யாசுநாரி காவாபாத்தா
எலும்பும் தோலுமாக ஓர் அமெரிக்க ராணுவ வீரன். சிறைப் பிடித்து வைக்கப்பட்டவன். அவனை வளைத்துப் பிடித்த எதிரிகள் குரூரமானவர்கள். ஒரு நாளைக்குப் பதினாலு மணி நேரத்துக்கு மேல் அடிமை போல் இடுப்பொடிய வேலை செய்ய வைக்கிறார்கள். அடர்ந்த வனாந்தரங்கள், மலைச்சரிவுகள் வழியே ரயில் பாதை அமைக்கிற வேலை. உழைப்புக்கு ஊதியம் கிடையாது என்பதோடு அப்படி மாடு மாதிரி உழைக்க உடம்பில் சக்தி இருக்கச் சாப்பாடும் சரியாகப் போடுவதில்லை. பசியால் சோர்ந்து போய் வேலை செய்ய முடியாமல் போனால் சாட்டையால் அடித்துச் சித்திரவதை செய்கிறார்கள் பாவிகள்.
அந்த அமெரிக்க ராணுவ வீரனுக்கும் அவன் போல் சிறைப் பிடிக்கப்பட்ட போர்க் கைதிகளுக்கும் உடம்பில் வலு வேண்டும். வேறு எதற்குமில்லை. வேலை செய்ய. இல்லாவிட்டால் அடித்தே கொன்று விடுவார்கள் அவனைக் கைதியாக்கியவர்கள்.
அமெரிக்க ராணுவ வீரன் யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறான். கையில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட். அதில் கொஞ்சம் தண்ணீர். இன்னொரு கையில் குவளை. மெல்ல நடக்கிறான். நடப்பது அவனைச் சிறைப் பிடித்தவர்களின் கூடாரங்களுக்குப் பின்புறமாக. அவர்களின் கழிவறைகளில் ஒவ்வொன்றாகப் புகுந்து வாடையைத் தாங்கிக்கொண்டு, சிதறிக் கிடக்கும் கழிவில் ஏதோ தேடுகிறான். கிடைக்கிறது.
அது ஒரு மொச்சைப் பயிறு. எல்லாச் சத்தும் கொண்ட பெரிய மொச்சை. அவனை அடைத்து வைத்தவர்களின் நித்திய உணவில் தவறாமல் இடம் பெறுவது. சாப்பிடக் கிடைத்த நேரத்தில் அவர்கள் அவசரமாக விழுங்குவதால் ஜீரணமாகாமல் வயிற்றிலிருந்து கழிவோடு அப்படியே வெளியேறிக் கழிவறையில் மனிதக் கழிவுக்கு இடையே விழுந்து கிடப்பது.
அமெரிக்க ராணுவ வீரன் தன்மானம், அருவறுப்பு, தன்னுடைய நிலை குறித்த சோகம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு அந்த மொச்சைப் பயறைக் குனிந்து எடுத்து, பிளாஸ்டிக் வாளித் தண்ணீரில் கழுவி அதைக் குவளையில் போடுகிறான். குவளையில் இன்னும் சில மொச்சைகள்.
பாதி வரையாவது குவளை நிறைய வேண்டும். அவனுக்கு இன்று பகலில் அரைகுறை சாப்பாட்டுக்கு அப்புறம் இந்தக் குவளையில் இருந்துதான் சத்துணவு கிடைக்கப் போகிறது.
இழிந்த பன்றி போல் அடுத்த கழிவறை தேடி நடக்கிறான் அவன்.
இது கதையில்லை. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நடந்தது.
போர்க்காலத்தில் தாய்லாந்தில் அயூத்யா பக்கம் க்வாய் நதிக்குக் குறுக்கே பாலம் அமைத்து போர்க்கைதிகள் இருப்புப்பாதை போட்ட இடத்தில் ஒரு போர்க்கால நினைவு அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. அங்கே நான் சுற்றியலைந்து கொண்டிருந்தபோது கண்ணில் நீரை வரவழைக்கும் இந்தச் செய்தியையும் இது போல் சக மனிதனுக்கு மனிதன் இழைத்த குரூரத்தையும் சொல்லும் எத்தனையோ வணங்களையும் புகைப்படங்களையும் பார்க்க நேர்ந்தது.
அடிப்படை மனித நேயத்தைத் துடைத்தெறிந்து இந்தக் கொடுமைகளை அரங்கேற்றிய தேசத்தில் இருந்து தான் இயற்கையை நேசிக்கும், அன்பு, பாசம், நேசம் என்ற அடிப்படை மனித இயல்புகளை மெல்லத் தொட்டுக் காட்டி இதயத்தை வருடும் இந்தக் கவிதையும் வந்திருக்கிறது.
பனி மூடிய நாள்.
குழந்தைகளோடு பந்து விளையாடியபடி
அது நீண்டு நகர்ந்து முடிவதைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
இதமான காற்று.
தூய்மையான நிலா காயும் இரவு.
வா, நாம் நடனமாடியபடி
வாழ்வின் கடைசி தினங்களைக் கழிப்போம்.
அந்த நாடு ஜப்பான்.
ஜப்பானியர்களின் மன இயக்கத்திற்கும், இலக்கியத்துக்கும், இயந்திரங்கள் போன்ற செயல்பாடுகளுக்கும் இடையே தெரியும் இடைவெளி பிரமிப்பூட்டுவது.
நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய நாவலாசிரியர் யாசுனாரி காவாபாத்தாவின் படைப்புகளும் அவருடைய வாழ்க்கையும் கூட அதே தரத்தில் தான்.
தனி மனிதனின் இழப்புக்களையும், துயரங்களையும், இனக் கவர்ச்சி சார்ந்த உறவுகளின் பூடகமான புதிர்களையும், பனி மூடிய மலைகளின் மோனத்தில் ஊடாட விட்டுக் கவித்துவமான இறுக்கத்தோடு கதை சொன்ன காவாபாத்தாவின் வாழ்க்கையே அவர் படைப்புகளுக்கு எல்லாம் அடித்தளம்.
“சேர்ந்தே இருப்பது” என்று பின்னால் ஒட்டடைக்கொம்பு போல் சாய்ந்து வளைந்தபடி தருமி நாகேஷ் கேட்க, “புலமையும் வறுமையும்’ என்று ஈஸ்ட்மென் திருவிளையாடல் கடவுளாக சிவாஜி சொன்ன வறுமை காவாபாத்தா விஷயத்தில் பொய்யாகிப் போனது.
ஜப்பானின் தொழில் தலைநகரமாக ஒரு காலத்தில் திகழ்ந்த ஒசாகாவில் பிரபலமான ஒரு மருத்துவருக்கு மகனாகப் பிறந்தவர் யாசுநாரி காவாபாத்தா. அது 1899-ல். ஜப்பான் இன்னும் பின் தங்கிய நாடாக இருந்த அந்தக் காலத்திலும் செல்வச் செழிப்புக்கும் வாழ்க்கை வசதிகளுக்கும் ஒரு குறைவும் இல்லாத குடும்பத்தில் அவர் கடைக்குட்டி. சில வருஷம் முந்திப் பிறந்த ஒரு அக்காவும் உண்டு அவருக்கு.
என்ன பிரயோஜனம்? காவாபாத்தாவுக்கு மூன்று வயது ஆனபோது அவரையும் அவருடைய சகோதரியையும் நிர்க்கதியாக்கி விட்டு அவர்களுடைய பெற்றோர்கள் இறந்து போனார்கள்.
ஒரு மூன்று வயசுக் குழந்தையின் வாழ்க்கையில் விழுந்த பலத்த இடி அது. பணமும் காசும் ஈடு கட்ட முடியாத அந்தப் பிஞ்சு மனதின் சோகம் இறுதி வரை காவாபாத்தா மனதில் அழுத்திக் கொண்டு தொடர்ந்தது.
பெற்றோர் இறந்தபின் அவரும் சகோதரியும் தொலைதூரத்தில் இருந்த அவர்களுடைய ஒரே உறவினரான தாய்வழிப் பாட்டியின் அரவணைப்பில் அடங்க அங்கே அனுப்பி வைக்கப் பட்டார்கள்.
கண்பார்வை சரியாக இல்லாத அந்த வயதான பாட்டியம்மா, அள்ளி வழங்காவிட்டாலும் காவாபாத்தாவுக்கும் அவர் அக்காவுக்கும் பாசத்தைக் கிள்ளியாவது சரி விகிதத்தில் பங்கு போட்டுக் கொடுத்தாள்.
ஆறு வயதுச் சிறுவனாகப் பள்ளிக்கூடம் போய்ப் படிக்கக் காவாபாத்தா தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் வாழ்க்கையில் மறுபடி விளையாட விதியும் தயாராகிக் கொண்டிருந்தது.
ஒரே பற்றுக்கோடாக அவருக்கு இருந்த பாட்டியும் அந்த வருடம் இறந்து போனார்.
குடும்பம், உறவு, பாசம் என்ற சொற்களை எப்படி எழுத வேண்டும் என்று பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு முன்னால் அந்தச் சொற்கள் அவருடைய சொந்த அகராதியிலிருந்து உதிர்ந்து விழுந்து விட்டன.
விதியும் காவாபாத்தாவும் விளையாடிய சதுரங்கத்தில் அவர் தரப்பில் அவரைத் தவிர இருந்தது சகோதரி மட்டும் தான்.
அடுத்த இரண்டு வருடங்களில், அவளையும் எனக்குக் கொடு என்று முரட்டுத்தனமாகப் பறித்துக் கொண்டு ஆட்டத்தை ஒரு தரப்பாக நிறுத்தி அந்தக் குரூரமான விதி சிரித்தபடி எழுந்து போக, காவாபாத்தா அதை இயல்பாகத் தாங்கிக்கொண்டு முன்னால் நடந்தார். இழக்க இனிமேல் ஒன்றுமே இல்லாத ஒரு சிறுவனுக்கு எதுவும் பயமில்லை. எதைப்பற்றியும் கவலை இல்லை. வாழ வேண்டும். அவ்வளவுதான்.
வாழ்ந்தான். வாழ்ந்தார்.
டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படித்துப் பட்டம் வாங்கியது வரை இயந்திரத்தனமாக நகர்ந்த வாழ்க்கை அவருடையது. நூல் பிடித்தாற்போல் நகர்ந்த அந்த நாட்களில் ஒரு நாளுக்கும் அடுத்த நாளுக்கும் என்ன வித்தியாசம் வந்து விட்டிருக்கும் என்பதைப் போல் அவர் அது குறித்துப் பேசியதும் எழுதியதும் குறைவுதான்.
பட்டப் படிப்பு முடிந்து வெளியே வந்து காவாபாத்தா எழுத ஆரம்பித்தார். மனதில் ஆண்டாண்டாகப் புதையுண்டு போயிருந்த ரணம் எல்லாம் அவர் பேனா முனை வழியே காகிதத்தைத் தொட்டபோது அது இலக்கியமான ரசவாதம் நிகழ்ந்தது. காவாபாத்தாவின் இயற்கை உபாசனையும், பழைய ஜப்பானியக் காப்பியங்களிலும் ஹைக்கூ போன்ற குறுங்கவிதை இலக்கிய வடிவங்களில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ரசனையும், கற்றுத் தராத, தானே உணர்ந்து கற்றுக் கொள்ளச் சொல்லித் தரும் ஜென் பௌத்த மதத்தில் அவருக்கு ஏற்பட்ட லயிப்பும், காதலில், காமத்தில் அவருக்கு இருந்த மிகப் பெரிய ஈடுபாடும் இதற்குப் பெருமளவில் வழி வகுத்துக் கொடுத்தது.
காவாபாத்தா எழுத ஆரம்பித்த 1920களின் மத்தியில் ஜப்பான் ஒரு உலக மகாயுத்தத்தைச் சந்தித்திருந்தது. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சித்தரிப்பதே இலக்கியம் என்பது ஓர் இலக்கியக் கோட்பாடாக உலகம் முழுவதையும், எல்லா மொழிப் படைப்பாளிகளையும் பாதித்த காலகட்டம் அது - காவாபாத்தாவைத் தவிர.
அவர் பத்தாம் நூற்றாண்டு ஜப்பானின் இலக்கியங்களில் மூழ்கி, அவற்றின் காதல் காப்பியங்களால் கவரப்பட்டு, அந்தக் காதல் - கற்பனாவாத ரொமாண்டிசத்துக்கு ஜப்பானிய இலக்கியத்தைத் திருப்ப அழைத்துப் போனார். அதுவும் தன் வழியில்.
1931-ல் மணம் முடித்த காவாபாத்தா, டோக்கியோ அருகே சாமுராய் வீரர்களின் புராதன நகரமான காமகூராவில் வசிக்கத் தொடங்கியதும் முழுநேர எழுத்தாளர் ஆனார்.
சின்னச் சின்ன ஹைக்குகளைச் சங்கிலித் தொடராகக் கோர்த்தது போன்ற நடை, இதமாக ஒன்றன் மீது ஒன்றாகக் கவியும் புதுப்புதுப் படிமங்கள், இயற்கையின் பிரம்மாண்டத்திலும் அதற்கப்பால் விரியும் சூனியத்திலும் கிளை பிரிந்து படரும் ஆண்-பெண் உறவுகள் பற்றிய ஆழமான பார்வை, கனவுகள், பழைய நினைவுகள், எல்லாவற்றையும் இணைத்து அடிநாதமாகப் பெருகியும், அமைதியாக இழைந்தும், அங்கங்கே காணாமல் போய் வெளிப்பட்டுப் பிரவகித்தும் எங்கும் நீக்கமற நிறையும் சோகம்.
இப்படிப் பூத்த அந்தக் கதைகளில் மேலை நாட்டு இலக்கிய உத்திகளான சர்ரியலிசத்தையும் மேஜிக்கல் ரியலிசத்தையும் கண்டவர்கள் உண்டு. ஜப்பானிய மரபின் தொடர்ச்சியை, காவியச் சிறப்பைப் பார்த்துப் பாராட்டியவர்கள் உண்டு. உள்ளொளியைத் தரிசித்துப் பரவசமடைந்தவர்கள் உண்டு. எல்லாவற்றையும் விட, கதை சொல்லும், கேட்கும் தலைமுறை தலைமுறையாக நம் மரபணுக்களில் பதிந்து போன ரசனை அனுபவத்தின் அடிப்படையில், இவை எல்லாம் நல்ல கதைகள் என்று மனம் திறந்து பாராட்டியவர்களும் நிறையவே உண்டு.
காவாபாத்தாவின் கதைகள் சின்னச் சின்ன வாக்கியங்களால் ஆனவை. எளிமையான வாக்கியங்கள். னாலும் அவற்றின் முழு அர்த்தத்தோடு, கனத்தோடு அவற்றை வேறு மொழிகளில் பெயர்ப்பது கடினம்.
அப்படியும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளிவந்த அவர் படைப்புகள் உலக இலக்கியப் பரப்பில் அவருடைய இடத்தை உறுதி செய்தன. மொழிபெயர்ப்பின் வரம்புகளையும் மீறி வாசகனைச் சென்றடைந்த படைப்பின் வெற்றி அது.
‘பனி நாடு’ என்ற அவருடைய நாவல் இலக்கிய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ஒன்று. ஜப்பானின் வடக்குப் பிரதேசமான பனிமலைகளில் ஒன்றில் இருக்கும் வெப்ப நீர் ஊற்றுக்குச் செல்லும் நடுவயதுப் பயணியான கதாநாயகன், அங்கே பணியெடுக்கும் பேரிளம்பெண் கெய்ஷா (கிட்டத்தட்ட இங்கே வழக்கத்தில் இருந்த விலைமகளிர் போன்ற ஒரு தொழில் இது), அங்கே வரும் இளமையான இன்னொரு கெய்ஷா, அவர்களிடையே உருவாகும் அல்லது உருவானாதாகத் தோன்றும் உடலும் மனமும் சார்ந்த உறவுகள், அவர்களின் தன்வயமான தேடல் என்று நுணுக்கமாக விரியும் கதை இது.
இனக்கவர்ச்சி, இயற்கை வர்ணனை, வாழ்க்கை நிலையாமை எல்லாவற்றையும் ரத்தினச் சுருக்கமான ஹைக்கூவாகச் சொல்லும் நாவலில் வரும் இந்த வாக்கியத்தைக் காவபாத்தாவின் இலக்கிய நடைக்கு விமர்சகர்கள் அடிக்கடி உதாரணம் காட்டுவார்கள் :
“ஈசலை விடவும் மிகச் சின்னஞ்சிறு பூச்சிகள் அவளுடைய மென்மையான கழுத்தின் வெளுத்த பவுடர் திட்டில் பதிந்தன. அவற்றில் சில அங்கேயே இறந்தும் போனதை ஷிமாமுரா கண்டான்”.
தொடர்கதை என்ற வடிவத்தை எள்ளி நகையாடும் விமர்சகர்கள் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. காவாபாத்தாவின் நீண்ட கதைகள் எல்லாம் பத்திரிகையில் தொடர்கதைகளாக வெளியானவை!
பிரமிப்பை உண்டாக்கும் அவருடைய இன்னொரு படைப்பு ‘தூங்கும் அழகிகளின் வீடு’.
வயதான ஆண்கள் மட்டும் வந்து போகும் ஒரு வீடு. அவர்கள் அங்கே படுத்து உறங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியாகப் படுக்க இல்லை. அழகான, நக்னமான ஒரு கன்னியும் ஒவ்வொரு கிழவரோடும் படுத்திருப்பாள். அதாவது, அந்த அழகி ஏற்கனவே தூக்கத்தில் மூழ்கி இருப்பாள். இந்த ஆண்கள் எந்த விஷமமும் செய்யாமல் போர்வைக்குள் உறங்கும் அழகிகளோடு சேர்ந்து உறங்கி எழுந்து வருவார்கள்.
இகுச்சி-சான் என்ற வயோதிகர் அந்த விடுதிக்கு மேற்கொண்ட ஐந்து பயணங்களைப் பற்றியதே கதை. ஒவ்வொரு முறை அங்கே போகும்போதும் அவர் தன் குடும்பம், மனைவி, மக்கள் என்று பழைய நினைவுகளை அந்த விசித்திரமான சூழ்நிலையில் அசை போடுகிறார். விடுதிக்குப் புதிதாக வந்து தூக்கத்திலேயே இறந்து போகிற ஒரு பெண் அவர் நினைவுகளைப் பாதிப்பது கோட்டு ஓவியம் போல் சொல்லப்படுகிறது. இந்தக் கதையின் நுட்பத்தை ஜப்பானியக் கவிதையைக் கொண்டுதான் உதாரணம் காட்ட வேண்டும் :
“மசியால் வரைந்த காடுகளின் ஓவியம்.
பிர் மரங்களின் ஊடே
காற்றின் ஓசை கேட்கிறது”.
‘வலது கை’ என்ற சிறுகதை காவாபாத்தா படைப்புகளில் நிரம்பப் புகழ் பெற்றது. அதில் ஓர் அழகிய பெண் தன் வலது கையைக் கழற்றி எடுத்து, அதைப் பத்திரமாக ஒரு ராத்திரி மட்டும் வைத்துக் கொள்ளச் சொல்லி ஒருவனிடம் கொடுத்துவிட்டுப் போவாள். அவன் அந்தக் கையோடு பேசுவது, அதை அன்போடு வருடுவது, அந்தக் கையைத் தன் உடம்பில் பொருத்திக் கொள்வது என்று வளரும் இந்தக் கதையில் சர்ரியலிசத்தைக் கண்டவர்களும், வலது கை என்பது பெண்ணின், வரையறுத்துத் துண்டிக்கப்பட்ட உறவின் குறியீடு என்று ஊகித்தவர்களும் சமவிகிதத்தில் உண்டு.
இப்படி முழுக்க முழுக்க உள்வயமான பார்வையைத் தன் படைப்புக்களின் ஊடாகத் தொடர்ந்து வெளிப்படுத்திய காவாபாத்தா 1960-ல் அமெரிக்கா போய் இலக்கியச் சொற்பொழிவுகள் ஆற்றியதும், அதற்குப் பின்னால் சமுதாய வளர்ச்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதும், அந்தக் காலகட்டத்தில் சீனாவில் கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில் மாவோயிசத்துக்கு எதிரானவர்களைக் களையெடுத்ததை வெளிப்படையான அறிக்கைகள் மூலம் உறுதியாகக் கண்டித்ததும் வியப்பளிக்கக் கூடிய நிகழ்வுகள்.
1968-ல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற காவாபாத்தா நிகழ்த்திய ஏற்புரை அவர் கதைகள் போலவே கவிதாநயம் மிக்கது. ஜப்பானிய இலக்கியம், ஜென் பௌத்தத்தில் மனதை வெற்றிடத்தில் நிலைநிறுத்தத் தியானம் செயல்படும் விதம், வாழ்க்கையோடு ஊடாடும் இயற்கை என்று பலவற்றைப் பற்றியும் சுவையாகப் பேசிய காவாபாத்தா இறுதியில் ஜப்பானில் தவறாகவோ, சமூக அவலமாகவோ, குற்றமாகவோ கருதப்படாத தற்கொலை பற்றியும் பேசினார்.
தற்கொலை எப்படிக் காலகாலமாக ஜப்பானிய சமுதாயத்தை, மனவோட்டத்தைப் பாதித்திருக்கிறது என்று விளக்கிய அந்த அறுபத்தொன்பது வயது நிரம்பிய, எல்லாத் துயரங்களுக்கு இடையிலும் வாழ்க்கையை நேசித்த படைப்பாளி, தற்கொலையின் அபத்தத்தை, அது ஏன் ஒரு தீர்வாகாது என்பதை அழகாக, ஒரு படைப்பாளிக்கே உரிய நிதானத்தோடும் பொறுப்போடும் எடுத்துரைத்தார்.
காவாபாத்தா 1972-ல் காலமானார். நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான மிஷிமாவின் மரணத்தால் பாதிக்கப்பட்டுத் தன்னுடைய எழுபத்து மூன்றாம் வயதில் அவர் வாழ்க்கையை முடித்துக் கொண்டது தற்கொலை மூலம்தான்.
சொன்னேனே, ஜப்பானிய மனவோட்டத்தின் உட்கூறுகளை விளங்கிக் கொள்வது கடினம். காவாபாத்தாவின் படைப்புகளை நாம் ரசிக்கலாம். வியக்கலாம். நம்மையே அவற்றில் இழக்கலாம். அவ்வளவுதான் செய்ய முடியும்.
(இரா.முருகன்)
Kumudam Junction Sep 2002