Saturday, November 19, 2005

அந்த பத்து செகண்ட் வலி!

பழைய சினிமாப் படங்களைப் பார்ப்பதில் ஆர்வமுள்ள ஒரு நண்பரோடு சமீபத்தில் என்னையும் அவரையும் விட உத்தேசமாக இருபத்தைந்து வருடம் காலத்தால் முந்திய ஒரு தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்து, ஊஹூம், அததற்கான வார்த்தையைப் போடுவதுதான் கவுரவம். கண்டு களித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கால சினிமா இலக்கணப்படி கொஞ்சம் பூசினாற்போல் கதாநாயகி. இந்தப் "பூசினாற்போல்' என்ற பதம் லாங்க் ஷாட்டில் அரைத்திரையை அடைப்பது, மிட்- லாங்க் ஷாட்டில் முக்கால் திரை மற்றும் குளோசப் ஷாட்டில் முழுத்திரை தாண்டிப் பக்கத்துச் சுவர், தூணை ஆக்கிரமித்துச் கொள்வது வரையான அங்க லாவண்யத்தை உள்ளடக்கிச் சொல்வது. சாத்தனூர் அணைக்கட்டில் சிரமம் பார்க்காமல் படிகளில் ஏறி இறங்கி, ஓடியாடிப் பாடிக்கொண்டிருக்கிறார் அந்தப் பெண்மணி. அணையின் மதகுகளில் தண்ணீர், பாட்டின் இசைக்குத் தோதாகக் குதித்து கதாநாயகியோடு நடைபோடுகிறது. கர்நாடக சர்க்கார் தகராறு பண்ணாமல் காவிரி ஆற்று நீரைத் திறந்துவிட்டிருந்த காலம் என்பதால் வெள்ளப் பெருக்கும் கதாநாயகி போலவே அகல, நீளத்தால் என் கண்ணே பட்டுவிடும்படி இருக்கிறது.

""எம்புட்டு அழகா இருக்காங்க பாரு''. முப்பது வினாடிக்கு ஒரு முறை என் ஒல்லிப் பிச்சு நண்பர் ஆரோக்கியமான கதாநாயகியின் அழகை உரக்கச் சிலாகிக்கிறார். அந்த செüந்தர்ய உபாசகருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து வேர்க்கடலை கொறித்துக்கொண்டு நானும் கதாநாயகியைத்தான் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் பார்வை பதிந்திருந்தது அந்தம்மா தோளில். தோள் கண்டவன் தோளே கண்டு மலைத்திருக்கக் காரணம், அல்ப விஷயமான அழகு இல்லை. அழகு இன்றைக்கு வரும், நாளைக்குப் போகும். அடுத்த வாரம் ப்யூட்டி பார்லருக்குப் போனால் அடுத்த இண்ஸ்டால்மெண்டாகத் திரும்பி வரும். என் கவனிப்பு வேறே மாதிரி. கதாநாயகியின் இடது புஜத்தில் குட்டைக்கை ரவிக்கை முடிகிற இடத்தில் இரண்டு வட்டங்கள், எந்த அழகு சாதனமும் அழிக்க முடியாமல் காலத்தின் கல்வெட்டாக அந்த மென்-கம்-திண் தோளில் இருந்த அம்மை குத்திய தழும்புகளைத்தான் என் பார்வை வருடிக்கொண்டிருந்தது.

உலக அழகிப் போட்டிக்கு மனுப்போடும் நங்கை முதல் உள்ளூர் பஞ்சாயத்து போர்ட் மாஜி உறுப்பினர் வரை, நூறு ஏக்கர் காவேரிப் பாசனம் நஞ்சை மிட்டா மிராசு தொடங்கி வானம் பார்த்த சீமை விவசாயி வரை, சாமியார் முதல் அவருக்குப் பூர்வ ஜன்ம மாமியார், பேர்பாடியான சகலபாடி முடிய எல்லோர் தோளிலும் சோஷலிச அடையாளமாக ஏறி அந்தக் காலத்தில் பவனி வந்தது அம்மைத் தழும்புதான்.

இந்த அம்மை குத்துவது சாதாரணப்பட்ட காரியமா என்ன? டர்டர் என்று டீசல் மூச்சு விட்டுக்கொண்டு ஏகப்பட்ட புகையைக் கக்கிக் கொண்டு ஆரம்ப சுகாதார மையமோ வேறே ஏதோ அனுப்பிய, சர்க்கார் கோபுரம் படம் போட்ட ஜீப் முதலில் வரும். ஊர்க் கோடிக்கு வரும்போதே அது உத்தரவாதமாக நின்று போய்விடும். மாயழகு டீக்கடையில் டீக் குடித்துக் கொண்டிருக்கும், குடித்து முடித்து வாயில் புகையும் உறையூர்ச் சுருட்டோடு கண்மாய்க்கரைப் பக்கம் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கிக் கொண்டிருக்கும் பெரிசுகள், சும்மா வேலை வெட்டி இல்லாமல் அங்கே இங்கே திரிந்து கொண்டிருக்கும் இளவட்டம், நண்டு சிண்டுகள் ஜீப்பைத் தள்ள ஒரு கை கொடுக்க வருவார்கள். இந்தச் சமூக நல ஆர்வலர்கள்தான் ஜீப்புக்குள் ஒரு லுக் விட்டு உள்ளே இருப்பவர்கள் யார், அவர்கள் கொண்டு வந்திருக்கும் சாதனங்கள் எத்தகையவை என்று வினாடி நேரப் பரிசோதனை நடத்துவார்கள்.

"" அம்மை குத்தறவக வந்திருக்காக அப்பூ'' இந்தக் குரல் எதாவது ஒரு தொண்டையிலிருந்து உயர்ந்தவுடன் தெருவில் ஒரு பரபரப்பு. அந்தக் காலத் தேசிய விரோதி சீனாக்காரனோ, திண்ணைப் பெரிசுகள் இருமலுக்கு நடுவே பழைய புராணம் சொல்லும்போது அடிக்கடி அவர்கள் வாயிலிருந்து விழும் எம்டன் குண்டோ ஊரில் கணிசமான சேதம் விளைவித்தது போல் தோன்றும் அந்தச் சூழ்நிலை. நாலு குடும்பத்தில் வாசல் கதவைப் பூட்டிக்கொண்டு அடுத்த ஊருக்குக் குழந்தை குட்டியோடு பஸ்ûஸப் பிடிக்க ஓடுவார்கள். இன்னும் நாலு வீட்டில் அம்மைப்பாலை அழிக்க சாணம், அரைத்த வேப்பிலை போன்ற சாதனங்களைச் சேகரித்துக் கொல்லையில் வைப்பார்கள். இந்தப் பயந்தாங்கொள்ளிகளுக்கு இன்ஸ்டண்ட் காப்பி மாதிரி உடனடி அறிவு போதித்து அவர்களை இன்முகத்தோடு அம்மை குத்திக்கொள்ள வைக்க பள்ளிக்கூட ஆசிரியர்களும், அவர்களிடத்தில் படிக்கிற மழலைப் பட்டாளமும் தயார் நிலையில் இருத்தப்படுவார்கள்.

அம்மை இன்ஸ்பெக்டர் ஒருத்தர் கெத்தாக ஜீப்பில் இருந்து இறங்கி, தெரு ஓரமாக நாற்காலி போட்டு உட்கார்வார். பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் வீட்டிலிருந்துதான் இந்த நாற்காலி, சபைக்கு அதன் நிரந்தர வாசிகளான ஆயிரத்துச் சில்லரை மூட்டைப் பூச்சிகளோடு தூக்கி வரப்படும். நாற்காலியில் நெளிந்தபடியே ஒரு சாணித்தாள் பைலைத் திறந்து அம்மை அதிகாரி தெரு ஜனத்தொகையைக் கணக்கெடுப்பார். நாலைந்து ராஜாங்க சேவகர்கள் வீடு வீடாகப் படியேறி "அய்யா வந்திருக்காக. அம்மை குத்திட்டுப் போங்க' என்று சுற்றமும் நட்பும் சூழ வரச்சொல்லி வரவேற்றுக் கொண்டிருக்க, இன்னும் இரண்டு பேர் ஒரு முக்காலி மேல் மண்ணெண்ணெய் ஸ்டவ்வை வைத்து ஏற்றிக் கொண்டிருப்பார்கள். வழக்கப்போல் அதில் மண்ணெண்ணெய் தீர்ந்துபோய் புகைவாடை வரும். இப்போதும் ஹெட்மாஸ்டர் வீட்டிலிருந்துதான் தேங்காய்நார் அடைத்த பச்சை போத்தலில் எண்ணெய் வந்து சேரும். அம்மைக்குத்து எதிர்ப்பாளர்களுக்கு சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் முதல் விரோதிகளாகவும், ஹெட்மாஸ்டர் மற்றும் பள்ளிக்கூடப் போர்ப்படை இரண்டாம் பட்சத் துரோகிகளாகவும் தென்படுவது இப்போதுதான்.

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் பல் சக்கரம் போன்ற அமைப்போடு கூடிய நீள நீளக் குழாய்களைக் கொதிக்க விடுவதைக் கொஞ்சம் பயத்தோடு பார்க்கும் பிள்ளைகளுக்கு புன்சிரிப்பால் அபயம் அருளும் பள்ளிக்கூட வாத்தியார்கள் தான் முதன்முதலாக அம்மை குத்திக்கொள்ள கை நீட்டுவார்கள். பெண்களுக்கு அம்மை குத்திவிட கட்டாயம் ஒரு அம்மையார் ஜீப்பில் வந்து இறங்கி, செய்தித்தாளை மடித்து விசிறியபடி உட்கார்ந்திருப்பார். எல்லா தெய்வங்களையும் பிரார்த்தித்தபடி, அரைக்கண்ணை ஜாக்கிரதையாக மூடிக்கொண்டு இடது கையை நீட்டினால், ஆஸ்பத்திரி வாசனை மணக்கும் பஞ்சை வைத்து நீர்க்க நீர்க்க ஒரு தடவல். அப்புறம் அந்த வினோதக் கருவியைக் கைமேல் வைத்து ஒரு சுழற்றுச் சுழற்றி வெளியே எடுக்க, உச்சந்தலைக்குள் வலி. சதையில் பதிந்து வெளியே வந்த கருவி பட்ட கையிலேயே கொஞ்சம் கீழே இன்னொரு தடவை குடைய கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வரும்.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அந்தப் பத்து செகண்ட் வலி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இப்படி உட்கார்ந்து பழைய சினிமா பற்றி எழுதிக்கொண்டிருக்க மாட்டேன். கையழகியான கதாநாயகியும் நானும் இன்னும் இந்த நாட்டில் பலரும் பெரியம்மையில் போய்ச் சேர்ந்திருப்போம். தழும்பே உனக்கு நன்றி.

(Dinamnai Kadhir - 'Satre Nakuka' - Oct 05)

Sunday, November 13, 2005

எடின்பரோ குறிப்புகள் - 2

பிரதமர் டோனி பிளேய்ர் அவருடைய ஆட்சிக்காலத்திலே முதல் தடவையாக பிரிட்டீஷ் காமன்ஸ் அவையான நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். தீவிரவாதத்துக்காகக் கைது செய்யப்பட்டவர்களைக் காரணம் காட்டாமல் ஆறு மாதகாலம் காவலில் வைக்க வழிசெய்ய அரசாங்கம் கொண்டு வந்த மசோதா தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

எலிசபெத் மகாராணியை ‘முதல் இஸ்லாமிய விரோதி’ என்று அல் க்வய்தா அறிவித்தது, பிரான்சில் இரண்டாம் தரக் குடிமக்களான சிறுபான்மையினரின் கலவரம் பதினேழு நாளாகத் தொடர்வது என்று காரணங்களை அடுக்கி மசோதாவைச் சட்டமாக்க மீண்டும் அவர் முயற்சி செய்யலாம்.

பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேனல்களும் ப்ளேயரின் தோல்வியைப் பற்றி விரிவாக விவாதிக்க, ஸ்காட்லாந்தில் யாரும் அதையெல்லாம் குறித்துக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. குளிர்காலம் இன்னும் வராமல் போக்குக் காட்டிக்கொண்டிருப்பது தான் பொதுவான பேச்சு விஷயமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு ஏழு டிகிரி செல்சியஸ், அடுத்த நாள் நல்ல மழை, மூன்றாம் நாள் சூறாவளிக் காற்று, நாலாம் நாள் பளிச்சென்று இளம் வெய்யில் என்று காலநிலை குஷியாக மாறிக்கொண்டிருக்கிறதில் இருக்கிற சுவாரசியத்தைப் பலரும் கண்டுகொள்வதில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.

கில்மோர் தெருவில் பச்சை மிளகாய், படேகர் ஊறுகாய், இந்தி, உருது சினிமா காசெட் மற்றும் பலசரக்கு விற்கும் கடை வைத்திருக்கும் பாகிஸ்தானி நண்பர் உருளைக் கிழங்கு போண்டாவையும் சமோசாவையும் எனக்காக மைக்ரொ அவனில் சூடு படுத்திக்கொண்டே பிளேய்ர், புஷ் மற்றும் உலக அரசியல் தலைவர்களை வன்மையாகக் கண்டிக்கிறார். பாகிஸ்தான் பூகம்ப நிவாரணத்துக்கு உதவி செய்யாமல் இந்த கனவான்கள் கையை இழுத்துக் கொண்டதால் லட்சக் கணக்கில் அங்கே மக்கள் இன்னும் இறப்பது உறுதி என்கிறார் அவர். கடை உண்டியலில் ஒரு பவுண்ட் போட்டு அவர் மன்மோகன்சிங்கைத் திட்டுவதை இப்போதைக்கு நிறுத்தி வைத்தேன்.

டால்ரி தெருவை ஒட்டி கால்டேனியன் தெருவில் அறுநூறு பவுண்ட் வாடகைக்கு வீடு பார்த்தேன். ‘அங்கேயா? போதை மாத்திரை உபயோகிக்கிறவர்கள் நிறைய உண்டேப்பா. டால்ரி தெருவுக்குத் தெற்கே தோப்புத் தெருவில் வீடு ஏகத்துக்குக் கிடைக்குது. போய்ப்பாரு’ என்றார் டாக்சி டிரைவர். கால்டேனியன் தெருவுக்கும் குரோவ் தெருவுக்கும் நடுவே நூறு மீட்டர் கூடத் தொலைவு இருக்காது. டிரக் அடிக்டுகள் எந்த சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நூறு அடி தாண்டி இந்தாண்டை வருவதில்லை என்பது புரியவில்லை.

எடின்பரோ தெருக்களில் சுமார் பரபரப்பு போக்குவரத்துக்கு நடுவில் டிராபிக் சிக்னலைத் துச்சமாக மதித்து மக்கள் இஷ்டத்துக்குக் குறுக்கும் நெடுக்கும் சாலையைக் கடப்பது நம்ம ஊர் மாதிரித்தான் இருக்கிறது. நேற்று நாலு ஒட்டடைக் குச்சி இளைஞர்கள் சைக்கிளை ஓட்டிக்கொண்டு பிரின்சஸ் தெருவில் குறுக்கே பாய, ப்ரேக் பிடித்து நிறுத்திய பஸ் டிரைவர் சத்தம் இல்லாமல் சாவு கிராக்கி என்று ஆங்கிலத்தில் சொன்னது பஸ் கண்ணாடி தாண்டி எனக்கு அர்த்தமானது.

லோத்தியன் தெரு சினிமா தியேட்டர்களில் இங்கிலீஷ் சினிமா பார்க்க வரும் கூட்டம் பாதிக்கு மேல் சீனர்கள் தான். ரோமன் போலன்ஸ்கியின் புதுப்படமான ‘ஆலிவர் ட்விஸ்ட்’ போஸ்டரைப் பார்த்து ஓடியன் தியேட்டரில் நுழைய படம் தியேட்டரை விட்டுப் போயாச்சாம். ‘மிசஸ் ஹெண்டர்சன் பிரசண்ட்ஸ்” படம் பரபரப்பாக எதிர்பார்க்கப் படுகிறது. 1930-களில் தொடங்கி, இரண்டாம் உலக யுத்தம் முடிந்து அப்புறமும் லண்டனில் தொடர்ந்த முழு நிர்வாண நாடகத்தின் திரைப்பதிப்பு இது. ‘நக்னமான பெண் உடலைக் காண் வாய்ப்புக் கிடைக்காமல் யுத்தத்தில் எத்தனையோ இளைஞர்கள் இறந்து போகிறார்களே’ என்று வருந்தி அவர்களுக்காகத் தினசரி நடத்தப்பட்டதாம் இந்த நாடகம். அந்தக் காலத்தில் கடுமையாக இருந்த சென்சார்கள் கூட, ‘நிர்வாணமாக ஆடினால்தான் குற்றம். அப்படியே அசையாமல் நின்றால் ஆட்சேபம் இல்லை’ என்று சொல்லிவிட்டதால் இந்த நாடகத்தில் அசையாப் பாத்திரங்கள் தான் அதிகம் என்று தெரிகிறது. படம் பார்த்துவிட்டு மீதியைச் சொல்கிறேன்.

எடின்ப்ரோ கோட்டை வரை போகும் லோத்தியன் தெருவில் நிறைய நாடகக் கொட்டகைகளும் உண்டு. அடுத்த மாதம் ‘நட் கிராக்கர்’ போன்ற ராயல் பர்மிங்ஹாம் ஆபரா இசைநாடகங்கள் வருவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு நேர் எதிர் கிங் தியேட்டரில் ஷேக்ஸ்பியரின் ‘ட்வல்ஃத் நைட்’ பார்க்க என்னமோ சுவாரசியம் இல்லை. கல்லூரியில் எந்தக் காலத்திலோ கரைத்துப் போட்டிய ட்வல்ஃத் நைட்டே இன்னும் முழுக்க சீரணமாகாமல் எதுக்களிக்கிறது.

லோத்தியன் தெருவில் ‘1853ம் வருடம் முதல் நடக்கும்’ வர்த்தக நிறுவனங்களில் என் கவனத்தை ஈர்த்தது சவ அடக்கம் நடத்த ஏற்பாடு செய்யும் அண்டர்டேக்கர் கடை. கடை ஜன்னலில் கலர் கலராக விளம்பரப் புத்தகங்கள். ‘நாலு தினுசான சவ அடக்கத் திட்டங்கள், ‘கல்லறை எழுப்ப எட்டு அழகான அமைப்புகள், ‘சவ அடக்கத்துக்கான சேமிப்புத் திட்டம்’, ‘லிமோசின் டாக்சியில், சீருடை அணிந்த டிரைவர் ஓட்டிப் போகும் சொகுசு வசதி’ என்று ஆசை காட்டி அழைக்கின்றன இவை. இதில் என் ஓட்டு ‘நாளைய சவ அடக்கம் இன்றைய கட்டணத்தில்’ (Tomorrow’s funeral at today’s rates’) விளம்பரத்துக்குத்தான். அரை இருட்டில் மிதந்த கடைக்குள் எட்டிப் பார்த்தேன். இரண்டு சவப் பெட்டிகளுக்கு நடுவே, சின்னக் கண்ணாடியை முகத்துக்கு நேரே பிடித்து உதட்டில் லிப்ஸ்டிக்கை சரிப்படுத்திக் கொண்டு நின்ற இளம்பெண் மனதை விட்டுப் போகமாட்டேன் என்று இன்னும் அங்கேயே நிற்கிறாள்.

எடின்ப்ரோ கோட்டையில் எட்டு மணி நேரம் சுற்றிவந்ததை அடுத்த வாரம் தான் எழுத வேண்டும்.

புத்தக வாடை

சமீபத்தில், 1921-ம் வருட டயரி ஒன்று கிடைத்தது. பரண் உபயம்தான். வக்žல் குமாஸ்தாவாக இருந்த இரண்டு தலைமுறைக்கு முந்திய உறவுக்காரருடையது அது. இண்டு இடுக்கு விடாமல் வாய்தா, வக்காலத்து நாமா , சிரஸ்ததார் பெண் கல்யாணத்துக்குப் போனது, முன்சீப் கோர்ட் கிளார்க் அம்மா சிவலோக பதவி அடைந்தது என்று கலந்து கட்டியாகப் பதிவு செய்து வைத்திருந்த டைரியில் அந்தக் கால தஞ்சாவூர் அத்தர்க்கடை விளம்பரமும் கண்ணில் பட்டது. "நானாவித பரிமள கந்தங்களும், இங்கிலீஷ் தேச வாசனா திரவியங்களும் ' சகாய விலைக்குக் கிடைக்கும் கடையாம்.

அத்தர்க் கடை விளம்பரத்தின் அடியில் செண்ட் பாட்டில் விலைப்பட்டியல் கமகமவென்று ரூபாய் அணா பைசா வாசனை அடித்தது. அதையும் தாண்டி இன்னொரு அற்புதமான வாசனை அந்தப் பழைய டயரியிலிருந்து கிளம்பி மூக்கைத் துளைத்தது. எத்தனை முகர்ந்தாலும் போதும் என்று தோன்றாத பழைய புத்தக வாடைதான் அது.

இந்த வாடைக்கு ஆட்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டதாகச் சரித்திரமே இல்லை . பத்திரிகை ஆசிரியரான என் நண்பர் ஒருவர் ஞாயிற்றுக் கிழமை வந்தால் ஜோல்னாப் பையும், கையில் பிரம்புமாகக் கிளம்பி விடுவார்.

""ஆனைக்கவுனியிலே ஒரு பழைய வீட்டை வாங்கி இடிச்சுக் கட்டறாங்கப்பா. அங்கே மர்ரே ராஜம் கம்பராமாயணம் செட், மராட்டி மோடி ஆவணத் தொகுப்பு , ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு வெரி ஃபர்ஸ்ட் எடிஷன் எல்லாம் இருக்காம்'' என்று நடந்தபடிக்கே தகவல் அறிவித்தபடி விரைவார்.

ஆனைக்கவுனி பழைய புத்தக வாடை எல்லாம் எப்படி இவருடைய குரோம்பேட்டை மூக்குக்கு எட்டுகிறது என்பதைப் பற்றி ஆச்சரியப்படுவதை நான் šறுத்தியாகிவிட்டது. ஆனாலும் புத்தகப் பிரியருக்குக் கையில் எதுக்கு அந்தக்காலப் பள்ளிக்கூட வாத்தியார் மாதிரி பிரம்பு? மனுஷர் பின்னால் லொங்கு லொங்கு என்று ஓடி ஜோல்னாப் பையைப் பிடித்திழுத்துக் கேட்ட போது கிடைத்த பதில்.

""என்னப்பா விஷயம் புரியாதவனாக இருக்கே, பழைய புத்தக வாடைக்கு நாம மட்டுமில்லே, எங்கே எங்கேன்னு பூரான் , தேள், பல்லி எல்லாம் புத்தக அலமாரியிலே குடியும் குடித்தனமுமா இருக்கும். பிரம்பாலே புத்தகத்தைச் செல்லமா ரெண்டு தட்டு தட்டினா அதெல்லாம் வெளியே ஓடிடும். அப்புறம் நம்ம ராஜ்யம்தான்''.

இவர் டன் கணக்கில் இப்படிப் பழைய புத்தகம் வாங்கி வந்து சகதர்மிணி கண்ணுக்கு மறைவாக அவற்றை நைசாக வீட்டுக்குள் கடத்தும் டெக்னிக் பற்றி தனியாக ஒரு அத்தியாயமே எழுத வேண்டும்.

மற்ற கிறுக்கு மாதிரி இந்த எழுத்து வாசனை சாமாசாரமும் எனக்குப் பள்ளிக்கூட நாட்களில்தான் பிடித்தது. ஊரில் மேற்குப் பார்த்து உடைய சேர்வார் ஊருணிக் கரை சரசரவென்று இறங்கும் பாதை. பெடலே போடாமல் சைக்கிளை கனகுஷியாக இறக்கினால் உயரமான தூணும், வரிசையாக கண்ணாடி ஜன்னலும், அழகான வாசல் கதவுமாக கோகலே ஹால். பாடப் புத்தகத்தில் தலை மட்டும் அச்சிடப்பட்டுப் பார்த்துப் பழக்கமான தேசபக்தர் கோபால கிருஷ்ண கோகலேயின் முழு உருவப்படம் வைத்த கட்டடம். வெளியே கோந்து பாட்டில் கவிழ்த்த மரமேஜை, அதன் மேலே நீளவாக்கில் பேரேடு. மேஜைக் காலில் சணல் கயறு கட்டித் தூக்கு மாட்டிய ஒரு புழுக்கைப் பென்சில். பேரேட்டையும் பென்சிலையும் அப்படி இப்படி நகர்த்தி ஒரே மட்டத்தில் கொண்டு வந்து, பெயரை எழுதிக் கையெழுத்தைப் போட்டுவிட்டு உள்ளே நூழைந்தால் வரிசை வரிசையாக மர அலமாரி.

அதிலெல்லாம் னிரம்பி வழிந்து, தரையிலும் அங்கங்கே குவிந்து கிடக்கும் புத்தகங்கள். பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு சீருடை அŠவித்த மாதிரி எல்லாப் புத்தகமும் ஒரே மாதிரி பைண்ட் செய்து சாம்பல் கலரில் மேல்சட்டை போட்டு இருக்கும். தேக்கு மர பெஞ்சுகளில் ஆரோகணித்து, பைண்ட் புத்தகத்தை விரித்து வைத்துப் படித்தபடி சில ஆத்மாக்கள். பெஞ்ச் கடைசியில் "ஆசு நகர மந்திரவாதி"" புத்தகத்தில் முழுகி கண்ணை இடுக்கிக் கொண்டு படித்துக் கொண்டிருக்கும் டிரவுசர் போட்ட சோனிப் பையன் தான் இதை எழுதிக் கொண்டிருப்பவன்.

எல்லா அலமாரியிலும் கீழ் வரிசைகளில் என் கைக்கு எட்டும் உயரத்தில் தேவதைகள், ஏழு கடலுக்கு அப்பால் தங்கக் கிளியைத் தேடிப் போகும் ராஜகுமாரர்கள், துப்பறியும் சங்கர்லால், கட்டு மஸ்தான முகமூடி, குள்ளக் கத்தரிக்காய் ஆஸ்ட்ரிக்ஸ், அவனுடைய பீப்பாய் சைஸ் நண்பன் ஒபீலிக்ஸ், விக்கிரமாதித்தன், வேதாளம் என்று மனதுக்குப் பிரியமானவர்கள் நான் தொட்டு எடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். எல்லாப் புத்தகமும் கம்மென்று ஓர் அற்புதமான அதாவது பழைய காகித மற்றும் கோந்துப் பசை, அந்துருண்டை வாசனையோடு என்னை எடு என்னை எடு என்று அழைக்கும்.

அலமாரிகள் மேல் வரிசை புத்தகங்கள் கைக்கு எட்டாதது மட்டுமில்லை, சின்னப் பையன்கள் படிக்க வேண்டாதவை என்று லைபிரேரியனோ வேறு பெரியவர்களோ முடிவு செய்தவை. அவற்றை அனாயாசமாக எடுத்து ஏதோ படித்து அப்புறம் மேஜையில் விட்டுப் போவார்கள் அதே போன்ற பெரியவர்கள்.

மலைபடுகடாம், சேக்ஷ்பியர் நாடகம், காளிதாசனின் சாகுந்தலம் மொழிபெயர்ப்பு என்று புரட்டிப்பார்த்தால் தலைப்பு தட்டுப்படும்.
இப்படித்தான் ஒரு தடவை கையில் கிடைத்தது "ஆயிரத்தொரு இரவு அரபுக் கதைகள்'. அதை எடுத்துக் கொண்டு நாலு அடி பெஞ்ச் பக்கம் நடப்பதற்குள் நூலகர் அவசரமாக என் கையிலிருந்து பறித்து அலமாரியில் வைத்துவிட்டார். "நீயும் வேட்டி கட்டற காலத்துலே படிச்சுக்கலாம்டா பையா' என்றபடி நகர்ந்தார் அவர். நூலகத்துக்கு உள்ளேயே அந்த அலமாரிப் பக்கம் நாற்காலி போட்டு உட்கார்ந்து சாயந்திர டிபனாக ஆனந்த பவான் மசாலா தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் வேலை மெனக்கெட்டு எழுந்து வந்து இப்படி என்னைத் தடுத்தாட்கொண்டார்.

அந்த šமிடம் அந்தப் பழைய் புத்தக வாசனையோடு அவருடைய கையில் மசாலாதோசை மணமும் சேர்த்து அடித்தது. பிற்காலத்தில் எத்தனையோ முறை அரபுக்கதைகளின் மாயாலோகத்தில் அமிழ்ந்திருக்கிறேன். ஆனாலும், "ஆயிரத்தொரு இரவுகள்' என்று எங்கே புத்தகத்தைப் பார்த்தாலும் உள்மூக்கில் மசாலா தோசை வாடை தூக்கலாக அடித்துக்கொண்டே இருக்கிறது.

லைபிரரி புத்தக வாடை இப்படி என்றால் வாரச் சந்தை கூடும்போது இன்னொரு விதமான புத்தக வாசனை. பலாச்சுளை, வெள்ளரிக்காய், மாம்பழக் கடைகளுக்குப் பக்கம் மூலிகை மருந்து விற்கிற இரண்டு தாடிக்கார முதியவர்கள் கடைபரத்தி šற்பார்கள். மருந்துக் குப்பி வாடைக்கு நடுவே பழைய அல்லி அரசாணிமாலை, தேசிங்கு ராஜன் கதை பெரிய எழுத்து புத்தகம் நாலைந்து அடுக்கி இருக்கும். அதில் ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்து, ராகம் போட்டு, "மட்டக் குதிரை ஏறிப் போனான் ராஜா தேசிங்கு' என்று ஒரே குரலில் இருவரும் பாடும்போது அவர்களின் நீண்ட தாடி ஒரே நேரத்தில் எழுந்து தாழ்வது பார்க்கப் படு சுவாராசியமாக இருக்கும். அந்தப் பெரிய எழுத்துப் புத்தகங்களை வாங்காமல் போனது பற்றி இன்னும் வருத்தம்தான்.

ஊரில் திருவிழா வந்தால், சோவியத் புத்தகக் கடை போடுவார்கள். மிர் பதிப்பகம் வெளியிட்ட அந்தப் புத்தகங்கள் தொட்டால் வழவழ என்று நேர்த்தியான காகிதத்தில், ஒரு தனி ரஷ்ய வாசனையோடு வரும். விலையும் கொள்ளை மலிவுதான். அங்கே தான் சிவப்புத் துண்டு போட்ட ஓர் அண்ணாச்சி அழகான ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

யா.பெரல்மான் எழுதிய "பொழுதுபோக்கு பெüதிகம்' என்ற அப்புத்தகத்தையும், கூடவே இனாமாகக் கிட்டிய வேரா பனோவா எழுதிய "செர்யோஷா' என்ற சின்ன நாவலையும் ரஷ்ய வாசனைக்கும் எல்லாவற்றுக்கும் மேலான் உயர்தரமான எழுத்து வாசனைக்குமாக எப்போதும் னினைவு வைத்திருப்பேன். சிவப்புத் துண்டைத் தோளில் போட்டிருந்த அந்த அண்ணாச்சியையும்தான்.

(Dinamani Kadhir - Satre Nakuka - Oct 05)

மீண்டும்...

மீண்டும்...

(சிறுகதை)


உன்னிகிருஷ்ணன்

உன்னிகிருஷ்ணன் நம்பூத்ரி. உன்னிகிருஷ்ணன் நாயர். உன்னிகிருஷ்ணன் ஜாதியில்லை. உன்னிகிருஷ்ணன் தெய்வம். உன்னிகிருஷ்ணன் பசு. உன்னிகிருஷ்ணன் சிசு. உன்னிகிருஷ்ணன் இளைஞன். உன்னிகிருஷ்ணன் கிழவன். உன்னிகிருஷ்ணன் ரயிலில் போகிறவன்.

மூணாம் வகுப்பில் இடித்துப் புடைத்து ஏறி, இடுங்கி உட்கார்ந்து கொண்டு. ராத்திரியானாலும் குறையாத கூட்டம். நெருக்கித் தள்ளுகிறார்கள். காற்று ஒழிந்த அரையிருட்டில் அடர்த்தியாக நின்று கெட்ட வாடையடிக்க வசவு உதிர்க்கிறார்கள். அதில் யாராவது எந்த நேரத்திலும் மூட்டை முடிச்சை வெளியே தூக்கி எறியலாம். எந்த நிமிடத்திலும் வெளியே பிடித்துத் தள்ளலாம். ரயில் பாதையில் விழுந்து மோசமாகக் காயமடைந்து காலஞ்சென்ற உன்னிகிருஷ்ணன்.

"எண்பது வயது மதிக்கத் தக்க முதியவரின் உடல் பழைய ரயில் நிலையத்தில்...'

பத்திரிகையை மடக்கி வைத்தார் உன்னிகிருஷ்ணன். எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று பிரியமாகக் கலந்து இருட்டுப் பொதியைக் கண்ணிலும் கையில் பிடித்த தாளிலும் அப்பிப் போகிறபோது விஷமமாகக் கூக்குரலெடுத்து ரயிலோடு கூவுகின்றன.

ரயில் ஆலத்தூர் போய்ச் சேர இன்னும் ஏழெட்டு மணியாவது பாக்கி இருக்கிறது. அதாவது நடுவில் எங்கும் அசம்பாவிதம் ஏற்படாமல், எதிரில் வரும் வண்டிக்கெல்லாம் வழிவிட்டு, வழிபட்டு நிற்காமல், யந்திரக் கோளாறோ, பாதையில் பழுதோ இல்லாமல், இதே வேகத்தில் போய்க்கொண்டிருந்தால், நாளை விடியும்போது ஆலத்தூர். அப்புறம் பரிசலில் அரை மணி போலப் பயணம் வைத்தால் அம்பலத்தூர். தெப்பக்குளம், பாசி வழுக்கும் படிகள். தண்ணீரில் தர்ப்பை மிதக்கும். தலை முழுகணும். எதை? ஈர உடுப்பு உலர்த்தணும். அப்புறம் கோவில்.

ஸ்ரீபலிக்கு ஏற்பாடு செய்ய நடை அடைத்து இருக்கும். மாரார் எடக்க வாத்தியம் வாசித்தபடி சோபான சங்கீதம் பாடுவார். "எப்ப வந்தே? பயணம் எல்லாம் எப்படி? இன்னும் ஓட்டல் அடுப்படியிலேதான் வெந்துட்டிருக்கியா?'. அவர் குரல் விசாரிக்கும். வாத்தியம் அவர் கைத்தண்டையில் பிரி முறுக்கியும் தளர்ந்தும் உயிர் கொண்டு எழுந்து, "அவன் கிட்டே என்ன பேச்சுடா மாரானே.... நடைப் பொணமா வந்திருக்கான் கிழவன். சவத்தைத் தள்ளிட்டு என்னைக் கவனி' என்று தன்னைத் தாளமும் இசையுமாகக் கரைத்துக் கரைத்து ஒன்றுமில்லாமல் போக அலைபாயும். நடை திறக்கப் போகிறது.

"கண்ணா, நடை திறக்கப் போறது. பகவான்கிட்ட வேண்டிக்கோ. நல்லாப் படிச்சு முன்னுக்கு வரணும். இந்தக் கரண்டி உத்தியோகம் என்னோட போகட்டும்'.

படிவாசல் கடந்து கோவிலுக்குள் போனது நேற்றைக்கா அல்லது நாற்பத்தைந்து வருடம் முன்பா? கூட நடந்த கல்யாணி, கையைப் பிடித்துக் கொண்டு குதியாட்டம் போட்டபடி வந்த கண்ணன். அடுத்த ஸ்டேஷனில் இருப்பார்களா, பிளாஸ்கில் காப்பியும், பூக்கூடை எடுத்துப்போக குதிரை வண்டியுமாக எதிர்பார்த்துக் கொண்டு?'.

"அம்மா, தூக்கிக்கோ', கண்ணன் சிணுங்குகிறான்.

"கல்யாணி, கண்ணனைத் தூக்கி இடுப்பிலே வச்சுக்கோ. கூட்டம் அலைமோதறது பாரு. காணாமல் போயிட்டாத் தேடறது கஷ்டம்'.
"இடுப்புலே வச்சுக்குற குழந்தையா இவன்? மூணு வயசாச்சு. தூக்க முடியலே. கையைப் பிடிச்சுக்கோ கண்ணா. இங்கே பாரு, பெரிய மேளம்'.

"மேளம் இல்லே...அதுக்குப் பேரு மிழா'. குழந்தையை இரண்டு கையையும் உயர்த்தித் தலைக்கு மேல் தூக்கிக் காட்டும் உன்னிகிருஷ்ணன்.

கோவில் முன்மண்டபம் அதிர்கிறது. ரயில் அந்தத் தாளத்தோடு இசைகிறது போல் போக்குக் காட்டிக்கொண்டு தப்புத் தப்பாக ஆடி அசைந்து அப்புறம் சக்கரம் அரைபட ஓலமிட்டு வேகம் குறைகிறது. அசுர வாத்தியமான மிழா இருட்டில் பிரம்மாண்டமாக எழுந்து "வெறும் கையை என்னத்துக்கு தலைக்கு மேலே உசத்திட்டு நிக்கறே, கீழே போடு' என்று அதட்டுகிறது.

உயர்த்தின கை இரண்டையும் கீழே போடுகிறார் உன்னிகிருஷ்ணன். வலிக்கிறது. வெறும் கை இல்லாமல் இருந்தால்கூட உபத்திரவமில்லாமல் இருக்கும். இந்த உடம்பும்கூட. கொண்டு வந்த துணிப்பை எங்கே? அது சீட்டுக்கு அடியில். அதை மறைத்துக் கொண்டு இரண்டு கூடை. உன்னிகிருஷ்ணன்தான் கொண்டு போகிறார். ஜவந்திப் பூ நிரம்பி வழிகிற கூடைகள். குளிர்ந்த வாசனையை அடக்கமாக வெளிப்படுத்திக் கொண்டு நல்ல உறக்கத்தில் இருக்கின்றன ரெண்டும்.

ரயில் ஜன்னல் வழியே திரவமாக உள்ளே வழியும் இருட்டுக்குள் தலை நீட்டிப் பார்க்கிறார் உன்னிகிருஷ்ணன். காற்றோடு கலந்து கல்யாணியின் குரல்.

"நாளைக்கு அத்தம். திருவோணத்துக்குப் பத்தே நாள்தான் இருக்கு. வீட்டு முற்றத்திலே பூக்களம் ஒருக்க வேணாமா?'

"எல்லாப் பூவும் எதேஷ்டமா இருக்கு. நீயும் கண்ணனும் காலையிலே பூவை எல்லாம் அழகாத் தரையிலே பரத்திப் பூக்களம் வைக்கலாம். சரியா'

"எல்லாப் பூவுமா? தும்பைப் பூ?'

ரயில் ஒரு நிமிடம் நிற்கிறது. "இறங்கினால் கோவில்தான். தும்பைச் செடி கொல்லுனு பூத்து இருக்கு. இறங்கு' என்று எட்டு ஊருக்குக் கேட்க ரகசியம் சொல்கிறது சில்வண்டு. கோவில் நாளம்பலத்தில் தேவதைகள் முணுக்கென்று சிரிக்கும் சத்தம்.

"ஓணத்துக்கு அத்தப்பூ பறிக்கப் போனாளா கல்யாணி? குழந்தையையும் தூக்கிட்டுத்தானே? இன்னுமா திரும்ப வரலே?' என்று கெக்களி கொட்டிச் சிரிக்கும் அவை திரும்பக் கிளம்பும் ரயிலில் ஏற ஓடி வருகின்றன.

"காயல்லே படகு முழுகி என் வீட்டுக்காரியும் பிள்ளையும் வெள்ளத்தோட போயாச்சு. அப்படித்தான் அப்போ சொன்னாங்க. உன்னிகிருஷ்ணன் வெளியே பார்த்து ரயில் இரைச்சலுக்கு நடுவே முணுமுணுக்கிறார்.

"மண்ணாங்கட்டி. அந்த நாயர் செக்கனோட ஓடிப் போயிட்டா அவள். மாடும் கன்னுமா இழுத்துப் போயிட்டான் பயல்'.

"நாளைக்கு உங்களைக் கோவிலில் வச்சுப் பாக்கறேன். மீதி சேதி எல்லாம் பேசலாம். இப்போது தூக்கம் வருது', உன்னிகிருஷ்ணன் சொல்கிறார். நாளைக்கு விடிந்தால் கோவிலில் இருக்கலாம். நடை திறக்க, உள்ளே குழல் ஊதிக் கொண்டு, ஒய்யாரமாக சிரித்தபடி அங்கே இன்னொரு உன்னிகிருஷ்ணன். இல்லை, எல்லாம் ஒரே உன்னிகிருஷ்ணன்தானா?

"வந்துட்டியா?' வாகைச் சார்த்து முடிந்து தங்கம் தங்கமாக குத்து விளக்கொளியில் மினுமினுத்துக் கொண்டு அவன்தான் கேட்பான். மேல்சாந்தி பலிக்கல் பக்கம் நைவேத்தியத்தை இரைக்கும்போது ரயிலோடு கூட ஓடிவந்த பசித்த தேவதைகள் எல்லாம் "மெட்ராஸ் டிரிப்ளிகேன் மூத்திரச் சந்து உண்ணிகிருஷ்ணா, எங்களுக்கு இன்னும் கொஞ்சம் சாதம் வேணும். திருமேனி கிட்டே கேளு' என்று முறையிடும்.

அப்போது அவைகளிடம் உன்னிகிருஷ்ணன் சொல்வார். "என் பேரப்பிள்ளை காத்துட்டிருக்கான். என்னைத் தன்னோட வச்சுக்கக் கையைப் பிடிச்சுக் கூட்டிப் போகப் போறான். கடுதாசி போட்டிருக்கான். அம்பலத்தூரிலே பெரிய வீடாக்கும் அவனுக்கு. எல்லோரும் இருக்கலாம். இந்த மாரான், அவன் எடக்க, சங்கீதம், பலிக்கல், உன்னிகிருஷ்ணன், கல்யாணி, கண்ணன், பூக்கூடை, நீங்க. உங்களுக்கு வயிறு நிறையப் படைக்கறேன், இப்போ சும்மா கிடங்கோ'.

நீர் பிரியவேணும். இந்தக் கூட்டத்தில் கையையும் காலையும் மிதித்துக்கொண்டு கழிவறைக்குப் போக திராணி இல்லை. போய்த் திரும்பினால் இந்தத் துளி இடமும் பறிபோய்விடலாம். போகாமல் முடியாது. கைப்பையிலிருந்து உருண்ட ஆரஞ்சுப் பழத்தைத் திரும்ப வைத்துவிட்டு எழுந்திருக்கிறார் உன்னிகிருஷ்ணன்.

கழிவறையில் அற்ப சங்கை தீர்த்து வெளியே வந்தபோது பெட்டியில் யாருமே காணோம். சொல்லி வைத்தாற்போல் அத்தனை பேரும் இறங்கிப் போய்விட்டார்கள் போலிருக்கிறது.
டிக்கெட் பரிசோதகர் கடந்து வருகிறார். நீட்டிய டிக்கெட்டை வாங்காமல், உன்னிகிருஷ்ணன் என்கிறார். ராமன்குட்டி நாயர்தானே இது? அவர் வெறுமனே சிரிக்கிறார். இவருடைய மூத்த அண்ணன் வேதத்தில் ஏறின பவுலோஸ் பாதிரியா? ஆமாம் என்று தலையாட்டல். இளையவன்? கல்யாணியோடு கூடப் போனது இவர் தம்பி இல்லையோ? தெரியாது என்று தலையை அசைத்துவிட்டு வெளியே இறங்கிப் போகிறார். தேவதைகள் திரும்பச் சூழ்ந்து கொள்கின்றன.

சட்டைப் பையில் வைத்திருந்த கடிதத்தைச் சுவாதீனமாக எடுத்து ஒரு தேவதை சத்தமாகப் படிக்கிறது. "அன்புள்ள தாத்தா, என் அப்பா கண்ணன் பட்டர் சொல்லி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நாங்கள் அம்பலத்தூரில்தான் இருக்கிறோம். அப்பா ஓட்டல் நடத்தி வருகிறார். நீ கூரை போட்டுச் சாப்பாட்டுக்கடை நடத்தி வந்த அதே இடத்தில்தான். பாட்டி கூடமாட வேலை செய்து, இப்போது தளர்ந்துபோய் வீட்டோடு இருக்கிறாள். உன்னைப் பார்க்கத் துடிக்கிறாள். நடந்ததெல்லாம் நடந்ததாக இருக்கட்டும். பெரியவர்களோடு சேர்ந்து நானும் வேண்டுகிறேன். உடனே மதராஸில் இருந்து புறப்பட்டு ஓணத்துக்கு முன்னால் வரவும். ஆலத்தூர் ஸ்டேஷனுக்கு வந்து நான் கூட்டிப் போகிறேன். தள்ளாத இந்தப் பிராயத்தில் இனி எங்களோடையே இருக்கவும். இப்படிக்கு உங்கள் பேரன் உன்னிகிருஷ்ணன்.'

கடிதத்தைப் பிடுங்கி சட்டைப்பையில் வைத்துக் கொள்கிறார் உன்னிகிருஷ்ணன். தேவதைகள் சிரிப்படங்காமல் குறுக்கும் நெடுக்கும் ஓடுகின்றன.

கம்பார்ட்மெண்டின் கடைசியிலிருந்து கேட்கும் குழந்தைக் குரல். அது இப்போது கேட்டதா? ரொம்ப அருகில்தான். ஒரு ஐம்பது வருடம் முன்னால். கல்யாணியோடு பழனிக்குப் போனபொழுது.
"கொழந்தைக்குப் பால்', உன்னிகிருஷ்ணன் கல்யாணியிடம் சொல்கிறார்.

"ஐயோ, இங்கே வச்சா பால் குடுக்கறது? அதுவும் முண்டும் தோர்த்துமா நிக்கறேன். ரயில் பெட்டியிலே எல்லாரும் காணட்டுமா? நாணக்கேடு'.

முண்டும் தோர்த்துமாகத்தான் அவள் அத்தப்பூ பறிக்கச் சின்னப் படகில் அக்கரை போனாள். இக்கரையில் இல்லாத பூவா?
ஆனால், தும்பைப் பூ இல்லாத ஓணமா? தும்பை எல்லாம் அக்கரையில்.

தும்பை மட்டுமில்லை. ராமன் குட்டி நாயரின் தம்பியும்தான்.

"தும்பையைத் தேடிப் புழை கடக்கணுமா என்ன? படகுக்காரன் அப்புக்குட்டன் கிட்டே சொன்னால் காலையிலே எடுத்து வந்து கொடுத்துட்டுப் போறான்'.

"அப்புக்குட்டனும் பப்புக்குட்டனும் எதுக்காம்? கொதும்பு வஞ்சியில் ஏறி நானே அஞ்சு நிமிஷம் துழஞ்சு போய் அக்கரையிலே தும்பை பறிச்சு வரேன். கண்ணனையும் தூக்கிட்டுப் போயிடறேன். கடையை பார்த்துக்குங்க. வடைக்கு பருப்பு அரைச்சாச்சு'.

"கல்யாணிக்குப் படி தாண்ட, புழை கடக்க, கடந்து கரையேற அவசரம்'. கீசுகீசென்று இரையும் தேவதைகளைச் சும்மா இருங்கோடி என்று அதட்டினார் உன்னிகிருஷ்ணன்.

"ரயில் ஏன் கிளம்பவில்லை'? அவர் கேட்டபோது, "தெரியாது போடா' என்றன தேவதைகள். அதுக்கும் சிரிப்புத்தான் பதிலோடு கூட. உன்னிகிருஷ்ணன் புழை கடந்தபோதும் அவை இப்படித்தான் சிரித்தன.

அவர் புழை கடந்து அம்பலத்தூர் விட்டது தும்பைப் பூவை, கல்யாணியைத் தேடி இல்லை. வடக்கே மதராசுக்கு. தெரிந்த ஒரே வேலை, உடுப்பி ஓட்டலில் சமையல். திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தனத்தில் ஒற்றை அறைக்கு வெளியே யாருக்கும் கல்யாணியை, காயலை, கன்றோடு பசுவைப் படகில் ஏற்றிப் போனதைப் பற்றியெல்லாம் தெரியாது. "பாலக்காட்டு ஸ்மார்த்தன். ஒண்டிக்கட்டை, ஏப்பையோ சாப்பையோ, பாலடைப் பிரதமன் பேஷாப் பண்றான். எதேஷ்டம்'.

"ஸ்டேஷன் வந்தாச்சு, இறங்கலியா?' என்றார் திரும்ப வந்த டிக்கெட் கலெக்டர். "பேரனா? வந்திருப்பார். வெளியே விளக்கு இல்லை. நீங்க பெஞ்சிலே உக்காந்துக்கங்க. லைட்டு வந்ததும் கூட்டிப் போவார். ரயில் ஊதறது. கிளம்பறேன். பத்திரமாப் போய்ட்டு வாங்க. எல்லோரையும் கேட்டதாகச் சொல்லுங்க.'
இருட்டில் உன்னிகிருஷ்ணன் ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் தட்டுத் தடுமாறி உட்கார்ந்தார். சுற்றிலும் சிமிட்டி நெடி. பையில் இருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து உரித்து வாயில் போட்டுக்கொண்டார். நல்ல புளிப்பு. பேரன் காத்திருப்பான். இந்த சிமிட்டி மூட்டைக் களேபரத்து நடுவிலே அவன் எப்படித் தேடுவான்? உன்னி, உன்னி, நான் இங்கே இருக்கேன். அத்தத்துக்கு எல்லாப் பூவும் கூடை கூடையா கொண்டு வந்திருக்கேன் பாரு. தும்பைதான் கிடைக்கலே. குதிரை வண்டி எங்கே?

கண் இருண்டு வந்தது. கைப்பையில் இருந்த பத்திரிகை முன்னால் முன்னால் நீண்டது. இருட்டிலும், அதன் எழுத்துகள் தெளிவாகத் தெரிய அது சேதி சொன்னது.

எண்பது வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் பழைய ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டது. சிமிட்டி மூட்டை அடைத்து வைப்பதற்காக இருபது வருடமாக உபயோகமாகிவந்த புராதனமான இந்த ரயில்வே ஸ்டேஷனில் தற்போது ரயில்கள் ஏதும் வருவதில்லை.

நாற்பது வருடத்துக்கு முந்தைய பத்திரிகை. இன்னும் பழுக்காத மாம்பழங்கள், பழைய கால ரயில்வே டிக்கெட், இரண்டு கூடை நிறைய வாடிய ஜவந்திப்பூ. இவற்றோடு காணப்பட்ட இவர் யாரென்று தெரியவில்லை. எழுதி, தபாலில் சேர்ப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கடிதம் சட்டைப்பையில் காணப்பட்டது. அதில் எழுதியிருந்ததாவது -அன்புள்ள தாத்தா, என் அப்பா கண்ணன் பட்டர் சொல்லி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நாங்கள் இப்போது...!

(Dinamani Kadhir Nov 05)

Sunday, November 06, 2005

எடின்பரோ குறிப்புகள்

மறுபடியும் இங்கிலாந்தில் டேரா போடக் கிளம்பி வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஓடிவிட்டது. வழக்கம்போல் யார்க்ஷயர் இல்லை இந்த முறை. ஸ்காட்லாந்து. பழைய விக்டோரியா வாசனை யார்க்ஷயரை விடப் தூக்கலாக அடிக்கிற ஹைலாண்ட் என்ற உசரமான வடக்குப் பகுதி. சந்து பொந்து, கல் பதித்த நடைபாதை, காரோடும் வீதி, கட்டிடம் எல்லாம் முன்னூறு வருடம் பழசு. 1760ம் வருடம் தொடங்கிய மதுக்கடை இன்னும் அப்படியே இருக்கிறது. கடைசி மரபெஞ்சில் பியர் குடித்துக் கொண்டிருந்தவர்கள் முன்னூறு வருடமாக அங்கேயே உட்கார்ந்திருக்கிறதாகத் தெரிந்தது.

தெருவில் நடந்தால் அங்கங்கே குட்டைப் பாவாடைகள் தட்டுப்படுகின்றன. கிழவர்கள், மத்திய வயசன்மார் என்று ஆண்கள் தான் எல்லா பாவாடைச் சாமிகளும். சிவப்பிலும் பச்சையிலும் சதுரம் சதுரமாக ஏகப்பட்ட ப்ளீட்டோடு முழங்காலுக்குக் கீழே இறங்காத இந்த ஆம்பளைங்க சமாச்சாரம்தான் ஸ்காட்லாந்தின் தேசிய உடையான கில்ட். எப்பவும் வேகமாகக் காற்று வீசுகிற பிரதேசமாகையால், ஆத்தாடி(டா) பாவாடை காத்தாட, அப்புறம் கொஞ்சம் மேலே உயர, அதைப் பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ளாமல், கழுத்தில் டை முடிச்சைக் கவனமாகச் சரிப்படுத்திக்கொண்டு இந்த அடலேறு ஆண்கள் ரயிலை, பஸ்ஸைப் பிடிக்க ஓடுகிறார்கள்.

வீட்டுப் பக்கத்துக் கடையில் கில்ட் என்ன விலை என்று விசாரித்தேன். சும்மா வம்புக்குத்தான். விலை உயர்ந்த த்ரீ பீஸ் சூட்டை விட குட்டைப் பாவாடை இரண்டு மடங்கு அதிக விலை. கிறிஸ்துமஸ் நேரத்தில் வந்தால் தள்ளுபடி செய்து கம்மி விலைக்குத் தருகிறேன் என்று ஆசை காட்டினார் கடைக்காரர். ஊஹூம். வேணாம். அதை மாட்டிக்கொண்டு தெருவில் நடக்க எனக்குத் தைரியம் கம்மி.

தெருவுக்குத் தெரு இரண்டு சர்ச். ஞாயிற்றுக்கிழமை காலையில் சர்ச் வாசலில் பளிச் என்று விளம்பரங்கள். ஆங்கிலோ சாக்சன் சர்ச் பலகையில் ‘Under the same management for the past two thousand years’. எதிர் வரிசையில் ஸ்காட்டீஷ் சர்ச் வாசலில் ‘Fight Truth decay. Brush with Bible’.

பிரிட்டீஷ் பத்திரிகைகள் இந்த இரண்டு வருடத்தில் ரொம்ப மாறவில்லை. ஆனாலும், தமிழ்ப் பத்திரிகையிலிருந்து வந்து யாராவது கிளாஸ் எடுத்தார்களோ என்னமோ, முன்னைக்கிப்போது அதிகம் இலவச இணைப்புகளை மும்முரமாகப் பத்திரிகையோடு வினியோகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையோடு சினிமாப்பட டிவிடி முற்றிலும் இலவசம். இஸ்மாயில் மெர்ச்சண்டின் ‘ஹீட் அண்ட் டஸ்ட்’, வால்ட் டிஸ்னி படமான ‘லயன் கிங்க்’ என்று இப்படியான ஓசி டிவிடிகள் என் அலமாரியை வேகமாக நிறைத்துக் கொண்டிருக்கின்றன.

எடின்பரோ செய்தித்தாள் நிருபர்கள் மகா காரியமாக இந்த ஊரை தினசரி நாலு தடவை பிரதட்சிணமாகச் சுற்றி வந்து (என்ன, நம்ம காரைக்குடி பரப்பளவு இருக்குமா?) மாய்ந்து மாய்ந்து செய்தி உருவாக்கி சாயந்திரங்களில் அச்சடித்து இறக்குகிறார்கள். படிக்கக் கொஞ்சம் வினோதமாக இருக்கிறது இந்தப் பேட்டைப் பத்திரிகை பலதும்.

உதாரணத்துக்கு முந்தாநாள் சாயந்திர முதல் பக்கச் செய்தி –

எடின்பரோ பிரின்சஸ் வீதியில் - இந்த ‘ராஜகுமாரர்கள் வீதி’ நம் அண்ணா சாலை போல்; அதில் காலே அரைக்கால் நீளம் கூட வராது என்றாலும் – ஒரு கடையில் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டிக் கொள்ளையடித்த திருடன் கடை வாசலுக்கு வந்ததும் குற்ற உணர்ச்சி தாங்காமல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். பத்து நிமிடம் இப்படி அழுத பிறகு தெருவோடு நடந்து போன ஒரு போலீஸ்காரர் இந்த ஆளைத் தோளைத் தட்டிக் கண்ணைத் துடைத்து விட்டு விஷயம் என்னவென்று விசாரிக்க, ‘கொள்ளையடிச்சிட்டேன் அண்ணாச்சி’ என்று நம்மாள் போலீஸ்காரர் தோளில் சாய்ந்து இன்னும் அதிகம் விம்மியழுதிருக்கிறான். மனசு கனக்க காவலர் அழுவாச்சித் திருடனை காவல்நிலையம் கூட்டிப் போக, வழக்கு நடக்கிறதாம். கோர்ட் கச்சேரியில் வக்கீல், நீதிபதி, குமாஸ்தா எல்லோரும் கூட்டமாக அழுது மூக்கைச் சிந்தி முன்னூற்றைம்பது வருடச் சுவரில் தடவாமல் இருந்தால் சரிதான்.

ஊரில் தெருவுக்கு நாலு உணவு விடுதி இந்தியச் சாப்பாட்டுக்கடை. அதாவது வடக்கத்திய ரொட்டி, னான், லாம்ப் டிக்கா, கபாப், தட்கா தால், பிண்டி சப்ஜி, மொகலாய் பிரியாணி வகையறா தான் மொத்த இந்தியாவிலும் மக்கள் சாப்பிடும் உணவு என்று அடம்பிடித்து ஊரை உலகத்தை நம்ப வைக்கிற வகை. இந்த ரெஸ்டாரண்ட்காரர்கள் தொண்ணூறு சதவிகிதம் பங்களாதேஷ்காரர்கள்.

வைக்கோல் சந்தை பகுதியில் (ஹே மார்க்கெட்) டால்ரி தெருவில் நீள நடந்தால், வரிசையாக முடிதிருத்தகங்கள். ஹேர் டிரஸ்ஸர் என்று எந்த விளம்பரப் பலகையும் சொல்லவில்லை. ‘பார்பர் ஷாப்’ தான் எல்லாம். நாலு பார்பர் ஷாப்புக்கு நடுவில் ‘வெராந்தா’ என்று ஒரு ரெஸ்டாரண்ட். உள்ளே கிளிண்ட் ஈஸ்ட்வுட் புகைப்படம். இங்கே பலதடவை வந்து பிரியாணி சாப்பிட்டுப் போயிருக்கிறாராம் அவர். ஸ்காட்லாந்துக்காரரான ‘ஜேம்ஸ்பாண்ட்’ புகழ் சியன் கானரி வந்து சப்பாத்தி சாப்பிட்டிருக்கிறாரா என்று விசாரித்தேன். முன்னொரு காலத்தில் எடின்பரோவில் சாமானியமான பால்காரராக இருந்து அப்புறம் சூப்பர் ஸ்டாராக மாறிய சியன் கானரி ஸ்காட்லாந்தில் தங்குவதே அபூர்வமாம்,

வெராந்தா ஓட்டல் மெனு கார்டில் பத்தாவது ஐட்டம் ‘மதராஸ் சாம்பார்’. படுகுஷியாக ஆர்டர் செய்தால் திட பதார்த்தமாக ஒரு வஸ்து சுடச்சுட மேசைக்கு வந்து சேர்ந்தது. ஓட்டல் சமையல்காரர்கள் முன்னே பின்னே மதராஸையும் பார்த்ததில்லை, சாம்பாரையும் பார்த்ததில்லை என்பதால் உத்தேசமாகச் செய்து ஒப்பேற்றிய சமாச்சாரம் அந்த சாம்பார். அது வயிற்றுக்குள் ரொம்ப நேரம் அமர் சோனார் பங்க்ளா என்று பெங்காலியில் உரக்கப் பாடிக்கொண்டிருந்தது.

பி.பி.சியில் வழக்கம்போல் இரண்டாம் உலக யுத்த டாக்குமெண்டரி காட்டிய நேரம் போக பிரதமர் டோனி பிளேர் சொற்பொழிகிறார். சும்மா சொல்லக்கூடாது. பொய் சொன்னாலும் புஷ்ஷை விட நம்பும்படி சொல்கிறார். சேனல் நாலு டிவியில் வழக்கமான ஜான் ஸ்நோ, நம்மூர் கிருஷ்ணன் குருமூர்த்தி கூட்டணி வெற்றிகரமாக செய்தி படித்துக் கொண்டிருக்கிறது. கிருஷ்ணனின் சகோதரி கீதா குருமூர்த்தி பிபிசியில் இப்போது மிஸ்ஸிங்க்.

இந்தியா அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று எல்லா பிரிட்டீஷ் சானலிலும் மாய்ந்து மாய்ந்து சொல்கிறார்கள். நம் நாட்டுப் பொருளாதார முன்னேற்றம் உலகிலேயே அதிகமான ஆறரை சதவிகிதம் என்று தெரிகிறது. கூடவே வேகவேகமாக முன்னணிக்கு வருவது சீனா. அங்கே இப்போது ‘Communism is spelt with the smallest C’ என்று பிபிசி செய்தியாளர் ஜோக் அடிக்கிறார்.

காலை டெலிவிஷன் ‘ஹார்ட் டாக்’ பேட்டியில் ப.சிதம்பரமும், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும் உற்சாகமாக இன்னும் ஒளிமயமான எதிர்காலம் இந்தியாவுக்கு உண்டு என்று சொல்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா கராத் சங்கடத்தோடு சிரிக்கிறார். மத்திய அரசை ஆதரித்துக்கொண்டே எதிர்க்க வேண்டிய, ‘running with the hares and hunting with the hounds’ தனமான நிலைமை மார்க்சிஸ்டுகளுக்கு. ‘இந்தியா முன்னேறி வருகிறது. ஆனால் வளர்ச்சி அடையவில்லை’ என்கிற மாதிரி பிருந்தா சொல்லும்போது அவருடைய நெற்றியை விடப் பெரிய பொட்டில் முகத்தை மறைத்துக்கொள்ள முயல்கிறார். How do you spell communism, comrade Brinda?

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது