்திரம் கொண்ட மாநகரம் காலம் உறைந்த அமைதியில் கனமாக மேலே கவிந்தது. குட்டநாட்டு கிராமப் பிரதேசங்களில் காயல் ஓரமாக நடக்கும்போதும், பழைய தில்லியின் குறுக்குச் சந்துகளில் இலக்கில்லாமல் திரும்பி வளைந்து மீண்டும் திரும்பி குளிர்கால சாயந்திரங்களில் அலைந்து திரியும்போதும் அவ்வப்போது ஒரு நினைப்பு தோன்றும். இந்த வினாடியில் இந்தச் சூழலோடு கலந்து கரைந்து ஒன்றுமில்லாமல் போக முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கிறிஸ்துமஸ் தின லண்டன் அளித்த லயிப்பு இதே தரத்தில் தான்.

கென்சிங்டன் பூங்காவில் குளிருக்கு அடக்கமாக அணைத்தபடி ஈர பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்த ஜோடிகளைக் கடந்து ஹைட் பார்க்கில் நுழைந்தானது. பச்சை விரிப்பில் நீர்ப் பறவைகளையும், தண்ணீரில் குதித்து அவற்றைப் பிடிக்கப்போவதுபோல் போக்குக்காட்டி திரும்ப ஓடிவந்து மண்ணில் புரளும் வளர்ப்பு நாய்களையும், மவுனமாக அடிவானத்தை வெறித்தபடி உட்கார்ந்திருந்த முதியவர்களையும் பார்த்தபடி ஹைட் பார்க்கை விட்டு வெளியே வந்து பிக்கடலி சர்க்கிள் பக்கம் நீண்ட நடை. பாதையில் பெரிய விளம்பரப் பலகை. காவல்துறை வைத்தது.

இதே இடத்தில் ஒரு மாதம் முன்னால் காலை ஏழு மணிக்கு இருபது வயது ஆங்கிலேய இளைஞனை பலாத்காரம் செய்த நடுவயது, குறுந்தாடி அராபியனைத் தேடிக்கொண்டிருக்கிறோம். விவரம் அறிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய காவல்துறை தொலைபேசி எண்.

சுரங்க நடைபாதையைத் தவிர்த்து தெருவில் குறுக்கே நடந்து கடந்து, எதிர்ப்பக்கம் போக, கார் ஷோரூம் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே நின்று சுவாரசியமாகப் பார்த்தபடி இரண்டு போலீஸ்காரர்கள். உள்ளே நிறுத்தியிருந்த சொகுசு மெர்சிடிஸ் காரை வாங்க அவர்கள் சம்பாத்தியத்தில் முடியாது என்றாலும், ஆர அமர நின்று பார்க்கவாவது இன்று நேரம் கிடைத்ததே என்ற ஆசுவாசம் முகத்தில். ஊரே விடுமுறையில் ஓய்ந்து கிடக்கும் மாநகரில் இவர்கள் எப்படி வேலைக்கு வந்தார்கள்?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கிறிஸ்துமஸுக்கு அடுத்த பெட்டி தினத்தன்று காலை ஆறரைக்கு தீபம் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு அழைத்திருந்தார் நண்பர் இளைய அப்துல்லாஹ். எட்டே கால் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குக் கலந்துரையாடல்.

அலுவலக கான்பரன்ஸ் அறையில் தீபம் டிவி பார்த்தபடி மடிக் கணினியில் ‘ப்ராஜக்ட் எம்’ பத்திரிகைத் தொடருக்கான அடுத்த ஈடு உருவாக்கிக்கொண்டிருந்தபோது, நான் இன்னும் சந்திக்காத இளைய அப்துல்லாஹ் திரையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். ஈழ அரசியல் பிரமுகர் பரராசசிங்கம் நத்தார்தினப் பிரார்த்தனையின்போது மாதாகோவிலில் படுகொலை செய்யப்பட்ட துயரச் சம்பவத்தைப் பற்றி இலங்கை நாளிதழ்களில் வெளியான தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார் அவர்.

சுடச்சுட மின்னஞ்சலில் சுவிட்சர்லாந்திலிருந்து ஈழத்தமிழர் ஒருவர் அஞ்சலிக் கவிதை அனுப்பியிருந்ததை வாசிக்கத் தொடங்கினார் அப்துல்லாஹ்.

மீடியா - கணினி யுகத்தில், ஈழத் துயர சம்பவம் இருபத்துநாலு மணிநேரத்தில் கொழும்பு பத்திரிகையில் கதைக்கப்பட்டு, லண்டனில் படிக்கப்பட்டு, சுவிட்சர்லாந்தில் உடனடியாகத் தமிழ்ப் புதுக்கவிதையாகி நல்லடக்கம் ஆவதின் இயந்திரகதியான சோகம் ஒரு வினாடி மனதில் படிந்து விலகிப்போனது.

இளைய அப்துல்லாஹ்வின் இதமான நட்புக்கலந்த உரையாடல் பற்றி, நிகழ்ச்சி முடிந்ததும் அதே அன்போடு உபசரித்து வழியனுப்பிவைத்து அடுத்த நிகழ்ச்சி நடத்த ஓடிய சுறுசுறுப்பு பற்றி, அன்பளித்த அவருடைய கவிதைத் தொகுதியான ‘பிணம் செய்யும் தேசம்‘ பற்றி, அதன் முன்னுரையில் தனித்துவமான தீவிரத்தோடு ‘முஸ்லீம்கள் இலங்கை வடபுலத்திலிருந்து விரட்டப்பட்டது ஒரு வரலாற்றுத் துரோகம். எம் பூமி. எம் நிலம். நாம் கஷ்டப்பட்டு வியர்ப்பு ஒழுகி, காடு வெட்டி, வீடு கட்டி இருந்தது. நாம் அள்ளித் தின்ற எமது மண். அது எமக்கு வேண்டும். அது எம்முடையது’ என்று ஒலிக்கும் அவருடைய கம்பீரமான கவிக்குரல் பற்றி எல்லாம் நிறையக் கதைக்க வேண்டும். விரைவில் அது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பிளய்ஸ்டோ போகாமல் எந்த லண்டன் பயணமும் பூர்த்தியாவதில்லை. டிஸ்ட்ரிக்ட் லைன் பாதாள ரயில்பாதையில் விடுமுறைக்காக அடைத்துப் பூட்டியிருந்த நிலையங்களின் அமானுஷ்ய மவுனத்தை கிட்டத்தட்ட காலியான ரயில்பெட்டி ஜன்னல் வழியாகப் பார்த்தபடி பிளய்ஸ்டோ வந்துசேர்ந்து பத்மனாப ஐயர் வீட்டுப் படியேற, உள்ளே கர்னாடக இசை முழங்கிக் கொண்டிருந்தது.

யார் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார் வழக்கமான சிரிப்போடு ஐயர். குறுவட்டில் நந்தன் சரித்திரக் கீர்த்தனை. அந்தக் கம்பீரமான குரலை எங்கோ எப்போதோ கேட்ட நினைவு. ஆனால் பழக்கமான எந்த இசைக் கலைஞரும் இல்லை. பழைய நாடக மேடை இசையும், தேர்ந்த கர்னாடக சங்கீதமும் இணைந்த அற்புதமான கலவை அது.

மணக்கால் ரங்கராஜன்.

ஐயர் சொல்ல ஆச்சரியத்தோடு பார்த்தேன். சிறு பிராயத்தில் எப்போதோ கேட்டு மனதில் பதிந்த குரல் மணக்கால் ரங்கராஜனுடையது. மேதமையின் சகல லட்சணங்களோடும் ஒலிக்கும் அந்தக் குரலைச் சென்னை இசைவிழா நேரத்து சபாக்காரர்கள் சீந்துவதுகூட இல்லை. குரலை மட்டும் இல்லை, மணக்கால் ரங்கராஜன் பற்றி யாரும் பேசிக்கேட்டே எத்தனையோ வருடம் ஆகிவிட்டது.

எண்பது வயது. நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். இன்னும் அதே உற்சாகத்தோடு குரல் நடுக்கமில்லாமல் சுஸ்வரமாகப் பாடுகிறார் மணக்கால். சிறுவயதில் நாடக மேடையில் நடித்த அனுபவம் உள்ளவர் என்று தகவல் தந்தார் ஐயர்.

இலக்கியத்தோடு இசையிலும் நாட்டம் மிகுந்த அவர் மணக்காலை ஒருக்கால் தேடியழைத்து வந்து தோடியும் பைரவியும் பாடவைக்கலாம் என்று தெரிகிறது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இங்கிலாந்தில் பதிப்பகத் துறை தொடர்பான ஒரு சட்டம் உண்டு. இந்த நாட்டில் எந்த மொழியில் ஒரு புத்தகம் பதிப்பிக்கப் பட்டாலும் அதன் ஒரு பிரதி லண்டன் அரசு நூலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இப்படி வந்து சேரும் புத்தகங்களை அடுக்கி நிறுத்தினால் லண்டன் நூலகம் மைல்கணக்கில் நீண்டு விரிவடைய வேண்டி வரும்.

அந்தச் சட்டப் பிரதி கைக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் ஒரு சந்தேகம் உண்டு. இங்கிலாந்தில் மட்டுமில்லாமல் உலகில் எங்கு தமிழ்ப் புத்தகம் வெளியானாலும் சில பிரதிகள் லண்டன் பத்மனாப ஐயரின் ப்ளய்ஸ்டோ
இல்லத்துக்குப் போய்ச் சேர வேண்டுமென விதிக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

ஐயரின் வீட்டுப்படி ஏறும் நண்பர்கள் அவரை நலம் விசாரித்த கையோடு நோட்டம் இடுவது அவருடைய புத்தகங்களைத்தான். நேற்றைக்குத்தான் பார்த்துப் பேசிப்போயிருந்தாலும், இன்றைக்கு மீண்டும் சந்தித்தால் அவருடைய அறையில் அச்சுத்தாள் வாசனையோடு இன்னொரு புதுப் புத்தகம் எங்கிருந்தோ முளைத்திருக்கும்.

சந்தித்த இரண்டு வருட இடைவெளியில் ப்ளய்ஸ்டோ வீட்டுப் புத்தகங்கள் கணிசமாகக் கூடியிருக்கின்றன. என்றாலும் இன்னும் ஐயரின் ஒற்றைக் கட்டில், கம்ப்யூட்டர்-எழுதுமேசை, எதிரே உட்கார்ந்து கதைக்க ஒரு நாற்காலி, சாயாக் கோப்பை வைக்க ஒரு மர முக்காலி வைக்க எப்படியோ அங்கே இடம் பாக்கி இருக்கிறது.

இயல் விருது பற்றி விசாரித்தபோது விழாவில் திரு மு.நித்தியானந்தன் தயாரித்துத் திரையிட்ட ஆவணப்படம் பற்றிப் பேச்சினிடையே குறிப்பிட்டார் ஐயர். அந்தப் படத்தை அவசியம் பார்க்கணுமே.

பார்க்கலாமே. இதைப் படிச்சிருக்கீங்களா? தெரிதல்னு பேரு. யேசுராசாவின் புதிய பத்திரிகை. இளைஞர்களுக்கு இலக்கியத்தை எடுத்துப்போக யாழ்ப்பாணத்தில் தொடங்கியிருக்கார்.

தன்னைப் பற்றிப் பேச்சு என்றால் கூச்சத்தோடு தவிர்த்துவிட்டு இலக்கியம் பேசத் தொடங்கிவிடுவார் ஐயர். அவர் கொடுத்த பத்திரிகையை வாங்கி மடியில் வைத்துக்கொண்டு திரும்பவும் ஆவணப் படத்தைப் பற்றி விடாக்கண்டனாக நச்சரிக்க, தொல்லை தாங்காமல் தொலைக்காட்சிப் பெட்டியில் படத்தைத் திரையிட்டார்.

பதினைந்து நிமிடத்தில் பத்மனாப ஐயரை நேர்த்தியாக ஆவணப் படுத்தும் இந்தப் படத்தில் சட்டென்று மனதில் பதிகிறவர் திருமதி மீனாள் நித்தியானந்தன்.

ஊருக்குப் போறேன்னு யாராவது சொன்னால், சரி, இந்தப் புத்தகங்களைக் கொஞ்சம் எடுத்துட்டுப் போய் யாழ்ப்பாணத்துலே இன்னார்கிட்டே கொடுத்திடறீங்களா என்று உடனே விசாரிப்பார் ஐயர். இதுக்குப் பயந்தே சிலபேர் சொல்லாமக் கொள்ளாமக் கிளம்பிப் போயிடுவாங்க.

மீனாள் நித்தியானந்தன் சிரிக்காமல் சொல்ல, பளிச்சென்று அந்தப் பகடிக்கு இடையே அவரும் நித்தியும் மற்ற நண்பர்களும் ஐயர்மேல் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் புலனாகிறது.

இயல் விருது பற்றி விசாரிக்க, அதை விடியோ படமாக்கியிருப்பதும் தெரியவந்தது. அதையும் பார்க்கணுமே.

ஒரு வழியாக, கம்ப்யூட்டரில் அந்தக் குறுவட்டைப் போட்டார் ஐயர். அவர் பேசியது, மற்றவர்கள் பேசியது, விருது அளித்து முடிந்து விருந்து மண்டபத்தில் இரைச்சலுக்கு இடையே எழுத்தாளர் முத்துலிங்கம், கவிஞர் சேரன், நண்பர் வெங்கட், அன்புச் சகோதரி மதி இன்னும் பலரும் பேசியது என்று சுவாரசியமாக ஓடிய படத்தின் ஒரு பிரதியையும் ஐயரிடமிருந்து வாங்கிக் கொண்டானது.

ஆமா, ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?

கேளுங்க.

இந்தப் படத்துலே எல்லாம் வருது. நீங்க விருது வாங்கறதே காணோமே. கனடாக்காரங்க கொடுத்திட்டாங்க இல்லே?

ஐயர் அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தார்.

விருது கொடுக்கற நேரம் பார்த்து விடியோகிராபர் வெளியே போய்ட்டார். அதான் விஷயம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

காலையில் மொபைல் அழைத்தது. ஐயர்தான்

உமா வரதராசனோடு கதைக்கறீங்களா?

பரஸ்பரம் நலம் விசாரிப்பு. உமாவின் கதையை இந்தியா டுடே இலக்கிய மலரில் படித்ததை நினைவுகூர அவர் எடின்பரோ டயரிக்காரன் அதே மலரில் எழுதிய கதையைப் பற்றிக் குறிப்பிட்டார்.

எப்ப லண்டன் வந்தீங்க உமா? எத்தனை நாள் இருப்பீங்க?

லண்டனா? நான் இலங்கையிலிருந்து பேசறேன். ஐயரோடு தொலைபேசும்போது நீங்க வந்திருக்கறதாச் சொன்னார்.

ப்ரிட்ஜ் கால் ஆக இலங்கை உமா வரதராசனோடு பேச ஏற்பாடு செய்துவிட்டார் ஐயர்.

ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இவர் இலக்கியப் பாலம் அமைக்கிறார் என்று எத்தனை தடவை தான் எழுதுவது?

Saturday, January 14, 2006

(இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7

சாயந்திர நேரத்தில், வக்கீல் வேதாந்தம் ஐயங்காரரின் வீட்டுப் படியேறிக் கொண்டிருந்தார் சுப்பையா கான்ஸ்டபிள். இது நடந்து முப்பது வருஷத்துக்கு மேலே ஆகிவிட்டாலும், சுப்பையா கான்ஸ்டபிள் இன்னும் ஐயங்கார் வீட்டுப் படியோடு தான் மனதில் வருகிறார். அந்தக்கால மலையாள நகைச்சுவை நடிகர் பகதூர் மாதிரி கெச்சலான தேகம் சுப்பையாவுக்கு. காக்கி நிஜார், கூம்புத் தொப்பி, மட்கார்ட் இல்லாத ஹெர்குலிஸ் சைக்கிள், பின்னால் துருப்பிடித்த காரியரில் சடம்பு போட்டுக் கட்டிவைத்த லாட்டிக் கம்பு, மூக்குப்பொடி வாடை என்று அறுபதுகளின் அடையாள கான்ஸ்டபிள்.

அரண்மனை மாதிரி ஐந்து படி ஐயங்கார் வீட்டுக்கு. ஐந்தும் ஒரு தொகுதியாக வீட்டோடு தொக்கிக் கொண்டு நிற்கும். படிவரி கட்டாததால் பஞ்சாயத்து போர்ட் சிப்பந்திகள் இடித்து அப்புறம் ஐயங்கார் மேல் பரிதாபப்பட்டோ என்னமோ அப்படியே விட்டுவிட்டுப் போனது. மேல்படியிலிருந்து கொஞ்சமாக எம்பிக் குதித்தால் வீட்டுத் திண்ணைக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம்.

முந்திய ரெண்டு தலைமுறையில் பிரசித்தமான வக்கீல்களாக இருந்த சீனியர் ஐயங்கார்கள் பிரம்மாண்டமாக எழுப்பின வீடு, செங்கலும் காரையும் பெயர்ந்து, வேதாந்தம் ஐயங்காரின் ‘எங்காத்துக்காரரும் கோர்ட்டுக்குப் போறார்’ பிராக்டிஸ் போல் லொடலொடத்துக் கிடக்கிறது. வீட்டுக்குப் பின்னால் தென்னை, வாழைமரம். மாடியில் குடிவைத்த நாலைந்து பிரம்மச்சாரி என்.ஜி.ஓ பிள்ளையாண்டான்கள். ஐயங்காரின் ஜீவனோபாயத்துக்கு பெருமாள் விதித்த வழி இது.

நிழல் மாதிரி அவருக்கு சதா ஒத்தாசையாக இருக்க ஸ்மார்த்தன் அம்பியை அனுப்பினது சிவபெருமான். சாப்பிடுவதையும், தலையில் வைத்துத் தூக்கிப்போய் பஜார் தேங்காய்க் கடையில் வீட்டு மரத்துத் தேங்காயும், வாழைக்காயும் அவ்வப்போது டெலிவரி செய்துவிட்டு எண்ணிப் பார்க்கத் தெரியாமல் காசை அப்படியே சட்டைப் பையில் போட்டுக் கொண்டு வருவதையும், மிச்ச நேரத்தில் திண்ணையில் படுத்து நித்திரை போவதையும் தவிர அம்பிக்கு வேறே எதுவும் தெரியாது.

சமயங்களில் விடிகாலையில் ஐயங்கார் வீட்டுத் திண்ணையில் மூத்திரச் சண்டை அமர்க்களப்படும். மாடி போர்ஷன் என்.ஜி.ஓ பிள்ளையாண்டான்கள் நடுராத்திரியில் படியிறங்கி தோட்டத்துக்குப் போகச் சோம்பல்பட்டு, பக்கத்து ரிடையர்ட் ஸ்டேஷன் மாஸ்டர் நாயுடு வீட்டுக் கைப்பிடிச் சுவரை லகுவாகக் கடந்து அவருடைய மொட்டை மாடியில் குத்தவைத்ததாக நாயுடுவின் குற்றச்சாட்டு.

குடிக்க மண்கூஜாவிலே வச்சிருந்த மீதி தண்ணியைக் கொட்டும்போது அங்கே கொஞ்சம் பட்டுடுத்து என்று என்.ஜி.ஓக்கள் கட்சி கட்டி நிற்பார்கள். அம்பி, அங்கே போய் மோந்து பாத்துட்டு வாடா என்று ஐயங்கார் அடுத்த வீட்டு மொட்டை மாடி ஈரத் தரையில் மோப்பம் பிடித்துப் புலன்விசாரணை செய்ய அனுப்புவது அம்பியைத்தான்.

நம்ம சுப்பையா கான்ஸ்டபிள் தலையைப் பார்த்த ஐயங்கார் அம்பியைத்தான் கூப்பிட்டார்.

திருப்பாச்சி அருவாளைத் தூக்கிண்டு வாடா அம்பி என்று பிராமணசங்க காலத்துக்கு முற்பட்ட தீர்க்கதரிசனமான அந்த முழக்கத்தைத் தொடர்ந்து. அம்பியானவன் அரிவாளும், தோட்டத்து இளநீருமாக வந்து சேர்ந்தான்.

இளநீரை வெட்டிக் கொடுத்து, திண்ணை பெஞ்சில் உட்கார்ந்திருந்த சுப்பையா கான்ஸ்டபிளுக்கு உபசாரம். கீழ்ப்படியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு சின்னக் கூட்டம். தொளதொள நிஜாரை இழுத்துப் பிடித்துக்கொண்ட சின்னப் பயலாக, இதை எழுதுகிறவனும் அதில் அடக்கம்.

சுப்பையா கான்ஸ்டபிள் யாரையோ எதிர்பார்க்கிற மாதிரி அவ்வப்போது வாசலைப் பார்த்தார். ஐந்து நிமிடம் கழித்து இன்னொரு ஹெர்குலிஸ் சைக்கிள் வாசலில் வந்து நின்றது. போஸ்ட் ஆபீசில் தந்தி அடிக்கிற குமாஸ்தா. மனிதருக்கு முகம் முழுக்க கலவரம். இனம் தெரியாத பயம்.

ஐயங்கார் சாமிகளே, ரகோத்தமன்னு உங்க வீட்டுலே யாராவது இருக்காங்களா?

சுப்பையா கான்ஸ்டபிள் விசாரணையை ஆரம்பித்தார்.

ஆமா, மாடியிலே குடியிருக்கிற பிள்ளாண்டான். பி.டபுள்யூ.டியிலே டென் – ஏ- ஒன் கிளார்க்கா இருக்கான். அப்பப்ப ஊஸ்ட் பண்ணி வேலையிலே சேர்த்துப்பா.

ஐயங்கார் ஏதோ புரியாத மொழியில் பேசிவிட்டு, அந்தப் பையன் தப்புத்தண்டாவுக்கு எல்லாம் போறவன் இல்லையே என்று முடித்தார்.

சுப்பையா கான்ஸ்டபிள் தந்தி குமாஸ்தாவைப் பார்க்க, அவர் சட்டைப் பையில் நாலாக மடித்து வைத்திருந்த காகிதத்தை கான்ஸ்டபிளிடம் நீட்டுகிறார்.

அந்த ரகோத்தமன் இப்ப எங்கே சாமி?

ஆபீஸ் முடிஞ்சு வர்ற நேரந்தான். ஆனந்தபவான்லே காப்பி குடிச்சிண்டிருபான்.

ஐயங்கார் முடிக்கும்முன், இன்னும் நாலைந்து ஹெர்குலிஸ் சைக்கிள்கள் - அந்தக் கால உலகம் ஹெர்குலிஸ் சைக்கிள்களால் ஆனது. ரகோத்தமனும் மற்ற என்.ஜி.ஓ பிள்ளையாண்டான்களும் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

உன்னைத் தேடிட்டு வந்திருக்கார்’பா என்று ஐயங்கார் ரகோத்தமனை கான்ஸ்டபிளிடம் கைகாட்டினார்.

சுப்பையா கான்ஸ்டபிள் நேரடியாக விஷயத்துக்கு வந்து விட்டார்.

நீர்தான் ரகோத்தமனா?

ஆமா, அதுக்கென்ன?

ஒண்ணும் இல்லை. காலையிலே போஸ்ட் ஆபீசுக்குத் தந்தி கொடுக்கப் போனீரா?

ஆமாம் போனேன்.

என்ன தந்தி கொடுத்தீர்?

தந்தி குமாஸ்தா கான்ஸ்டபிள் கையிலிருந்த காகிதத்தைத் திரும்ப வாங்கி, சாய்வாகப் பிடித்துப் படித்தார் – “One more free bird caught in the net. Congratulations”.

இதுதான் நீர் அனுப்பின தந்தியா?

ஆமா, அதுக்கென்ன?

யாருக்குப் போக வேண்டியது இது?

என் சிநேகிதன். மெட்ராசிலே இருக்கான்.

என்ன விஷயமாத் தந்தி?

இதுக்கு அவசியம் பதில் சொல்லணுமா?

என்.ஜி.ஓ ரகோத்தமன் கொஞ்சம் கோபத்தோடு எகிற, வேதாந்தம் ஐயங்கார் திகிலோடு பார்த்தார்.

போலீஸ்காரனை முறைத்துக் கொள்கிறான் இந்தப் பிள்ளை. பெண் கவிஞரை தூஷித்த எழுத்தாளர் கழுத்தில் துப்பட்டாவை மாட்டி இழுப்பதுபோல், தரதரவென்று இழுத்துப்போய், ஸ்டேஷனில் வௌவால் மாதிரித் தலைகீழாகத் தொங்கவிட்டு விடுவார்கள். (சும்மா, பேச்சுக்குச் சொன்னது இது அந்தக் காலத்தில் காப்பி இருந்தது. கவிஞர்கள் இருந்தார்கள். துப்பட்டா இல்லை.)

போலீஸ்காரன் கேட்டா, பதில் சொல்லித்தான் ஆகணும். கான்ஸ்டபிள் விரைப்பாகச் சொன்னார்.

என் பிரண்டுக்கு நாளைக்குக் கல்யாணம். வாழ்த்து அனுப்பினேன்.

வாழ்த்தா? பேர்ட்னு எதோ போட்டிருக்கீர். அது பட்சி இல்லியா? கல்யாணத்துக்கும் பட்சிக்கும் என்னய்யா சம்பந்தம்?

அது மட்டுமில்லே. பட்சி வலையிலே பிடிபட்டாச்சுன்னு வேறே இருக்கு.

தந்தி குமாஸ்தா குரல் நடுங்கச் சொன்னார்.

கான்ஸ்டபிள் தொப்பியை மடியில் வைத்துக் கொண்டு ரகோத்தமனைப் பார்த்த பார்வை சிநேகிதமாக இல்லை.

கல்யாண வாழ்த்துலே என்னத்துக்கய்யா பட்சியை வலையிலே பிடிச்சேன்னு சொல்லணும்? இது ஏதோ கள்ளக் கடத்தல்காரன் சரக்கு வந்தாச்சுன்னு முதலாளிக்கு அனுப்பற தகவல் மாதிரி இல்லே இருக்கு?

ஆமா, போஸ்ட் மாஸ்டர் இதை அனுப்பக் கூடாதுன்னு சொல்லிட்டார். அவர் சொல்லித்தான் போலீஸ் ஸ்டேஷன்லே கம்ப்ளெயின் செஞ்சது.

தந்தி குமாஸ்தா விளக்க ஆரம்பிக்க, ரகோத்தமன் தலையைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டான்.

சார், பட்சி மாதிரி சுதந்திரமா இருந்த பிரம்மச்சாரிப் பையனுக்குக் கல்யாணம்னு கால்கட்டு போட்டு வலையிலே மாட்டிவிட்டாங்கன்னு கிண்டல் அது.

கல்யாணத்துக்கு வாழ்த்து அனுப்பறபோது எதுக்கு கிண்டல்? ஆயிரங்காலத்துப் பயிர்னு பெரியவங்க சொன்ன காரியத்துலே சிரிப்பாணி என்னத்துக்கு? எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. நீர் கீழக்கரை, ராமேஸ்வரம் போனீரா சமீபத்திலே?

அந்த சாயந்திரம் கான்ஸ்டபிளுக்கு நகைச்சுவை பற்றி விளக்க என்.ஜி.ஓ பிள்ளையாண்டான் ரகோத்தமன் பட்ட கஷ்டம் போன வாரம் சட்டென்று இதை எழுதுகிறவனுக்கு நினைவு வந்தது. சிவகுமார் புத்தக முன்னுரையில் எடின்பரோ டயரிக்காரனை சம்மன் இல்லாமல் ஆஜராக்கி, ‘செயற்கையான விளையாட்டுத் தனமான நடை’க்காகக் கண்டித்த நண்பர் ஜெயமோகன் காரணம்.

நடை என்பது static சமாச்சாரம் இல்லை. எடுத்துக்கொண்ட விஷயத்துக்குத் தகுந்தபடி அது சத்தமில்லாமல் மாறும். தோழர் நாயனாருக்கு இறுதி அஞ்சலி, கொலாட்கர் பற்றிய நாடக விமர்சனம், இபாவின் கிருஷ்ணா கிருஷ்ணா புத்தக அறிமுகம், பூரணி அம்மாளின் கவிதைத் தொகுதி, மரணத்துள் வாழ்வோம், குந்தவை கதைகள் விமர்சனம், மூன்று விரல், மந்திரவாதியும் தபால் அட்டைகளும், அரசூர் வம்சம், கொலட்கர் கவிதை மொழிபெயர்ப்பு, பிராஜக்ட் மேனேஜ்மெண்ட் கட்டுரை, சற்றே நகுக, கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம், ஈராக் போர்நாள் குறிப்பு, வாயு குறுநாவல், வாளி சிறுகதை – எல்லாமே எடின்பரோ குறிப்புக்காரன் இணையத்திலும் பத்திரிகையிலும் எழுதியதுதான். Sub altern, micro history கூறுகளும், காலத்தை இறுக்கி உறைய வைக்கும் புனைவும் கதையாடலும் எல்லாவற்றுக்கும் மேலாக, வாசகனைப் பயமுறுத்தாத நடையுமாக விளங்கும் இவற்றில் பலவும் இன்னும் ஐம்பது வருடம் போனாலும் நிற்கும். Derivative literature சுவடு இல்லாமல் போய்விடும்.

காராபூந்தி சாப்பிடுதல், நகைச்சுவைக் கட்டுரை எழுதுதல் போன்ற விஷயங்களுக்காக இபிகோ - இலக்கிய பிரொசிஜர் கோட் விதிகளின்படி சகலரையும் கூண்டில் ஏற்றித் தண்டிக்க, தலைமுறை தலைமுறையாக இலக்கிய கான்ஸ்டபிள்கள் அலைந்து கொண்டிருப்பது தமிழ் இலக்கிய சூழலை சுவாரசியமாக்குகிறது என்பதில் மகிழ்ச்சியே.

Sunday, January 08, 2006

எடின்பரோ குறிப்புகள் – 6

லண்டனில் இந்த வருடம் குளிர் அதிகம். இங்கிலாந்து முழுக்கவுமே இதுதான் நிலவரம். ஆனாலும் tabloid டேப்லாய்ட் பத்திரிகைகள் அக்டோபரில் அலறியதுபோல், ‘ஐம்பது வருடத்தில் மிகக் கடுங்குளிர் காலம்’ எல்லாம் இல்லை. கிறிஸ்துமஸ் சமயத்தில் சுருக்கமாகப் பனி பெய்து, வெல்லப் பிள்ளையார் பிடிப்பதுபோல் செண்ட் ஜேம்ஸ் பார்க் பெஞ்சில் சிறுவர்கள் அவசர அவசரமாக ஒண்ணரை இஞ்ச் பனிமனிதன் பொம்மை செய்வதற்குள் நின்றுவிட்டது.

ஒற்றைப் பூச்செடி கூட இல்லாத செண்ட் ஜேம்ஸ் பூங்கா அறிவிப்புப் பலகையில் மாற்றம் தெரிகிறது. மாநகராட்சியின் பழைய விதிமுறைகளின்படி, கையில் நாயைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு பார்க்கில் நடைபயில வருகிறவர்கள், அந்த நாலுகால் பிராணி பூங்காப் புல்தரையில் அசுத்தம் செய்யாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். அசுத்தமாக்கிப் போட்டால் அபராதம். புது விதிமுறை வளர்ப்பு மிருகங்கள் மேல் பரிவு கொண்டவர்கள் விதித்தது. கூட்டி வந்த பிராணி அசுத்தம் செய்யலாம். அதை அகற்றாவிட்டால்தான் அபராதம்.

ஓட்டல் மெனுகார்டுகளில் பிரஞ்சு மொழி அதிகம் தட்டுப்படுகிறது. ஒரு வார்த்தை இங்கிலீஷிலும் அடுத்தது பிரஞ்சிலுமாக இங்கிலீஷ்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள் இரண்டு தரப்புக்கும் புரியாத கலப்பு மொழியில் எழுதிய சாப்பாட்டு அறிவிப்புகள் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றன.

லண்டன் கண் London Eye ராட்சத வளையங்களில் ஏறி ஊரை விடியோ காமிராவில் படம் பிடிக்க தேம்ஸ் நதி தீரத்தில் நிற்கும் டூரிஸ்ட்களின் க்யூ இன்னும் தீர்ந்தபாடாக இல்லை.

சிவப்பு ரூட்மாஸ்டர் பஸ்கள் காணாமல் போய்விட்டன. கண்டக்டர் டிக்கட் கிழித்துக் கொடுக்கிற இந்த பழைய மாடல் பஸ்கள் அவ்வப்போது பிளாட்பாரத்தில் ஏறினாலும், எண்பது சில்லறை வருடமாக லண்டன் பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வந்தவை. பழைய பஸ்களை வெளிநாட்டுக்காரப் பணம் படைத்தவர்கள் நிறையக் காசு கொடுத்து வாங்கி வீட்டு வாசலில் பாஷனாக நிறுத்திக்கொள்வதாகக் கேள்வி.

டிசம்பரில் ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் என ஒரே இனக் கல்யாணங்களுக்கு பிரிட்டன் அனுமதி கொடுத்துவிட்டதன் விளைவாக தெருமுனனயில் தீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜோடிகளில் இந்த ரகக் காதலர்களும் இருப்பதைப் பார்க்க, இன்னும் நாலைந்து வருடம் போகலாம். பிரபல பாப் பாடகரும் எலிசபெத் மகாராணியால் சர் பட்டம் பெற்றவருமான எல்டன் ஜான் போன்ற பெருந்தலைகள் சேம் செக்ஸ் கல்யாணங்களுக்குப் புது மரியாதையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். எல்டன் ஜான் திருமணத்துக்கு சார்லஸ் இளவரசர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டதாம்.

பாதாள ரயில் நிலைய வழியில் பாடியோ, இசைக்கருவிகளை வாசித்தோ தரையில் துண்டு விரித்துக் காசு வசூலிப்பதற்கு இருந்த தடை நீக்கப்பட்டு இருக்கிறது. இப்படி busking அனுமதிக்கப்பட்டாலும், ஹால்பர்ன் ஸ்டேஷனை விட்டு வெளிவரும்போது நாராசமான வயலின் சத்தம். பக்கத்தில் போக, கடமையே கண்ணாக ஒரு புத்தகத்தைப் பார்த்து வாசித்துப் பழகும் லித்துவேனிய இளம்பெண். அவள் கண்ணின் சோகம் காசு போட வைக்கிறது.

டிரபால்கர் சதுக்கத்தில் காலியாக இருந்த நாலாம் மூலையிலும் சிற்பம் வைத்துவிட்டார்கள். புத்தலைச் சிற்பமாக, கைகள், கால்கள் இல்லாத நக்னமான கர்ப்பிணிப் பெண்ணின் சிலை. ‘பிள்ளைத்தாச்சி அலிசன் லாப்பர்’ Allison Lapper Pregnant என்ற இந்தப் படைப்பின் சிற்பி மார்க் க்வின்.

ஸ்ட்ராண்டில் நடந்து வரும்போது, பிரதமர் டோனி பிளேரின் பத்து-டவுணிங் தெரு இல்லம் அமைதியாக உள்ளொடுங்கி வாசலில் கிறிஸ்துமஸ் மரத்தில் விளக்குகள் அலங்கரித்துத் தெரிகிறது. முன்பெல்லாம் அந்தப் பிரதேசத்தில் யாராவது தெருவில் நடத்தும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், டோனி பிளேரை விமர்சித்து விளக்குக் கம்பத்தில் தட்டி வைத்துக் கட்டுதல் என்று பார்த்த காட்சிகள் இனி காணக் கிடைக்காது. அக்டோபர் மாதம் டவுணிங் தெருமுனையில் நின்று ஈராக் போரில் இறந்த பிரிட்டீஷ் படைவீரர்களின் பெயர்களை உரக்கப் படித்த மாயா அன்னீ ஈவான்ஸ் என்ற பெண்மணி கைது செய்யப்பட்டதில் தொடங்கி அரசியல் எதிர்ப்பை ஒடுக்க, போலீஸ் நடவடிக்கை தீவிரமாகி இருக்கிறது. பிளேரின் தொழிற்கட்சி மாநாட்டில் அவர் பேசும்போது நான்சென்ஸ் என்று பொறுக்க முடியாமல் சத்தம் போட்ட 82 வயது கட்சிப் பிரமுகர் தீவிரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பிளேரும் புஷ் போகும் சர்வாதிகாரப் பாதையில் அடியெடுத்து வைத்திருப்பதைச் சொல்கிறது.

புதுவருடம் பிறக்கும்போது பாதாள ரயில் ஊழியர் தொழிற்சங்கம் முழுநாள் வேலலநிறுத்தத்தை அறிவித்திருப்பது அங்கங்கே முணுமுணுப்பை வரவழைக்கிறது. தொழிற்சங்கத் தலைவர் பென் க்ரோ எகிப்தில் ஓய்வெடுத்துக் கொண்டபடி, ஸ்ட்ரைக் நிச்சயம் நடக்கும் என்று அறிக்கை விட்டிருப்பது அதிருப்தியைச் சம்பாதித்த நடவடிக்கை.

தேம்ஸ் நதியில் சாவகாசமாகப் படகில் போய், வெஸ்ட்மினிஸ்டர் ஸ்டேஷன் பக்கம் பாலக்கரையில் படியேற, பான்கேக் விற்கிற பெண்மணி வரவேற்கிறார். ‘உங்க ஊர் தோசை தான்பா’ என்றார் சுடச்சுட வார்த்துக் காகிதக் கூம்பில் அடைத்துக் கொடுத்தபடி. தோசை மகத்துவம் ஒரு வழியாக லண்டனை அடைந்ததற்கு சரவணபவன் லண்டன் கிளைகளும் காரணமாக இருக்கலாம்.

ஈஸ்ட் ஹாம் கடைவீதி முழுக்க முழுக்கத் தமிழும் புளித்த இட்லி மாவும் மணக்கிற இடமாக மாறியிருக்கிறது. புடவை கட்டிய ஜவுளிக்கடை பொம்மைகள் வணக்கம் சொல்லி வரவேற்கின்றன. சரவண பவன் கும்பலுக்குப் பயந்து மற்ற சாப்பாட்டு ஓட்டல்களில் படியேறினால், காலைச் சாப்பாடு ரெண்டரை பவுண்ட். நாலு இட்லி, தோசை, பொங்கல், வடை, காப்பி என்று இத்தனையும் அதில் அடக்கம்.

ஓட்டலுக்குள் சாப்பிட்டபடி பார்க்க, சன் டிவியில் தமிழ்ப்படம். கேபிள் டிவி கனெக்ஷனைப் புதுப்பிக்கிறவர்களுக்கு ஒரு எம்பி த்ரீ ப்ளேயர் இலவசம் என்று அறிவிப்பு படத்தோடு கூட ஓடிக்கொண்டே இருக்கிறது.

பெரிய சைஸ் பெட்டிக்கடைகளில் தமிழ் சினிமா பாட்டு காசெட், டிவிடி, விகடன், குமுதம், சினிக்கூத்து. தீராநதி விலை ஏறிவிட்டது. ஒண்ணரை பவுண்ட்.

செயிண்ட் பால் கதிட்ரல் பக்கம் அற்ப சங்கைக்கு ஒதுங்கக் கட்டணம் அரை பவுண்டாகி இருக்கிறது. நாற்பது ரூபாய் கொடுத்து ஒதுங்கிய மூத்திரப் புரை, உபயோகித்து முடித்ததும் காரைக் கழுவுவதுபோல் அதிவேகத்தில் தண்ணீர் அடித்து, டெட்டால் போட்டுச் சுத்தமாகி அடுத்த ஐம்பது காசுக்காக கதவு திறக்கிறது.

பிகடலி சர்க்கிள் கடைகலின் நியான் விளக்கு அட்டகாசங்கள் பண்டிகைக் கால வாடிக்கையாளர்களைக் குறைவாகவே ஈர்த்ததாகத் தெரிகிறது. நாடு முழுக்கவே கிறிஸ்துமஸ் விற்பனை கொஞ்சம் டல் தான். அமெரிக்க வால் மார்ட்டின் பிரிட்டீஷ் கிளையான ஆஸ்டா விற்பனைச் சரிவை இயல்பாக எடுத்துக் கொண்டது போல், நூறு இருநூறு வருட பிரிட்டீஷ் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளாது என்பது நிச்சயம்.

ஹை ஸ்ட்ரீட் கடைகளுக்கும் மேட்டுக் குடியினரின் ஹாரட் சூப்பர் மார்க்கெட்டுக்கும் போக வேண்டாமல், இணையம் மூலம் கிறிஸ்துமஸ் பரிசுகள் நிறைய விற்பனையானதும் வியாபார வீழ்ச்சிக்கு ஒரு காரணம். ஆப்பிரிக்க கிராமங்களுக்கு ஆட்டுக் குட்டி வாங்கி அனுப்பும் பரிசு வியாபாரம் சக்கைப் போடு போட்டதாக செய்தி. ஏழெட்டு அடி பூமாலைகளை ஆர்டர் செய்தால் கஷ்டப்பட்டு உலகம் முழுவதும் தேடி டெலிவரி செய்ததாக ஒரு பரிசுப்பொருள் நிறுவனம் செய்தித்தாளில் பெருமை அடித்துக் கொண்டதை ஹால்பர்ன் ஸ்டேஷனில் ரயிலுக்குக் காத்திருந்தபோது படித்தேன். என்னத்துக்குக் கஷ்டப் படணும்? சொல்லியிருந்தால், மாம்பலம் பாண்டி பஜார் பிளாட்பாரம் பூக்கடையில் ஒன்றை அடையாளம் காட்டியிருக்க மாட்டேனா?

Monday, January 02, 2006

எடின்பரோ குறிப்புகள் – 5

எடின்பரோவிலிருருந்து லண்டன் 400 கிலோமீட்டர் தூரம். பிரிட்டீஷ் ஏர்வேஸ் போன்ற மேட்டுக்குடி புஷ்பக விமானம் ஏறாமல், குளோபல் ஸ்பான் சிக்கன விமானத்தில் பறக்க, இருபதிலிருந்து முப்பது பவுண்டு கொடுத்து வண்டியேறினால் போதும். கொஞ்சம் நெகிழலான புளிமூட்டை போல் அடைத்து ஒரு மணி நேரத்தில் லண்டனில் கொண்டுபோய்த் தள்ளி விடுவார்கள். ஆனாலும், கிறிஸ்துமஸுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை சாயந்திரம் பயணம் வைத்தால், கட்டணம் ரெண்டு ரெண்டரை மூணு மடங்கு என்று எகிறும். அதையும் சமாளித்தால், விழும் பனி, விழுந்த பனி, விழுந்து உறைந்த பனி என்று காரணம் சொல்லி விமானம் எடின்பரோவை விட்டு மேலே ஏறாது போய்விடலாம்.

சாவதானமாக ரயிலில் போய்க்கொள்ளலாம் என்று முடிவானது “ஸ்லீப்பர் வேணுமா” என்று வைக்கோல்சந்தைப் பேட்டை ரயில்வே ஸ்டேஷன் கவுண்டர் பெண்மணி அன்போடு விசாரிக்க, தட்ட முடியவில்லை.

டிக்கட்டோடு, தேசலான கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட்டில் பக்கம் முழுக்க அடித்த பேப்பரை நீட்டி வசூலிக்கப்பட்ட தொகை விமானக் கட்டணத்தை விட ஏகதேசம் முப்பது பவுண்ட் அதிகம். சங்கதி என்னவென்று விசாரிக்க, ஸ்லீப்பர் ரயில் இல்லையா, அதான் என்று சொல்லியபடி அரைகுறையாக பிரிண்ட் ஆன காகிதத்தில் பேனாவால் அங்கங்கே அழுத்தி எழுதிக் கொடுத்தார் லேடி கவுண்டர். ராத்திரி பதினொன்றேகாலுக்கு ரயில்.

எலும்பை ஊடுருவும் ஒரு டிகிரி செல்சியஸ் குளிரில் பஸ் பிடித்துப் போய், பிரின்சஸ் தெரு முனை. நூறு வருஷத்துக்கு முற்பட்ட படிக்கட்டுகளில் கீழே இன்னும் கீழே இறங்க, பாதாள லோகத்தில் எடின்பரோ வேவர்லி ஸ்டேஷன். நுழையும்போதே தூக்கலான சாப்பாட்டு நெடி. பத்துக்கு ஏழு நாற்காலிகள் மேல் சாப்பாடு அடைத்து எடுத்து வந்த காலி தர்மகோல் பெட்டி. பியர் பாட்டில். கோக் தகர டப்பா. சாக்லெட் காகிதம். நமுத்துப்போன உருளைக்கிழங்கு வறுவல்.

அடுத்த இரண்டு நாற்காலியில் மக்டொனால்ட் பிட்ஸா வைத்த அட்டைப் பெட்டிகளை ஓரமாகத் தள்ளிவிட்டு, உக்கிரமாக முத்தமிட்டபடி காதலர்கள். ரயில்வே ஸ்டேஷனில் பிட்சா சாப்பிட்ட அடுத்த நிமிடம் முத்தமிட்டுக் கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்துகொண்டு வந்திருப்பார்கள் என்று நினைத்தது மகா தப்பு. முத்தக் காட்சி முடிந்ததும்தான் அவர்கள் பிட்சா சாப்பிட ஆரம்பித்தார்கள்.

லண்டன் போகிற ரயிலைத் தவிர மற்ற வண்டி விவரங்களை எல்லாம் பெரிய திரை கர்ம சிரத்தையாகக் காட்டிக் கொண்டிருக்க, பின்னால் இருந்து விசில் சத்தம் காதைப் பிளந்தது. மொட்டையடித்த நாலைந்து இளைஞர்கள் உரக்கப் பாடியபடி ஏகக் கோலாகலமாக ஸ்டேஷனை வலம்வர, கூடவே கையைத் தட்டிக்கொண்டு மைக்ரோ மினி ஸ்கர்ட் உடுத்திய குளிர் விட்டுப்போன கன்யகைகள். ஹோவென்று இரைச்சலோடு இந்த அடியார் திருக்கூட்டம் டிக்கட் வழங்கும் பகுதிக்குள் நுழைந்த அடுத்த நிமிடம் மஞ்சள் ஜெர்கின்ஸ் தரித்த ஆண், பெண் போலீஸ் படை பிரத்யட்சமானது.

மொட்டையர்களை மட்டும் வளைத்துப் பிடித்து விலங்கு மாட்டித் தள்ளிக்கொண்டு போக, கூட வந்த கன்னியர்கள் சூயிங் கம்மைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டு சமர்த்தாக எதிர்ப்பக்கம் திரும்பி நடந்தார்கள்.

அப்புறம், ஒவ்வொரு இருக்கையாகக் கூர்ந்து பார்த்துக்கொண்டு வந்த போலீஸ்கார, காரிகள் மொட்டைத் தலை எங்கே தட்டுப்பட்டாலும் எழுப்பி டிக்கட் இருக்கா, எங்கே போறே என்று விசாரிக்கும் காட்சி. எடின்பரோவுக்கு அடுத்த ஸ்டேஷன் திருப்பதியாக இல்லாமல் போனது இவர்கள் அதிர்ஷ்டம்.

பக்கத்து சீட் மொட்டைத் தலை இளைஞன் பிட்சா சாப்பிடுவதை நிறுத்தி காதலிக்கு அடுத்த நீண்ட முத்தத்தை வழங்கியோ வாங்கியோ கொண்டிருந்தபடியால், அது முடிகிறதவரை பொறுமையாகக் கையைக் கட்டிக்கொண்டு காத்திருந்து அப்புறம் தகவல் விசாரித்த காவலர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.

8888888888888888888888888888888888888888888888888888888888888888

லண்டன் போகிற ரயில், பத்தாவது பிளாட்பாரத்தில் புறப்படத் தயாராக இருந்தது. வேவர்லி ஸ்டேஷனில் ஒதுக்குப்புறமாக, நாலைந்து பழைய டியூப் லைட்டுகள் அழுது வடியும் ஆள் நடமாட்டமில்லாத பிளாட்பாரம். அரையிருட்டில் அநாதையாகக் காத்துக் கொண்டிருந்த ரயிலைப் பார்க்கத் துக்கம் தொண்டையை அடைத்தது.

கல்பகோடி காலம் முன்பு ஜேம்ஸ் வாட் நீராவியின் சக்தியைக் கண்டுபிடித்து, தொடர்ந்து வந்த ஆர்.எல்.ஸ்டீவன்சன் முதல் ரயில் எஞ்சினை உருவாக்கியபோது கொடுத்த ‘ப்ளையிங் ஸ்காட்மேன்’ பெயரை இன்னும் விடாமல் உபயோகிக்கும் ஜி.என்.ஈ.ஆர் ரயில்வேக்காரர்கள் லண்டன் ரயிலிலும் அதே பெயர் எழுதிய எஞ்சினை நிறுத்தியிருந்தார்கள். பின்னால் அணிவகுத்த பிரம்மாண்டமான பத்து கம்பார்ட்மெண்டுகளில் ஒன்றிரண்டைத் தவிர மீதி எல்லாம் ஸ்லீப்பர் கோச் தான்.

எப் கோச்சைத் தேடி நடக்கும்போது, அரையிருட்டில் நின்றிருந்த யாரோ பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள். டிக்கட் பரிசோதகர்தான். வாங்க வாங்க என்று அவர் அன்போடு வரவேற்க, அன்னிய தேசத்தில், அர்த்த ராத்திரியில் அடையாளம் காணப்பட்டதில், குளிருக்கு இதமான சந்தோஷம். நன்றி சொன்னேன்.

எப்படி சார் என் பெயரைக் கண்டு பிடிச்சீங்க என்ற அசட்டுத்தனமான கேள்வி வாய் வரைக்கும் வந்ததை அடக்கிக் கொள்ள வேண்டிப் போனது. ஈசான மூலை இருட்டு ரயிலைத் தேடி மூட்டை முடிச்சோடு வருகிற ஒற்றைக் கறுப்பன் மேட்டிமைக்குரிய நார்ட்டன் துரையாகவா இருக்க முடியும்? டிடீஇ கையில் பிடித்த கிளிப் செருகிய அட்டையில் கொட்டை எழுத்தில் எழுதின திருநாமம் இவனுக்கு அல்லாது வேறு யாருக்குப் பொருந்தும்?

வண்டியில் ஏறியதும் அந்த ரயில்வே அதிகாரியும் கூடவே நுழைந்துவிட்டார். பேச்சுத் துணை கிடைக்காமல் அதுவரை கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார், பாவம்.

இதுதான் உங்க கூப்பே. அன்பாகச் சொல்லிக் கதவைத் திறந்து புதுவீட்டைக் காட்டும் கட்டிட மேஸ்திரி போல் பெருமையோடு சிரித்தார். இன்னொரு நன்றி சொன்னேன். பெட்டி முழுக்க அறையறையாகக் கூப்பே தான். நம்ம ஊர் ஏர்கண்டிஷன் முதல் வகுப்பு மாதிரி. கீழ் சீட்டிலிருந்து மேல் சீட்டுக்குத் தாவ வேண்டிய சிரமம் இல்லாமல், சின்ன ஏணி ஒன்றை பெட்டி நடுவில் கச்சிதமாக நிறுத்தியிருக்கிற நேர்த்தி அபாரம்.

இதெல்லாம் உங்களுக்கு என்று அவர் நீட்டிய பிளாஸ்டிக் பெட்டியில் பற்பசை, இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒட்ட வைத்துக் கொள்ளக் கூடிய டூத்பிரஷ். கூடவே சிறு கிண்ணத்தில் அடைத்த தண்ணீர். ஸ்ட்ரா. காலையில் பல் தேய்த்து வாய் கொப்பளிக்கவாம். அடுத்த நன்றி. இங்கே பாருங்க பாட்டில்லே மினரல் வாட்டர். அவர் எடுத்துக் கொடுத்தார். குடிக்கற தண்ணி. நன்றி. இன்னும் வேணும்னா, கேளுங்க, தரேன். வேணாம், நன்றி. இது ஹீட்டர். இங்கே சுவிட்ச். ரொம்ப குளிர் என்றால் டெம்பரேச்சரை இப்படிக் குமிழைத் திருப்பி அதிகப் படுத்திக்கலாம். நன்றி. இங்கே பாருங்க, நாலு தலையணை. கம்பளி ரஜாய். முகம் துடைக்க துவாலை. நன்றி. இன்னும் ரெண்டு தலையணை வேணுமா? நன்றி, வேணாம். இது வாஷ் பேசின். தரையிலே பொருத்தி இருக்கிற இந்த வெண்கலக் குமிழை இப்படிக் காலால் மிதிச்சால், வென்னீர் அருவி மாதிரிக் கொட்டும். நன்றி. கதவை இப்படிப் பூட்டணும். நன்றி. ஏதாவது வேணும்னா, இந்த பெல்லை அடிச்சா நான் இல்லே எங்க ஆளுங்கள்லே யாராவது ஓடோடி வருவோம். நன்றி. ஏதாவது ஆக்சிடெண்ட் நடந்து, அதெல்லாம் நடக்காது, அப்படி ஏற்பட்டு ரொம்ப அவசரம்னா இந்தச் சுத்தியலை இங்கே இருந்து எடுத்து இந்த ஜன்னலை இப்படி ஓரமாத் தட்டினாப் போதும். கண்ணாடி உதிர்ந்திடும். சுளுவா வெளியே வந்திடலாம். ரொம்ப நன்றி. இந்தச் சங்கிலியைப் பிடிச்சிழுத்தா ரயில் நிக்கும். தெரியும், நன்றி. பாத்ரூம் போகணுமா? அரசூர் வம்சத்தில் ராஜாவுக்குக் கிடைத்த உபசாரம் நினைவு வரவே, அவசரமாக, வேணாம் நன்றி. பாத்ரூம் இந்தப் பக்கம் இருக்கு. ரெண்டே நிமிஷம்தான் நடை. நன்றி. அங்கே கதவை இப்படித் திறந்து – ஒரு சேஞ்சுக்காக, மெர்சி என்று ப்ரஞ்ச் மொழியில் நன்றி.

ஏழு மணி நேரம் பிரயாணம் செய்து விடிகாலை லண்டன் போய் இறங்கியதும் என்ன தருவீர்கள் என்று விசாரிக்க, எழுப்பி விடுவேன் என்றார் கம்பீரமாக. எழுப்பி? டீ தருவேன். அப்புறம்? ஒரு மணி நேரம் வண்டியில் உட்கார்ந்து சாவதானமாக டீயைக் குடித்து குவளையை இங்கே வைத்துவிட்டு இறங்கிப் போகலாம்.

பொலபொலவென்று விடிந்து கொண்டிருக்க, யூஸ்டன் – கிங்க்ஸ் கிராஸ் ஸ்டேஷனுக்குக் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி முன்பாகவே ரயில் போய்ச் சேர்ந்துவிட்டது. தேநீர்க் கோப்பையை வைத்துவிட்டு இறங்க, தொடர்ந்து வரும் இதமான குளிர்.

ஒரு வருடம் கழித்து மீண்டும் சந்திக்கிற சிநேகிதத்தோடு லண்டன் வரவேற்றது.

8888888888888888888888888888888888888888888888888888888888888

டிக்கட் வழங்கும் இயந்திரத்தில் ஆறு பவுண்ட் போட்டு, பாதாள, தரை ரயில் ஆறு பிரிவுகள், மற்றும் பஸ் என்று இஷ்டத்துக்கு ஏறி இறங்க டே-கார்ட் எடுத்தானது. பிக்கடலி பகுதி ரயிலுக்குக் காத்திருந்தபோது, ஜூலை ஏழு குண்டு வெடிப்புக்குப் பிறகு இந்தியர்கள் ரயிலில், பஸ்ஸில் ஏறினால் சந்தேகமாகப் பார்க்கிறார்கள் என்று யாரோ சொன்னது நினைவு வந்தது. மீசையைக் கணிசமாகக் குறைத்திருக்கலாம். ஜீன்ஸ், டெனிம் இல்லாமல் அலுவலகம் போகிற கனவான் ரக உடுப்பில் கிளம்பியிருக்கலாம். இப்போது அதற்காக விசனப்பட எல்லாம் நேரம் இல்லை. ரயில் வந்து கொண்டிருக்கிறது.

விடுமுறை நாள் என்றாலும், ஏர்ல்ஸ் கோர்ட்டுக்குப் பயணம் செய்த பாதாள ரயிலில் காலை ஆறு மணிக்கு நல்ல கூட்டம். அழுக்குக் கைக்குட்டையில் மூக்கைத் துடைத்தபடி பழைய சைக்கிளை அணைத்துப்பிடித்து நின்று கொண்டிருந்த வயோதிகர். நின்றபடிக்கே கம்பத்தில் சாய்ந்தபடிக்கு டெய்லி மிரரில் மூழ்கியிருந்த யார்க்ஷையர் தொப்பி தரித்த ஒரு ரெட்டைநாடி மனிதர். இந்த இரண்டு பிரிட்டீஷ்காரர்களைத் தவிர, ரயில் பெட்டி முழுக்க சீனர்கள். அப்புறம், இந்தியரா, பாக்கிஸ்தானியரா இல்லை பங்களாதேஷ் காரர்களா என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத துணைக் கண்டப் பெருங்கூட்டம்.

ஏர்ல்ஸ் கோர்ட்டில் இறங்கி, இடது பக்கம் திரும்பி நடக்க, மசாலா பிரதேசம் என்று சாப்பாட்டுக்கடை போர்டு வரவேற்கிறது. ஒரு நிமிடம் நின்று பார்க்க, நாலு பவுனுக்கு மசால்தோசை கிடைக்கும் என்ற அறிவிப்பு. மசாலா தோசையோடு நாளைத் தொடங்குகிற உத்தேசம் இல்லாததால், மேலும் நடந்து கிராம்வெல் வீதி லாட்ஜில் படியேற சத்ஸ்ரீ அகால் என்று உரிமையாளர் ஹர்பச்சன்சிங் வரவேற்றார். கவுண்டரில் ரஷ்யா, போலந்து, ருமேனியா அல்லது வேறு கிழக்கு ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்த வரவேற்புப்பெண். சாப்பிடும் இடத்தில் காப்பி விளம்பும் சீன மங்கையர், கறுப்பர் இன உபசரிப்பாளர். வரட்டு ரொட்டி கடிக்கும் ஜப்பான் காரர்கள். ஏம்ப்பா, இங்கிலீஷ்காரங்கன்னு இங்கே ஒரு இனம் இருக்குதாமே பார்த்திருக்கீங்களா?

சந்தேகமேயில்லை. கிறிஸ்துமஸ் நேரத்தில் லண்டனை இவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வெள்ளைக்காரர்கள் கோஷ்டியாக வெளியேறிவிட்டார்கள்.

8888888888888888888888888888888888888888888888888888888888888

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது