Sunday, June 14, 2009

என்ன செய்து கொண்டிருக்கிறேன்?

திரைப்படம்

‘உன்னைப் போல் ஒருவன்’ கதை வசனம் எழுதும் பணி பூர்த்தியாகிப் படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளது.

கமல் அவர்களோடு அவருடைய caravan-ல் நடத்திய படம் குறித்த நீண்ட உரையாடல்கள், கதையமைப்பு குறித்த விவாதங்கள், இயக்குனர் நண்பர் சக்ரியோடு நட்போடு புரிந்த வாக்குவாதங்கள் பற்றி எல்லாம் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் – Sight at Shoot.

என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய இன்னொரு மகத்தான கலைஞரான திரு மோகன்லால் அவர்களோடு பழகிய அனுபவம் குறித்து ஒரு அத்தியாயம் எழுதினால் போதாது. அதிகாலையில் டப்பிங் முடித்து விட்டு வந்து கைகுலுக்கி, ‘என் வேலை முடிச்சுட்டேன் சார், வரட்டுமா’ என்று அன்போடு விடைபெற்ற அந்த நல்லவரை மறக்க முடியாது.

திரு சந்தானபாரதி அவர்களோடு உரையாடியது குறித்து எழுத வேண்டும். இவருடைய சகோதரர் வங்கியில் என்னோடு தில்லியில் பணி புரிந்தவர் என்பதை அறிந்து உடன் அவரை விளித்து பேசச் சொல்லி தானும் பேசி மகிழ்ந்தார்.

நடிகர்கள் சீமான், டாக்டர் பரத், கணேஷ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் நீல்கண்டன் (பாரதிராஜாவின் உதவியாளராகப் பணியாற்றியவர்), வசன கர்த்தா ரமாதேவி, படத்தின் உதவி இயக்குனர்கள் - எல்லோரோடும் யூனிட் உணவை உண்டு, ஒரு சேரப் பொழுது கழித்துப் பழகியது மறக்க முடியாத அனுபவம்.

முக்கியமாக நண்பர் சிவாஜி (இயக்குனர் சந்தானபாரதியின் சகோதரர் – அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜை ‘தெய்வமே’ என்று புகழும் கான்ஸ்டபிள் சம்பந்தம் இவர்தான்). நல்ல நகைச்சுவை உணர்வும் இலக்கியப் பரிச்சயமும் உள்ள சிவாஜி பற்றி, நண்பர் ஜாஃபர் பற்றி (பிரதாப் போத்தனின் படங்களில் உதவி இயக்குனர் இவர்), ஒளிப்பதிவு நிபுணர் மனோஜ் சோனி பற்றி, கலை இயக்குனர் தோட்டா தரணி பற்றி, ஒப்பனைக் கலைஞர் செல்வி சாரு குரானா பற்றி, ஹைதராபாத்தில் ஒரு வாரக் கடைசி விடாமல் போன, இருந்த, திரும்பியது குறித்து எல்லாம் விவரமாக எழுத வேண்டும்.

நண்பன் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியை (ஒலிப்பதிவில் இன்னொரு ரசூல் பூக்குட்டி சதி லீலாவதி கமல் மகனாக வந்த இந்தச் ‘சிறுவன்’) எப்படி மறக்க முடியும்?

சமீபத்திய பயணம்

சொன்னேனே? வாராவாரம் ஹைதராபாத். பிலிம் சிட்டியிலும், பஞ்சாரா ஹில்லிலும் படப்பிடிப்பு குழுவோடு (கமல் அவர்கள் அன்பான உபசரிப்பில்) இருந்த அனுபவம் மறக்க முடியாதது.

க்ளைமாக்ஸ் காட்சிக்காக புதிதாக எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் 14 மாடி கட்டிடத்தில் (போக 280 படி, திரும்ப வர இன்னொரு 280) எல்லோரும் ஏறி இறங்கிய நாட்கள் பற்றியும் எழுதியே ஆகவேண்டும். தினம் 10 தடவை – 5600 படி ஏறி இறங்கி முதல் சில நாள் கால் யானைக்காலாகி அப்புறம் இயல்பு நிலைக்கு வந்தது. காலையில் ஆறரை மணிக்கு படியேற ஆரம்பிக்கும்போது பார்த்தால் இரண்டு படி முன்னால் ஓடிக் கொண்டிருப்பார் கமல். அவர் முகத்தில் உறக்கச் சுவடோ, களைப்போ இந்த இரண்டு மாதத்தில் ஒரு முறை கூட கண்டதில்லை.

கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்த போது எதிர்பாராத விதமாக (ரிகர்சலில் செய்யாத ஒன்று) அவர் சட்டென்று சில வினாடிகள் வசனமின்றி தன் பாத்திரத்தை வெளிப்படுத்திய விதத்தைக் கண்டு ‘கட்’ சொன்னதும் முழு யூனிட்டுமே கைதட்டியது. ஆரம்பித்து வைத்தவன் இதை எழுதுகிறவன்.

‘That was an one-man symphony, kamal-ji’ – I told. He just smiled.


சமீபத்திய பங்கேற்பு

உன்னைப் போல் ஒருவன் பத்திரிகையாளர் சந்திப்பு – எல்லா தொலைக்காட்சியிலும் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இது பற்றி இனியும் எழுத வேண்டியதில்லை. உள்ளே நுழைந்ததும் கமல் அவர்கள் பேச அழைத்து மேடையேற்றி விட்டார். நண்பர் மனுஷ்யபுத்ரனும் பேசினார்.

திரைப்படப் பயிலரங்கத்தோடு தொடர்புடைய கலைஞர்களுக்கு திரு கமல் அவருடைய இல்லத்தில் அண்மையில் அளித்த விருந்தில் கலந்துகொண்டது இன்னொரு தனி அனுபவம்.

ஹாலிவுட் இயக்குனர் சேகர் கபூர், நண்பர் நடிகர் ரமேஷ் அரவிந்த், பிரசாத் திரைப்படக் கல்லூரி முதல்வர் ஹரிஹரன், நட்புக்குரிய கௌதமி, செல்வி ஸ்ருதி இவர்களோடு நடத்திய கலந்துரையாடல்கள் பற்றி எழுத வேண்டும். இன்றைக்கு நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன் – நோ ஷூட் டே.


இன்றைக்கு இன்னும் அதிக நேரம் கிடைத்தால்

விஸ்வரூபம் நாவல் வேகமாக முன்னேறி வருகிறது. ஆகஸ்ட் மாதக் கடைசிக்குள் முடித்து வெளியிட திட்டம். இன்று காலை உடற்பயிற்சிக்குப் பிறகு ஒரு அத்தியாயம் எழுதினேன். மொத்தம் 80. இதுவரை 43 முடிந்திருக்கிறது.

அடுத்து வெளிவர இருக்கும் புத்தகம்

லண்டன் டயரி.

நண்பர் பத்ரி, பா.ரா கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்த மாதம் வெளியிடுகிறார்கள்.

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது