Tuesday, July 26, 2005

க்ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ



நேற்று கேரளத் தலைநகரான பள்ளிகொண்டபுரத்தில் (அதாவது அனந்தையில்) கேரளத்தை ஆளும் ஐக்கிய ஜ்னாதிபத்ய முன்னணியின் கூட்டத்திற்கு முதல்வர் உம்மன் சாண்டி கொஞ்சம் தாமதமாக வந்தார். அதாவது, மதியச் சாப்பாடு எல்லாம் முடிந்தபிறகு.

"சாண்டி வந்திருக்கேன்"

பசிக் குரல்.

"ஐயோ சேட்டா, உச்சய்க்கு ஊணு எல்லாம் தீர்ந்து போச்சே"

"சரி, சாப்பாட்டுப் பாத்திரம் எங்கே? அதில் ஏதாவது மிச்ச மீதி இருந்தால் வழிச்சு எடுத்து வந்து போடுங்கப்பா"

போட்டார்கள்.

படு காஷுவலாக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நின்றபடியே அந்த மிச்சம் மீதியை ஒரு பிடி பிடித்தார் முதல்வர்.

இந்தச் செய்திக்கு இன்றைய மாத்ருபூமி கொடுத்திருக்கும் பழமொழித் தலைப்பு - "க்ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ" (கோவில் காவல்காரனுக்குச் சோற்றுச் சட்டியைச் சுரண்டித்தான் சாப்பாடு).

புகைப்படம் - நன்றி மாத்ருபூமி

Sunday, July 24, 2005

தாத்தாவுக்குக் குரு

உ.வே.சாமிநதய்யர் எழுதிய 'ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளைவர்கள் சரித்திரம்' படிக்க எடுத்தேன். இரண்டு பாகங்களும் ஏராளமான செய்யுட்களுமாக அமைந்த இந்தப் புத்தகம் வெளிவந்தே எழுபது வருடமாகி விட்டது. அது சொல்லும் வரலாறு அதற்கும் நூறு வருடம் முன்னால் யமகம், திரிபு, பின் முடுகு வெண்பா, தரவு கொச்சகக் கலிப்பா, தலபுராணம் என்று சதா சுவாசித்துக் கொண்டு இருந்தவர்கள் பற்றியது.

இந்தத் தீவிரத்துக்கு இடையே அந்தக் காலப் பண்டிதர்கள் பலருக்கும் சுபாவமான உரைநடை கைகூடி இருந்திருக்கிறது. உவேசா மாத்திரம் இல்லை, அவரோடு தொடர்புடைய பெரியவர்கள் பலரிடமும் இதைக் காணலாம்.
22.10.1900 தேதியிட்டுப் புதுவையிலிருந்து உவேசாவுக்கு புதுச்சேரி சவராயலு நாயக்கர் எழுதிய கடிதத்தை ' தாங்கள் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தை எழுத எத்தனித்திருக்கிறதாக இம்மாதம் 8-ம் தேதி திங்கட்கிழமை வெளிப்பட்ட 146 நம்பர் சுதேசமித்திரன் பத்திரிகையால் அறிந்து நான் மெத்தவுஞ் சந்துஷ்டி அடைந்தேன்' என்று தொடங்குவது உதாரணம்.

இது தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழல விட்டுக்கொண்ட (பாக்கெட்டில் ரீசார்ஜபிள் பேட்டரி வைத்திருப்பார்களோ) நம்முடைய நவீனத் தமிழ் இலக்கியப் பிரபலங்களின் 'பின் பண்டித' அ-கதை உரைநடைக்கு முற்றிலும் மாறுபட்டது.

கொண்டவர் விண்டிலர் - விண்டவர் கொண்டிலர் என்றபடி இவர்கள் கொடுக்கும் இருட்டுக்கடை அல்வாவை விட பழைய ஒரிஜினல் பெங்களூர் எம்.டி.ர் பிராண்ட் இன்ஸ்டண்ட் குலோப்ஜாமுன் வகையறாக்கள் சிலாக்கியமானவை.
----------------------------------------------------------------------

மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குக் கவிதை கைவாள் இல்லை. முதுகு சொரியும் பூணூலும் இல்லை. மூச்சு விடுவது, மூத்திரம் போவது போல் அது தினசரி வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்.

சின்ன வயதில் வாவு நாள் (பௌர்ணமி) விடுமுறையின் போது திருச்சிரபுரம் என்ற திருச்சியில் வீட்டுக்கு மளிகை ஜாமான் வாங்கிக் கொண்டு வர நடக்கிறபோது சுங்கச் சாவடி சவுக்கிதார் கேட்ட மாத்திரத்தில் வெண்பா பொழிகிறார். அவர் கொடுத்த இரண்டணா உப்பு, புளியாகிறது.

பிற்பாடு கொஞ்சம் பெயர் பிரபலமாகி, அதைவிடக் கொஞ்சம் போல் வருமானம் ஈட்டி, வீடு கட்டும்போது வாசல் கதவுக்கு மரம் வேண்டுமா - எடு ஏட்டை. அவரிடம் பிரியம் உடைய தனவான் ஒருத்தருக்குக் கவிதை வேண்டுகோள்.

சாப்பாட்டுக்கு நன்கொடையாக அனுப்பிய புது நெல் வயிற்றில் வாயுத் தொல்லையை உண்டாக்குகிறதா? அனுப்பியவருக்கு நன்றியோடு தேக அசௌகரியம் குறித்து ஒரு சிலேடை வெண்பா. அடுத்த நாளே பழைய அரிசி மூட்டை வீட்டுக்கு வந்து சேர்கிறது.

தன்னை தரித்த பட்டீச்சுவரம் ஆறுமுகத்தா பிள்ளை ஒரு மிராசுதார் ஐயரிடம் கைமாற்று வாங்கி வட்டிக்கு மேல் வட்டி கூடிப் போய் கடன் தொல்லையில் மூழ்கிக் கொண்டிருந்தபோதும் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் செய்யுள் தான் கைகொடுக்கிறது.

வட்டியைக் குறைக்கச் சொல்லி அந்த மார்வாடி ஐயருக்கு இவர் எழுதிய விருத்தம் றுமுகத்தா பிள்ளை வயிற்றில் பாலை வார்க்கிறது.

இன்றைய சினிமாக் கவிஞர்கள் யாரேனும் ஒரு பாட்டாவது இப்படி எழுதி தண்ட வட்டிக் காரர்களுக்கு விடுத்தால் தயாரிப்பாளர்கள் சீலிங் •பேனைத் தேட வேண்டி வராது.
-------------------------------------------------------

நூற்று ஐம்பது வருடத்துக்கு முந்திய வாழ்க்கை பற்றி இந்தச் சரித்திரத்தில் இடம் பெற்ற பதிவுகள் முக்கியமானவை.
சைவ மடத்தில் கிறிஸ்துவர்களும் சகஜமாக நடமாடிக் கல்வி பயின்று வந்திருக்கிறார்கள். சவரிமுத்துப் பிள்ளை கொஞ்ச காலம் சிவகுருநாதப் பிள்ளையாகிறார். அப்புறம் அவர் கல்யாணம் வர, சிவப் பழமான ஆசிரியரே அவரை சவரிமுத்து என்று அருகே விளித்து, கல்யாணத்துக்கு உதவச் சொல்லிப் பத்துக் கனவான்களுக்கு சீட்டுக் கவிதை அனுப்புகிறார்.

பெர்சிவல் பாதிரியார் கேட்டுக்கொண்டபடி இன்னொரு சைவ சமயச் சான்றோரான ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சுப்போட சென்னை வருகிறார். இங்கே யாழ்ப்பாணத் தமிழரைத் துரும்பாகப் பார்க்கிறார்கள். மழவை மகாலிங்கய்யர் விவிலிய மொழிபெயர்ப்பைப் படித்து அதில் பிழையில்லை என்றும் யாழ்ப்பாணத் தமிழ் சிறப்பானதென்றும் சான்று வழங்கிய பிறகே பெர்சிவல் புத்தகம் அச்சாக அனுமதிக்கிறார்.

விவிலியத்தை மதம் சார்ந்த நூலாகப் பார்ப்பது அப்புறம் தான் தொடங்கி இருக்கும் போல் இருக்கிறது.

ரயிலும், தந்தியும் அறிமுகமான அந்தக் காலத்தில் புதிதாக ஏற்பட்ட போஸ்ட் மாஸ்டர், சிரஸ்ததார், எஞ்சினியர் போன்ற துரைத்தன உத்தியோகங்களில் இருக்கப்பட்டவர்களும் ஒழிந்த நேரத்தில் சுவடியை வைத்துக் கொண்டு கடினமான தமிழ்ப் பாடல்களைப் பதம் பிரித்துப் படிக்க முயன்றிருக்கிறார்கள். அல்லது தக்கவர்களை அணுகியிருக்கிறார்கள்.

தமிழ்ச் செய்யுளில் ஈடுபட்டாலும், இங்கிலீசு நோட் மெட்டில் பாட்டு அமைப்பது கௌரவம் என்று சகலரும் நினைத்திருக்கிறார்கள்.

மாம்பழக் கவிச்சிங்க நாவலர் புதுக்கோட்டை அரசர் தொண்டமானைப் பற்றி நோட்டுப் போட்டால், அதே மெட்டில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதினகர்த்தர் மேல் 'துஞ்சம் தார் தரு துரைசை யில்வளர் சுப்ரமணிய தயாநிதியே" என்று பாட்டு இயற்றுகிறார். சந்நிதானம் மகிழ, அந்தக் கானத்தை ஓதுவார்கள் மனனம் செய்து தினப்படி அவருக்கு முன்னால் பாடும் வழக்கம் ஏற்படுகிறது.

மடத்து சிவ பூஜைக்கு இடைஞ்சல் வரவழைக்காத அந்த இங்கிலீசு மெட்டு இன்னும் கொஞ்சம் நீண்டு மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர் வண்டானத்தையும் பிடித்துக் கொள்கிறது. அவர் தன்னை தரித்த வள்ளல் மேல் அதே மெட்டுக்குப் பாட்டுக் கட்டுகிறார்.

தமிழ்த் திரை இசையமைப்பாளர்கள் தாம் தத்தகாரத்தில் பல்லவி கொடுத்து எந்தமிழ்க் கவிஞர்களைக் கெடுத்தார்கள் என்பதை இனியும் நம்ப முடியாது போலிருக்கிறது.
------------------------------------------------------------

அந்தக் காலத்தில் காப்பி இருந்ததோ என்னவோ, வித்துவான்களிடம் ஊரில் பொதுவாக மரியாதை இருந்திருக்கிறது. கொஞ்சம் போல் பயமும் அதில் கலப்பு உண்டு.

தலபுராணம் செய்யச் சொல்லி அழைத்த நகரத்தார்கள் பயபக்தியோடு திரண்டு வந்து மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் வேண்டிக் கொள்கிறார்கள் - "தயவு செய்து அறம் வைத்துப் பாடி விடாதீர்கள். பாட்டுக்கு மூன்று வரிக்குக் குறைவாகப் பாட வேண்டாம்"

இயல்பாகவே நல்ல மனிதராகிய அவர் மாட்டேன் என்று உறுதிமொழி தருகிறார்.

ஆனாலும் காண்ட்ராக்ட் அடிப்படையில் இப்படிப் பாட்டு எழுதப் போகும்போது, ஆதரித்து முன்கை எடுத்த கவர்மெண்ட் உத்யோகஸ்தர்கள் துர்போதனையால் சட்டென்று கையைப் பின்னால் இழுத்துக் கொண்டு எழுத்து வேலையை நிலைகுலைய வைக்கிறார்கள். ருத்ராட்ச மாலையை அடமானம் வைத்துக் கடன் வாங்க வேண்டி வருகிறது.

ஆதரித்துக் கூப்பிட்ட இடத்திலும் ராத்திரி பனிரெண்டு மணிவரை கண் விழிக்க வைத்துச் சாப்பாடு போடுகிறார்கள்.
இத்தனைக்கும் நடுவிலும் மனிதர் அசராமல் மாணவர்களுக்குப் பாடம் சொல்கிறார். இறுதிப் படுக்கையில் கிடக்கும்போது, சாமிநாதய்யர் திருக்கோத்தும்பி படிக்கிறார்.

"நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாகி.."
நுந்து கன்றென்றால் என்ன? ஐயருக்குச் சந்தேகம் வருகிறது.
மூச்சு வாங்கப் பிள்ளையவர்கள், "விருப்பமில்லாமல் செலுத்தப்பட்ட கன்று" என்கிறார்
.
மொழியறிவிலும், கவித்திறத்திலும், தான் கற்றதை எல்லாம் பிறருக்கு வாரி வழங்க வேண்டும் என்று மனதார நினைப்பதிலும் இப்படியான உத்தமர்கள் இனி வரப் போவதில்லை.

(மே 2003)

சீன வேலை


சீனாவில் அரசாங்க வேலைக்கு ஆளெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கே இதெல்லாம் எப்படி நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. நம்ம ஊரிலே அரசாங்க வேலைக்கு அப்ளிகேஷன் போட்டால் அடுத்தாற்போல் நாடவேண்டியது அரசு உத்தியோகஸ்தரை. நோபல் பரிசு வாங்கிய அமார்த்தியா சென் வகுப்பெடுக்க முதல் பெஞ்சில் உட்கார்ந்து கேட்டுப் படித்துப் பட்டம் வாங்கியிருக்கலாம். ப.சிதம்பரம் படிக்கப்போன அதே ஹார்வார்ட் பல்கலைக்கழகம் திறமையை மெச்சி, டாக்டரேட் பட்டத்தைப் பளபள காகிதத்தில் அடித்து இந்தா பிடியென்று தூக்கிக் கொடுத்திருக்கலாம். அதெல்லாம் சர்க்கார் வேலைக்காகாது. அந்தப் பட்டத்தை லோக்கல் தாசில்தார் கவனமாகப் பரிசீலித்தாக வேண்டும். அப்புறம், அதை நகல் எடுத்த காகிதத்தில் ரப்பர் ஸ்டாம்ப் குத்தி நீளமாகக் கையெழுத்துப் போட்டு அவர் அட்டஸ்டேஷன் செய்ய வேண்டும். இல்லையா, நாலெழுத்துப் படித்ததாக, வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி இருப்பதாக அரசாங்கம் லேசில் ஒத்துக்கொள்ளாது.

சீன அரசாங்க வேலைக்கு இந்தக் கஷடம் எல்லாம் இருக்காது என்று நம்புவோம். கம்ப்யூட்டர் பணி. இணையம், அதான் இண்டர்நெட் சம்பந்தப்பட்ட உத்தியோகம். வேலை இதுதான்.

சீனாவில் இண்டர்நெட் உபயோகம் கன்னா பின்னாவென்று பெருகி விட்டதாம். சீனர்கள் சமர்த்தாக இண்டர்நெட்டில் சினிமா நடிகை படம் பார்த்துக் கொண்டு இருக்கலாகாதோ. அல்லது ஆறு வருஷம் வெற்றிகரமாகத் தொடர்ந்து நேயர்களை ராத்திரிகளில் அழ வைக்கும் சின்னத்திரை சீரியலில், ஏழு பெண் பெற்ற குடும்பத் தலவர் திடீரென்று சாகடிக்கப்பட்டது கதையை என்ன விதத்தில் பாதிக்கும் என்று இணையத்தில் விவாதம் செய்து பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாமே.

இதெல்லாம் செய்கிறார்களோ என்னமோ, ஏகப்பட்ட சீனர்கள் இண்டர்நெட்டில் வலைப்பதிவு என்று அவரவருக்குச் சொந்தமாக தகவல் பதிந்து வைக்க இடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பிளாக் என்று அழைக்கப்படும் இந்த இண்டர்நெட் பரப்புகளில் அவர்களில் பலர் நித்தியப்படிக்கு, சீன அரசாங்கத்தை காட்டமாக விமர்சித்து எழுதித் தள்ளுகிறார்கள்.

இண்டர்நெட்டில் எழுதுகிற சீனாக்காரர்கள் எல்லாம் அரசாங்கத்தில் பதிந்து அனுமதி வாங்கி அப்புறம் தான் எழுதவேண்டும் என்று கட்டுப்பாடு கொண்டுவரலாமா என்று சீன அரசு யோசித்தது. கம்ப்யூட்டர் வைத்திருக்கும் பத்துக் கோடி சீனர்களுக்கு இப்படி ரேடியோ லைசன்ஸ் போல் அச்சடித்துக் கொடுத்து, யார் எங்கே எப்போது என்ன எழுதுகிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்ணெயோ, பாம்பு, தவளை எண்ணெயோ விட்டுக்கொண்டு கண்காணிப்பது உலகமகா சிரமமானது என்று புரியவந்தது. இது சரிப்படாது என்று யோசனையைக் குப்பையில் கடாசி விட்டார்கள்.

இப்படி இண்டர்நெட்டில் எழுதித் தள்ள இடம் ஏற்படுத்தித்தரும் பிரபல கம்பெனிகளை அணுகிக் கோரிக்கை விடுக்கலாமா என்று அடுத்த யோசனை. அந்தக் கம்பெனிகளும் ஒத்துழைக்கத் தயாராக இருந்தார்கள். ரொம்ப சுலபமான காரியம் தான் அவர்கள் செய்ய வேண்டியது. எந்த சீனனாவது அல்லது சீனப் பெண்ணாவது தன்னுடைய இண்டர்நெட் வலைப் பதிவில் ஜனநாயகம், சீன அரசாங்கம், பிரதமர் டெங்-சியோ-பிங்க் என்றெல்லாம் எழுதினால் அந்த வார்த்தையை உடனே கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அப்படி எழுதியதை இண்டர்நெட்டில் போட அனுமதிக்கக் கூடாது. அப்போது, எதிர்ப்பாளர்களின் கொட்டம் அடங்கிவிடும் இல்லையா?

ஊஹும். இதுவும் சரிப்படாது என்று சீன அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜனநாயகம் என்ற சொல் இண்டர்நெட்டில் எழுதினால் தப்பு என்றால், அதற்குப் பதிலாக இன்று முதல் வெங்காயம் என்ற வார்த்தையைப் பயன் படுத்துவது என்று கோடிக் கணக்கான சீனர்கள் முடிவு செய்துவிட்டால் என்ன ஆகும்?

“சீனாவில் ஜனநாயகம் பெருத்த அபாயத்தில் இருக்கிறது. சீன அரசாங்கம் இன்னும் எத்தனை நாள்தான் ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுமோ தெரியவில்லை. ஜனநாயகப் பாதுகாப்பு இயக்கம் நாடு முழுவதும் உடனே தொடங்கப்பட வேண்டும்” என்று எழுதினால் தானே பிரச்சனை? அதையே, “சீனாவில் வெங்காயம் பெருத்த அபாயத்தில் இருக்கிறது. சீன அரசாங்கம் இன்னும் எத்தனை நாள் தான் வெங்காய விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுமோ தெரியவில்லை. வெங்காயப் பாதுகாப்பு இயக்கம் நாடு முழுவதும் உடனே தொடங்கப்ப்பட வேண்டும்” என்று எழுதினால் தீர்ந்தது எழுதுகிறவர்களின் பிரச்சனை. அரசாங்கத்துக்கோ, வெங்காய - ஜனநாயகத் தலைவலிதான் இன்னும் அதிகமாகும்.

ரொம்பவே யோசித்து சீன அரசாங்கம் கண்டுபிடித்த வழிதான் வெங்காயத்தை வெங்காயத்தால், அதாவது முள்ளை முள்ளால் எடுப்பது. இண்டர்நெட்டில் அரசாங்கத்தை விமர்சித்து எழுதுகிற சீனர்களை எழுத விட்டுவிடலாம். அவர்கள் எழுதும்போது பதில் போட்டு விவாதம் செய்ய பத்துப்பேர் வருவார்கள் இல்லையா? இங்கே தான் கவர்மெண்ட் நுழைகிறது.

அரசாங்கம் பணியில் அமர்த்திய உத்தியோகஸ்தர்கள் ஜரூராக இந்த மாதிரி இண்டர்நெட் விவாதங்களில் புனைபெயர்களில் பங்கெடுப்பார்கள். விவாதிக்கப்படும் விஷயத்தை சாமர்த்தியமாக மாற்றி பிரச்சனை இல்லாமல் ஆக்குவதற்குத்தான் இவர்களுக்குச் சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி. காரசாரமாக சீன அரசாங்கத்தை யாராவது விமர்சித்தால் அங்கே இவர்கள் பதில் எழுதும்போது சீனாவில் பத்தாண்டுகளில் நெல் விளைச்சல் பதினேழு புள்ளி நாலு சதவீதம் அதிகரித்துள்ளது என்று நட்போடும் தோழமையோடும் எழுத வேண்டும். சீனப் பிரதமர் சர்வாதிகாரமாகச் செயல்படுகிறார் என்று இன்னொரு சீனர் எழுதி வைத்து, நாலைந்து பேர் அதற்கு ஆமாம் போட்டால், இந்த அரசாங்க உத்தியோகஸ்தர் நடுவில் புகுந்து, சீனாவில் வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டத்தின் வெற்றி, முட்டைக்கோசு உற்பத்தியில் தன்னிறைவு பற்றி உற்சாகமாக எழுத வேண்டும்.

ரொம்ப நாள் முன்னால் ஆர்.கே நாராயண் ‘கவர்ன்மெண்ட் ம்யூசிக்’ (‘சர்க்கார் சங்கீதம்’) என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மத்திய சர்க்கார், சங்கீதத்தில் அரசுப் பிரச்சாரத்தைப் புகுத்தினால் என்ன ஆகும் என்று ஜாலியான கற்பனை அது.

முக்தி கொடு ஆண்டவா என்று பக்தி ரசம். கண்ணன் வருவானோடி தோழி என்று காதலில் உருகுவது. இவை பற்றிய ரொட்டீன் கீர்த்தனமெல்லாம் சரிதான். அவற்றோடுகூட, ஐந்தாண்டு திட்டம், கனரகத் தொழில் முன்னேற்றத்தின் அவசியம், நிலத்தில் சல்பேட் உரம் போடுவது போன்ற விஷயங்களைப் பற்றியும் ராகம், தானம், பல்லவியோடு புதுப்பாட்டுப் பாட வித்துவான்கள் ஊக்குவிக்கப் படுவார்கள். சங்கீதக் கச்சேரி நடக்கும்போது ரசிகர்கள் தூங்கினால், சர்க்கார் உத்தியோகஸ்தர் கச்சேரியை நிறுத்தி, மைக்கைப் பிடுங்கிக் கொள்வார். “எழுந்திருங்கள். இது ஊக்கத்தோடு செயல்பட வேண்டிய காலம். சங்கீதத்தைக் கேட்டு நாட்டை முன்னேற்றுவது நம் எல்லோரின் தலையாய ஜனநாயகக் கடமை” என்று அறிவித்து விழிப்புணர்ச்சியை உண்டாக்குவார். இப்படிப் போகும் ‘சர்க்கார் சங்கீதம்’ கட்டுரை.

சீன அரசாங்கத்தின் இண்டெர்நெட் ஊழியர்கள் இதுவும் செய்வார்கள், இதுக்கு மேலும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இரா.முருகன் - 'சற்றே நகுக' பகுதி - தினமணி கதிர் 4 ஜூலை 2005

Friday, July 22, 2005

எழுநூற்று முப்பது




இன்போசிஸ் கம்பெனியில் அண்மையில் ஒரே நாளில் எழுநூற்று முப்பது இளையோர் வேலைக்குச் சேர்ந்தார்கள். சாரம் கட்டி உயரத்தில் மேடை அமைத்து அவர்களை ஒரே புகைப்படத்தில் அடக்கப் புகைப்படக்காரர் மிகுந்த சிரமப்பட்டாராம். எடுத்த புகைப்படம் இது.

அடுத்த ஆண்டு இதே நாளில்

1) இவர்களில் பாதிப்பேராவது வெளிநாட்டில் இருப்பார்கள்.

2) இவர்களில் நூறு பேராவது வலைப்பதிவு தொடங்கியிருப்பார்கள்.

வாழ்க!

Monday, July 18, 2005

அட்ல சூடண்டி, ஹிட்ச்காக் காரு


காலையில் பத்திரிகை வந்து விழக் காத்துக் கொண்டிருந்தபோது கை விரல் தன் பாட்டுக்கு டெலிவிஷன் பெட்டியின் ரிமோட்டை அழுத்துகிறது. சானல் சானலாகத் தாவுகிற காட்சி. சகலமான மொழியிலும் போன, முந்தைய தலைமுறைக்காரர்கள் ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள்

தெலுங்கு சானலில் பழைய சினிமா பாட்டு சீன். புஷ்டியான கருப்பு வெள்ளை சுந்தரிகள் சேலை மாதிரி எதையோ தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு தொம்தொம்மென்று தரையதிரக் குதிக்கிறார்கள். யாரோ ஒரு ராவ் கதாநாயகர். கைத்தண்டையில் கவசம் போல் மல்லிகைச் சரத்தைச் சுற்றிக்கொண்டு, அழுக்கு கலர் பாட்டிலிலிருந்து ஊற்றிக் குடித்தபடி அந்தப் பூகம்ப நாட்டியத்தை ரசித்ததவாறு திண்டு தலையணையில் சாய்ந்திருக்கிறார். காமிரா நகர, நாலைந்து கண்டா முண்டா ஆசாமிகள் அவசரமாக உருட்டி விழித்தபடி வாசல் கதவு பக்கம் நிற்கிறார்கள். வில்லனின் கையாள்களாக இருக்க வேண்டும். வில்லன் எங்கேப்பா?

காமிரா உள்ளறையில் எட்டிப் பார்க்கிறது. கள்ளச் சிரிப்பும், பென்சிலால் வரைந்த மீசையுமாக திடகாத்திரமான வில்லன். பாட்டும் ஆட்டமுமாகப் பக்கத்து ஹாலில் அமளிதுமளிப் படுவது கொஞ்சம் கூடப் பாதிக்காமல் அந்த ஆள் ஒரு பழைய டைப்ரைட்டரில் லொட்டு லொட்டு என்று டைப் அடித்துக் கொண்டிருக்கிறான். கவனம் சிதறி, டைப் அடிப்பதில் எழுத்துப் பிழை வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவோ என்னமோ, எப்போதும் வாயில் புகையும் சிகரெட்டைக் கூடக் கொளுத்தாமல் சும்மா உதட்டில் பற்றிக் கொண்டிருக்கிறான்.

டைப் ஆகிக் கொண்டிருப்பது ஒரு ஸ்டாம்ப் பேப்பரில். நீள நீளமான வாக்கியங்களாக வந்து விழுவது ஏதோ சொத்து விவரம் என்று ஊகிக்க முடிகிறது. பாட்டு முடிவதற்குள் டைப் அடித்து முடிக்க வேண்டும். அப்புறம் சொத்தைத் தன் பெயருக்கு எழுதித்தரச் சொல்லிக் கதாநாயகனை மிரட்ட வேண்டும்.

பாட்டு முடியும் நேரம் எதிர்பார்த்தபடியே கையில் ஸ்டாம்ப் பேப்பரோடு அறைவாசலில் அவன். நான் இன்னதென்று சொல்ல முடியாத ஆத்திரம் கொப்பளிக்க, டிவியை நிறுத்தினேன.

பின்னே என்ன? வெளியே ஆடுகிற அழகி பாட்டு முடிந்த பிறகு பணத்தை வாங்கிக் கொண்டு பறந்து விடுவாள். அதற்குள் அவளுக்கு ஒரு ஹலோ சொல்லலாம். புறங்கையில் மல்லிகைப்பூவை இவனும் கேட்டு வாங்கிச் சுற்றிக் கொண்டு, அந்த அழுக்கு திரவத்தை இரண்டு மடக்கு குடிக்கலாம். லட்டு மாதிரி சந்தர்ப்பம் கிடைத்து ஹீரோவும் வேறு வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறான். பத்து ரூபாயை விட்டெறிந்திருந்தால் ரிஜிஸ்தர் ஆபீஸ் வாசல் தட்டச்சரோ, டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்காரர்களோ சர்க்கார் மொழியில் மணிமணியாக அடித்து நீட்டியிருப்பார்கள் இந்த லீகல் டாக்குமெண்ட் சங்கதியை எல்லாம். கையைத் தட்டினால் எடுபிடி கொண்டு வந்து கொடுத்துப் போவான். இல்லை, அவனே வில்லன் சார்பில் மிரட்டி, பேனாவை மூடி திறந்து மசியை உதறிச் சரிபார்த்துக் கொடுப்பான். ஹீரோ கையெழுத்துப் போடட்டும், போடாது போகட்டும். வில்லன் கெத்தைக் கைவிடலாமா என்ன? கோர்ட் குமாஸ்தா மாதிரி சொத்துப் பத்திரத்தை டைப் அடிப்பதா வில்லன் வேலை?

இந்த விஷயத்தில் ஹாலிவுட் டைரக்டர் ஹிட்ச்காக் நம்ம கட்சி. அவர் பிரிட்டீஷ் காரர். இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் ஹாலிவுட்டுக்குப் போய்ப் படம் எடுத்தவர்.

1940-ல் அவர் எடுத்த முதல் ஹாலிவுட் படம் ‘ரெபக்கா’. இந்தப் படத்தில் ஒரு பெண் வில்லனை (சரி, வில்லியை) அவர் சித்தரித்த விதத்துக்கு ஹாலிவுட்டே எழுந்து நின்று சலாம் போட்டு ஆஸ்கார் பரிசையும் தூக்கிக் கொடுத்தது.

அப்படி என்ன கதை ரெபக்கா படத்தில்? ஒரு கோடீஸ்வரப் பிரபு. முதல் மனைவியான ரெபக்காவை இழந்த இவன் ஓர் அழகியைக் காதலித்து இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டு, தன் கோட்டைக்குப் போகிறான். அங்கே வீட்டை நிர்வகிக்கும் ஒரு மத்திய வயது ஸ்திரி. சீமானின் முதல் மனைவியான ரெபக்கா காலத்திலிருந்தே வேலையில் இருப்பவள். இந்த இரண்டாம் மனைவியின் வரவை அடியோடு வெறுக்கிற அவள், அந்தப் பெண்ணை வீட்டை விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். அந்தப் பெண்ணும் இவளைக் கண்டாலே நடுங்க ஆரம்பிக்கிறாள்.

ரெபக்கா மேல் விசுவாசம், கிட்டத்தட்ட கண்மூடித்தனமான பிரியம் வைத்த இந்த நிர்வாகிப் பெண்தான் படத்தின் வில்லி. அவள் இரண்டாம் மனைவியைச் சந்திக்கும்போதெல்லாம் குரலை உயர்த்தாமல் மிரட்டுகிற காட்சிகள் படத்தின் சிறப்பு. இந்த வில்லி பாத்திரத்தின் கொடுமையைக் கூட்டாமல் குறைக்காமல் தர முடிவு செய்தார் ஹிட்ச்காக். எப்படி அதை நிறைவேற்றினார் என்பதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் -

“அந்த வில்லி வரும் காட்சி எதிலும் அவள் அறைக்குள் நுழைவதையோ, காட்சி முடிவில் அறையை விட்டு வெளியேறுவதையோ காட்டினால், அவள் பத்தோடு பதினொன்றாகியிருப்பாள். அந்தக் கதாபாத்திரத்தின் கொடூரம் மங்கிப் போகும். எனவே வில்லி தோன்றும் காட்சி எதிலும் மற்ற பாத்திரங்கள் உள்ளே வருவார்கள். போவார்கள். திடீரென்று வில்லி பேசுவது கேட்கும். காமிரா திரும்பிப் பார்க்கும்போது, அவள் அந்த அறையில் ஏற்கனவே இருப்பாள்.”

புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் லாரன்ஸ் ஒலீவியர் கதாநாயகனாகவும், ஜோன் பாண்டைன் அவரின் இரண்டாம் மனைவியாகவும் நடித்த ‘ரெபக்கா’வில் இந்த வீட்டு நிர்வாகி பாத்திரத்தில் வந்து புகழை அள்ளிக்கொண்டு போனது ஆஸ்திரேலிய நடிகையான ஜூடித் ஆண்டர்சன். பின்னாளில் இங்கிலாந்து அரசியார் வழங்கிய கவுரவ ‘டேம்’ பட்டம் பெற்றவர் இவர். (சர் பட்டம் ஆண்களுக்கு வழங்கப்படுவது; அதற்கு இணையான டேம் பெண்களுக்கு வழங்கப்படுவது), பட்டம் வழங்கியபோது இந்தம்மா ஏற்கனவே அறைக்குள் இருந்தாரா என்று தெரியவில்லை.

நாற்பதுகளில் வெளியான பிரபல தமிழ்ப்படம் ஒன்று. அப்போதெல்லாம் அரசர், சேனாதிபதி, மந்திரி, ராணி என்று யார் நாலுவரி வசனம் பேசினாலும், ஒரு குறிப்பிட்ட இனத்தின் பேச்சு மொழியைத்தான் பயன்படுத்துவது வழக்கம். இந்தப் படத்தில் ராஜா தான் வில்லனும் கூட. கதாநாயகி அரண்மனையிலிருந்து தப்பிக்கும்போது கொடுமைக்கார ராஜாவின் விசுவாசமான ஊழியர்கள் ஊதுகுழலை உரக்க ஊதுவார்கள். ஒரு நொடியில் படை வீரர்கள் திரண்டு வந்து கதாநாயகியைச் சுற்றி வளைப்பார்கள். மின்னல் வேகத்தில் இப்படிப் பிடிபட்ட கதாநாயகி மருட்சியோடு பார்க்க, வில்லன் விளக்குவான் - “அவா ஊதினா இவா வருவா”.

அட்டகாசமாகச் சிரித்தபடி அடித்தொண்டையிலிருந்து உறுமிச் சொல்ல வேண்டிய சங்கதியை இப்படி திவச மந்திரம் மாதிரி வில்லன் மொழிந்ததை அந்தக் காலத்தில் ரசித்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்.

வில்லனோடு சம்பந்தமில்லைதான். அரசியல்வாதி ஒருத்தர் சில ஆண்டுகள் முன்னால் சொன்னது இது - “நான் நாட்டியம், சங்கீதக் கச்சேரி எல்லாம் போகமாட்டேன். இந்த மாதிரியான ரசனைகள் நம் பெர்சனாலிட்டியைத் தொளதொளாவென்று ஆக்கி விடும்”.

ஹிட்ச்காக் இருந்தால் இதைக் கேட்டு மகிழ்ந்ததோடு, இவரைக் கதை வசனம் எழுத வைத்து ஒரு தமிழ்ப் படத்தையும் எடுத்திருப்பார்!

தினமணி கதிர் - சற்றே நகுக - 26 ஜூன் 2005

Sunday, July 17, 2005

கருப்புக் குதிரை கூட்டுரோட்டில் காலைச் சாப்பாட்டு நேரம்

இப்போ டோக்கியோவிலே
ராத்திரியாக இருக்கும்.

தெரு எதிர்வரிசையிலே
வெள்ளைக்காரன் பெயர் வச்ச
கடியாரக் கடையில்
பார்வையா மாட்டியிருக்குதே
பாட்டனுக்குப் பூட்டன் கடியாரம்,
அதுக்குத் தெரியும்
நான் சொல்றது சரியா இல்லியான்னு.

இப்போ டோக்கியோவிலே
ராத்திரியாக இருக்கும்.

அங்கே பச்சை மீனை
மொச்சைக் கூழோட கலந்து
உருண்டை பிடிச்சுட்டு இருப்பாங்க.

சாப்பிடற குச்சியாலே
மீனைக் குத்திக்கிட்டு
உட்கார்ந்திருப்பார்
அந்த ஜப்பான் தேசத்து ராஜா.

சியோல், அதாங்க கொரியா தலைநகர்
அங்கே சாப்பாட்டுக் கடையிலே
ஒரு நாய்க்குட்டியை
மெல்லக் கழுத்தை நெரிச்சுக்
கொன்னுக்கிட்டு இருப்பாங்க.
அப்புறமா அதைச் சமைப்பாங்க.

அமெரிக்காவிலே இன்னும்
நேத்து ராத்திரிதான்.
டெக்சாஸ் சிறைச்சாலையிலே
கழுத்தெலும்புக் கறியும்
வெண்ணெயாப்பமும்
வறுவலும் பாலுமாக
தண்டனைக் கைதி ஒருத்தன்
இப்பச் சாப்பிட்டுக் கிட்டிருப்பான்.

பெரு நாட்டு தெற்குப் பிரதேசத்துலே
ஜூலியானா அம்மா
சாண வரட்டி எரிச்சு
உருளைக் கிழங்கு வேகவைச்சுட்டு இருக்கும்.

துருவப் பிரதேசத்துலே
யாரோ ஒருத்தர் இப்போ
பனியிலே வேட்டையாடிக் கொண்டாந்த மானை
உரிச்சு உப்புக் கண்டம் போட்டுட்டு இருப்பார்.

ரஷ்யா அனுப்பின சல்யூட் ராக்கெட்டுலே
விண்வெளி வீரர்கள் இப்பத்தான்
பன்னிக் கறியும், வெண்ணெயும்,
கேக்கும் பழமும் காப்பியுமாகப்
பசியாறி இருப்பாங்க.

நம்ம நாட்டுலே
ஆந்திராவிலேயோ வேறே எங்கேயோ
இந்நேரம்
பதிமூணு ஜாதி இந்துக்கள்
நாலு தலித்துகளை
மனிதக் கழிவு உண்ண,
அதாம்ப்பா, பீ தின்ன வச்சுட்டிருப்பாங்க.

ஏன்யான்னா, அவங்க சோள வயல்லே
இவங்க மாடு மேஞ்சுதாம். இல்லாக்காட்டி
வேறு ஏதோ உப்புப் பெறாத காரணம்.

இங்கே நம்ம மும்பை பட்டணம்
பைகுல்லா ஜெயில்லே
குடிகாரன், கேப்மாரி, மொள்ளமாரி
சந்தேகக் கேசுலே மாட்டினவனுங்கன்னு
எல்லாக் கைதியும்
கஞ்சி குடிச்சு முடிச்ச காலை நேரம் இது.

அவனுகளை எல்லாம் வலுக்கட்டாயமா
உட்கார வைச்சுக் கல்வி புகட்டறாங்கப்பா.
இந்தக் கூட்டத்திலே ஒத்தனைப் பிடிச்சு
கையிலே புத்தகத்தைத் திணிச்சு
உரக்கப் படிடான்னு எல்லோருக்கும் முன்னாலே
நிக்க வைச்சுருக்காங்க.

இப்படிக்கு இழுத்து வச்சுப் படிக்க
உட்கார்த்தினவனுக்கு எல்லாம்
குதிரைப் பந்தயம், கைகலப்பு,
ஜெயிலுக்குள்ளே சிகரெட், கஞ்சா
வியாபாரத்துலே நாட்டம்.

புத்தககமும் கையுமா நிக்கறவன்
திக்கித் திணற்றான் -
ஜ ஜ ஜவ ஜவர் ஜவகர் ஜவகர்லால் நேரு.

'ங்கோத்தா'
அவனவன் வண்டை வண்டையாத் திட்டறான்.
இந்த சத்தத்துல்லே
நேரு பாடமாவது ஒண்ணாவது.
ஆஜர் எடுத்ததும்
பாடம் முடியாமலேயே வகுப்பு கலைகிறது.

இது கருப்புக் குதிரை கூட்டு ரோட்டுலே
காலைச் சாப்பாட்டு நேரமுங்க.

தோ பாருங்க.
இட்லிக்காரம்மா வந்தாச்சு.
கம்பிளிக் கயறு கயறாத் தலைமுடி,
மொச்சக் கொட்டை கண்ணு
அந்தம்மாவுக்கு.
பிள்ளைங்களைப் பார்த்து
பெத்த அம்மா சந்தோசப்படறது போல
இட்லிக்காரம்மா முகத்துலே பூவா ஒரு சிரிப்பு.

தலையிலே வச்ச கூடையிலே
பெத்தம் பெரிசா ஒரு அலுமினியத் தூக்குப் பாத்திரம்
ஆடி ஆடி வருது.
அது முழுக்க இட்லி.
பூவரச இலைக்கு மேலே
ஆலிலைக் கிருஷ்ணன் போல
குண்டு குண்டா குந்திக்கிட்டு இருக்கு எல்லாம்.
இட்லிக்காரம்மா கையிலே
தளும்பத் தளும்ப
காரசாரமான சாம்பார் ஊத்திவச்ச வாளி.

எங்கப்பா எல்லோரும்?

ஏம்ப்பா கவலைப்படறே.
கூட்டு ரோட்டுலே
சாப்பாட்டு நேரமில்லே.
எல்லாரும் கட்டாயம் வந்துடுவாங்க.

நம்ம இட்லிக்கார அம்மா
கூடையை இறக்கி வைக்கட்டும்.
சும்மா பாத்துக்கிட்டு நிக்கிறியே
ஒரு கை கொடுக்கத் தாவலை?

கைத் தண்டையிலே அணைச்சுப் பிடிச்ச
பூனைக்குட்டி. காலோரம் தெருநாய் ஒண்ணு.
நடைபாதையிலே கயத்துக் கட்டில் போட்டு
குருட்டுத் தாத்தா
லவுட்ஸ்பீக்கர் கடைக்கு
முதுகு காட்டி உக்கார்ந்து
பாட்டி கிட்டே பேசிட்டு இருக்கார்.
பாட்டியம்மா பேத்திக்குப்
சிக்கெடுத்துச் சடை பின்னிட்டு இருக்கா.

'இட்லி வந்தாச்சு. இட்லி வந்தாச்சு'.
கொழந்தப் புள்ளை பிச்சுக்கிட்டு ஓடுது.
பாதி தலைவாரின சீப்பை
அதும் பின்னாலே விட்டெறிஞ்சு
பாட்டியம்மாவும் உரக்கச் சொல்றா
'இட்லி வந்தாச்சு'.
குருட்டுத் தாத்தாவுக்குக் கேட்கணும்னு போல.

முறுக்கி விட்ட மிலிட்டரிக்கார மீசை தாத்தாவுக்கு.
ஒண்ணை ஒண்ணு பாத்து சதா பொறாமைப் படற
ரெண்டு பக்கத்து மீசையையும்
பிரிச்சு வச்சு ஆளும் சூழ்ச்சியோட
தாத்தா விரல்கள் நீவிவிடுது.
இட்லி துண்ணும்போது குறுக்காலே விழுந்து
தொந்தரவு செய்யக்கூடாது, என்ன புரிஞ்சுதா?
மீசை முடிகிட்டே கண்டிப்பாச் சொல்லியபடிக்கு
கட்டில் மேலே வச்ச
தோளுசரம் வர கைக்கோலைத் தேடறார்.
அதைத் தரையிலே தட்டிக்கிட்டே
இட்லி சாப்பிட அவர் கிளம்பறபோது
தோளிலேருந்து குதிச்ச பூனைக்குட்டி
கட்டில் கயத்து இடைவெளியிலே
உதிர்ந்து தரையிலே விழுது.
நாய் அவர் முன்னாலே ஓடுது.
நானும் வாரேன்னு பூனைக்குட்டி பின்னாடி.

அண்டா சைஸ் அலுமினியப் பாத்திரத்தை
இட்லிக்காரம்மா திறக்கறாங்க.
நூறு இட்லி அங்கே
ஒரே நேரத்துலே
பெருமூச்சு விடற சத்தம்.
நிலா நிலாவா எல்லாம்
தலைகுப்புறக் கவிழ்ந்து
முட்டி மோதிக் கூடைக்குள்ளே விழுது.

அம்மணமா நூறு இட்லி
ஒண்ணு மேலே ஒண்ணு சரிஞ்சு
வழுக்கி, சறுக்கி
ஒண்ணை ஒண்ணு மூச்சு முட்ட வச்சு
ஒரு மலைமாதிரி
துடிதுடிச்சுட்டுக் கிடக்கு.

தலை பின்னிக்காத பாப்பா, பாட்டி, குருட்டுத் தாத்தா,
எலிப் பாஷாணம் விக்கிறவரு,
காத்தாடி சுத்தற பையன்,
பிளாட்பாரத்துலே கஞ்சா விக்கற பொண்ணு,
ஆட்டக்காரி, சிரிப்புக் குப்பன்,
சொட்டாங்கல் சாம்பியன்
அவங்க சிநேகிதன், சிநேகிதி, நாய், பூனை, உறவுக்காரங்க.
சுத்துவட்டம் ஒரு மைல் தூரத்துலே இருக்கப்பட்ட
வயிறு பசிச்ச வீடுவாசல் இல்லாத
நடைபாதை சீவன்கள் எல்லாரும்
கூட்டு ரோடு சந்திப்புக்கு
வந்துக்கிட்டே இருக்காங்க.

இட்லியைப் பிரசாதமா வாங்கி
சாம்பாரைத் தீர்த்தமா ஊத்தித் தெளிச்சு
பசி என்கிற ராட்சசனை
தினம் தினம் கொல்லறதைக்
கொண்டாட
நடந்தும், ஓடியும், ஆடியும்,
நொண்டிக்கிட்டும், உருண்டுக்கிட்டும்
எல்லாரும் வந்துக்கிட்டே இருக்காங்க.

ஷ¤ பாலீஷ் பையன் வந்தாச்சு.
முட்டிக்கால் வரை மடிச்சு விட்ட
கிழிசல் பேண்டு.
பாலீஷ் போட வாகாக்
காலை வைக்கற பலகையும்,
பிரஷ்ஷ¤ம் பாலீஷ¤மா
கடையையே தூக்கிட்டு வர்றான்.
சும்மா இருக்கற நேரத்துலே
வாசிச்சுப் பழகிக்கற
கருப்பும் மஞ்சளுமா
வர்ணம் பூசின மேளத்தையும் தான்.
வந்ததுமே பொண்ணுங்களை
சீண்ட ஆரம்பிச்சுட்டான் பாருங்க.

ரெண்டு காலும் இல்லாத இவருதான்
மும்பையிலேயே படு வேகமான ஆளு.
அடியிலே சக்கரம் பொருத்தி
தச்சு ஆசாரி செஞ்சு கொடுத்த
சறுக்குப் பலகையிலே உட்கார்ந்தபடிக்கு
போக்குவரத்து நெரிசலுக்குள்ளே
புகுந்து புறப்பட்டு
சந்து பொந்தெல்லாம் சுளுவா நுழஞ்சு
டிராபிக் சிக்னல் செவப்பு விளக்கை
லட்சியமே செய்யாமே,
வேகத் தடையை எகிறித் தாண்டித்
தெருவையே வெறும் கையாலே
பின்னாலே தள்ளிக்கிட்டு
முகத்திலே பெரிசா ஒரு சிரிப்போடு வரதைப் பாத்தீங்களா?

கிண்ணம், குவளை, தட்டு, பூவரச இலை
நீளுது ஒவ்வொண்ணா.
ரெண்டு ரெண்டா இட்லி
மூச்சுத் திணறிக்கிட்டு
அதிலே சரிஞ்சு விழுது.
சினைவைக்கிற காலத்துலே ஆமைகள் போல்
ரெண்டும் ஒண்ணை ஒண்ணு வயித்தைத் தொட்டு
அணைச்சுட்டுக் கிடக்குது.
பெருவெள்ளமா சாம்பார் வந்து
மூழ்கடிக்கட்டும் எல்லாத்தையும்.

முழுகின கப்பல் மாதிரி
அங்கங்கே மிளகாய் தட்டுப்படற
சாம்பார் சமுத்திரத்திலே
முங்கிப்போன கத்திரிக்காய், தக்காளி நடுவிலே
மல்லாக்க மிதக்குது இட்லி.

குண்டு குண்டா, மல்லிப்பூவா இட்லி.
பூதக்கண்ணாடி போல
நம்ம பசியைப் பெரிசாக்குது.
பங்கு வச்ச நம்பிக்கை மூலம்
நட்சத்திரங்களை வானத்திலிருந்து'
பறிக்க வைக்குது அது.

யாரது அந்தாலே ஒரு வெளிநாட்டுக்காரன்
அழுக்கா, செம்பட்டை முடியோடு,
பிளாட்பாரத்திலே தலைவச்சுத் தூங்கிக்கிட்டு?
துரை எங்கேயிருந்து வர்றாப்பலே?
டாலர் இருக்கா? பவுண்ட்?
இல்லையா? போவுது விடு.
பசிக்குதா? இப்படிக் குந்து நைனா.
என் தட்டுலே இருந்து இட்லி எடுத்துக்க.
சும்மா சாப்பிடு.
நல்லா இருக்குதா? பிடிச்சுருக்குதா?

காக்காக் கூட்டம் ஒண்ணு
கருப்புக் கொடி காட்டிக்கிட்டே
பறந்து வந்து
நட்டநடுத் தெருவிலே
சட்டமா உக்காருது.
வேகமா வர்ற காரு போக
ஒதுங்கி வழிவிட்டு
திரும்பக் கூடுற
காக்கா அலகெல்லாம்
காந்த ஊசி போல
ஒரே திசையிலேதான் நீண்டிருக்கு.

ஒருமைல் வட்டாரத்துலே
தனித்தனியா அங்கங்கே எழுந்த பசியெல்லாம்
கூட்டு ரோடுலே சங்கமமானபோது
வாழ்க்கையின் மகிழ்ச்சியைக்
கொண்டாடும் பிரகாசத்தோடு
காலத்தில் ஒரு குமிழி பிறந்தது.

தலையில் காலிக் கூடையும்,
மடியில் முடிஞ்சு வச்ச காசும்,
கையில் காலியான சாம்பார் வாளியுமாக
இட்லிக்காரம்மா போனதுக்கு அப்புறமும்
நம்பிக்கையின் நிறங்களைப்
பிரதிபலிச்சுக்கிட்டு
அது அங்கேயே இருக்கும்.

(அருண் கொலட்கரின் ''Breakfast Time at Kala Ghoda' நீண்ட கவிதையிலிருந்து சில பகுதிகள் இங்கே என் மொழியாக்கமாக - transcreation - தரப்பட்டன).

'Kala Ghoda Poems' by Late Arun Kolatkar

Published - July 2004

Publisher - Pras Prakashan,
Vrindavan 2B/5, Raheja Township, Malad East, Mumbai 400 097, India.

Price Rs 360 (USD 60; GBP 30)

Wednesday, July 13, 2005

மத்தளராயன் என்ற பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள்

திண்ணை இணைய இதழில் மத்தளராயன் என்ற புனைபெயரில் 'வாரபலன்' என்ற பகுதியை நான் மிக அண்மைக்காலம் வரை எழுதி வந்திருக்கிறேன்.

இந்தப் பெயரைப் பயன்படுத்தி இப்போது பல வலைப் பதிவுகளில் பின்னூட்டம் வருவதைக் காண்கிறேன்.

அவை எதுவும் நான் எழுதியதில்லை என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

An excerpt from Vaaraphalan, July 13, 2003

பேட்டை செய்தித்தாள்கள், அதுவும் சென்னையில் வெளியாகிறவை படு சுவாரசியமானவை.

காலையில் ஐந்து மணிக்கு இருட்டோடு வந்து விழும் இந்துப் பத்திரிகை தில்லி லாகூர் பஸ் சேவை திரும்பத் தொடங்கியதையும், எகனாமிக் டைம்ஸ் சாகுருவியாக ஸ்டேண்டர்ட் அண்ட் புவர் ரேட்டிங் சரிந்த சோக சமாசாரத்தையும் இன்னோரன்ன விஷயங்களையும் தினமும் தருகிற அலுப்பு ஒரு பக்கம். ரயில் விபத்து, எஸ்மாவில் கைது, டிஸ்மிஸ், விடுதலை, பள்ளிப்பையன் தற்கொலை போன்ற சகலரையும் எதோ விதத்தில் பாதிக்கும் விஷயங்கள் பற்றிப் படிக்கும்போது ஏற்படும் கவலை, பயம், சகலமானதிலும் நம்பிக்கை இழப்பு என்று இன்னொரு புறம்.
சனிக்கிழமை அலுவலகம் கிளம்பும்போது வாசலில் காத்திருக்கிற மாம்பலம் டைம்ஸ் என்ற எங்கள் பேட்டைப் பத்திரிகை தரும் ஆசுவாசத்தை வேறு எந்தப் பத்திரிகையும் தர முடியாது.

பத்திரிகை வாங்க ஒரு பைசா செலவில்லை என்பதில் தொடங்கும் நிம்மதி அது. ஈராக்கும், சார்ஸ§ம், வில்லன் புஷ்ஷ§ம் மந்திரம் போட்டது போல் மறைய, இங்கே முதல் பக்கத்தில் ஆரிய கௌடா தெருவில் மரத்தைச் சுற்றி மாநகராட்சி வைத்திருந்த சிமிண்ட் பாளங்கள் நீக்கப்பட்டன. அயோத்தியா மண்டபத்தில் வோக்கல் கான்சர்ட் பை ரங்காச்சாரி யண்ட் பார்ட்டி. புது ரயில்வே டைம்டேபிள் மாம்பலம் ஸ்டேஷனில் விற்பனைக்குக் கிடைக்கிறது (விலை இருபத்தைந்து ரூபாய்).

ரா.கி.ரங்கராஜன் குமுதத்தில் இருந்தபோது அவர் எழுதிய எதையும் நான் படித்ததில்லை. ஆனால் மாம்பலம் டைம்ஸில் வாராவாரம் படிக்கிறேன். ரங்கராஜனின் கட்டுரை மொழி சுவையானது. பின் நவீனத்துவப் பண்டிதர்கள் தலைகீழாக நின்றாலும் அந்த லகுவும் ஆற்றொழுக்கும் அவர்கள் எழுத்துக்கு வரவே வராது.

மாம்பலம் டைம்ஸில் ராண்டார் கை 'மாம்பலம் ம்யூசிங்ஸ்' என்ற பெயரில் மாம்பலம் பிரமுகர்களைப் பற்றி எழுத ஆரம்பித்து சாவகாசமாக கல்கி, சாண்டில்யன், நாகையா வரை வந்தார். பிறகு லட்சுமிகாந்தன் கொலைப் பக்கம் பேனாவைத் திரும்பினார். அப்புறம் அதிலிருந்து மீண்டு வரவே இல்லை. ஆச்சு ரெண்டு வருஷம், லட்சுமிகாந்தன் அமரத்துவம் பெற்று மாம்பலம் டைம்ஸில் இன்னும் வாராவாரம் வளைய வருகிறார். கன்னித்தீவுக்கு முன்னால் ராண்டார்கை லட்சுமிகாந்தன் கதையை முடித்து விடுவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்.

பேட்டைப் பத்திரிகையில் இன்னொரு மகிழ்ச்சி, ஐம்பது அறுபது வருடத்துக்கு முற்பட்ட காலத்துக்குப் போய் இறங்கியது போல் ஏற்படும் பிரமை.

"வீட்டு நம்பர் இன்னது, லேக் வ்யூ ரோட், மாம்பலம் வாசியான ஆராவமுதன் கடந்த வியாழக்கிழமை மதியம் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு வெறிநாயால் துரத்தப்பட்டார். கடித்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால் ஜூபிளி தெரு டாக்டர் கிருஷ்ணன் அவருக்குத் தகுந்த சிகிச்சை அளித்து ஊசி போட்டார். ஆராவமுதனும், டாக்டர் கிருஷ்ணனும் மேற்கு மாம்பலத்தில் நாய்களின் தொந்தரவு அதிகரித்து வருவதாகவும், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நம் நிருபரிடம் சொன்னார்கள்"

பரபரப்பும் ஓட்டமும் ஆகக் குறைந்திருந்த நாட்களில், அதாவது ரெண்டாம் உலக யுத்தம் ஆரம்பிக்கும் முன்னால் வாழ்க்கை இப்படித்தான் ஓடிக் கொண்டிருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

அது போகட்டும் -

மேற்கு மாம்பலத்தில் நாய்கள் பற்றி இந்த ஆள் பிரஸ்தாபிக்கிறானே? அதுக்குப் பின்னால் என்ன இருக்கும்? ஏதாவது இலக்கிய வம்படி வல்லடி வழக்கடியா? மேற்கு மாம்பலத்தில் இருக்கப்பட்ட சிற்றிலக்கிய, பேரிலக்கிய வாதிகள் யாவர்? கோமல் சாமிநாதன்? அவர் போய்ச் சேர்ந்தாச்சே. போஸ்டல் காலனி 'ழ' ராஜகோபாலன், விருட்சம் அழகியசிங்கர் ..

இப்படி யாராவது நகுலனின் நாய்கள், நடுநிசி நாய்கள், நாச்சார் மட நாய்கள் ரேஞ்சுக்கு ஆராய்ச்சி எல்லாம் செய்ய ஆரம்பித்தால் நான் சொல்லிக் கொள்வது இதுதான் -

ராஜகோபாலனும், அழகியசிங்கரும் சாதுப்பிராணிகள். இதை எழுதுகிறவன் சரியான 'லொள்'ளுப் பேர்வழி. குரைக்கிற நாயாகப்பட்டது கடிக்கக்கூடாது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது.


மத்தளராயன் என்னும் இரா.முருகன்

Saturday, July 09, 2005

ஓட்டக்காரன் குறிப்புகள்

இருபத்தைந்து வருடம் முன்னால் தில்லியில் சமாதிகளுக்கு நடுவே ஓடிக் கொண்டிருந்தேன்.

வேறே ஒன்றுமில்லை. தில்லி டிபன்ஸ் காலனி வங்கியில் உத்தியோகம். தொட்டடுத்த லாஜ்பத்நகரில் குடித்தனம். பிரம்மச்சாரி நடத்துகிற குடித்தனம் எல்லாம் எதிலே சேர்த்தி? உருப்படியான அரசாங்கத் தயாரிப்பான மாடர்ன் பிரட், எப்பவாவது தோன்றினால் அரிசி வேகவைக்க இன்னொரு உருப்படியான அரசு உற்பத்திப் பொருளான நூதன் ஸ்டவ், அரசாங்க மதர் டயரி பால்பண்ணையிலிருந்து கட்டை குட்டை போத்தலில் இந்தி வாடையோடு கிட்டும் கொழுப்புச் சத்து குறைந்த பால்.

இப்படி அரசாங்கமே பிரம்மச்சாரிகளைத் தத்து எடுத்து வளர்த்ததால் கல்யாணம் எல்லாம் என்னத்துக்கு என்று அசிரத்தையோடு இருந்த காலம். விடிகாலை எழுந்ததும் பேங்குப் பரீட்சைக்குப் படித்த நேரம் போக, உடல் பயிற்சிக்கென்று ஆனது.

லாம்ப்ரட்டா ஸ்கூட்டரை நானூறு உதை விட்டு ஸ்டார்ட் செய்து தொண்ணூறு விழுக்காடு தேகப் பயிற்சியை முடித்து, மீதி பத்து சதவிகிதத்தை லோதி கார்டன் என்ற முகலாயர் காலத் தோட்டத்தில் அங்கே இருக்கிற இப்ரஹிம் லோதி மற்ற லோதி வம்ச சுல்தான்கள், மகாராணிகள் கல்லறைகளைச் சுற்றி ஓடுவதில் நிறைவு செய்து கொண்டிருந்தேன்.

ஓடும் போது உற்சாகமளிக்கவோ என்னமோ, பிரட்டும், ஸ்டவ்வும், பாலும் கொடுத்துப் போஷித்த அந்தக்கால மத்திய அரசான ஜனதா சர்க்காரின் துணைப் பிரதமர் சவுதிரி சரண்சிங்க் தினசரி வாக்கிங்க் போக என் பாதையில் வருகிற வழக்கம். அந்த வயசர் அரசியல் சதுரங்கத்தில் எந்தக் காயை எங்கே நகர்த்தலாம் என்று யோசித்தபடி மெல்ல நடக்கும்போது, நான் ஓடி முடித்து பக்கத்து கன்னடா ஸ்கூல் மெஸ்ஸில் இப்போது போனால் இட்டிலி கிடைக்கும் இன்னும் பத்து நிமிஷம் கழித்துப் போனால் பொங்கலும் கிடைக்கும் என்று கணக்குப் போட்டபடி ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டிருப்பேன்.

பதினைந்து வருடம் முன்னால் மும்பை மாதுங்கா ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னால் விரிந்து கிடக்கும் ஜிம்கானா கிளப்பில் விடிகாலையில் ஓட ஆரம்பிக்க, அவசரமாகப் புடவையைப் போர்த்திக் கொண்ட பெண்ணும், பைஜாமாவை இறுக்கியபடி ஆணும் மராத்தியில் இரைய ஆரம்பித்தார்கள். ராத்திரி காற்றாடப் படுத்திருந்த ஜோடிகள் எத்தனை என்று கணக்குப் போடுவதற்குள், தூரத்திலிருந்து பறந்து வந்த கிரிக்கெட் பந்து தலையைப் பதம் பார்த்தது. லோக்கல் டிரெயினைப் பிடிக்க தாதர் ஸ்டேஷனிலும் சத்ரபதி சிவாஜி டெர்மினலிலும் நித்தியப்படிக்கு ஓடுவதே போதும் என்று ஞானோதயம் ஏற்பட்டது அப்போதுதான்.

ஐந்து வருடம் முன்னால் கலிபோர்னியா சான் ஓசேயில் வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருந்த அலுவலகத்துக்கு, கார் இல்லாத காரணத்தால் தினசரி ஓடிக் கொண்டிருந்த ஒரே பிரகிருதி நானாகத்தான் இருக்கும் என்ற நினைப்பில் மண்விழ ஓட ஆரம்பித்த இரண்டாம் நாளிலிருந்து நாலைந்து வெள்ளை, கறுப்பு அமெரிக்கர்கள் மற்றும் மெக்சிகோகாரர்கள் படுகுஷியாகக் கம்பெனி கொடுத்ததோடு சாயந்திரம் அலுவலகம் முடிந்தும் திரும்ப அவர்கள் கூட ஓடச் சொல்லி வற்புறுத்தினார்கள்.

இரண்டு வருடம் முன்னால் லண்டன் கென்ஸிங்க்டன் பூங்காவில் ஓடக் கிளம்பியபோது, எதற்கும் அவ்வப்போது பின்னால் திரும்பிப் பார்த்தபடி ஓடிவிட்டு வா என்று நண்பர் எச்சரித்து அனுப்பினார். பூங்காக்களில் வழிப்பறி நடக்கிற மாநகரம் ஆதலால் இப்படி ஒரு முன் ஜாக்கிரதை நடவடிக்கை. இதைப் பின்பற்றி நான் பத்து அடிக்கு ஒருமுறை நின்று அரைவட்டம் சுழன்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு டப்பிங் தெலுங்கு சினிமாவில் மந்திரவாதியின் உதவியாளன் போல் கேணத்தனமாக ஓட, வயதான பிரிட்டீஷ் சீமாட்டி ஒருத்தி சங்கிலி போட்டு இழுத்து வந்த சின்ன நாய்க்குட்டி ஏகத்துக்கு மிரண்டுபோய், 'நாய்கள் கழிவறை' என்று அறிவிப்புப் பலகை வைத்த இடத்தை அடைவதற்கு முன்னாலேயே பார்க்கில் அசுத்தம் செய்தது. அந்தத் துரைசானியம்மா வெட்கம் பிடுங்கித் தின்ன, தலை தாழ்த்தியபடி என்னைக் கடந்து போனாள்.

போனவாரம் சென்னையில் பொலபொலவென விடிந்த வாரக் கடைசியில் ஓட ஆரம்பித்தேன்.

கிளம்பும்போதே இம்சைகள் எட்டிப் பார்த்தன. ஜூன் மாதம் சென்னையில் வியர்வையில் தொடங்கி வியர்வையில் முடிகிற ஒன்று. உடுத்தியிருந்த எட்டு முழ வேட்டியைக் களைந்துவிட்டு ஜீன்ஸுக்கு மாறி, முரட்டு சாக்ஸையும் தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் ஷுவையும் காலில் மாட்டுவதற்குள் தொப்பலாக நனைந்தாகி விட்டது. வேட்டி கட்டியே போகலாம்தான். வேட்டி கட்டிக் கொண்டு ஓடினால், பர்ஸைப் பறிகொடுத்து விட்டுக் கையறு நிலையில் ஓடுகிறதுபோல் இருக்கும்..

ஷார்ட் போட்டுக் கொண்டு ஓடலாம். போன நூற்றாண்டுத் தாத்தாவிலிருந்து மீசை முளைத்துக் கொண்டிருக்கும் புத்திளைஞன் வரை அரை டிராயரில் சகலமான இடத்துக்கும், சகல விதமான வாகனங்களிலும், நடந்தும் ஓடியும் கொண்டிருப்பது பழக்கமான காட்சியாகி விட்டது. ஆனாலும், பத்து வயதில் விழுத்துப் போட்ட நிஜாரைத் திரும்ப மாட்டிக் கொள்ள மனசு வரமாட்டேன் என்கிறது.

அப்புறம் செல்·போன். தில்லியிலும், மும்பையிலுமிருந்து அழைக்கக் கூடியவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து தாடையைச் சொறிந்து கொண்டிருப்பார்கள். இல்லை, வாக்கிங்க் போக ஷ¥வைக் கட்டிலுக்கு அடியில் தேடிக் கொண்டிருப்பார்கள். ஆஸ்திரேலியாவில் இப்போது பகல் சாப்பாட்டு நேரம். அமெரிக்காவில் இன்னும் நேற்று ராத்திரி ஒன்பது மணி. யாராவது இங்கேயிருந்தெல்லாம் நினைத்துக் கொண்டு கூப்பிடலாம்.

செல் தொலைபேசியும் சட்டைப் பையில் ஏறி இடத்தை அடைத்துக் கொள்ள, அடுத்து மூக்குக் கண்ணாடி நானும் வரேனே என்றது. வழியில் அங்கங்கே கேபிள், சாக்கடைக் குழாய், தண்ணீர்க் குழாய் என்று காரணம் வைத்தோ இல்லை சும்மாப் பள்ளம் தோண்ட வேண்டும் என்பதற்காக வெட்டியாக வெட்டிப் போட்டோ வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் பார்க்காமல் நடந்தால், அல்லது ஓடினால் அப்புறம் அடுத்த ஓட்டம் சொர்க்கத்திலா அல்லது இதே தரத்தில் இருக்கும் நரகத்திலா என்று தெரியாது. கண்ணாடி இருந்தால் இது தள்ளிப்போக வாய்ப்பு.

ஆக, புறப்பட்ட பதினைந்து நிமிடங்களுக்கு அப்புறம் முழுக்கத் தயார் நிலையில் தெருவில் இறங்கியானது. ஓட்டமும் நடையுமாக எதிரில் வரும் மொபசல் பஸ்களையும், காய்கறி ஏற்றிவரும் டெம்போ, தண்ணீர் லாரிகளைத் தவிர்த்து, நாலு வீதி சுற்றிப் பூங்காப் பக்கம் திரும்புகிறேன்.

வெளிநாட்டிலிருந்து படைபட்டாளமாகக் கிளம்பி நாலு நாள் நல்லெண்ண விஜயமாக வந்திறங்கிய தூதுக்குழு தேசியத் தலைவர் சமாதியில் மலர் வளையம் வைத்து டெலிவிஷன் காமராக்களுக்குத் தீனி போட்டபடி சுற்றி வருகிறது போல், ஒரு பெருங்கூட்டம் பூங்காவுக்குள் சுற்றுப்பாதையில் நெருக்கியடித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. ஓட்டமும் இல்லை. நடையும் இல்லை. ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள் எல்லோரும்.

நான் வந்த வழியே திரும்ப ஓடுகிறேன்.

(தினமணி கதிர் 'சற்றே நகுக' 26 June 2005)

Friday, July 08, 2005

ஆக்காண்டி

பெயரிலி பதிவில் நான் குறிப்பிட்ட சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை இதுதான் -


ஆக்காண்டி

- சன்முகம் சிவலிங்கம்

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?

கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக் கிரை தேடி
நாலுமலை சுற்றி வந்தேன்.
மூன்று குஞ்சுக் கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்.

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு பசியோடு
கூட்டில் கிடந்த தென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகும் சுற்றி வந்தேன்.
கடலை இறைத்துக்
கடல் மடியை முத்தமிட்டேன்.
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்.

கடலிலே கண்டதெல்லாம்
கைக்கு வரவில்லை.
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை.

கண்ணீர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே.
விம்மி அழுதேன்
மலைகள் வெடித்தனவே.

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

வண்டில்கள் ஓட்டி
மனிதர்க் குழைத்து வந்தேன்.
கையால் பிடித்துக்
கரைவலையை நானிழுத்தேன்.
கொல்லன் உலையைக்
கொளுத்தி இரும்படித்தேன்.
நெய்யும் தறியிலே
நின்று சமர் செய்தேன்.
சீலை கழுவி
சிகையும் அலங்கரித்தேன்.
வீதி சமைத்தேன்.
விண்வெளியில் செல்லுதற்குப்
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்.
ஆனாலும் குஞ்சுக்கு
அரை வயிறு போதவில்லை.

காதல் உருகக்
கதறி அழுது நின்றேன்.
கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே.
விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே.

கடல் இரத்தம் ஆகுமென்று
கதறி அழவில்லை.
வீடுகள் பற்றுமென்று
விம்மியழவில்லை.

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கு முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு வளர்ந்தும்
குடல் சுருங்கி நின்றார்கள்.
பசியைத் தணிக்கப்
பலகதைகள் சொல்லி வந்தேன்.
கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்.
வயலை உழுது
மடிந்த கதை சொல்லி வந்தேன்.

கொல்லன் உலையும்
கொடுந் தொழிற் சாலையதும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்.

சொல்லி முடிவதற்குள்
துடித்தே எழுந்து விட்டார் -
பொல்லாத கோபங்கள்
பொங்கி வரப் பேசுகின்றார்.

'கடலும் நமதன்னை
கழனியும் நமதன்னை
கொல்லன் உலையும்
கொடுந் தொழிற்சாலையதும்
எல்லாம் நமது" என்றார்.
எழுந்து தடி எடுத்தார்
கத்தி எடுத்தார்
கடப்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்.

எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கி வரச்
சென்றவரைக் காணேன்
செத்து மடிந்தாரோ?

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
நடந்து விட்டார் என்ன செய்வேன்

ஆனவரைக்கும்
அந்த மலைக் கப்பாலே
போனவரைக் காணேன்
போனவரைக் காண்கிலனே.

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கு முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

(நன்றி - திரு பத்மனாப ஐயர்)

இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் - Revised

பெயரிலியின் பதிவு பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. எழுபதுக்களில் தெற்குத் தமிழகத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களுக்கு ஆவேசமான ரசிகர்கள் நிறைய இருந்தார்கள். இது அறுபதுகளிலேயே தோன்றிய ஒன்று என்று நினைக்கிறேன். இந்திய வானொலியில் காலை ஏழே காலுக்கு தில்லியிலிருந்து கரபுர என்று இரைச்சலுக்கு நடுவே 'ஆகாசவாணி, செய்திகள், வாசிப்பது சாம்பசிவம்' என்று யந்திரத்தனமான குரலில் படிக்கிற செய்தி அறிவிப்பாளர்களை விட, பக்கத்து இலங்கையிலிருந்து சினேகிதமான குரலில் தொடங்கி, 'இப்போது நேரம் சரியாகப் பத்து மணி ஐந்து நிமிடம். வணக்கம் கூறி விடை பெறுவது' என்று அன்போடு முடிக்கும் ஈழத் தமிழ் அறிவிப்பாளர்கள் நம் மக்களுக்கு நெருங்கியவர்களாக இருந்தார்கள்.

எனக்கு நினைவு வருகிற அறிவிப்பாளர்கள் - மயில்வாகனம், பரராசசிங்கம், சில்விஸ்டர் பாலசுப்பிரமணியம், ஏ.எச்.அப்துல் அமீது, கே.ஏ.ராசா, புவனலோசனி வேலுப்பிள்ளை, ராசேஸ்வரி சண்முகம் .. அப்புறம், ஆசிய சேவையில் 'ஸ்ரோதாக்களுக்கு நமஸ்காரம்' என்று மாலை நாலு மணிக்குக் கேட்கும் ஒரே மலையாளக் குரலுக்குரிய கருணாகரன்.


இவர்களில் அமீது இன்னும் பிரபலமாகச் சென்னையில் நட்சத்திர அறிவிப்பாளராக, மாறாத அதே குரல் வளத்தோடு இருக்கிறார். ராசா இறந்து போனதை ஒரு வலைப்பதிவில் படித்தபோது நெருங்கிய உறவினரைப் பறிகொடுத்த துக்கம்.

ராசேஸ்வரி சண்முகத்துக்கு ஆராதகர்கள் இன்னும் இருக்கிறார்கள், இணையத்திலும் இருக்கிறார்கள். சேலம் ஆத்தூர் அன்பர் ஒருவர் ரா.சவின் புகைப்படத்தோடு எழுப்பிய இணையக் கோவில் இங்கே. மரணத் தறுவாயில் இருந்த ஒரு ரசிகர் நேயர் விருப்பமாகக் கேட்டது அவர் குரலைத் தானாம்.

மற்றவர்கள் என்ன ஆனார்கள்? யாருக்காவது தெரியுமா?

Sunday, July 03, 2005

கோர்ட் எழுத்து


'பதவியிலிருந்து ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பும் எழுத்தாளர் சேதுவுக்குப் பாராட்டு விழா'.

வாசித்துக் கொண்டிருந்த மலையாளப் பத்திரிகையில் படத்தோடு நாலு காலம் பெட்டி கட்டிச் செய்தி.

மலையாளத்தில் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான சேது என்ற சேதுமாதவன் தான் வகித்த சௌத் இந்தியன் வங்கியின் நிர்வாகத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் சொந்த ஊரான ஆலுவாய்க்குச் சென்ற வாரம் புறப்பட்டபோது, திருச்சூர் நகரில் பெரிய விழாவெடுத்துக் கவுரவித்ததுதான் மேற்படி செய்தி.

சேதுமாதவன் ரிடையர் ஆனது மட்டுமில்லை. ஆயுர்வேத வைத்தியரின் அறுபதாவது பிறந்தநாள் விழாவில் மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கவுரவித்தது, கல்லூரி ஆண்டுவிழாவில் எழுத்தாளர் முகுந்தன் சொற்பொழிவு, பள்ளிக்கூட நிகழ்ச்சியில் எழுத்தாளர் சி.வி.ஸ்ரீராமன் உரை, பிளாச்சிமடை குளிர்பானத் தொழிற்சாலையை அடைத்துப் பூட்டவேண்டியதன் அவசியம் பற்றிப் போன ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சாரா ஜோச•ப் மற்றும் கவிஞர் சுகதகுமாரி தெரிவித்த கருத்துகள், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பிரபல எழுத்தாளர் மாதவிக்குட்டி என்ற சுரையாவின் நீளமான பேட்டி.

தினசரி ஏதாவது ஓர் எழுத்தாளரின் பெயர் செய்தியில் அச்சடித்து வராவிட்டால் அல்லது கேபிள் டிவி சேனலில் முகம் தட்டுப்படாவிட்டால், கேரளச் சோதரருக்குப் பத்திரிகை படித்த திருப்தி ஏற்படாது என்று சொல்ல வைக்கிற அளவுக்கு மலையாள எழுத்தாளர்களுக்கு நியூஸ் வால்யு இருக்கும்போல.

இந்த விஷயத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கு அதிர்ஷ்டம் ஆகக் குறைவு. அவர்கள் ஏறக் குறைய சாதுப் பிராணிகள். சாதாரணமாக யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். தலை போகிற, போகாத எந்த விஷயத்தைப் பற்றியும் முகத்துக்கு நேரே மைக்கை நீட்டி டெலிவிஷன் நிருபர்கள் கருத்துக் கேட்க மாட்டார்கள். இவர்கள் நிற்பதுவும், நடப்பதுவும் இருப்பதுவும் செய்தியாகவோ, ரெவின்யூ ஸ்டாம்ஸ் சைஸ் புகைப்படமாகவோ வராது. அதிர்ஷ்டம் இருந்தால், 'ஒரேயடியாகக் கிடப்பது' மூன்று வரியில் சிக்கனமாகக் ‘காலமானார்’ என்று தகவலாகி உதிர்ந்து போகும்.

இலக்கியச் சிறு பத்திரிகைகளில் நாய்ச் சண்டை, நரிச்சண்டை என்றெல்லாம் பெயர் வைத்தும் வைக்காமலும் அம்பு விட்டுக்கொண்டாலும், ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தால் வெட்டுப்பழி குத்துப்பழியாக அதெல்லாம் உருவெடுக்காமல், உடுப்பி ஓட்டல் படியேறி, கொத்துமல்லிச் சட்னியோடு மெதுவடையும் ரெண்டு கோப்பை சர்க்கரை ஜாஸ்தி, ஸ்ட்ராங்க் காப்பியுமாகக் கழித்துவிட்டுப் ஓட்டல் பில்லை அடைப்பது யாரென்று பிரியமாகக் குட்டிச் சண்டை போட்டு இரண்டு தடவை காசு கொடுத்துவிட்டுச் சமாதானமாகப் பிரிவார்கள் இவர்கள்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் எழுத்துச் சண்டை வெண்டைக்காய் அளவு முற்றி, வக்கீல் நோட்டீஸ் விட்டுக் கொள்வார்கள். இது முன்சீப் கோர்ட்டில் சிவில் வழக்கில் முடிந்து நாலு காசு பார்க்கலாம் என்று நோட்டீஸ் தயாரித்து அனுப்பிய வக்கீல் எதிர்பார்த்தால் நோட்டீஸ் காத்த கிளியாக ஏமாந்து போக வேண்டியதுதான். சாதா அஞ்சலில் அனுப்பிய வக்கீல் நோட்டீசில் கேட்டுக் கொண்டபடியும் அதற்கு இன்னும் அரை அங்குலம் குனிந்தும் மன்னிப்புக் கேட்டு எதிர்வாதி பதில் எழுதி மின்னலென விரைந்து கூரியரில் அனுப்ப எல்லாம் சுபம். இரண்டு தரப்பும் களைப்புத் தீர நாலு மாதம் நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த சாயாக் கோப்பை புயல் தொடங்குவதற்குள் ஆதரவாளர்கள் மொத்தம் எட்டுப்பேர், இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கும் அங்கேயிருந்து இங்கேயும் சாடிக் குதித்துப் போயிருப்பார்கள்.

தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்ட பரம்பரைக் கதைகளிலும் யாப்பு இலக்கணத்துக்கு வணங்காமல் தளைதட்டி, தப்புத் தப்பாகக் கவிதை எழுதிய புலவனின் காதை அறுக்கிற வில்லிப்புத்தூரானைத் தவிர வேறே சேடிஸ்ட் ஆத்மாக்கள் கிடைப்பது அபூர்வம்.

தெற்குப் பகுதிக் கிராமங்களில் முன்பெல்லாம் தண்டட்டி மாட்டித் தொங்கிப் போய் அறுந்த காதை ஒட்ட வைக்கும் நுட வைத்திய சாலைகள் டூரிங்க் சினிமா டாக்கீஸ் இடைவேளை நேர கலர் ஸ்லைடுகளில் விளம்பரமாக வரும். வில்லிப்புத்தூரான் நுடவைத்திய சாலை நடத்தி, புதுசாகக் கவிதை பாடிய கோயிந்தசாமிப் புலவனின் காதை அறுக்காத சமயங்களில், நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா என்று இலக்கணம் போதித்தபடி, ஏற்கனவே அறுத்த காதுகளைச் சலுகைக் கட்டணத்தில் ஒட்டி வைத்தியம் பார்த்திருக்கலாம். அதனால், தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு காதோ கவிதையோ கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு.

தமிழில் முதல் நாவல்களில் ஒன்று 'கமலாம்பாள் சரித்திரம்'. முதல் நாவலே அதுதான் என்று இலக்கிய விமர்சகர் கைலாசபதி பிரகடனப்படுத்தியபோது கூட தமிழ் மண்ணில் வம்பு வழக்கு ஏதுமில்லை என்பது வேறு விஷயம். இந்த நாவலில் தமிழ்ப் புலவர் ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளையும் அம்மாபட்டி கவிராயரும் அன்னப் பறவை என்பது ஒரு பட்சியின் பெயரா இல்லை சாப்பிடுகிற வெள்ளையரிசிச் சோறான அன்னம் தானா அது என்று நாள் கணக்காக, ராப்பகலாக சொற்போர் நடத்துவார்கள். வாக்குவாதம் கைகலப்பில் முடிய, நடுராத்திரி ரோந்து வந்த காவலர்கள் படைப்பாளிகள் சண்டையில் சர்க்கார் தலையிடக் கூடாது என்பது தெரியாததால் அவர்களைப் பிரித்து விடுவார்கள். வெளியூர்க் கவிராயர் தன் ஊர் திரும்பி தான் வெற்றிக்கொடி நாட்டியதாக முழக்கமிட, பிள்ளைவாள் எதிரி திரும்பிப் போனதை ஒரு முறைக்கு இரு முறை விசாரித்து நிச்சயம் செய்து கொண்ட பிறகு, தன் வரலாறு காணாத வெற்றி பற்றிச் சொந்த ஊரில் எட்டுத் திசையும் கொட்டி முழக்குவதாகக் கதை போகும்.

ஆக, பழைய இலக்கியம், முதல் நாவல் என்று சகலமான சங்கதிகளிலும் அபூர்வமாகவே படைப்பாளிகளின் மோதல் நிகழ்ந்து கொண்டிருந்த தமிழில், நூறு வருடம் முன்னால் ஒரு நிஜப் பரபரப்பு. அருட்பா மருட்பா வழக்கு என்று பிரசித்தமான அறிஞர் மோதல் அது.

அருட்பா எழுதிய வள்ளலார் ராமலிங்க சுவாமிகளை எதிர்த்து யாழ்ப்பாண ஆறுமுக நாவலர் வழக்குத் தொடர்ந்து வள்ளலார் கோர்ட்டில் படி ஏற வேண்டிவந்தது. நாவலரைப் பற்றி ஏதும் பேசவோ எழுதவோ வேண்டாம் எனக் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. இதற்கிடையே, இரு தரப்பு தரவாளர்களுக்கும் இடையே நடந்த பிட் நோட்டீஸ் யுத்தங்களின் மொழிநடையை இப்போது கைக்கொண்டால் அதற்கே ஏழெட்டு மானநஷ்ட வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிடுவார்கள்.

நம் முன்னோருக்கு எது தெரிந்ததோ இல்லையோ, வக்கணையாக, எதுகை மோனையோடும் கற்பனை வளத்தோடும் திட்டத் தெரிந்திருந்திருந்தது என்பது இந்தப் பிரசுரங்களைப் படித்தால் புலனாகும்.

இது இப்படி இருக்க, எழுத்தாளர்கள் பவுடர் போடாத செய்தி நட்சத்திரங்களாகும் மலையாள இலக்கிய உலகில், அவர்களுக்கு நடுவே மோதலும் காத்திரமான நட்சத்திர அந்தஸ்தோடு நடப்பது சுவாரசியமான விஷயம்.

எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துள்ள (குஞ்சப்துல்லா) இன்னொரு எழுத்தாளரான டி.பத்மநாபன் மேல் ஒரு வருடம் முன்பு வழக்குத் தொடர்ந்தார். சாதா சிவில் வழக்கு இல்லை. கிரிமினல் கேஸாக்கும். பத்மநாபன் 'பச்ச மலயாளம்' பத்திரிகையில் கடந்த டிசம்பரில் எழுதியது தன்னை அவமானப் படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்று குஞ்சப்துல்லாவின் புகார்.


டி.பத்மநாபன் சீனியர் எழுத்தாளர். நாவலே எழுத மாட்டேன் என்ற வைராக்கியத்தோடு முழுக்கச் சிறுகதையில் ஈடுபட்டவர். இவருடைய எந்தக் கதையிலும் முக்கியக் கதாபாத்திரம் ஒரு பெயரில்லத 'அயாள்' (அவன்) தான். சிறுகதையோடு ரோஜாச் செடி வளர்ப்பதிலும் ஈடுபாடு கொண்ட இந்த ரிடையர்ட் அரசாங்க அதிகாரியை எதிர்க்கும் குஞ்ஞப்துல்லா நாவலாசிரியர். மருத்துவர். வளைகுடா மலையாளி.

கோழிக்கோடு மாஜிஸ்ட்றேட் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. சாட்சிக் கூண்டில் ஏறியவர் இன்னொரு மலையாள எழுத்தாளரான வி.ர். சுதீஷ். தனக்குக் குஞ்சப்துல்லாவோடு பதினைந்து வருட நட்பு உண்டென்றும், முதிர்ந்த எழுத்தாளர் என்ற முறையில் பத்மநாபன் மேல் மதிப்பு உண்டென்றும் குறிப்பிட்ட சுதீஷ், குஞ்சப்துல்லாவின் நாவலான 'பரலோகம்' காப்பியடித்து எழுதப்பட்டது அல்ல என்றும் குஞ்சப்துல்லாவே சுயமாகக் கற்பனை செய்து எழுதியதென்றும் கோர்ட்டாரிடம் தெரிவித்தார். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இப்படி ஒன்றல்ல, எட்டுத் தடவை வழக்கை ஒத்தி வைத்து வைத்து அலுப்படைந்து போனார் நீதிபதி. பிரதிவாதி பத்மநாபன் ஜரூராக நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் ஆஜரானாலும், வாதி குஞ்ஞப்துல்லா அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.

அவருக்கே இல்லாத அக்கறை நமக்கெதற்கு என்று நீதிபதி போன வாரம்தான் வழக்கைத் தள்ளுபடி செய்து பத்மனாபனை வீட்டுக்குப் போங்க சார் என்று அனுப்பி வைத்தார்.

'பச்சை மலையாளம்' பத்திரிகை இன்னமும் வருகிறதா என்று போன வாரம் ரிடையராகி பத்திரிகையில் முக்கியச் செய்தியான மலையாள எழுத்தாளர் சேதுவிடம் கேட்டு ஈ-மெயில் அனுப்பியிருந்தேன். பத்து வருடமாகப் படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறையச் சேர்ந்து போனதாகவும், ஆலுவாயில் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் அதையெல்லாம் வாசித்துத் தீர்ப்பதே முதல் வேலையாக இருக்கும் என்றும் பதில் அஞ்சல் அனுப்பிய சேது சார் பச்சை மலையாளம் பற்றி ஏதுமே சொல்லவில்லை.

சர்ச்சையிலிருந்து விலகி இருப்பதில் அவரும் தமிழ்ப் பாடம் படிக்கிறார் போல் இருக்கிறது.

(An abridged version of this article was published in my weekly column ‘SatRe Nakuka’ in Dinamani Kadir 19.6.2005)

Saturday, July 02, 2005

குஞ்ஞன் நம்பியாரின் குடமிழா


கேரளத்தில் குட்டநாடு பிரதேசத்தில், ஆலப்புழைக்கு அடுத்த அம்பலப்புழைக்குப் போயிருந்தேன். ஒன்றும் பிரமாதமான விஷயம் இல்லை. அங்கேயும் முன்னோர்கள் இருந்தார்கள். அவர்கள் மூச்சு பதிந்த காற்றும், வெறும் காலோடு நீள நெடுக தேகண்டம் என்ற சமையல் தொழில் பார்க்க நடந்த மண்ணும், கூடிப் பிணங்கிப் பிரிந்து சேர்ந்து மகிழ்ந்து, வருந்தி தலைமுறைகளாகக் கழித்த, சிறு வாழ்க்கையின் எச்சமான நினைவுகளும் எனக்காகக் காத்திருக்கும் என்ற நப்பாசைதான். அடுத்த நாவலுக்கு அவை எல்லாம் வேண்டும். கிடைக்காத பட்சத்தில் என்ன போச்சு? மனம் தானே உருவாக்கிக் கொள்ளும்.

அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவில். படிஞ்ஞாறே நட என்னும் மேற்கு வாசலிலிருந்து கோயிலுக்குள் நுழைகிறேன். கண்ணில் படுவது களித்தட்டு. ஓலை வேய்ந்த ஒரு பெரிய மண்டபம். நடுநாயகமாக ஒரு பிரம்மாண்டமான முரசு. அதற்குக் குடமிழா என்று பெயர். ஓட்டந்துள்ளலை உருவாக்கிய மலையாள மகாகவி குஞ்ஞன் நம்பியார் முன்னூறு வருடம் முன்னால் வாசித்த மிழா அது.

பாலக்காட்டுப் பக்கம் கிள்ளிக்குரிச்சிமங்கலத்தில் பிறந்து, இசையில் தேர்ச்சி பெற்ற நம்பியார் கோவில் ஊழியம் செய்யும் இளைஞராக, வழிபாட்டுச் சடங்கில் மிழா வாசித்துக் கொண்டிருந்தபோது அசதியால் சற்றே கண்ணயரவே, பக்கத்தில் கூட்டமாகப் பரிகசித்திருக்கிறார்கள். அப்போது இறங்கிப் போனவர் தான் அவர்.

குட்டநாடு பிரதேசத்தில் தகழி, பம்பையாற்றைக் கடந்து ஹரிப்பாடு, கருமாடித்தோடு, நெடுமுடி என்று அலைந்து திரிந்தபோது அவர் மனதில் ஒரே ஒரு எண்ணம் தான். தான் இறங்கி வந்த அதே அம்பலப்புழை கோவிலில் எல்லோரும் பாராட்டத் தன் திறமையை அரங்கேற்ற வேண்டும்.

எதை அரங்கேற்ற? கதகளியா? நுணுக்கமாகப் பயில வேண்டும். நிகழ்த்திக் காட்டக் குழு வேண்டும். சாக்கியார் கூத்து? வடமொழிப் புலமை வேண்டும். கூத்து என்ற பெயர் இருந்தாலும், வாய் வார்த்தையின் பலத்தில் நிற்பது. நம்பியாருக்கு அது போதாது.

திடம்பு நிருத்தம்? ஆட்டம் மட்டும்தான். முகத்தில் எந்த வித பாவபேதமும் தட்டுப்படாமல், தலையில் திடம்பு என்ற தெய்வச் சின்னங்களை வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம். கோவில் பூரம் உற்சவத்தின்போது யானைகள் அலங்காரமாகச் சுமந்து வரும் திடம்புகளை, திடம்பு ஆட்டத்தில் தலையில் ஏற்ற நம்பூதிரிகளுக்கு மட்டுமே உரிமை.

குஞ்ஞன் இந்த ஜன்மத்தில் நம்பூதிரியாக முடியாது. எல்லாம் கழித்துக் கட்டினால், எதை அரங்கேற்ற?

யோசித்துக் கொண்டே குஞ்ஞன் நம்பியார் வந்து சேர்ந்த இடம் துரோணப்பள்ளி. அங்கே கன்னடத்து உடுப்பிக்காரர் ஒருவர் இளைஞர்களை ஈர்த்துக் கொண்டிருந்தார் அப்போது.

உடுப்பி, துளுக்காரர்கள் காலகாலமாகக் கேரளக் கோயில்களில் மேல்சாந்தி, தந்த்ரி என்று அர்ச்சகர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் துரோணப்பள்ளி நாயக்கர் கொஞ்சம் வித்தியாசமானவர். கேரள வீரவிளையாட்டான களரியை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுக்கக் களறிப் பள்ளி நடத்திய அவர் துரோணப்பள்ளி சம்பிரதாயம் என்ற களரிப்பயிற்று முறையையும் உருவாக்கியவர்.

துரோணப்பள்ளி நாயக்கரிடம் களரியும், மாத்தூர் பணிக்கர் என்ற படைத்தலைவரும், கலைஞருமாக இருந்த இன்னொரு குருவிடம் ஆட்டக் கலையும் படிக்க ஒரே நேரத்தில் வாய்த்தது குஞ்ஞன் நம்பியாருக்கு. இந்த இரண்டும் அடிப்படையாக அமைய மரபுக் கலையான கதகளியையும், நாட்டார் கலையான கூத்தையும் இணைத்து ஒரு நிகழ்கலையை உருவாக்க நம்பியார் முடிவு செய்தார். கூடவே அவரிடம் இயல்பாக இருந்த கவிதை உணர்வும், நகைச்சுவையும் நாங்களும் வருகிறோம் என்று சேர்ந்து கொண்டன.

சமூக அவலங்களைக் கிண்டல் செய்வதற்கும், அவை பற்றிய பிரக்ஞையைப் பொதுமக்கள் மத்தியில் விதைப்பதற்குமாக பாட்டும், ஆட்டமுமாக இப்படித்தான் எழுந்து வந்தது ஓட்டந்துள்ளல். தான் மனதில் உறுதி செய்திருந்ததுபோல், குஞ்சன் நம்பியார் முதன்முதலில் ஓட்டந்துள்ளலை அரங்கேற்றியது அம்பலப்புழ ஸ்ரீகிருஷ்ணன் அம்பலத்தில் தான்.

ஆனால் அப்போது கோவிலின் கதவுகள் பூட்டப் பட்டிருந்தன. குஞ்ஞன் நம்பியாரின் கூத்து 'அம்பலத்தை அசுத்தப் படுத்திவிடக்கூடாது' என்பதற்காக அரச கட்டளை பிறப்பித்துப் பூட்டியிருந்தார்கள்.

அந்தக் கதவுகள் பிற்பாடு குஞ்ஞனை அங்கீகரித்து விரியத் திறந்தன. இடுப்பில் கம்பீரமாகத் தரித்த அம்பலப்புழைக் கோணகமும், தொடர்ந்து முழங்கும் மத்தளமும், மிழவுமாக நம்பியார் மகாபாரதத்தில் கல்யாண சௌகந்திகம் ஆடியபோது, நைவேத்தியமான அம்பலப்புழை பால்பாயசத்தைச் சாவகாசமாகக் குடித்துக் கொள்ளலாம் என்று தள்ளிவைத்து விட்டு, கண்ணபிரானே வந்திருப்பான்.

குஞ்ஞன் நம்பியாரின் மிழா வைத்த களியரங்கைப் பார்த்தபடி அம்பலப்புழை கோவில் நடையில் நின்றிருந்தேன். நான் தேடிவந்த என் வேர்களில் ஏதானும் ஒன்று குஞ்ஞன் நம்பியாரையும், அந்தப் பழைய மிழாவையும் சுற்றிப் படர்ந்து அப்பால் போயிருக்கலாம்.

மிழாவை ஒரு விநாடி தொட்டு உணரவேண்டும் என்று ஆவல் உந்த முன்னால் போனேன். 'மண்டபத்தில் பிரவேசிக்க வேண்டாம். சிதிலமடைந்துள்ளது' என்று எழுதி நிறுத்திய அறிவிப்புப் பலகை எச்சரித்தது.

அடுத்த முறை அம்பலப்புழை போகும்போது குஞ்ஞன் நம்பியாரின் மிழா வைத்த மண்டபம் இருக்குமா என்று தெரியவில்லை. இல்லாதுபோனால் என்ன? அதையும் உருவாக்கிக் கொள்ளலாம் தான்.

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது