Tuesday, May 17, 2005

கேலவேக்கு நன்றி

கேலவேக்கு நன்றி


ஈராக்கில் ஐ.நாவின் 'உணவு கொடுத்து எண்ணெய்' திட்டத்தை நடப்பாக்கி, சதாம் உசைன் 'ரஷ்ய, இங்கிலாந்து அரசியல் வாதிகளுக்குக் கையூட்டு அளித்த' வழக்கை விசாரிக்கும் அமெரிக்க செனட் கமிட்டி சற்று முன்னர் (17 May 2005 செவ்வாய் இரவு 9:00 மணி இந்திய நேரம்) இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரும், மரியாதை கட்சி தலைவருமான ஜியோர்ஜ் கேலவேயை விசாரித்தது. ஒரு நாட்டு அரசு இன்னொரு நாட்டு அரசியல் பிரமுகரை இப்படி வரவழைத்து விசாரிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இராக் ஆக்கிரமிப்புக்காக புஷ் மற்றும் டோனி பிளேரின் அரசாங்கங்களைக் கடுமையாக விமர்சித்தவர், விமர்சித்து வருகிறவர் கேலவே. டோனி பிளேரின் தொழிற்கட்சி உறுப்பினராக இருந்த கேலவேயை (பாக்தாத் நகர எம்.பி என்று அவரை அப்போது கட்சியில் கிண்டல் செய்வார்கள்) அவருடைய வல்லரசு விரோத நடவடிக்கைகளுக்காகக் கட்சியிலிருந்து இரண்டாண்டுகள் முன் வெளியேற்றினார் பிளேர். எனினும், அண்மையில் நடைபெற்ற பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், தான் புதிதாகத் தொடங்கிய இடதுசாரி இயக்கமான 'மரியாதைக் கட்சி' வேட்பாளராக காலவே வெற்றிவாகை சூடி மக்கள் பிரதிநிதியானார்.

பி.பி.சியில் நேரடி ஒளிபரப்பாகக் காணக் கிடைத்த கேலவேயின் சாட்சியம் மறக்க முடியாத அனுபவம். அமெரிக்க செனட் அவையில் அமெரிக்க அரசின் மக்கள் விரோத ஈராக் ஆக்கிரமிப்பை எதிர்த்து முழக்கமிட்ட கேலவேயின் ஒவ்வொரு சொல்லும் இன்னும் காதுகளில் ஒலித்தபடி உள்ளது.

கோடிக் கணக்கான உலக மக்களின் குரலை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்த கேலவே அவர்களுக்கு நன்றி.

Sunday, May 15, 2005

ஆற்றூர் ரவிவர்மா, குஞ்ஞுண்ணி

மகாகவி குஞ்ஞிராமன் நாயர் நினைவு இலக்கிய விருது இந்த ஆண்டு கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா அவர்களைத் தேடியடைந்திருக்கிறது.

ஆற்றூர் ரவிவர்மயுடெ கவிதகள் - பாகம் ரெண்டு தொகுதிக்குக் கிடைத்த இவ்விருதுக்காக இன்று காலை தமிழக நண்பர்கள் சார்பில் அவரை வாழ்த்தியதில் மகிழ்வடைகிறேன்.

அவருடைய கவிதைகளின் முதல் தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாஹித்ய அகாதமி விருது கிட்டியது.


ஊர்வலம் போகும்போது உறங்குகிறவனும்
உறக்கத்தில் ஊர்வலம் போகிறவனும்
ஒருபோலத் தான்.


(ஆற்றூர் ரவிவர்மா)

**********************

குஞ்šண்ணியின் குறுங்கவிதைகள்

மக்கள் கவியாக மலையாளத்தில் புகழப்படும் மூத்த கவிஞர் 'குஞ்šண்ணி மாஷ்' (குஞ்சுண்ணி வாத்தியார்).

ஒரு குழந்தைக் கவிஞராகவும் பிரபலமான இவரின் குறுங்கவிதைகள் சில -

நுருங்ஙு கவிதகள்
------------------

சிறகடிபோலும் கேள்ப்பிக்காதெ
பறக்கும் பட்சிக்கு
ஒரு சிறகு ஆகாசம்
மறு சிறகு ஏதென்னு அறியில்ல
அறியும்வரெ இக்கவித அபூர்ணம்.


சிறகடிப்பு கூட எழுப்பாமல்
பறக்கும் பறவைக்கு
ஒரு சிறகு வானம்
மறு சிறகு எதுவென்று தெரியவில்லை
அறியும்வரை இக்கவிதை பூர்த்தியாகாது.

***********************

பசுத் தொழுத்தில்ங்கல் பிறன்னு வீணதும்
மரக் குரிசிமேல் மரிச்சுயர்நதும்
வளரெ நன்னாயி, மனுஷ்ய புத்ரா, நீ
உயிர்த்தெண்ணீற்றதோ, பரம விட்டித்தம்.

பசுத் தொழுவத்தில் பிறந்ததும்
மரச் சிலுவையில் மரித்ததும்
மிக நன்று, மனுஷ்ய புத்ரனான யேசுவே. நீ
மறுபடி உயிர்த்தெழுந்தது முட்டாள்தனம்.


ஏசுவிலாணு என் விச்வாசம்
கீசயிலாணு என் ஆச்வாசம்.


என் நம்பிக்கை ஏசுவில்.
என் ஆறுதல் பணத்தில்.

***********************************

குருவாயூரூரேக்குள்ள
வழி வாயிச்சுக் கேள்க்கவே
என்னில் நின்னு என்னிலேக்குள்ள
தூரம் கண்டு அம்பரன்னு ஞான்.


குருவாயூர் போக வழி எது என்று
விசாரித்தேன். படித்துச் சொன்னபோது
என்னில் இருந்து எனக்குள்ள
தூரம் கண்டு மலைத்தேன்.

*************************8


ஒரு தீப்பெட்டிக் கொள்ளி தரூ
கூடு தரூ
ஒரு பீடி தரூ
விரலு தரூ
சுண்டு தரூ
ஞானொரு பீடி வலிச்சு ரஸிக்கட்டெ.

ஒரு தீக்குச்சி கொடு
தீப்பெட்டி கொடு
ஒரு பீடி கொடு
விரல் கொடு
உதடு கொடு
நான் ஒரு பீடி புகைத்து மகிழ்கிறேன்.

கதகளியும் மர-ஸ்டூலும்

கதகளி ஆட்டத்தில் ஒரு சிறிய அரங்கை எவ்வளவு எளிதாக மிகப் பெரிதாகத் தோற்றமளிக்கச் செய்கிறார்கள் என்பது வியப்புக்குரியது. மேடையில் பின்னணியில் செண்டை, மத்தளம், தாளம் என்று வாத்தியக்காரர்களும் பாட்டுக்காரர்களும் அணிவகுத்து நிற்க, கதாபாத்திரங்கள் நடமாடும் இடம் இன்னும் குறுகிப் போய்விடுகிறது. இருந்தாலும் பார்வையாளர்களின் கற்பனையில் நம்பிக்கை வைத்து சில அசாதாரணத் தோற்றங்களை உருவாக்க அந்தக் கலைஞர்களால் முடிகிறது.

எதையும் பட்டவர்த்தனமாகச் சொன்னால்தான் பார்வையாளனுக்குப் புரியும் என்பது நம்ம ஊர் மனநிலை. கோஷிஷ் என்ற இந்திப் படம் (இது கூட ஒரு ஜப்பானியப் படத்தின் பாதிப்புத்தான்) குல்சார் உருவாக்கத்தில் இந்தியில்வெளிவந்தது. கணவனும் மனைவியுமாக இரண்டு பேருமே செவிட்டு ஊமைகள். இவர்களுக்குப் பிறந்த குழந்தை குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்ப்பார்கள்.

குழந்தைக்கு முன் ஒரு கிலுகிலுப்பையை அசைக்க, குழந்தை சலனமற்றுப் பார்த்தபடி இருக்கும். முகத்தில் ஏமாற்றம் கவியபெற்றோர், குழந்தையும் நம்மைப் போலத்தான் என்று தீர்மானிக்கும்போது கணவன் கிலுகிலுப்பையைப் பிரித்துப் பார்ப்பான். உள்ளே சிறிய கூழாங்கல்லோ, மணியோ எதுவும் இல்லாமல் வெறுமையாக இருக்கும் அது. ஒலிஎழுப்பாத கிலுகிலுப்பை என்பதால் குழந்தை சத்தம் கேட்டுத் திரும்பவில்லை என்று அறிந்த மகிழ்ச்சியை எந்த வித வசனமும் இன்றி சஞ்சீவ் குமாரும் ஜெயாபாதுரியிம் அழகாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.

இதே படம் தமிழில் கமல், சுஜாதா நடித்து வெளிவந்தபோது, கதாநாயகன் ஒரு அபிநயத்தை வெளிப்படுத்தினால், அது என்ன என்று உரக்கச் சொல்லி அப்படியா என்று கேட்பார்கள். பாதிப்படத்தில் பிய்த்துக்கொண்டு தியேட்டரில் இருந்து வந்துவிட்டேன். கோஷிஷ் இருக்கட்டும், கதகளிக்குத் திரும்பலாம்.

கதகளி மேடையில் கவனித்துப் பார்த்தால் இரண்டு ஸ்டூல் இருக்கக் காணலாம். சும்மாக் கால் வலித்தால் கதாபாத்திரங்கள் உட்கார இல்லை அது. முனிவர்களோ, அரசர்களோ, தெய்வங்களோ ஆசி அருளும்போது அந்த ஸ்டூலில் உட்கார்ந்து மற்ற பாத்திரங்கள் அவர்களுக்கு முன்னால் தொழுது நிற்பார்கள்.

மகாபாரத யுத்தம் காட்சி என்றால், பீமன் ஜராசந்தனை வதைப்பதற்கு முன் நடக்கும் சண்டையில் ஸ்டூல் ஒரு ஆயுதமாகும். பின்னணியில் செண்டை உச்சத்தில் முழங்க, ஸ்டூலைத் தூக்கி அடிக்க வருவதாகப் பாவனை காட்டும்போது அந்த ஸ்டூல் மறைந்து பீமன் கதை தான் மனதில் வரும்.

அது மட்டுமில்லை. பாண்டவர்களுக்காகத் துரியோதனிடம் தூது போன கண்ணனோ, இலங்கையில் சீதாபிராட்டியைத் தேடிப் போன அனுமனோ, தக்க நேரத்தில் தங்கள் முழு வலிமையை - விச்வரூபம் போல்- காட்ட ஸ்டூலில் ஏறி நின்றால் போதும். முக முத்திரைகளும், கை அபிநயமும் மண்ணுக்கும் விண்ணுக்கும் வளர்ந்த ஸ்வரூபத்தை நம்மைக் கற்பனையில் காண வைத்து விடும்.

அதே போல், பிரகலாதனை மலையுச்சியிலிருந்து ஹிரண்யகசிபு உருட்டி விட உத்தரவு கொடுத்ததும், பிரகலாதன் ஏறுவது ஸ்டூலில்தான். பின்னால் நின்று இரண்டு சேவகர்கள் பிடித்துத் தள்ள அவர்கள் தான் விழுவார்கள். பிரகலாதன் புன்சிரித்தபடி நிற்பான்.

கதகளி பார்க்க வரும் மக்கள் கூட்டம் சாதாரணர்களிலிருந்து நடுத்தர வர்க்கம் வரையானது. இவர்களில் இலக்கியப் பரிச்சயம் உள்ளவர்கள் அதிகமாக இருக்க முடியாது. ஆனாலும், பார்வையாளர்களின் ஊகத்துக்குச் சிலவற்றை விட்டகாட்சியமைப்பு புத்திசாலித்தனமானது.

கதகளியில் ராமாயணக் கதை பார்க்கும்போது சின்னச் சின்னதாக மெருகேற்றியிருப்பதைப் பார்த்தேன். அசோகவனத்தில் சீதையைத் தரிசித்த அனுமன், பிராட்டி கொடுக்கும் கணையாழியைக் கையில் வாங்கும் முன், ஒருதுண்டுத் துணியால் தன் கைகளைத் துடைத்துத் தூய்மைப் படுத்திக் கொள்வது இம்மாதிரி ஒன்று.

பாட்டுகள் மூலம் ஆட்டக்கதையை நகர்த்தி முன்னேறும்போது, அங்கங்கே, செண்டை மட்டும் பின்னணியில் ஒலிக்க, கர, முக முத்திரைகளால் பாத்திரங்கள் உரையாடுகிறார்கள்.

சூர்யா நியூஸ் சானலில் இப்படியான சந்தர்ப்பங்களில் அவ்வப்போது ஒரு வரி எழுதிக்காட்டி அந்த அபிநயம் என்ன என்று சொல்கிறார்கள். இது பழகிய பிறகு முத்திரைகள் எளிதில் புரியும். எழுதிக் காட்டுவதும் குறைந்து போகும்.

சூர்யா நியூஸ் கதகளிக்குச் செய்வதை சன் நியூஸ் தெருக்கூத்துக்கும், பாகவதமேளாவுக்கும், அரையர் சேவைக்கும் செய்யலாமா என்று நண்பர் மாலனை விசாரிக்க வேண்டும்.

(Feb 2004)

Saturday, May 14, 2005

தோழர் நாயனார்


First Year Remembrance (Onnam Charama Vaarshikam) -
-------------------------------------------------------------------------
(written - May 2004 on the eve of Comrade Nayanar's demise)

தோழர் நாயனார் காலமானார்.

ஏரம்பால கிருஷ்ணன் நாயனாரைப் பற்றிய கலைடாஸ்கோப் பிம்பங்களாக அடுக்கடுக்கான நினைவுகள்.

அசல் கண்ணூர் மலையாளத்தில் எந்தத் தலைவரையும் பற்றி 'ஓன்' (அவன்) என்று குறிப்பிடும் சகஜம், யார் எத்தனை சொல்லியும் கவலையே படாமல் தோழர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டைக் கட்சிக் கூட்டத்தில் குறும்பாக 'திருமேனி' என்று உரக்க விளித்து உற்சாகமாக உரையாடும் நாயனார்.

அவரை நல்ல வண்ணம் அறியாதவர்கள் அவருடன் கைரளி டிவியில் உரையாடத் தொலைபேசியில் அழைக்கும்போது கொஞ்சம் பயப்பட வைக்கும் கனமான குரலும் நரைத்த கட்டை மீசையும் கனத்த பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியுமாக 'ஆரா விளிக்குன்னு? கொல்லத்தில் நின்னா? ஆய்க்கோட்டே. எந்தா வேண்டது?' என்று பொறுமையிழந்ததாகத் தோன்ற வைக்கும் முகபாவத்தோடு சொல்லி, அடுத்த நிமிடம் குலுங்கிச் சிரிக்கும் தோழமையுள்ள நாயனார்.

திருவனந்தபுரம் தர்பார் ஹாலில் போன வியாழக்கிழமை அதே கட்டை மீசையும், மூக்குக் கண்ணாடியுமாகக் குரலும் உயிரும் விலகிப் போய்ப் பேழையில் கிடத்தப்பட்ட நாயனார். அவர் மார்பின் மேல் மடித்து வைக்கப்பட்ட, அவர் உயிருக்கு உயிராக நேசித்து வளர்த்த, கம்யூனிஸ்ட் கட்சியின் தினப்பத்திரிகையான தேசாபிமானி. தர்பார் ஹாலுக்கு வெளியே பெருமழைக்கு அஞ்சாமல் நனைந்தபடியும் குடையோடும் மலைப்பாம்பாக நீளும் வரிசையில் சமூகத்தில் சகல நிலைகளிலும் இருக்கப்பட்ட மக்களின் பெருங்கூட்டம்.

கூட்டத்தை விட்டுச் சற்றே விலகி, நாயனாருடன் ஒரு காலத்தில் கட்சியில் முக்கியத் தலைவராக இருந்து அப்புறம் பிரிந்து ஏ.கே. ஆன்றணி அமைச்சரவையின் பங்கு பெற்றிருக்கும் கௌரி அம்மாளும், எம்.வி.ராகவனும் நிற்கிறார்கள்.

நாயனாரா? மனுஷர் சாப்பாட்டுப் பிரியராச்சே. அதுவும் ஸ்வீட்டுன்னா எங்கே எங்கேன்னு அலைவாரே? கட்சிப் பொதுக்குழுவுக்குக் கிளம்பிப்போக எல்லோரும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் 'சாப்பிட என்னப்பா இருக்கு?' என்று விசாரிக்க ஆரம்பித்துவிடுவார் என்கிற ராகவனிடம் கௌரி அம்மாள் சொல்கிறார் - 'நீரிழிவு வியாதி வந்தா அப்படித்தான் அகோரப் பசி எடுக்கும்'.

(தோழர் ஜீவாவுக்கும் நீரிழிவு உண்டு. அவரைப் பெருந்தீனிக்காரனாகச் சித்தரித்துத் தமிழில் ஒரு நாவல் கூட வந்திருக்கிறது).

சுதந்திரப் போராட்டக் காலம். திருவிதாங்கூர் அல்லாத கரையோரப் பிரதேசங்கள் பிரிட்டீஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோது நிகழ்ந்த அரசு எதிர்ப்பு இயக்கமான கையூர் சமரத்தில் ஈடுபட்டு, அரசு அலுவலரான போலீஸ்காரரைக் கொலை செய்த வழக்கில் மூன்றாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுத் தேடப்படுகிறார் நாயனார்.

நாள்கணக்கில் இளநீரில் ஊறவைத்த அவலை மட்டும் உண்டபடி காலில் புரையோடிய புண்ணையும், கடும் பசியையும் தாகத்தையும் பீடிப் புகை வலித்துத் தாங்கிக் கொண்டு ஒரு சிவந்த புலர்காலப் பொழுதுக்காகக் காத்திருந்தபடி நெடிய தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்ட அந்த நாயனாருக்குச் சாப்பிடப் பிடிக்கும்தான். யாருக்குத்தான் பிடிக்காது?

நாயனார் கையூர் சமரத்தில் ஈடுபடவே இல்லை என்று பின்னால் ஒரு கூட்டம் பிரசாரம் செய்ய ஆரம்பித்தபோதும் (போலீஸின் இறுதிக் குற்றப் பத்திரிகையில் அவருடைய பெயர் இல்லையாம்) அவருடைய பங்களிப்பு அப்புறம் சந்தேகத்து இடமில்லாமில்லாமல் நிரூபிக்கப்பட்ட போதும், அதைப் பற்றிக் கோபமோ, மகிழ்ச்சியோ காட்டாமல் ஒரு புன்சிரிப்போடு "டோ, 'நீக்கறியல்லே அதொண்ணும்" என்று புறங்கையை அசைத்துவிட்டுப் போன நாயனார்.

கட்சிக் கூட்டத்தில் ஓர் அகில இந்தியத் தலைவர் (தற்போதைய காலகட்ட கிங் மேக்கர்களில் ஒருவர்) வீர உரை நிகழ்த்த முற்பட்டபோது, பக்கத்து நாற்காலியில், மைக்கில் தான் பேசுவது விழுந்து ஒலிபரப்பாகும் என்ற நினைவே இல்லாமல், 'அது சரி, வச்சுக் காய்ச்சு. 'ம்ப்ட 'ங்கள் கேள்கட்டே. உனக்கு உங்க ஊர்லே நாலு தாடிக்காரங்களைக் கட்சியிலே இழுத்துப் போட முடியலே. சும்மா சித்தாந்தம் பேசிக்கிட்டு தில்லியிலே குந்திக்கிட்டு இருந்தாப் போதுமா?" என்று உரக்க முணுமுணுத்த நாயனார்.

மலையாளக் கவிதாயினியும், ஐபிஎஸ் அதிகாரியுமான சந்தியா திருச்சூரில் டி.எஸ்.பியாகப் பொறுப்பேற்று முதலமைச்சர் நாயனார் பேசும் கூட்டத்தில் பாதுகாப்பு அளிக்கப் போனபோது, பிரசங்கம் செய்து கொண்டிருந்த நாயனார் அவரைப் பார்க்கிறார். பேசியதைப் பாதியில் விட்டுவிட்டு, 'திருச்சூர் ஜனங்களுக்கு நிம்மதி. கைக்கூலி வாங்காத பெண் டி.எஸ்.பி இல்லியா உங்களுக்கு இப்போ? அதுக்காக ரொம்பப் பெருமைப் பட்டுக்க வேணாம். சீனாவுக்குப் போயிருந்தபோது அங்கே பயணம் முழுக்க எனக்குப் பாதுகாப்பு கொடுத்தது பெண் போலீஸ் தான். அவங்களோட ஒப்பிடும்போது இங்கே பெண்கள் இப்படிப் பதவி வகிக்கறது ரொம்பக் குறைச்சலாக்கும்.'

தேசாபிமானியில் ஃப்ரூப் ரீடராகத் தொடங்கி, பத்திரிகையாளராகவும், தீவிரவான படிப்பாளியாகவும், 'சகாவு லெனின்', 'காலத்தின்றெ கண்ணாடி' போன்ற புத்தகங்களின் ஆசிரியருமான நாயனார். திருவனந்தபுரம் ஏ.கே.ஜி செண்டரில் (கட்சியின் தலைமை அலுவலகம் இது) பதினெட்டாம் எண் அறையில் ஊரில் அச்சுப்போடும், வந்து சேரும் எல்லாப் பத்திரிகைகளும் வேணும் என்று பிடிவாதம் பிடித்து வாங்கி வரிவிடாமல் படிப்பது மட்டுமில்லாமல், பத்திரிகைக்கு நடுவே செருகி வைத்த பிட் நோட்டீசுகளையும் வாசிக்கத் தவறாத முன் முக்கியமந்திரி நாயனார்.

வாட்டிகனில் போப்பாண்டவரைச் சந்தித்தபோது அவர் விவிலியத்தைப் பரிசாகத் தர, பதிலுக்கு மாத்ருபூமி பதிப்பித்த பகவத்கீதையைக் கொடுத்த நாத்திகரும், மாத்ருபூமிக்கு எதிரணியில் முன் நிற்கும் தேசாபிமானியின் ஆசிரியராகவும் இருந்த நாயனார்.

அறுபத்தேழில் பாலக்காடு தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் மலம்புழயிலிருந்தும் தலைச்சேரியிலிருந்தும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து, இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தியபடி தில்லிக்கு சிகிச்சைக்குப் புறப்பட்டுப்போன நாயனார்.

நெருக்கடி நிலைப் பிரகடனத்தைக் கடுமையாக எதிர்த்த தன் நெருங்கிய தோழரும் அரசியல் தலைவருமான ஏகேஜி என்ற ஏ.கே.கோபாலன் அந்தக் காலகட்டம் முடிந்த நேரத்தில் அதை அறிய முடியாமல் உயிர் விட்டது போல், அறுபத்தி இரண்டு இடத்தை இந்த லோக்சபையில் இடதுசாரிகள் வென்ற செய்தி வெளிவந்தபோது அது தெரியாமலேயே உயிர் துறந்த நாயனார்.

கட்சிப் பணியிலும் கட்சி தடைசெய்யப்பட்ட போதெல்லாம் தலைமறைவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் இடைக்கிடை சிறை வாழ்க்கையிலுமாகக் குடும்பம், திருமணம் பற்றி எல்லாம் நினைக்க நேரமில்லாமல் போய், நாற்பதாவது வயதில் சாரதா டீச்சரைக் கல்யாணம் செய்து கொண்ட நாயனார். கேரள சரித்திரத்திலேயே அதிகக் காலம் (கிட்டத்தட்ட பனிரெண்டு வருடம்) முதலமைச்சராகக் கணவர் இருந்தாலும், தன் உத்தியோகத்தை விடாமல் தொடர்ந்து ரிடையரான சாரதா டீச்சர் 'சாரதேஎஎஎ' ன்னு நீட்டி முழக்கிப் பிரியமாய் ஒரே ஒரு தடவை கூப்பிட மாட்டீங்களா' என்று அவருடைய உடல் வைத்திருந்த திருவனந்தபுரம் தர்பார் ஹாலில் கண்ணாடிப் பேழையை அணைத்தபடி குமுறிக் குமுறி அழ, ஒரு அனக்கமும் இல்லாமல் அந்திம உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நாயனார்.

நல்ல பேனாக்கள், வெயில் சுட்டெரிக்கும்போதும் சட்டைக்கு மேல் அணியும் பாதி கோட், நல்ல சாப்பாடு, பால் பாயசம், கால் பந்து விளையாட்டில் ஈடுபாடு, நாய் வளர்ப்பு, வெளிநாடு போனால் அணிந்து போக ஒரு சூட் என்ற சின்னச் சின்ன ஆசைகள் கொண்ட நாயனார். கண்ணூர் கல்லியாசேரியில் சாரதா டீச்சர் கட்டிய நடுத்தர வீட்டில் ஒரு அறை முழுக்கத் தான் படிக்க வேண்டிய புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்த நாயனார். சீக்கிரம் எம்.பி பென்ஷன் கிடைத்து அந்த வீட்டில் நிரந்தரமாகக் குடியேறித் தீவிர அரசியலிலிருந்து சற்றே விலகிக் குடும்பத்தோடும் புத்தகங்களோடும் மிச்ச வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற கனவு நிராசையாகிப் போன நாயனார்.

திருவனந்தபுரத்திலிருந்து திருச்சூர், தலைச்சேரி மார்க்கத்தில் இரண்டு நாள் பயணமாக அவருடைய உடல் தகனத்துக்குக் கண்ணூர் வந்து சேர்வதற்குள் வழிநெடுக மழையில் சொட்டச் சொட்ட நனைந்து இரவெல்லாம் விழித்துக் கேரளமே காத்து நின்றது. ஏ.கே.கோபாலன், ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் போன்ற மற்ற முக்கியமான கேரள அரசியல் தலைவர்களுக்குக் கூடக் கிடைக்காத அத்தகைய அன்பும் நேசமும் மரியாதையும் கிட்டிய மக்களுக்கு நெருக்கமான மக்கள் தலைவர் நாயனார்.

அரபிக் கடலின் அலைகள் வெகு அருகில் முழக்கமிட்டுக் கொண்டிருக்க, தென்னை மரங்களும் செடிகொடிகளுமாகப் பசுமை விரியும் தன் மனதுக்குப் பிரியமான நிலப்பரப்பில், ஏகேஜி, அழிக்கோடன் ராகவன் போன்ற மனதுக்குப் பிரியமான தோழர்கள் வெந்தடங்கிய பய்யாம்பலம் மயானத்தில் மலையாள மண்ணோடும் நீரோடும் காற்றோடும் கலந்து போன நாயனார்.

'முத்தச்சா லால் சலாம்'. தொலைக்காட்சியில் தனக்கு மழலையில் வணக்கம் சொன்ன குழந்தையோடு குழந்தையாக உற்சாகத்தோடு முட்டி மடக்கி லால் சலாம் என்று தளராத குரலில் முழக்கமிட்ட எண்பத்தாறு வயதான நாயனார்.

சகாவே, லால் சலாம்.
------------------------------------------------------------------------------

உரை வெண்பா

1) தம்பி தாளெடுத்து வா
----------------------------------

கலைப்படைப்புகளின் 'காணாமல் போனவைகள்' பட்டியலில், ஓவிய மேதை ரெம்ப்ராண்ட் வரைந்த புகழ் பெற்ற ஓவியமான 'குழந்தை ஏசுவின் சுன்னத் என்ற மார்க்கக் கல்யாணம்' படம் முக்கியமானது.

இந்த ஓவியத்துக்காக ரெம்ப்ராண்ட் எடுத்துக் கொண்ட விஷயம் கலைப்படைப்பாளிக்குச் சவால் விடும் விதத்தில் அமைந்தது.

காட்சியை லாங்க் ஷாட்டில் சித்தரித்திருந்தால், அது எதைச் சொல்கிறது என்பதே தெரியாமல் போயிருக்கும். டைட் க்ளோஸ் அப் ஆக வரைந்திருந்தால், அந்த முக்கியமான நொடியின் மகத்துவம் மறைந்து வெறும் அனடாமிக்கல் ஸ்டடியாகத் தெரிந்திருக்கும்.

ரெம்ப்ராண்டுக்கு இதை எப்படி, எந்தக் கோணத்தில் சித்தரிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தது.

கிட்டத்தட்ட அரை இருட்டில் ஒரு யூதக் கோவில். ஒரு சிறிய மேடை. கீழே மண்டியிட்டபடி பெண்கள், முதியவர்கள். ஜோசப் ஒரு சிறிய வட்ட மேஜையில் குழந்தை ஏசுவை அணைத்துப் பிடித்தபடி இருக்கிறார். பக்கத்தில் மருத்துவர். மருத்துவரையும் குழந்தையையும் தழுவி மேலே இருந்து பொன் நிறத்தில் ஒரு வெளிச்சம் பொழிந்து கொண்டிருக்கிறது. மருத்துவர் ஒரு கையில் குழந்தையின் உறுப்பைப் பிடித்தபடி, இன்னொரு கையில் சிறிய கத்தியோடு ஆயத்தமாக இருக்கிறார்.

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கருதக்கூடிய ஒரு கணம் ரெம்ப்ராண்டின் அற்பத ஓவியத்தில் உறைந்து போய் அந்தக் கணத்தைத் திரும்பத் திரும்ப நிகழ்த்திக் காட்டுகிறது.
1646-ல் வரையப்பட்ட இந்தச் சித்திரம் இப்போது என்ன ஆனது என்று தெரியவில்லை. 1755 வாக்கில் அது காணாமல் போனது போனதுதான்.

ஓவியத்தின் ஒரு நகலை (அல்லது அசல் ஓவியத்தை வரைவதற்கு முன் வரைந்து பழகிய முன்னோட்டப் பிரதியை) ரெம்ப்ராண்ட் எடுத்து வைத்திருந்ததால், அந்த ஒரிஜினல் ஓவியம் எப்படி இருந்திருக்கும் என்று தெரிகிறது. ஆனாலும், நகல் எல்லாம் அசல் ஆகிவிடுமா?

ஓவியத்தை யார் எடுத்திருப்பார்கள்? ஏன் எடுத்திருப்பார்கள்? என்ன செய்திருப்பார்கள்?

இந்தக் கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை. ஆனாலும் கலை விமர்சகர்களில் பெரும்பாலானவர்கள் கருதுவது, ஏசுநாதரை இப்படி உடல் முழுக்கக் காட்டியபடி (குழந்தையாக இருந்தாலும்) ரெம்ப்ராண்ட் சித்தரித்தது ஆசாரக் குறைச்சல் என்று கருதிய யாரோ செய்த வேலை தான் அந்தக் கலைப்படத்தைக் கடத்திப் போன செயல். அதை அழித்துக் கூட இருக்கலாம்.

கலையும், இலக்கியமும் அவற்றோடு ஸ்னானப் பிராப்தி கூட இல்லாதவர்களால் நம்பிக்கை, நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் என்ற ஏதேதோ பெயர்களில் மதிப்பிடப்படுவது, குகை மனிதன் இருண்ட குகைச் சுவர்களில் மிருகங்களையும் சக மனிதர்களையும் வரைந்தபோதே தொடங்கி இருக்க வேண்டும்.

'கூளப்ப நாயக்கன் காதல்' ஐம்பது வருடம் முன்னால் வரைகூட ஆபாசப் புத்தகம் என்று தடை செய்யப்பட்டிருந்ததாகச் சொல்வார்கள். இங்கிலாந்தில் 1700களின் இறுதியில் எழுதப்பட்ட ஃபேனி ஹில் 'authentic porno and a literature of its own kind' என்று விமர்சகர்களால் இப்போது கொண்டாடப்படுகிறது. அது பிரசுரமானபோது, தடை செய்யப்பட வேண்டும் என்று மதகுருமார்கள் போராடித் தடை செய்தார்கள். அப்போது புத்தகம் முழுக்க விற்றுத் தீர்ந்ததாம். வாங்கியவர்களில் பலர் மதகுருமார்கள் தான். படித்துவிட்டுத்தானே தடை செய்யச் சொல்லிப் போராட வேண்டும்!

மூத்த தமிழ் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் 'சம்பங்கிபுரத்துப் பொம்பளைகள்' என்ற ஒரு சிருங்கார ரசம் மிகுந்த நாவலைப் பல வருடம் முன்னால் எழுதினார். ஆனால் அதைப் பிரசுரிக்கத் துணிவின்றிக் கையெழுத்துப் பிரதியாகவே பல காலம் பெட்டிக்குள் வைத்திருந்தார். அந்தக் கையெழுத்துப் பிரதியைப் படிக்க வாய்ப்புக் கிடைத்த (லேசில் கிடைக்காத வாய்ப்பு அது) காலம் சென்ற என் எழுத்தாள நண்பர் தஞ்சை பிரகாஷ், நாவலைப் பற்றி உற்சாகமாகச் சொன்னது நினைவு வருகிறது. அது பிரசுரமாகி இருந்தால், தமிழில் இன்னொரு முக்கியமான சோதனை முயற்சி கிடைத்திருக்கும்.

அதைப்பற்றி பிரகாஷ் நடத்திய (ஒரே ஒரு இதழ் மட்டும் வெளிவந்த) 'குயுக்தம்' இலக்கிய இதழிலும் எழுதியிருந்த நினைவு.

வல்லிக்கண்ணன் தற்போது கையெழுத்துப் பிரதியைக் கிழித்துப் போட்டிருப்பார்.

கதைத்த பிரகாசு காலமானார் கேட்டால்
உதைக்க வருவார் வகண்ணன் - சதையொடு
சம்பங்கி யூர்க்கதை சட்டெனக் கட்டலாம்
தம்பிநீ தாளெடுத்து வா.
*******************************************

2) முடிக்கு விலையென்ன
---------------------------------------

பிரிட்டீஷ் காரர்களை எதற்கு விமர்சித்தாலும், அவர்களை ஒரு விஷயத்துக்காக மனம் திறந்து பாராட்டலாம்.

பழைய, புராதனப் பொருட்களைப் போற்றிப் பாதுகாப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறைக்காக.
அதில் நூறில் ஒரு பங்கு நமக்கு இருந்தால் கூட இத்தனை கோயில் சிலைகள் திருட்டுப் போயிருக்காது. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் சிந்தாமணியைப் பதிப்பிக்கவும், குறிஞ்சிப்பாட்டில் உதிர்ந்த மலர்களைத் தேடியும் கால் தேய நடந்தது கொஞ்சம் குறைந்திருக்கும்.

ஐம்பெருங்காப்பியங்களில் வளையாபதியும் குண்டலகேசியும் 'காணாமல் போனவை' லிஸ்டில் சேர்ந்திருக்காது.

பிபிசியில் 'ஆண்டிக் ரோட் ஷோ' நிகழ்ச்சியைப் பார்க்கும்போது இது நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் நடக்கும் இந்த ஒரு மணி நேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சி இங்கிலாந்தில் முக்கியமான நகரங்களில் போய்ப் படமாக்கப்படுவது. அந்தந்தப் பட்டணத்திலும், சுற்றி எட்டுப்பட்டி கிராமங்களிலும் இருக்கப்பட்ட பிரிட்டீஷ் மகாஜனங்கள் அவர்கள் போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கும் குடும்பப் பொக்கிஷங்களோடு ஆஜராகி விடுகிறார்கள்.

பழைய ஓவியம், பழைய சிற்பம், கைவினைப் பொருட்கள், பழைய புத்தகம், பழைய மர ஜாமான் என்று எத்தனை எத்தனையோ பொருட்களைப் பார்வையிட்டு சுவாரசியமாகப் பேசியபடி அவற்றை மதிப்பிட வல்லுனர்களும் பங்கு பெறுகிறார்கள்.

அப்படி என்ன என்ன தான் வருகின்றது இந்தப் பழைய பொருள் கண்காட்சியில்?

போன மாதம் ஒரு பாட்டியம்மா கொண்டு வந்த கான்வாஸ் பையைக் கொட்டிக் கவிழ்த்தார். சின்னச் சின்னதாகப் பொட்டலங்கள். பாட்டிக்குப் பாட்டி காலத்துப் பல்பொடியாக இருக்குமோ என்று பார்த்தால், விஷயமே வேறே.
எல்லாப் பொட்டலத்திலும் இருந்தது தலைமுடிதான்.

அந்தம்மா குடும்பமே தலைமுறை தலைமுறையாக முடிவெட்டும் தொழிலில் இருப்பவர்களாம். அதுவும் பிரபலங்களுக்கு சிகை திருத்தும் தொழில்.

பாட்டியின் முப்பாட்டனார் கையில் கத்திரி பிடித்த நேரம் போக, வெட்டிய முடியை எல்லாம் ஒரு இழை வ்¤டாமல் அப்படியே கூட்டிப் பெருக்கிக் குப்பையில் போடாமல், ஒரு புத்திசாலித்தனமான காரியம் செய்திருக்கிறார்.

தான் சிகை அலங்காரித்துச் சிங்காரித்த பிரபலங்களின் உதிர்ந்த முடியில் கொஞ்சம் போல் எடுத்துப் பொட்டலம் கட்டி வைத்ததோடு அந்தக் காகிதத்திலேயே நாள், நட்சத்திரம், திதி, வருஷம் போட்டு யாருடைய தலைமுடி என்றும் கைப்பட எழுதி வைத்திருக்கிறார்.

அப்படியான பொட்டலங்களில் ஒன்று நெல்சன் துரையின் தலைமுடி. இந்த ஒற்றைக்கண் வெள்ளைக்காரன் இருநூற்றைம்பது வருடம் முன்பாக, பிரஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியனின் கப்பல் படையைத் துரத்தோ துரத்தென்று எகிப்து வரை துரத்தி நைல் நதியில் வைத்துக் கிடுக்கிப் பிடி போட்டு மடக்கிக் கடற்போரில் தோற்கடித்தவன்.

இங்கிலாந்தின் சிறந்த கடற்படைத் தளபதி யாரென்றால் உடனே இவன் பெயரைத்தான் சொல்வார்கள்.

நெல்சனின் சுருள் சுருளான உச்சிக்குடுமி சைஸ் முடிக்கு, இப்போது என்ன மதிப்பு தெரியுமா?
மயக்கம் போடவேண்டாம். சுமார் ஐயாயிரம் பவுண்ட் (கிட்டத்தட்ட நாலு லட்சம் ரூபாய்).

பார்வேந்தன் ராணியம்மா பத்தொன்பது வைப்பாட்டி
தேரோட்டி சேவகன் தேர்ந்தெடுத்த வீரன்
உயிர்போய் வருடம் உருண்டு கடக்க
மயிரும் விலையேறும் பார்
.
*************************************

3) பாதாள ரயில் நிலையம்
-----------------------------------------

யார்க்ஷயரில் பட்ஸி பகுதியில் நடைபெற்ற ஒரு ராத்திரி இசை விழாவில் டி.வி பிரபலங்கள் - ஆண்கள் முழுக்க முழுக்க - பெண் உடைகளில் வந்து ஆடிப் பாடியது ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சீரியசான டிவி அரசியல் விமர்சகர்கள், விளையாட்டு வர்ணனையாளர்கள், தேங்காய்த் துருவிக் கேள்வி போடும் பேட்டியாளர்கள் எல்லாம் குட்டைப் பாவடையோடு மேடையில் ஆடியதை மணிக்கணக்காகத் தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பினார்கள்.

இங்கிலாந்தில் வசதி குறைந்த குடும்பங்களில் பிறந்த குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தையும் கல்வித்தரத்தையும் மேம்படுத்த நாடு முழுக்க நிதி வசூலித்ததின் பகுதியாக நடந்த இந்த விழா முடிவில், கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பவுண்ட் இந்தக் குழந்தைகள் நிதிக்கு நன்கொடையாகச் சேர்ந்து விட்டது.

ஏதாவது காட்சியில் கதாநாயகன் புடவை கட்டி வருவது தமிழ் சினிமாவில் சர்வசாதாரண நிகழ்ச்சியாக இருந்தாலும் மேற்கில் கிராஸ் டிரஸ்ஸிங் நடைமுறைக்கு மாறுபட்ட, இயல்பான மன, பாலின உணர்ச்சிகளோடு வேறுபட்ட செயலாகத்தான் காணப்பட்டுக் கொண்டிருந்தது இதுவரை. இந்தத் தயிர்வடை சமாசாரத்தை விட சீரியசான ஓரினப் புணர்ச்சி வெகு அண்மையான காலம் வரை சபையில் பேசக்கூடாத விஷயமாக இருந்தது.

ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடும் தம்பதிகளுக்குக் குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ள உரிமை உண்டா என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில், கட்டுப்பெட்டிக் கட்சியாக எல்லோரும் கருதும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தான் ஓரினப் புணர்ச்சியாளர் என்று அறிவித்துப் புருவங்களை உயர வைத்தார். மத குருமார்களில் இப்படிப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுப்பதும் தொடங்கி இருக்கிறது. எல்லாம் எங்கே போய் முடியுமோ?

லண்டன் ஏர்ள்ஸ் கோர்ட் பாதாள ரயில் நிலையத்தில் ஒரு ராத்திரி பார்த்தது இது.

பாதாள ஸ்டேசனில் பத்துமணி ராத்திரிக்கு
ஏதானும் வண்டிவரக் காத்திருந்தேன் - மோதாமல்
தள்ளாடி வந்து தடுக்கி விழுந்தவள்
உள்ளாடை இல்லாத ஆண்.


(2002 Sep)

Sunday, May 01, 2005

ஹரிவராசனம் எப்போது துவங்கியது?

இன்றைய தேசாபிமானி இதழில் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு இது) நான் ரசித்த கட்டுரை -

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இரவு பதினொன்று மணிக்கு நடை அடைப்பது, கானகந்தர்வன் ஏசுதாஸ் பாடிய ஹரிவராஸனம் பாடலோடுதான். பகவான் அய்யப்பனுக்கும், அய்யப்ப பக்தர்களுக்குமான தாலாட்டு போன்றது

இப்பாடலை இசைப்பது சபரிமலையில் பல ஆண்டுகளாகத் தொடரும் பழக்கமாக உள்ளது.

ஹரிவராஸனம் எப்படி சபரிமலைக்கு வந்து சேர்ந்தது? ஐம்பது வருடம் முன்னால் சபரிமலை சந்நிதானத்தில் மேல்சாந்தியாக இருந்த மாவேலிக்கரை வடக்கத்தில்லத்து ஈச்வரன் நம்பூதிரி (இப்போது அவருக்கு வயது தொண்ணூற்று ஒன்று) சொல்கிறார் -

"சபரிமலையில் அத்தாழபூஜை (இரவு உணவுக்கு அப்புறமான ஆராதனை) முடிந்து, பகவான் அய்யப்பனின் உறக்கப் பாட்டான ஹரிவராஸனம் பாடுவதையும், கற்பூர தீபம் ஏற்றி வணங்கி நடையடைப்பதையும் வழக்கத்தில் கொண்டு வந்தவன் நான் தான். அத்தாழபூஜை முடிந்து இந்தப் பாட்டைத் துதிப்பாடலாகப் பாடும் வழக்கத்தை நானும் கோவில் ஊழியர்களும் சேர்ந்து தொடங்கி வைத்தோம்.

கம்பங்குடி சுந்தரம் குளத்து அய்யர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது இந்தக் கீர்த்தனம். நான் அச்சன்கோவில் அம்பலத்தில் சாந்தியாக இருந்தபோது அங்கே தரிசனத்துக்காக வந்த ஒரு பக்தர் எனக்குக் கொடுத்த அந்தப் புத்தகத்தை இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்.

இந்தப் பாடல் வழக்கத்திற்கு வருவதற்கு முன், சபரிமலையில் சாந்தியாக இருந்த செங்ஙன்னூர் கிட்டுமணி திருமேனி (நம்பூதிரி) புல்லாங்குழல் வாசித்து நடை சார்த்துவது நடப்பில் இருந்தது. நானும் கோவில் ஊழியர்களும் ஹரிவராஸனம் பாட ஆரம்பித்த வழக்கம், ஏசுதாஸின் இனிய குரலில் இந்தப் பாடல் வெளிவந்த பிறகு அந்த இசைத்தட்டை இசைப்பதாக மாறியது. அப்புறம் ஒலிப்பேழை. இந்தப் பாடலை மூன்று விதமான இசையமைப்பில் பாட அறிந்தவன் நான்."

ஐமபதாண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட எரிந்து போனது சபரிமலைக் கோவில். கோவிலை மறுபடி அமைத்துக் குடமுழுக்காட்டி ஸ்ரீ அய்யப்ப விக்ரகம் பிரதிட்டை ஆனபோது கோவில் மேல்சாந்தியாக இருந்தவர் ஈச்வரன் நம்பூதிரி தான்.

அவர் மேல்சாந்தியாகும் காலத்தில் (1950) அப்பதவிக்கு இப்போது போல் நறுக்கெடுப்போ, தேர்தலோ நடத்தித் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இல்லை. மாதம் அறுபத்தியொண்ணு ரூபாய் சம்பளத்தில் ஒண்ணரை வருடத்துக்கான நியமனம் அப்போதெல்லாம்.

அந்த நியமன உத்தரவோடு, வன விலங்குகளும் விஷப் பாம்புகளும் நிறைந்த காட்டு வழியில் ஒற்றையடிப்பாதை வழியாகத் தனித்து நடந்து வந்து புனிதமான பதினெட்டுப் படி சவிட்டி ஈச்வரன் நம்பூதிரி சந்நிதானத்தை அடைந்தபோது அவர் பார்வையில் பட்டது பதினெட்டுப் படிகளின் உச்சியில் கரிந்து போன கட்டைகளும், சிதறிய கருங்கல் பாளங்களும். செம்பும், ஓடும் உருக்கிக் கலந்த நிலையில் பழைய கோவிலின் சிதைவுகள். தீ தீண்டி மூன்றாகப் பிளந்து சிதிலமாகி, வெள்ளிக்கம்பியால் கட்டப்பட்ட ஸ்ரீ அய்யப்பனின் திரு விக்கிரகம்.

தென்மேற்கு மூலையில் இன்னும் இருந்த இரண்டு ஓலைக் கொட்டகைகளில் ஒன்று மேல்சாந்தி தங்கியிருக்கும் இடமானது. அவருக்கு ஒத்தாசை செய்ய உள்கழகம் என்ற விளிப்பேர் (கூப்பிடும் பெயர்) உள்ள ஒருவன் மாத்திரம் உண்டு. நிம்மதியைக் கெடுக்க அவ்வப்போது காட்டானைக் கூட்டமும், புலிகளும் சுற்றி வரும்.

இப்போது போல் அந்தக் காலத்தில் பக்தர்களின் பெரும் கூட்டம் கிடையாது. மாத பூஜைக்கு ஒவ்வொரு ஒண்ணாம் தேதியும் நடை திறக்கும்போது தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் சுமார் இருபது பேர். மண்டல பூஜைக்கு அப்படி இப்படி ஆயிரம் பேர்.

தமிழ்நாட்டில் இருந்து, நாடக நடிகரான நவாப் ராஜமாணிக்கம் குழுவினரோடு தவறாமல் சபரிமலைக்கு வந்திருந்தது ஈச்வரன் நம்பூதிரியின் நினைவில் பசுமையாக உள்ளது. தமிழ்நாட்டில் அய்யப்பன் கோவில் பிரசித்தி அடையச் செய்தவர்களில் அவரே முக்கியமானவர்.

அப்போதெல்லாம் அரவணைப் பாயாசமும், திருமதுரம் என்ற இனிப்பும் தான் பிரதான வழிபாட்டுப் பொருள்கள். ஒரு உருளி திருமதுரமும், இரண்டு வார்ப்பு அரவணையும் கிடைத்தாலே பெரிது.

அப்போதைய சபரிமலை யாத்திரை இடையூறுகள் நிறைந்ததாக இருந்தது. சாலையோ, வழியில் வசதிகளோ கிடையாது. வண்டிப்பெரியார் வழியே சாலக்காயம் வந்து அங்கேயிருந்து ஒரு குறுகிய நடைப்பாதை வழியாகப் பம்பையாற்றங்கரையை அடைய வேண்டும். மாத பூஜைக்கு வருகிறவர்கள் தனியாளாகத்தான் நடந்து வருவார்கள் பெரும்பாலும். பம்பையிலிருந்து எட்டு மைல் நீளும் செங்குத்தான காட்டுப் பாதையில் காட்டு வ்¢லங்குகளுக்கு இடையே யாத்திரை செய்ய வேண்டும் அப்போதெல்லாம்.

சபரிமலையில் இப்போது உள்ள திருக்கோவிலும், பகவான் அய்யப்பனின் விக்கிரகமும் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் ஈச்வரன் நம்பூதிரி. கோவில் அமைக்கும் வேலைகள் நாகர்கோவிலைச் சேர்ந்த சிற்பி செல்லப்பனாசாரியாரின் பொறுப்பில் மேற்கொள்ளப்பட்டன. செங்ஙன்னூர் தட்டாவிளை அய்யப்பனாசாரியார் பொறுப்பில், செங்ஙன்னூர் மகாதேவர் கோவில் ஊட்டுபுரையில் புதிய விக்ரகம் வடிவமைக்கப்பட்டது. பழைய விக்கிரகத்தின் கண், மூக்கு, தாடை, செவி முதலியவற்றை துல்யமாகத் தர்ப்பைப் புல்லில் அளந்து புதிய விக்கிரக வடிவமைப்புக்காகக் கொடுத்ததும், பிரதிட்டை சடங்குகளை முன் நின்று நடத்தியவரும் ஈச்வரன் நம்பூதிரிதான்.

அதற்கு முந்தைய பிரதிட்டைக்குக் கிட்டத்தட்ட நாற்பத்தொன்று ஆண்டுகள் கழித்துக் கோவிலில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது. இப்போதைய பிரதிட்டாதானத்தில் சதுரமான திருக்கோவிலும் அதன் முன்பாக மிகச் சிறிய மண்டபமும், கிழக்கே பெரிய கோவிலும் அதற்கு வடக்கே கீழ்ப்புறமாக பலா மரத்தில் செய்து நிறுத்திய நெய்த்தோணியும் (தீபத்தம்பம்), தென்மேற்கு மூலையில் வினாயகர் சந்நிதியும் அதன் வடக்கே ஒற்றை வரிசையாக நாக விக்கிரகமும், மாளிகைப்புரத்தம்மைக்கு ஒரு திருக்கோவிலும் அங்கே ஒரு பீடமும்தான் அன்று இருந்த கோவில். நவக்கிரகங்கள் தவிர மற்ற உபதேவதைகள் எல்லாம் ஈச்வரன் நம்பூதிரி மேல்சாந்தியாக இருந்த காலத்தில் பிரதிட்டை செய்யப்பட்ட மூர்த்திகள். படிபூஜைக்கும், உத்ராட சத்யை (விருந்து) வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்தவர் ஈச்வரன் நம்பூதிரி தான்
தொண்ணூற்றியொன்றாம் வயசிலும் அவர் படு சுறுசுறுப்பாக, கேரளத்தில் எத்தனையோ கோவில்களில் திருப்பணிக்காக அலைந்து கொண்டிருக்கிறார்.

(மே 1, 2005 - தேசாபிமானி ஞாயிறு மலரில் பிரேம்ஜித் காயம்குளம் எழுதிய கட்டுரையிலிருந்து - நன்றி தேசாபிமானி)

பலசரக்கு

கவிதை என்ற இலக்கிய உருவம் பிறந்த அதே நாளில் (அல்லது அதற்கு முன்னால்) மோசமான கவிஞர்களும் உருவாகி விட்டார்கள்.

காதை இழுத்து அறுப்பது போன்ற பச்சைத் தமிழ்த் தண்டனைகளுக்கு எல்லாம் பெப்பே சொல்லி விட்டு இங்கே மோசமான கவிதை பெருகிக் கொண்டே தான் போயிருக்கிறது.

ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் கதைகள் பலவற்றிலும் கடைசிக் காட்சியில் ஆஸ்ட்ரிக்ஸ¤ம், ஒபீலிக்சும் மற்ற கிராம நண்பர்களும் அவர்களின் வெற்றியைக் கொண்டாடக் காட்டுப் பன்றி மாமிசத்தோடு அட்டகாசமாக விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, கிராமக் கவிஞனான காக்க·போனிக்ஸ் கைகால் கட்டப்பட்டு, வாயில் துணியோடுமரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பான் பரிதாபமாக.

ஐரோப்பாவில் மோசமான கவிஞர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். கிண்டல் செய்யவாவது கூட்டம் கூடிய நிகழ்ச்சிகள் உண்டு.

போன நூற்றாண்டுத் தொடக்கத்தில் இப்படி ஒரு ஆங்கிலக் கவிஞர் கவியரங்கத்தில் ஏறித் தொண்டையைக் கனைத்துக் கொண்டு 'கவிதை' படிக்க, கடுப்பாகி அவரை அடிக்கப் போனார்கள் ரசிகர்கள். மோசமான கவிஞர் என்றாலும் ஆசாமி புத்திசாலி என்பதால் இதை எதிர்பார்த்து, கையில் வண்ணக் குடைகளை விரித்தபடிகோமாளிகளின் கூட்டம் ஒன்றை மேடைக்கு முன்னால் நிற்க வைத்து விட்டுத் தாய்மார்களே, பெரியோர்களே என்று ஆரம்பித்தாராம்!

ஸ்காட்லாந்து கவிஞரான வில்லியம் டோபாஸ் மக்கொனகலை அவருடைய சொந்த ஊரான டுண்டி நகர மக்கள் ஒருமித்துத் திரண்டு மரியாதை செய்ததோடு அவரைப் பற்றி ஒரு இணையத் தளத்தையும் உருவாக்கி விட்டார்கள்.

Beautiful Railway Bridge of the Silvery Tay!
With your numerous arches and pillars in so grand array
And your central girders, which seem to the eye
To be almost towering to the sky.
The greatest wonder of the day,
And a great beautification to the River Tay,
Most beautiful to be seen,
Near by Dundee and the Magdalen Green

என்று ரயில்வே பாலம் பற்றிய'அமரத்துவம் வாய்ந்த' கவிதை வரிகளை எழுதியவர் இவர்.

ஆயிரத்து எண்ணூறுகளில் தொடங்கி இதுவரை இவர்போல் மோசமான ஒரு கவிஞர் உலகத்தில் எந்த மொழியிலும் பிறக்கவில்லை என்று அவர்கள் பெருமையோடு அடித்துச் சொல்கிறார்கள்.

இப்படி எல்லாம் தமிழர்களின் பெருமையில் பங்கு போட இவர்களுக்கு என்ன தைரியம்!
*************************************
இந்த வாரம் நான் ரசித்த கவிதை.

சொல் விளையாட்டின் குறும்பு மொழிபெயர்ப்பில் காணாமல் போய்விடுகிறது என்பதால், ஆங்கிலத்திலேயே தருகிறேன் -
பொயட்ரி.காம் இணையத் தளத்தில் இருந்து -

Bathroom Humor
---------------
A most peculiar guy
In the adjacent stall:
"I love you too. Goodbye"
Concludes his cellphone call.
Now, doesn't it deflate your
Idea of the romantic
That even calls of nature
Require Bell Atlantic?

(Bob McKenty)
********************

லண்டன் மாநகரில் போன ஞாயிறன்று நடந்த விவசாயிகள் பேரணி பிரதம மந்திரி டோனி பிளேரை அவருடைய வழக்கமான ஒதைங்கடா சதாம் ஹ¤சைனை உதாரை அடக்கி வாசிக்கச் செய்து விட்டது. அண்ணாச்சி நாற்காலி ஆட்டம் காணலாம் அல்லது அடுத்த தேர்த்லில் தொழிற்கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போகலாம் என்ற பயம் காரணம். எல்லாவற்றுக்கும் காரணம் நரி.

இங்கிலாந்து கிராமங்களில் எத்தனையோ நூற்றாண்டுகளாக நரி வேட்டை ஒரு பொழுதுபோக்கு. வேட்டை நாய்கள் லொங்கு லொங்கு என்று முன்னால் ஓட, குதிரைகளில் ஏறி உட்கார்ந்து துப்பாக்கியும் கையுமாகப் புதர்களில் நரிகளைத் தேடிச் சுட்டு வீழ்த்துகிற இந்த வேட்டைக்குத் தடை விதிக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பது இங்கிலாந்து விவசாயிகளைக் கொதித்தெழ வைத்திருக்கிறது. மஞ்சுவிரட்டுக்குத் தடை என்றால் நம்ம எட்டுப்பட்டிக் காளைகள் 'த்தா டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று பாய்ந்து வருவார்களே அது போல்.

கண்ட்ரிசைட் அலையன்ஸ் என்ற கிராமப்புறக் கூட்டமைப்பின் சார்பில் கிட்டத்தட்ட நாலு லட்சம் விவசாயிகள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அருகே அணிவகுத்து நடந்து பேரணி நடத்தி லண்டன் நகரத்தை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது இந்த நூற்றாண்ட்டில் இதுதான் முதல் முறையாம். த்ரீ பீஸ் சூட் அல்லது ஜீன்ஸ் டீ ஷர்ட் அணிந்த இந்த விவசாயிகள் மனதளவில் நம்மூர் வேட்டி துண்டு விவசாயிகள் போலத்தான். நிலமும் நீரும் மண்ணும் அதன் மணமும் இவர்கள் மனதில் பச்சென்று ஒட்டியிருக்கிறது.

நரி வேட்டை மட்டுமில்லை பிரச்சனை. தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் கிராமப்புற மக்களை அலட்சியம் செய்கின்றன என்பது இவர்களின் பிரதான குற்றச்சாட்டு (எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை?).

இங்கிலாந்து கிராமங்களில் கிட்டத்த்ட்ட மூவாயிரம் தபால் ஆபீஸ்கள், கிட்டத்தட்ட அதே அளவு வங்கிக்கிளைகள், பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. காவல் நிலையங்களை மூடிவிட்டு நடமாடும் காவலான ·மொபைல் பொலீஸ் மூலம் தான் பாதுகாப்பு. மருத்துவமனைகள் ஆகக் குறைச்சல்.

நகரவாசிகள் அதிக விலை கொடுத்து கிராமப்புற வீடுகளை வளைத்துப் போட்டுக்கொள்வதால் (விடுமுறைக்கு வந்து தங்க), கிராமப்புற மக்கள் புறநகர்ப் பகுதிகளுக்குக் குடிபெயர வேண்டிய கட்டாயம்...

இது இப்படி என்றால், இவர்களுக்கு எதிராக சில நகர் சார்ந்த அரசியல்வாதிகள் அதிரடியாக வைக்கும் புகார்களும் கோரிக்கைகளும் இப்படி -

விவசாயத்துக்குக் கொடுக்கும் நிதி உதவியை உடனடியாக நிறுத்த வேண்டும்.இதை வாங்கி விவசாயிகள் கொழுக்கிறார்களே தவிர தானிய, மாமிச விலை குறையவில்லை. விவசாயத்தை இந்த நாட்டில் தடை செய்து,வெளிநாட்டிலிருந்து குறைந்த செலவில் உணவை இறக்குமதி செய்து கொள்ளலாம்.

வரம் வாங்கிய பஸ்மாசுரன் கடைசியில் பரமசிவன் தலையிலேயே கை வைக்க வந்தது போல், உலக மயமாக்கல் எங்கே போய் முடியப் பார்க்கிறது பாருங்கள்.
**************************************


நண்பர் எழுத்தாளர், இலக்கிய திரைப்பட விமர்சகர் யமுனா ராஜேந்திரனைச் சந்திக்க லண்டனில் அவருடைய கருங்குதிரைத் தெரு இல்லத்துக்குப் போயிருந்தேன்.
ப்ளாக் ஹார்ஸ் ரோட், விக்டோரியா பாதாள ரயில் தடத்தில் இறுதியான புகையிரத நிலையத்துக்கு முந்தியது.

கென்சிங்டனில் இருந்து போய்ச்சேர முக்கால் மணிநேரம் பிடிக்கும் பயணம் மனதில் இன்னும் இருக்கக் காரணம் கையில் கோக்கோ கோலா காகிதக் கப்பும் தோளில் குழந்தையும், இன்னொரு தோளில் லெதர்பையுமாக ரயில்பெட்டியில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த இளம்பெண். திபேத்திய சாயல் தெரியும் முகம். பையிலிருந்த ஐம்பது பென்ஸ் நாணயத்தைக் குவளையில் போட்டுவிட்டு அவளுடன் பேச நினைத்தேன். அவளுக்கு ஆங்கிலம் தெரியாததாலோ அல்லது தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாததாலோ அது முடியாமல் போக, அடுத்த நிறுத்தத்தில், குவளையைத் தோள்பையில் வைத்துக் கொண்டுசாமானிய ரயில் பிரயாணியாக இறங்கி விட்டாள் அவள்.

ராஜேந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது லண்டனுக்கு வரும் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஒரு பொது அபிப்பிராயத்தைச் சொன்னார் - பலரும் அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு வந்து அழைத்துப் போகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இவர்களில் பலருக்கும் ஆங்கிலம் தெரியும்.. ரயிலை, பஸ்ஸைப் பிடித்து வருவது அத்தனை கஷ்டமானதா என்ன? வாயிலே இருக்கு வழி.. அதுவும் இங்கே எல்லா ரயில் நிலையத்திலும் பச்சைக் குழந்தைக்கும் புரியும்படியாக விவரம் எழுதி வைத்திருக்கிறார்கள்.

பல எழுத்தாளர்கள் pamper செய்யப்பட வேண்டும்; அவர்கள் எழுத்தை அடி பணிந்து படிக்க வேண்டும்; பேச்சைத் தொழுதெழுந்து கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பது யமுனாவின் அடுத்த குற்றச்சாட்டு. 'ஆளை விடுங்க சார் .. நான் எழுதினதைப் படிக்கவேண்டும் .. அதைப்பற்றிக் கதைக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறேன் .. எனக்கும் இந்த ஆராதனைக்கும் ரொம்ப தூரம்' என்றேன்.

தமிழ்ப்பதிப்பாளர்கள், புத்தக வணிகர்கள் பற்றியும் யமுனாவுக்கு விமர்சனம் உண்டு.

"ஒரு பவுண்ட் என்பது நம்ம ஊர் மதிப்புக்கு எழுபது ரூபாய். அங்கே இருக்கப்பட்டவர்கள் இங்கே எல்லோரும் லட்சக்கணக்காக சம்பாதித்துக் கொட்டுவதாகவும், அதில் ஒருபகுதி நியாயமாகத் தங்களுக்குப் போய்ச்சேரவேண்டியது என்பது போலவும் எதிர்பார்த்து, வெளிநாட்டில் இருந்து வரவழைத்தால் இஷ்டம் போல் புத்தகத்துக்கு விலை வைப்பது, ஏனோதானோ என்று பார்சல் செய்து அனுப்புவது என்று செயல்படுகிறார்கள்" என்று வருத்தப்பட்டார் அவர். பத்மநாப ஐயரும் கிட்டத்தட்ட இதையே தான் சொன்னார்.

இங்கே இருக்கும் தமிழர்கள் ஒவ்வொரு பவுண்டையும் எத்தனை உழைத்துச் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது என்பதை நான் அறிவேன். அதுவும் லண்டன் போன்ற நகரங்களில் வீட்டு வாடகை, சாப்பாடு, பிரயாணம் என்று செலவிடப்பட வேண்டிய தொகை மற்ற இடங்களோடு ஒப்பிட்டால் மிக அதிகம். அறுபது வயது கடந்தாலும் ஓய்வில்லாமல், ஞாயிற்றுக் கிழமைகளிலும் உழைக்கிற பெரியவர் பத்மநாப ஐயர். நான்கு பெரிய தொகுதிகள் கொண்டு வந்தது மட்டுமில்லாமல், தொடர்ந்து இலக்கியச் சேவைக்காக இப்படிக் கஷ்டப்பட்டு சம்பாதித்த கைக்காசையும், நேரத்தையும் இழக்கச் சிலராவது இருப்பதைப் பற்றியும், அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் இலக்கிய மழை குறித்தும் எத்தனை முறை வேண்டுமானாலும் நான் மனம் நெகிழ்ந்து எழுதத் தயார்.

ஐயரும் யமுனாவும் தெரிவித்த கருத்துக்களை நம்மூர்ப் பதிப்பாளர்களிடமும், நண்பர் எழுத்தாளர் திலீப்குமார் போன்ற நூல் விற்பனையாளர்களிடமும் சேர்ப்பிக்கிறேன் - ஆவன செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன்.
*****************

இங்கிலாந்தில் முடி திருத்துதல் நல்ல லாபம் சம்பாதிக்க வகை செய்யும் தொழிலாக மாறி வருகிறது. முன்னைவிட நிறையப் பெண்கள் இந்தத் தொழிலில் இறங்கி இருக்கிறார்கள்.

தாய்லாந்திலும் அமெரிக்காவிலும் முடிதிருத்தகங்களில் பெண்கள் தான் முழுக்க முழுக்கப் பணிபுரிவதைப் பார்த்திருக்கிறேன். தாய்லாந்தில் பெரும்பாலும் தாய் அழகிகள் அல்லது சீன வனிதைகள். கலிபோர்னியாவில் பிலிப்பைன்ஸ், வியத்னாமியப் பெண்கள்.

ஆனால் இங்கே இங்கிலாந்தில் பிரிட்டீஷ் பெண்களே வாயில் சூயிங்கம்மைக் குதப்பிய்படி ஆண் பெண் வாடிக்கையாளருக்குச் சரமாரியாக வெட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார்க்ள்.

முடிவெட்டும் தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்கு அதிக அளவில் கருச்சிதைவு, கர்ப்பப்பை தொடர்பான துன்பங்கள் ஏற்படுவதாக அண்மையில் ஒரு ஆய்வில் கண்டுபிடித்தாலும் - இவர்கள் சதா கையாளும் முடிக்கு ந்¢றமேற்றும்சாயத்தால் வருவதாம் இது - இவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

பல ஊர்களில் கிளைகள் இருக்கும் ஒரு முடிவெட்டும் ந்¢றுவனத் தலைவருக்கு வாரிசான ஒரே மகள் படுகுஷியாக முடி வெட்டக் கிளம்பியிருக்கிறார் - அப்பா நடத்தும் ஒரு கடையில் வெட்டிப் பழகி தொழில் நுட்பம் தெரிந்தபிறகு. மில்லியன் பவுண்ட் பணம் புரளும் நிறுவனமாக அவருடைய நிர்வாகத்தில் வ்¢ரைவில் வரலாம்.

குறைந்தது ஒண்ணரை பவுண்டிலிருந்து அதிக பட்சம் முப்பது பவுண்ட் வரை கட்டணம். கிட்டத்தட்ட மொட்டை அடித்தது போல் ஒரு தலையலங்காரம் தான் இங்கே ஆண்கள் மத்தியில் பிரபலம். நாற்காலியில் உட்காரும்போதே 'சமத்தோல்லியோ, ஒட்ட வெட்டாதேம்மா' என்று ஸ்டாண்டிங்க் - கட்டிங் - இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்காம்ல் லேப்டாப்பில் ஏதோ வேலையில் மும்முரமாக இருந்து அரை மொட்டையனாக உலவிய அனுபவம் எனக்கு உண்டு.

தமிழ் இலக்கியத்தில் முடிவெட்டுதல் எங்கே எல்லாம் வருகிறது என்று அலசுவது ஒரு சுவாரசியமான காரியம்.

மழித்த்லும் நீட்டலும் வேண்டா என்ற வள்ளுவரை இப்போதைக்கு விட்டுவிடுவோம்.

முடிவெட்டிக் கொள்ளத் தலை கொடுத்தபடி ஒரு ஆசாமி வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கிறார். காளமேகப் புலவர் அந்தப் பக்கம் போயிருக்கிறார். இந்த ஆள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், 'யோவ் காளமேகம் . மன் என்று ஆரம்பித்து மலுக்கு என்று முடியும்படி ஒரு வெண்பா பாடும்' என்று அந்த் வம்புக்காரக்கவிஞரைக் கேட்டிருக்கிறார். லட்டு மாதிரி இப்படி ஒருத்தன் மாட்டிக் கொண்டால் காளமேகம் விடுவாரா?

இந்த ஆள் நீளமாகக் குடுமி வைத்துக் கொள்ளாமல் வெட்டிக் கொள்ளக் காரணம் என்னவென்றால், இவன் வீட்டுப் பெண்டிர் குடுமியைப் பிடித்து இழுத்து ஓங்கி இவன் தலையில் குட்டாமல் இருப்பதற்குத் தான்' என்று பாடி விட்டு அவர் பாட்டுக்கு அடுத்த வசவுக்கு ஆளை எதிர்பார்த்துப் போய்விட்டார். 'மன்னு திருமலைராயன்' என்றுதொடங்கி, 'இழுத்துக் குட்டாமலுக்கு' என்று மன்னில் ஆரம்பித்து மலுக்கில் முடியும் அந்த் வெண்பா.

சி.மணியின் ஒரு புதுக்கவிதையில்

'வேலை வீடு தேடி வரும்
காத்து நிற்கும்'

என்று வாசலில் பெட்டியுடன் பொறுமையாகக் காத்திருந்து நடுவில் ஒரு வினாடி தலை நுழைத்து உள்ளே பார்த்து, உடனே திரும்பி வெளியே ந்¢ற்கிற நாவிதரை, வெட்டி அரட்டையில் ஈடுபட்டிருக்கும் வீட்டுக்காரர் அடுத்த வாரம் வரச் சொல்வார். அதிகம் பேசாமல் மனதை நமநமவென்று பிசையும் கவிதை இது.

ம.அரங்கநாதனின் ஒரு சிறுகதையில் அநாதையான முத்துக்கறுப்பனை (அவர் கதை எல்லாவற்றிலும் கதாநாயகன் பெயர் முத்துக்கறுப்பன் தான்!) அவர் சித்தப்பா முடி வெட்டும் தொழிலாளியிடம் உதவியாளனாகச் சேர்த்து விடுவார். தான் 'மேல்சாதிக் காரர்' ஆனாலும் தன் அண்ணன் மகனனச் சிறுமைப்படுத்துவதாக அவருடைய சின்னத்தனமான எண்ணம். ஆனால் முத்துக்கறுப்பன் வளர்ந்து அந்தக் கடைக்கே அதிபராகி நல்ல நிலைமைக்கு வருவதாகக் கதை வளரும்.

ம.அரங்கநாதனின் 'காடன் மலை' சிறுகதைத் தொகுதி படித்திருக்கிறீர்களா? தமிழ் எழுத்தாளர்களில் அரங்கநாதன் ஒரு திருமூலர்; நம்மாழ்வார். ரத்தினச் சுருக்கமாகக் கதை சொல்வதில் அவருக்கு இணையாக யாசுநாரி காவபாத்தாவைத் தான் சொல்ல வேண்டும். (காவபாத்தா பற்றி எழுதியிருந்தேனே ..)

சார்வாகனின் 'அமர பண்டிதர்' முடி திருத்தும் நண்பர் ஒருவர் கட்டும் கோவில் பற்றியது. அடங்கி ஒலிக்கும் அங்கதம் நிறைந்த குரல் சார்வாகனுடையது. (தொழுநோயைக் குணப்படுத்துவதற்காக, நோய்த் தடுப்புக்காக சமூகத்தில் விளிம்புநிலை மக்களிடையே இடையறாது தொண்டு புரிவதற்காக அரசு விருது பெற்றபிரபல மருத்துவ அறிஞர் சார்வாகன் என்று எத்த்னை பேருக்குத் தெரியுமோ!)

வி.கே மாதவன் குட்டியின் மலையாள நூலான் 'ஓர்மகளுடெ விருந்நு' புத்தகத்தில் இருந்து போன நூற்றாண்டு தொடக்கத்தில் மலையாளக் கிராமத்தில் நிலவிய தலைமுடி அடையாளம் பற்றிய பகுதியை இங்கே நான் மொழி பெயர்த்துக் கொடுத்திருந்தது நினைவு வருகிறது.

பிராமணர்கள் என்றால் குடுமி, நாயர்கள் என்றால் அழகாக வெட்டப்பட்ட க்ராப், ஈழவர் என்றால் தலையில் பப்படத்தைக் கவிழ்த்தது போன்ற பப்படவெட்டு .. நாவிதர் இப்படித்தான் வெட்டியாக வேண்டும். மாதவன்குட்டியின் கிராம நாவிதர் ஒரு புரட்சி செய்து நம்பூதிரிக்குப் பப்படவெட்டும் நாயருக்கு மொட்டையும் போடுவார் -அவர் சுதியேற்றிக் கொண்டு கத்திரி பிடித்ததால் அவரைக் கோவித்துப் பயன் இல்லாமல் போனதாம்!
************************

போன வாரம் இங்கே ·ப்ளாக்பூலில் நடந்த நாட்டை ஆளும் தொழிற்கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்காவில் இருந்து வந்த மாஜி ஜனாதிபதி பில் கிளிண்டன், பிரதமர் டோனி பிளேரோடு ஒரே மேடையில் நின்று இராக்கில் சதாம் உசைனின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம் என்று முழங்கிஇருக்கிறார்.

கிளிண்டனை அமெரிக்காவில் சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை. இங்கே அவர் என்ன, அரசியாரே சொன்னாலும், எதுக்கு இப்போ போர் என்பதே பெருவாரியான மக்களின் எண்ணம்.

கிளிண்டன் இப்படிப் போர் ஆதரவுப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க, இன்னொரு மாஜி அமெரிக்க ஜனாதிபதி நீச்சல் குளத்தில் இலை அள்ளி வெளியே போட்டபடி நாள் முழுக்கச் செலவழிக்கிறார்.

அவர் 91 வயதான ரொனால்ட் ரீகன். பழைய ஹாலிவுட் நடிகரான ரீகன் அல்ஷீமர் நோயால் பீடிக்கப்பட்டு சதா ஏதாவது பிதற்றியபடி வாழ்க்கையின் மிஞ்சிய நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அவர் சீக்கிரமே போய்ச் சேர்ந்தால் கூட நல்லதுதான் என்று அவர் மனைவி (82 வயது) நான்சி கூட நினைக்கிறார் என்றுபடித்தபோது வேதனையாக இருந்தது. நான்சியின் தற்போதைய முழு வேலை ரீகனைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வதுதான். 60 வயது நிரம்பிய அவர்களுடைய மகள் இறந்தது கூட ரீகனுக்கு இன்னும் தெரியாதாம். எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை.

நினைத்துக் கொண்டாற்போல் வீட்டில் நீச்சல் குளத்தில் போய் அங்கே உதிர்ந்து கிடக்கும் இலைகளைப் பொறுக்கித் தரையில் எறிந்து கொண்டிருக்கிறார் ரீகன். அவரை அப்படியாவது தொடர்ந்து இயங்கியபடி வைத்திருக்க, அவர் தரையில் போட்ட இலைகளைப் பொறுக்கி எடுத்துத் திரும்பத் தண்ணீரில் எறிய ஒரு வேலைக்காரர் அவர் கண்ணுக்கு மறைவாக நிற்கிறாராம்.
*********************************************

இந்த வாரம் நான் ரசித்த ஒரு கவிதை - எரிக்கா ஜாங் எழுதியது.

பெண்தான்
------
என் பாட்டியின் பொழுது
ஆப்பிள் கேக் தயாரிப்பதிலும்
தூசி துப்பட்டை நீக்குவதிலும்
துணி துவைப்பதிலும் தைப்பதிலும்
கழிந்து போனது என்பதால்
நான் கிட்டத்தட்ட
வீட்டைக் கவனிப்பதே இல்லை.
என்றாலும் எனக்கு வீடு பிடிக்கும்.
என் வீடு சுத்தமாக இருந்தால்
நன்றாக இருக்கும்தான்.

என் அம்மாவின் நிமிஷங்கள்
வாக்குவம் கிளீனரின் சத்தத்தில் உறிஞ்சப்பட்டதாலும், இயங்காமல் போன
வாஷிங்க் மிஷினோடு
சதா போராடி
அதைச் சரிசெய்ய வருகிறவனை எதிர்பார்த்து
தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு
அவள் காத்திருக்க வேண்டி வந்ததாலும்
நான் என் துணிகளை வெளுக்க
லாண்டரிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

தூசி அடைந்த வீட்டில் வாழ்கிறேன்.
ஆனாலும் எல்லோரையும் போல்
எனக்கும் சுத்தமான வீடுகளைப் பிடிக்கும்.
என் டைப்ரைட்டர் விசைகள் போல
என் விரல்களின் அடியே
பொங்கிப் பொங்கி வர
ரொட்டிக்கு மாவு பிசைய
எனக்கும் பிடிக்கும்.

சலவைத்துணி வாசம்,
கொதிக்கும் குழம்பின் சுகமான வாடை
எல்லாம் எனக்கும் பிடித்தமானவையே.
கிட்டத்தட்ட காகிதம், மசி வாடை போல.
தேர்ந்தெடுக்க எதுமில்லாமல்
இருந்திருக்கக் கூடாதா?
நான் இரண்டு பெண்ணாக
இருந்திருக்கக் கூடாதா?
நாட்கள் இன்னும் நீளமானவையாக
இருக்கக் கூடாதா?
ஆனால் அவை சுருக்கமானவை.

ஆகவே நான் எழுதுகிறேன்.
தூசி அடைந்து கொண்டிருக்கிறது.
நான் என் டைப்ரைட்டர் முன் அமர்ந்து
என் பாட்டியை நினைத்துக் கொள்கிறேன்.
எல்லா அம்மாக்களையும் நினைத்துக் கொள்கிறேன்.
அவர்கள் இழந்த நிமிடங்களையும்.
தம்மை விட அவர்கள் நேசித்த வீடுகளையும்.

நான் நேசிக்கும் இவன்
சமையலறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறான்.
ஏனென்றால் -
இத்தனை நூற்றாண்டுகளுக்கு அப்புறம்
அவனுக்குத் தெரியும்.
என்னைவிட அவனுக்கு
அது சுலபமான காரியம் என்று.

*************************************************

எரிக்கா ஜாங்கின் கவிதை பற்றி போன டயரியில் குறிப்பிட்டிருந்தேன். அமெரிக்காவில் கணவர்களும் ஜாங்கின் கவிதையில் சொன்னபடி வீட்டு வேலையில் உதவுவதாகவும், குழந்தைகளைத் தூக்கி வளர்ப்பதில் மனைவிக்குத் ஆதரவுக் கரம் நீட்டுவதாகவும் தேன்சிட்டு தெரிவித்தார். நன்றி, தேன்சிட்டு (புனைபெயர்?) சிறுமிகளுடன் பேசமாட்டேன் என்று யார் சொன்னது? ஒவ்வொரு கடிதமும் எல்லோருடனும் பேசுவதற்குத் தானே?

இங்கே இங்கிலாந்தில் சோனிக் குழந்தையோ, கழுக் மொழுக்
பாப்பாவோ யாராக இருந்தாலும் ப்ராமில் வைத்துத் தள்ளிக் கொண்டுதான் போகிறார்கள்.

நம்ம ஊரிலும் ப்ராம் நாகரீகம் வந்து - எவ்வளவு நாளாகி விட்டது தெரியுமா?

'கல்கி' 1940-களில் சென்னை தி.நகர் உஸ்மான் தெருவிற்குக் குடிபெயர்ந்தபோது (அப்போதெல்லாம் உஸ்மான் தெருவில் நகைக்கடை, ஜவுளிக்கடை, முமுகிப் போகும் நிதிநிறுவனம் எல்லாம் இல்லையாம்), தினசரி சாயந்திரம் கல்கி தம்பதியர் வாக்கிங்க் போவார்களாம்- அவர்களுடைய பிள்ளையை ப்ராமில் வைத்துத் தள்ளியபடியே.

தற்போதைய கல்கி நிர்வாக ஆசிரியரும் என் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரியவருமான பெரியவர் கி.ராஜேந்திரனை ப்ராமில் உட்கார்ந்து போகும் குழந்தையாக நினைத்துப் பார்க்க எவ்வளவு நினைத்தாலும் முடியவில்லை!!

குழந்தையைத் தூக்கி வளர்ப்பதில் ஒரு சவுகரியம் உண்டு. பிற்காலத்தில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், "உன்னை மார்மேலும் தோள் மேலும் தூக்கி வளர்த்தேனே" என்று டயலாக் விடலாம்.

ப்ராமில் சுமந்து போனால், "உன்னை உருட்டிக் கொண்டு போய் வளர்த்தேனே" என்று சிவாஜிடைப் உருக்கத்தோடு வசனம் பேச முடியாது.
********************************

ஞாயிற்றுக் கிழமை செய்தித்தாள் கொஞ்சம் வித்தியாசமான சமாசாரம். தினத்தந்தியில் 'பின் அப்', ஊர்க்குருவி பதில், சமையல் குறிப்பு. தினமணியில் வசவசவென்று 'தினமணி கதிர்' என்ற பெயரில் ஒரு ஞாயிறு மலர்(அதற்கு இரண்டு வருடத்துக்கு முன் இருந்த தனி அடையாளத்தை ஏனோ தொலைத்துத் தலைமுழுகி விட்டார்கள்). தினமலரில் சினிமா, இலக்கியம் பற்றி கரம் மசாலா தூவல்கள் .

மற்ற நாட்களில் வரும் எட்டுப்பக்கப் பத்திரிகை சரியாகப் பிடித்துக் கொள்ளாவிட்டால் காற்றில் எகிறிக் கொண்டு பறந்து விடும்.ஞாயிற்றுக் கிழமை பத்திரிகை ஒரு முப்பது கிராம் அதிகம் கனம். அதுதான் வித்தியாசம்.

அமெரிக்காவில் ஞாயிற்றுக் கிழமைப் பத்திரிகை சமயத்தில் ஒரு கிலோ கூட வரும் எடையில். பக்கம் பக்கமாக அதில் கால்வாசி தள்ளுபடி விற்பனை விளம்பரம், மீதி வாராந்திர டெலிவிஷன் நிகழ்ச்சி விவரம் என்று வைத்துக் கொண்டாலும்.

நியூயார்க் டைம்ஸின் ஞாயிற்றுக் கிழமை பதிப்பை வீடு வீடாகப் பத்திரிகை வினியோகிப்பவர் தூக்கிப் போட்டதில் மேலே விழுந்து காயம் பட்டதாக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்த ஒருத்தரைப் பற்றிப் படித்த ஞாபகம்.
இங்கிலாந்து செய்தித்தாள்கள் அவற்றின் அமெரிக்க தோஸ்த்களை விடக் கொஞ்சம் சோனி. ஆனால் நம்ம ஊரு ஞாயிறு மலரை விட இருபது மடங்காவது ஊட்டச்சத்தும் புஷ்டியுமானவை.

இதில் செக்ஸை வாரித் தெளித்த பத்திரிகை, ஜாக்கிரதையாக அதைக் கலந்தவை, சுத்த பத்தமானவை என்று பலதும் உண்டு.

நான் பத்திரிகை வாங்கும் பாக்கிஸ்தானிக் கடையில் காது சரியாகக் கேட்காத ஒரு பாட்டியம்மாள் தான் ஞாயிற்றுக்கிழமை காலை கல்லாவில் இருந்து காசு வாங்கிப் போடுவார். கடையை நிர்வகிக்கும் அவருடைய பிள்ளைகள் விடுமுறை என்பதால் வீட்டில் ஹாய்யாகத் தூங்க, பாட்டியம்மாவுக்கு வேலை நெட்டி முறியும்.

பின்னே சும்மாவா? டைம்ஸ் என்று எடுத்தால், ஏழெட்டு செக்ஷன் - தினசரி செய்தி, பிசினஸ், விளையாட்டு, சிறுவர் மலர், பாஷன் சிறப்பிதழ், டிவி நிகழ்ச்சி, இசை, சினிமா, நாடக, டிவிடி விமர்சனம், தொட்டுக் கொள்ளக் கொஞ்சம்போல் இலக்கியம். சமயத்தில் இலவச இணைப்பாக ஒரு சி.டியில் ஏதாவது இசை .. ஒரு பத்திரிகையின் ஒரு பிரதியையே ஒழுங்காக மடித்து வைக்கவே தாவு தீர்ந்து விடும். பல பத்திரிகைகள்.ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான இணைப்புக்கள். பல பிரதிகள்

பாக்கிஸ்தானிப் பாட்டியம்மாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாவிட்டாலும், பத்திரிகைகளை சரியாகப் பிரித்து அடுக்கி ஏழரை மணிக்குத் தயாராக்கி விற்பனைக்கு வைப்பது ஆச்சரியம்.

நான் பார்த்தவரை (என்னையும் சேர்த்து) காலை நேரத்தில் டைம்ஸ் தான் நிறைய அங்கே விற்பனையாகிறது. காளிதாசன், சாண்டில்யன் வர்ணனை அழகிகளின் காற்றோட்டமான படங்களோடு கலர் கலராக கொலு இருக்கும் மற்றப் பத்திரிகைகளைப் பாட்டியம்மா
கல்லாவிலிருந்து நகர்ந்து, வேறு ஆண்பிள்ளைகள் கல்ல்லாவில் உட்கார்ந்தபிறகு வாங்குவார்கள் போல் இருக்கிறது.

ஒரு துண்டு கடுக்காயையோ எதையோ வாயில் போட்டு மென்றபடி, "க்யா பேட்டா, சப் டீக்டாக் ஹை நா?" என்று எல்லா கஸ்டமர்களையும் அன்போடு விசாரிக்கும் அந்தப் பாட்டித்தள்ளைக்கு முன்னால் பமீலா ஆண்டர்சனின் அதிரடியான படம் போட்ட வேறு பத்திரிகையை நீட்டிக் காசு கொடுத்து வாங்க யாருக்கும் மனம் வருவதில்லை என்று தெரிகிறது. பெண்கள், அதுவும் தாய் வயது ஸ்திரிளோடு பேசப் பழக வேண்டியிருக்கும்போது இப்படிக் கொஞ்சம் போல் நாசுக்கைக் கடைப்பிடிக்கிறது இயல்பானது -
இங்கிலாந்து என்றாலும் கூட.

(September 28 - October 5, 2002)

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது