Monday, May 29, 2006

எடின்பரோ குறிப்புகள் - 17

‘விழுந்தால் வீட்டுக்கு. விழாவிட்டால் நாட்டுக்கு’. இது பல வருடம் முன்னால் தமிழக அரசு லாட்டரியை அறிமுகப்படுத்தியபோது செய்த விளம்பரம். எப்படியோ இதைத் தேடிப்பிடித்து அறிந்துகொண்டு அட்சர சுத்தமாகக் கடைப்பிடிக்கும் இங்கிலாந்து அரசு, வெற்றிகரமாக லாட்டரிச் சீட்டு விற்றுக் குலுக்கல் நடத்துகிறது. லாட்டரி விழுகிற அதிர்ஷ்டசாலிகளுக்கு வருமானவரியாகச் சல்லிக்காசுகூடப் பிடித்துக்கொள்ளாமல் அறிவித்த முழுத்தொகையையும் பம்பர் பரிசாகக் கொடுக்கிறது, மிச்சப் பணத்தை வைத்து நாட்டில் கலையையும் வளர்த்துக்கொண்டிருக்கிறது.

எடின்பரோ நேஷனல் ஆர்ட் காலரி, லண்டன் டேட் மியூசியம், லிவர்பூல் மியூசியம் என்று இங்கிலாந்து முழுக்க ஓவியக் கூடங்களில் காட்சிக்கு வைக்கப்படுகிற பிரபலமான ஓவியங்களும் சிற்பங்களும் பெரும்பாலும், லாட்டரி வருமானத்தில் வாங்கப்பட்டவைதான். எடின்பரோ ராயல் ஸ்காட்டிஷ் அகாடமியில் அவ்வப்போது நடக்கும் கண்காட்சிகள், கலைச் சொற்பொழிவுகள், ஒரு ஓவியக் கூடத்திலிருந்து இன்னொன்றுக்குப் போக இலவச பஸ் சேவை எல்லாம் லாட்டரிக் காசுதான். பரிசுச் சீட்டு வசூலை வைத்துத்தான் அரசு ஆதரவில் கவிஞர்கள் பேரவை வருடாவருடம் எடின்பரோ கவிதைத் திருவிழாவும், கோடைகாலக் கலைவிழாவும் நடைபெறுகின்றன.

இங்கிலாந்து படைப்பாளிகள் எலிசபெத் மகாராணிக்கும் டோனி ப்ளேருக்கும் ஒப்புக்காக ஒரு தாங்க் யூ கூடச் சொல்லாவிட்டாலும், லோட்டோ லாட்டரிச் சீட்டுக்கு தலா ஒரு படைப்பையாவது சமர்ப்பணம் செய்யலாம்.

இந்தச் சிந்தனையோடு எடின்பரோ பெல்ஃபோர்ட் வீதியில் ஸ்காட்டிஷ் நேஷனல் காலரி ஓஃப் மாடர்ன் ஆர்ட்ஸ் கட்டிடத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை மதியம் நுழைந்தானது.

நுழையவே வேண்டாம். சும்மா வெளியில் நின்று நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டே நிற்கலாம். அப்படி ஒரு பசுமை கொழிக்கும் பரந்து விரிந்த பிரம்மாண்டமான புல்தரையை இந்த ஓவியக் கூடத்துக்கு முன்னால் இயற்கை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. எடின்பரோவிலோ லண்டனிலோ இருக்கப்பட்ட எந்தக் கட்டடத்தின் முன்வசத்துப் புல்லாந்தரையும் இந்த lawnக்கு உறைபோடக் காணாது.

இந்தக் கட்டிடமும், இதன் எதிரிலேயே இருக்கும் இன்னொரு பெரிய ஓவியக் கூடமான டீன் காலரியும் இந்த ஒன்பது மாதத்தில் எத்தனையோ முறை படியேறி வலம் வந்தவைதான். குடியிருக்கும் தோப்புத்தெருவிலிருந்து ஒரு பத்து நிமிட நடை என்பதால் நினைத்த மாத்திரத்தில் இங்கே போய்ச் சேர வசதி செய்த ஆண்டவனுக்கு ஒரு கூடுதல் ஸ்தோத்ரம்.

இரண்டு ஓவியக் கூடங்களிலும் ஒவ்வொரு தடவை வலம் வரும்போதும் Dada, surrealism, cubism, impressionism, expressionism, futurism, art nouve, post modernism என்று நவீன ஓவியத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் இன்னும் கொஞ்சம் ஆழமாக உணர்ந்து அனுபவிக்க வாய்ப்புக் கிடைக்கிறது.

பிகாஸோவின் தொடக்ககால க்யூபிச ஓவியங்களையும், சால்வடார் டாலியின் ஹோலோகாஸ்ட் போன்ற சர்ரியலிச ஓவியங்களையும், இன்னும் மாட்டிஸே, லேகர், பிரேக், போனர்த், டெரய்ன், எடுவர்டோ பாவ்லோசி என்று நவீன ஓவியத்தின் முகமுத்திரைகளான கலைஞர்களின் படைப்புகளையும் இந்த இரண்டு ஓவியக் கூடங்களிலும் எவ்வளவு நேரம், எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது. கிட்டத்தட்ட ஐயாயிரம் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

லாட்டரிச் சீட்டு விற்ற பணம் இப்படி உபயோகமாகும் என்று தெரிந்தால், தமிழ்நாட்டில் தினசரி குலுக்கலுக்கு ஆதரவுப் பிரச்சாரம் செய்ய இதோ இப்போதே புறப்படத் தயார்.

பரிசுச் சீட்டு விற்பனை தவிர இன்னொரு சுவாரசியமான முறையிலும் ஓவியக் கூடங்களுக்குக் கலைநயம் மிகுந்த படைப்புகள் வந்து சேர்கின்றன.

பெரிய பிரபுத்துவக் குடும்பங்கள் வாரிசு வரி, வருமான வரி முழுமையாகக் கட்ட முடியாமல் போனால், குடும்பச் சொத்தாகச் சேர்த்து வைத்த சிறப்பான ஓவியங்களை நிபுணர்களைக் கொண்டு மதிப்பிட்டு, வரிப் பணத்துக்கு ஈடாக அரசாங்கத்துக்குக் கொடுத்துவிடுகிறார்கள். அதெல்லாம் ஓவியக் கூடங்களுக்குள் பத்திரமாக இடம் பிடித்து மக்கள் சொத்தாக மாறுகிறது.

தொழிற்கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி, லிபரல் டெமாக்ரேட் கட்சி என்று யார் ஆட்சியைப் பிடித்தாலும் இங்கிலாந்தில் இதெல்லாம் தங்குதடையில்லாமல் தொடரும்.

இந்தியாவில்? தில்லி லலித்கலா அகாதமியில் ஓவியம் வாங்க அரசு ஒதுக்கிய பணம் செலவானதை, தண்டச் செலவு என்று குற்றம் சொல்லி, அங்கே இருந்த கலைப் பொருட்களையும் விற்றுக் கடாசிவிடத் துடித்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி நினைவுக்கு வருகிறார். நமக்குக் கொடுத்துவைத்தது இந்த மாதிரித் தலைவர்களைத்தான்.
8888888888888888888888888888888888888888888888888888888

இங்கிலாந்து அரசின் கலை ஆதரவு கொஞ்சம் அதிகமாகவே தாராள மயமாகியிருப்பதை மாடர்ன் ஆர்ட் காலரியின் pop art பகுதியில் உணர முடிந்தது.

நாலடிக்கு மூன்றடி பரப்பில் முதல் ஓவியம். ஓவியம் என்பதை விட ஒரு நீள்சதுரம், உள்ளே வட்டத்துக்குள் சில எழுத்துக்கள், அப்புறம் வரிசையாக மற்றவை. கீழே இன்னொரு செவ்வகம்.

முதல் வட்டத்துக்குள் பெரிய எழுத்தில் ‘கோழி முட்டை’.

அடுத்த வரிகளில்

பாரசெட்டமால் 200 மில்லிகிராம்
க்வாய்பெனிசின் 100 மில்லிகிராம்
பினைல்ஃபின் ஹைட்ரோக்ளோரைட் 5 மில்லிகிராம்
குழந்தைகள் கையில் கிடைக்காதபடி பாதுகாப்பாக வைக்கவும்.
இருபத்தைந்து டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையில் சேமிக்கவும்.
ஒரு வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு சாப்பிடவும்.
பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகவும்.

அப்புறம் செவ்வக வடிவில் - தயாரிப்பாளர் ஜெனிஃபர் ஆன்

மருந்து பாட்டில் மேல் ஒட்டிய காகிதம், மாத்திரை உறை இப்படி ஒரு ஐம்பது லேபல்களை enlarge செய்து ஓவியம் என்று மாட்டிய கண்காட்சி. ஸ்காட்டிஷ் பெண் ஓவியரின் படைப்புகள் எல்லாம். எல்லா ஓவியத்திலும் மருந்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் தினசரி வாழ்க்கையில் உபயோகமாகிற ஒரு பொருளின் பெயர். தயாரித்த மருந்துக் கம்பெனியின் பெயரும் முத்திரையும் இருக்க வேண்டிய இடத்தில் ஓவியரின் பெயர்.

இந்தக் கண்காட்சிக்கான அறிமுகக் குறிப்பில் இருந்து புரிந்து கொண்டது - பொழுதுவிடிந்து பொழுது போனால் உபயோகப்படுத்தும் ஒரு பொருளை, அதேபோல் பயன்படுத்தப்படும் ஆனால் முழுவதும் யாரும் பார்க்க நேரம் இருக்காத இன்னொரு பொருளோடு இணைத்து, வாழ்க்கை அனுபவத்தின் ஆழங்களை அலச முற்படுகிறார் ஓவியர்.

லண்டன் டேட் காலரியில் பாப் ஆர்ட்டாக வைத்திருப்பதில் ஒரு பகுதி - அழுக்கான அசல் கழிப்பறைப் பீங்கான், உபயோகித்த சுவட்டோடு சிறுநீர் கழிக்கும் கோப்பை, தகர டப்பாவில் கொஞ்சம் நரகல், அப்புறம் வாடை எல்லாம் கழிந்து போக எதிரே ஒரு பெரிய மின்விசிறியின் ஓவியம்.

இப்படியெல்லாம் இல்லாமல், சாதுவாக மருந்துச் சீட்டை ப்ரேம் போட்டு மாட்டி வைத்த எடின்பரோ பாப்-ஆர்ட் ஓவியர் வாழ்த்தப்பட வேண்டியவர்.

Sunday, May 14, 2006

எடின்பரோ குறிப்புகள் – 16

எதிர்பார்த்தபடிக்குத்தான் தேர்தல் முடிவுகள். அதாவது, இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்.


பிரதமர் டோனி ப்ளேரின் தொழிற்கட்சி கணிசமாக அடி வாங்கிக் கட்டுப் போட்டுக்கொண்டு அ-இ-சகஜம்ப்பா என்று க.மணி டயலாக்கை டப்பிங்கில் எடுத்துவிட்டபடி நாளை எண்ணிக்கொண்டிருக்கிறது. லண்டன் இந்துக் கோவிலுக்குப் போய் அம்மன் சந்நிதி பூசாரி மந்திரித்துக் கொடுத்த சிவப்பு மஞ்சள் கயிற்றை வலது மணிக்கட்டில் அணிந்தபடிக்கு நாடாளுமன்றத்தில் மைக்கைப் பிடித்துப் பேசிக்கொண்டிருக்கும் ப்ளேர் புகைப்படங்களில் தலை நரைத்துப் போய்த் தளர்ந்து காணப்படுகிறார். வாட்டர்கேட் ஊழல் உச்சத்தில் பத்திரிகையில் வெளிவந்த ரிச்சர்ட் நிக்சனின் அலுத்துப்போன முகம் ஏனோ

நினைவுக்கு வருகிறது.


ப்ளேர் அவசர அவசரமாக அமைச்சரவையை மாற்றி அமைத்ததில் உள்கட்சி அதிருப்தி கூடியது தான் மிச்சம். வெளிநாட்டு கிரிமினல்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து பிரிட்டீஷ் சமூகத்தில் இரண்டறக் கலக்க சந்தர்ப்பம் கொடுத்த உள்துறை அமைச்சர் கிளார்க் நீக்கப்பட்டு இருக்கிறார். டோனியை வெளிப்படையாகச் சபித்துக்கொண்டே இறங்கிப்போன இவர் தவிர, டயரிக் காரியதரிசியோடு ஆபீஸ் நேரத்தில் சல்லாபம் செய்த காமாந்தகார உதவிப் பிரதமர் ஜான் பிரஸ்காட் காமன்ஸ் சபைத் தலைவர் பதவிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட காரியதரிசியம்மா ட்ரேசி டெம்பிள் தன் சொந்த டயரிகளை டெய்லி மெயில் பத்திரிகைக்கு ரெண்டரை லட்சம் பவுண்டுக்கு விற்றுக் காசு பார்த்து விட்டார். நீள அகலம் கூடிய பிரஸ்காட்டின் சொந்த sausage பற்றி, ஒரே ராத்திரியில் நாலு தடவை பற்றி எல்லாம் இவர் தன் டயரியில் எழுதியதை எடிட் செய்துவிட்டுப் பத்திரிகையில் பிரசுரித்ததைப் படிக்க யாரும் தயாராக இல்லை. அப்படியே அச்சுப்போட்டாலும், யாருக்கு வேணும் இதெல்லாம்?


உள்ளாட்சித் தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சி கொஞ்சம் போல் பலத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறது. கவலை தரும் ஒரே செய்தி, பிரிட்டீஷ் தேசியக் கட்சியான பி..என்.பி லண்டனில் பார்க்கிங் பகுதி மற்றும் யார்க்ஷயரில் கணிசமாக வெற்றி பெற்றிருப்பதுதான்.


இங்கிலாந்து வெள்ளையருக்கே என்று மண்ணின் மைந்தர்களுக்காக முழக்கமிடும் பி.என்.பி இன்னும் வளர்ந்தால், இந்தியனே வெளியேறு, பாகிஸ்தானியே வெளியேறு, கூடவே பங்களாதேஷ், கென்யா, மொசாம்பிக், ஜிம்பாவேக்காரனே எல்லாரும் ஒட்டுமொத்தமாக வெளியேறுங்கள் என்று இவர்கள் சிவசேனா ஸ்டைலில் உக்ரமாக ஆரம்பித்து விடலாம்.


ஏற்கனவே வெளிநாட்டு (அதாவது இந்தியத் துணைக்கண்ட) மருத்துவர்கள் வருகைக்குக் கணிசமான தடை வந்துவிட்டது. தகுதி குறைந்தாலும், பிரிட்டீஷ் மருத்துவர்களைத்தான் காலியாகிற வேலைகளுக்கு எடுக்க வேண்டும் என்று சட்டத்தைத் திருத்தி எம்.ஆர்.சி.எஸ் எஃப்.ஆர்.சி.எஸ் படிக்கக் கிளம்பி வந்து பார்ட்-டைம் உத்தியோகத்தில் இருக்கும் இந்திய டாக்டர்களை ஊரைப் பார்க்க அனுப்பிக் கொண்டிருக்கிறது ப்ளேரின் அரசாங்கம்.


முன்னூறு வருடமாக நம்மைச் சுரண்டியவர்களளால், சுரண்டப்பட்டவர்கள் ஒரு ஐம்பது வருடம் நியாயம் கேட்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

88888888888888888888888888888888888888888888888888888


இங்கேயும் கவிஞர் சந்திப்பு உண்டு. நம்ம பக்கம் போல் போஸ்ட் கார்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டாங்கிப்பட்டியில் கவிஞர் கூடல் நடக்கிறது. தவறாமல் வந்து சேரவும் என்று அழைப்பு அனுப்பி, கிடைத்த பெண் கவிஞர்களை அரண்டு மிரண்டு அந்தாண்டை ஓடிப்போக வைக்கிற சமாச்சாரம் இல்லை இது.

மூன்று மாதம் முன்னால் முறையாக அறிவிக்கப்பட்டு, ராயல் ஸ்காட்டிஷ் அகாதமியில் கவிஞர் சந்திப்பு. கவிதை வாசிப்பு.

எங்கேயும் இந்த மாதிரி விஷயங்களுக்கு ஆஜராகிற முப்பது சில்லரை பேர்தான் இங்கேயும். அடுத்த தடவை சப்ஜாடாக முப்பது ஜோல்னாப்பை சென்னை காதி கிராமயோக் பவனில் வாங்கி வந்து இவர்கள் எல்லோருக்கும் அன்பளித்து ஒரு high-brow இலக்கிய ரசனை அட்மாஸ்பியரை உருவாக்க மனதில் முடிச்சு போட்டுக் கொண்டானது.

ஸ்காட்லாந்துக்காரரும், சமகால பிரிட்டீஷ் கவிஞர் நாவலாசிரியர்களில் முக்கியமானவரானருமான John Burnside கலந்து கொண்டு கவிதை வாசித்தார். அண்மையில் வெளியாகிப் பரவலாகப் பேசப்படும் அவருடைய சுயசரிதப் படைப்பான Lying about my father பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஸ்காட்லாந்தின் தனி மனித சமூக வாழ்க்கையில் ஊடும் பாவுமாகப் பின்னிப் பிணைந்த குடிப்பழக்கத்தைப் பற்றி, அதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் குடும்ப உறவுகளைப் புறக்கணித்த தன் அப்பா பற்றி, அவரைத் தீர்த்துக்கட்டத் தெருமுனையில் கத்தியோடு ஒளிந்திருந்த தன் பனிரெண்டு வயதுக் கொலைவெறி பற்றி எல்லாம் சிறப்பாக ஜான் பர்ன்சைட் எழுதியிருப்பதாக விமர்சகர்கள் ஒருமுகமாகப் பாராட்டுகிற புத்தகம் இது.

ஜான் கவிதை வாசிப்புக்கு முன்னுரையாக தாட்டியான ஒரு அம்மையார் மெய்சிலிர்த்த நிலையில் பேசினார் - இந்த நாள் நமக்கெல்லாம் மறக்க முடியாத தினம்; இன்றைக்கு உலகில் சுவாசித்துக் கொண்டிருக்கும் கவிஞர்களிலேயே தலைசிறந்த ஜான் இங்கே நம்மோடு இருக்கிறார். அவருடைய புகழ் பெற்ற கவிதைகளை அவருடைய சொந்தக் குரலில் வாசிக்கிறார். கனவா நினைவா இது? என்று plattitude-களைத் தொடர்ந்து தட்டி விட்டபடி இருக்க, ஜான் கொஞ்சம் கூச்சத்தோடு கவிதை வாசித்தார். அவர் முடித்த பின்னும் இந்தக் காக்கைத் தம்புராட்டி அவருக்கு ஆயிரத்தெட்டுப் போற்றி சொல்லி அர்ச்சனை செய்யத் தவறவில்லை. எல்லா ஊரிலும் கவிஞர்களுக்குச் சாபம் காக்கைகள் தான்.

ஜான் பர்ன்சைடைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆங்கிலக் கவிஞர் Brian Johnstone கவிதை வாசிக்க எழுந்தபோது முப்பது பேரில் பத்து பேர் பிரின்சஸ் தெருப்பக்கம் நடையைக் கட்டினார்கள்.

பர்ன்சைடை விடக் கம்பீரமான குரல் ப்ரையனுக்கு. வயதும் அதிகம். கோட்டும் சூட்டும் ஆறடி உயரமுமாக ஒரு கனவான் தோரணை. அவர் வாசித்த கவிதையில் அந்தத் தோரணை ஏதும் இல்லாமல் சட்டென்று மனதில் பதிந்தது.

இது போன்ற சமயங்களில்

கண்ணாடிக்குள் இருந்து

என் அப்பா உற்றுப் பார்க்கிறார்.

இறந்துபோய் இருபது வருடம் ஆனாலும்,

கண்ணாடிக்குள் தட்டுப்படும்

என் இன்னொரு முகமாக வளர்ந்தபடி.

என் முகத்தில் வளர்ந்த

அவர் தாடி ரோமத்தை மழிக்கிறேன்.

அவர் நடையை நடக்கிறேன்.

அவருடைய வேகத்தில் ஓடுகிறேன்.

அவருடைய நிர்வாணம்

பருத்துக்கொண்டிருக்கும் என் உடம்பை உலுக்குகிறது.

மற்றவர்களும்கூட அவரை என்னில் பார்க்கிறார்கள்

புகைப்படங்களில், தெறித்து நகரும் பார்வையில்,

உள்கண் மெல்லத் திரும்பும்போது

என் கூடவரும் பயணியாக.

அவருடைய எதிரொலிகள்

உண்மையானவை என்ற மரியாதையோடு

அந்தக் கையைப் பற்றுகிறேன்.

நான் புரிந்துகொள்ளாமல்

சண்டை போட்ட அவருடைய ஆவியை

என்னுள் வாங்கிக்கொள்கிறேன்.

ப்ரையன் ஜான்ஸ்டோனிடம் பேசிக்கொண்டிருக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. தென்னிந்திய எழுத்தாளன் என்றதும் தமிழ் தானே, கிரேக்க மொழியை விடப் பழையது இல்லையா, அதில் எழுத நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர் என்றார். எழுத்து, தொழில் பற்றி ஆர்வமாக விசாரித்தார். மறு விசாரிப்பில் அவர் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்று தெரிந்தது.

The Lizard Silence என்ற தன் கவிதைத் தொகுதியைக் கையெழுத்துப்போட்டுக் கொடுத்துவிட்டு ஐன்ஸ்டின் போல் தலைமுடியும், நரைத்த கட்டை மீசையுமாக டயோடா காரில் கிளம்பிய ப்ரையன், மனதில் படிந்திருந்த ரிடையர்ட் எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார் பிம்பத்தை அதிரடியாகத் திருப்பிப் போட்டுவிட்டார்.

88888888888888888888888888888888888888888888888888888888888888


ஐ-பாட் உருவாக்கி மில்லியன் டாலர் கணக்கில் பணத்தை அள்ளும் ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனிக்கும், அந்தக்கால இசைக்குழுவான பீட்டில்ஸ்களுக்கும் டிரேட்மார்க் சம்பந்தமாக நடந்த வழக்கில் அமெரிக்க உயர்நீதிமன்றம் கம்ப்யூட்டர் கம்பெனி சார்பில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் கம்ப்யூட்டர்துறை வல்லுனர் திரு கய் கீவ்னி அவர்களே?

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் பார்க்கும் பி.பி.சியின் நியூஸ்-24 நிகழ்ச்சியில் போன வாரம் ஒரு பேட்டி.

அது என்ன கேசோ என்ன எளவோ தெரியாதுப்பா. உள்ளே வாய்யான்னு இங்கே கூட்டி வந்தாங்க. வந்தேன். அம்புட்டுத்தான்.

கம்ப்யூட்டர் நிபுணர் படு காஷுவலாகச் சொல்கிறார்.

நேர்முகப் பேட்டி காண்கிற அறிவிப்பாளர் ஒரு வினாடி திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்க்க, பேட்டிக்காக வந்து சேர்ந்து பி.பி.சி அலுவலக வரவேற்பறையில் உட்கார்ந்து டெலிவிஷனில் இதைப் பார்த்த அசல் கம்ப்யூட்டர் நிபுணர் கய் கீவ்னியும் திகைத்துப் போகிறார். குத்துக் கல்லாட்டம் இங்கே நான் உக்காந்திருக்கேன் இது பற்றி விலாவாரியாப் பேச. அங்கே என் பெயர்லே யாருய்யா பேட்டி கொடுக்கறது?

விஷயம் இதுதான். பேட்டிக்காக இந்தக் கம்ப்யூட்டர்காரர் டாக்சி பிடித்து தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்து சேர்ந்து ஒரு பக்கம் காத்துக் கொண்டிருக்கிறார். அவரைக் கொண்டுவந்து விட்டுவிட்டுத் திரும்பிப் போய்க்கொண்டிருந்த டாக்சி டிரைவர் பெயரும் கய் தான்.

இங்கே யாருப்பா கய் என்று ஸ்டூடியோவிலிருந்து வெள்ளையும் சள்ளையுமாக ஒருத்தர் வந்து விசாரிக்க நான் தானுங்க என்று டிரைவர் அடுத்த சவாரிக்கு ஆயத்தமாக முன்னால் வந்து நிற்க, அவரை உள்ளே தள்ளிக்கொண்டு போய் காமராவைப் பார்க்கவைத்து விட்டார்கள்.

அடுத்த மாதம் மன்மோகன்சிங்க் வரப்போவதாகச் சொன்னார்கள். பி.பி.சியில் சௌத்ஹால் பகுதி கறிகாய் மொத்த வியாபாரம் செய்யும் குர்னாம் சிங்க்கைக் கூப்பிட்டு காஷ்மீர் பிரச்சனை பற்றிக் கேட்காமல் இருந்தால் சரிதான்.

888888888888888888888888888888888888888888888888888888888

அடுத்த கேரள முதல்வர் அச்சுதானந்தனா பிணராய் விஜயனா என்று இதைப் படிக்கும் வேளையில் தெரிந்திருக்கும்.

வல்யம்மை கௌரியம்மா, லீடர் கருணாகரனின் மகன் முரளி, குஞ்ஞாலிக்குட்டி, கேரள காங்கிரஸ் பாலகிருஷ்ண பிள்ளை என்று பெருந்தலைகள் எல்லாம் தோற்றுப்போக, மூணில் ரெண்டு பங்கு பெரும்பான்மையோடு இடது முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் எண்பத்து மூணு வயது அச்சுதானந்தனின் அசுர உழைப்பு. உக்ரன் பிரசங்கங்கள்.

மே பதினைந்தில் கூடும் சி.பி.எம் பொலிட்பீரோ யோகம் யாரை முக்ய மந்திரியாக்கும் என்று காத்திருப்பு தொடர்கிறது.

நோக்கிக்கோளின் சகாவே. நம்முடெ ஸ்வந்தம் பிரகாஷ் கராத் வராம் போகுன்னு

லண்டனிலிருந்து நண்பர் தொலைபேசினார்.

அறிஞ்சு கூடா சேட்டா. பிரகாஷ் கராத்தோ இல்லை அவருடைய மனைவி பிருந்தா கராத்தோ, யார் தெற்குப் பக்கம் நகர்ந்தாலும், மன்மோகன்சிங் தலைப்பாகைக்குள் கொஞ்சம் குத்துவலி குறையலாம்.

Sunday, May 07, 2006

எடின்பரோ குறிப்புகள் – 15

எடின்பரோ கோட்டைக்குத் தெற்கே நீண்டு வளைந்து உயரும் ராயல் மைல் தெருவில் பழைய பட்டணம் தொடங்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கருப்புப் பட்டணமாக விரிந்த சென்னை ஜார்ஜ் டவுண் போல காலம் உறைந்து நிற்கும் சுற்றுப்புறங்கள். மூதாதையரின் மூச்சுக் காற்றின் வாடை இன்னும் கூடத் தீர்க்கமாக புலனை ஊடுருவி, மனதின் திசைகளை உள்வளைத்து ஒரே முகமாகத் திருப்பும் வீதி இது. போதாக்குறைக்குத் தெருவில் ஏதாவது ஒரு ஓரத்தில் ஸ்காட்லாந்து தேசிய உடையணிந்த இசைக் கலைஞர்கள் தேசிய இசைக்கருவியான Bagpipe இசைத்தபடி நின்று, கொஞ்ச நஞ்சமிருக்கும் காலப் பிரக்ஞையையும் உதிர்ந்துபோக வைக்கிறார்கள்.

ஆங்கில இலக்கியம் என்றதும் நினைவு வரக்கூடிய வால்டர் ஸ்காட்டின் இல்லம், புதையல் தீவு புதினம் மூலம் குழந்தை இலக்கியத்தில் தடம் பதித்த ஆர்.எல்.ஸ்டீவன்சன் வசித்த இடம் என்று அங்கங்கே கல்லில் பொறித்து வைத்த அறிவிப்புப் பலகைகளை வாசித்தபடி நடந்தால், பதினெட்டாம் நூற்றாண்டு எடின்பரோவின் மிச்சமான ஒரு கட்டிடம் முன்னால் முன்னூறு வருடம் முந்தைய நீர்வழங்கு நிலையம். எடின்பரோ நகரத்தில் தண்ணீர்ப் பஞ்சம் வந்த அந்தக் காலத்தில் நடுராத்திரிக்குத் தண்ணீர் வழங்கத் தொடங்கி பின்னிரவில் இரண்டு மணிக்கு நிறுத்துவார்களாம்.

இருபது வருடம் முன்னால் புழலேரி வரண்டபோது, சென்னை மாநகராட்சி தண்ணீர் வழங்கிய நேரம் இந்த ராத்திரி 12 – 2 மணி. தூக்கமும் கெடாமல் தண்ணீரும் கிடைக்க, சென்னை மேல் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள் கடைப்பிடித்த அதே வழியைத்தான் முன்னூறு வருடம் முந்திய எடின்பரோ மேட்டுக்குடியும் கடைப்பிடித்திருக்கிறது. நடுராத்திரியில் சர்க்கார் கொடுக்கிற தண்ணீருக்காகக் காத்திருந்து வாங்கி வந்து வீட்டுத் தொட்டியில் நிரப்ப, கூலி கொடுத்து ஆட்களை அமர்த்தியிருக்கிறார்கள்.

இதை எழுதி வைத்த தகவலைச் சுவாரசியமாகப் படித்தபடி மேற்கே நடையை எட்டிப்போட, பிரம்மாண்டமான ராபர்ட் ஹ்யூம் சிலை. தத்துவ மேதையும் வரலாற்றாசிரியருமான ஹ்யும் துரை ரூசோ போன்ற பிரஞ்சுப் புரட்சியாளர்களின் நண்பர். இந்த எடின்பரோ பிரமுகரின் அற்புதமான சிற்பத்துக்கு தற்கால எடின்பரோ இளைய தலைமுறை ஒரு பரிசு வழங்கியிருக்கிறது. பதினைந்து இருபது அடி சிலையின் தோளைப் பிடித்து ஏறி, ராபர்ட் ஹ்யூமின் தலைக்கு மேல் போக்குவரத்தை ஒழுங்கு செய்யத் தெருவோரம் வைக்கப்படும் பல வண்ண பிளாஸ்டிக் டிராபிக் கூம்பைக் கவிழ்த்திருக்கிறார்கள். கழுத்தில் காலி பியர் பாட்டிலைக் கட்டித் தொங்க விடாததுதான் பாக்கி.

இந்த vandal பிசாசுகளின் வம்சம் விருத்தியாகாமல் போகட்டும் என்று சபித்தபடி நடக்க, எடின்பரோவில் உலவும் மற்ற பிசாசுகளைக் காட்டித்தரத் தயாராக நிற்கிற தரகர்கள் துரத்துகிறார்கள். எல்லாமே முன்னூறு, நானூறு வருடத்துக்கு முந்திய நிஜப் பிசாசாம்.

அழுக்குக் கோட்டும் தாடியுமாக ஒரு கிழவர் கையில் வைத்திருந்த பைலை நீட்டிப் புரட்டிப்பார்க்கச் சொல்கிறார். எந்த எந்தப் பேயை யார் யார் எந்தக் கிழமையில் பார்த்தார்கள் என்ற தகவல் அதெல்லாம். போன மாதம் எட்டாம் தேதி முன்னிரவில் ஒரு இருபது அடி தள்ளி நிலத்தடிப் பேழைப் பக்கமாகத் தட்டுப்பட்ட பேய் தான் லேடஸ்ட் ghost appearance. நாலு பவுண்ட் கொடுத்து கிழவரோடு நடந்தால் இப்பவும் கணிசமான பேய், பிசாசு, ரத்தக் காட்டேறி வகையறாக்கள் கண்ணில் பட வாய்ப்பு இருக்கிறதாம்.

சரி, பெரிசு. ராத்திரி ஏழு ஏழரையைப் போல சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வரேன்,போகலாம். அட நில்லுப்பா, ஏழு மணி வரைக்கும் என்னாத்துக்குக் காத்துக்கிடக்கணும்னேன். இப்பவே நடையைக் கட்டலாம். கிளம்பு.

சாயந்திரம் நாலு மணிக்கு மேட்னி ஷோ நடத்த எந்தப் பிசாசு வரும் என்று சந்தேகத்தைக் கிளப்ப, இப்படி விஷயம் தெரியாத பிள்ளையாக இருக்கியே என்று ஒரு பார்வை.

இந்தப் பக்கம் நூறு வருஷத்துக்கு முந்தின பியர்க்கடை இருக்கு பார், அங்கே ஒரு பைண்ட் வாங்கி ஊத்திட்டு அடுத்த கடைக்கு பத்து மினிட் நடந்தா அடுத்த பைண்ட், வழியிலே ஹலோ சொல்ல ஒரு பிசாசு. அப்புறம் அடுத்த நூறு வருச மது. பக்கத்துலே அழகான ஆவியா அலையற மாது. கிளம்புப்பா.

அமாவாசைக்கு வரேன் பெரிசு என்று பிய்த்துக்கொண்டு கிளம்ப வேண்டிப் போனது.
8888888888888888888888888888888888888888888888888888888888888888

எழுத்தாளர்கள் அருங்காட்சியகமான ராயல் மைல் ரைட்டர்ஸ் மியூசியத்தில் நுழைய, நாவலாசிரியர் வால்டர் ஸ்காட் எழுத உபயோகித்த மேஜை, நாற்காலி, அலமாரி.

அந்த தேக்கு அலமாரிக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. பகலில் உன்னதமான தச்சுக் கலைஞனாகவும், இரவில் கொடூரமான கொள்ளைக்காரனாகவும் இருந்து பிடிபட்டு, நகர மத்தியில் தூக்கிடப்பட்ட ஒரு எடின்பரோக்காரன் உருவாக்கியதாம் அது.

வால்டர் ஸ்காட் பங்குதாரராக இருந்து நடத்திய அச்சகம் திவாலாகி, தன் வழக்கை நடத்திய வழக்கறிஞருக்கு வக்கீல் ஃபீசுக்குப் பதிலாக ஸ்காட் கொடுத்த டைனிங் டேபிள், நாற்காலிகள் ஒரு அறை முழுக்கப் பரத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. முழு உருவ பிளாஸ்டர் ஓஃப் பரீஸ் சிற்பமாக நாற்காலியில் உட்கார்ந்து இன்னும் சாப்பிட ஆரம்பிக்காத வால்டர் ஸ்காட். அறைக்கு வெளியே கண்ணாடிப் பேழைகளில் ஸ்காட்டின் கையெழுத்துப் பிரதிகள், குடை, உடுப்பு, காலணி, துப்பாக்கி.

அவருடைய அச்சகத்தைக்கூட விட்டுவைக்கவில்லை. அந்தப் பழைய பிரிண்டிங்க் மிஷினை மாடியில் ஒரு அறையில் அப்படியே அலுங்காமல் நலுங்காமல் எடுத்து வைத்திருக்கிறார்கள்.

கவிஞர் ராபர்ட் ப்ரவுண், நாவலாசிரியை டோரதி பார்க்கர், ஆர்.எல்.ஸ்டீவன்சன் என்று எடின்பரோ படைப்பாளிகள் ஒவ்வொருவர் பற்றியும் வால்டர் ஸ்காட் நினைவகம் போலவே பார்த்துப் பார்த்து நேர்த்தியாக அமைத்து வைத்த காட்சிப் பொருள்கள். எழுதிச் சம்பாதிப்பதில் உலக அளவில் உச்சத்தில் இருக்கும் இன்னொரு எடின்பரோ பெண் எழுத்தாளருக்கும் இன்னும் கொஞ்ச நாளில் இங்கே இடம் ஒதுக்கப்படும். ஹாரி பாட்டரைப் படைத்த ஜே.கே.ரவுலிங் தான் அவர்.

ஆனாலும், பின் நவீனத்துவத்தைத் தன் படைப்புகளால் செழுமைப்படுத்தி, போன மாதம் காலமான முதுபெரும் எடின்பரோ எழுத்துக்காரி மூரியல் ஸ்பார்க் இந்த எழுத்தாளர் மியூசியத்தில் இப்போதைக்கு இடம் பெறுவார் என்று தோன்றவில்லை.
8888888888888888888888888888888888888888888888888888

ராயல் மைலிலிருந்து, தெற்குப் பாலம் வழியாகத் திரும்பினால், ஐந்தே நிமிடத்தில் எடின்பரோ பல்கலைக் கழகம். எதிரே சேம்பர் வீதியில் சோழர்காலச் சிற்பங்கள் வைத்த ராயல் மியூசியம். அதற்கும் முன்னால் நிக்கல்சன் தெருவில் புராதனமான எடின்பரோ அறுவை சிகிச்சை மருத்துவக் கல்லூரி. இதன் தொடக்ககால மாணவர்கள் – ஆசிரியர்கள் முடிதிருத்தக் கலைஞர்கள். அந்தக்கால வழக்கப்படி இவர்களே சிகையலங்காரத்தோடு அறுவை சிகிச்சையும் நடத்தி வந்தவர்கள்.

கல்லூரிக்கு எதிரே, முகப்பு மட்டும் புதுப்பிக்கப்பட்ட இன்னொரு பழைய கட்டிடமான பெஸ்டிவல் தியேட்டர். பண்டிகைக் கொட்டகையில் கூட்டம் அலைமோதுகிறது. நாலு நாள் மட்டும் இங்கே ஆங்கில தேசிய பாலே கழகம் நடன நிகழ்ச்சி நடத்துகிறது. பாலே என்றாலே நினைவு வரும் ‘அன்னப் பறவைகளின் ஏரி’.

ரஷ்ய இசைமேதை ஷைகோவ்ஸ்கியின் அற்புதமான இசையமைப்பில் உருவான Swan Lake பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தின் மகத்துவம் பற்றி மனதிலிருந்து அப்படியே எடுத்து எழுதினாலும் cliché கலந்துவிடும் என்பதால் தவிர்க்கவேண்டிப் போகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒரு பான் – ஐரோப்பியக் கலை நிகழ்வு ஸ்வான் லேக். ஜெர்மனியப் பழங்கதை. நாடக – நாட்டிய ஆக்கம் பிரஞ்சு முறையில். மேற்கத்திய மரபிசைப்படி இதற்கு இசைவடிவம் கொடுத்தவர் ரஷ்யரான ஷைகோவ்ஸ்கி. அவர் காலத்துக்குப் பிறகு இதை அமர காவியமாக்கியது சோவியத் யூனியனின் பாட்டாளி வர்க்கக் கலை வெளிப்பாட்டின் உன்னதக் குறியீடான, உழைக்குள் மக்களின் கலைக் கழகம் - போல்ஷாய் தியேட்டர்.

கொடூரமான மந்திரவாதி வான் ரோத்பார்ட். அவன் அன்னமாக உருமாற்றிய பேரழகி ஓடேட். கூடவே மற்ற அன்னப் பறவைகளான அவளுடைய தோழியர். இந்தப் பெண்களின் பெற்றோர் வடித்த கண்ணீர்ப் பெருக்கில் உருவான ஏரியில் சோகத்துடன் நீந்தும் அன்னப் பறவைப் பெண்கள் ராத்திரிக் காலங்களில் மட்டும் மனித உருப் பெறுகிறார்கள்.

அன்னப் பறவை ஏரிப்பக்கம் வந்த அரச குமாரன் சிக்ஃப்ரைட் இரவில் மானுடப் பெண்ணாகும் ஓடேட்டிடம் மனதைப் பறிகொடுக்கிறான். ஓடேட் மேல் உண்மையான காதலை அவன் நிரூபித்தால் அவளுக்கும் தோழியருக்கும் சாப விமோசனம் கிடைக்கும். அது நடக்க விடாமல் மந்திரவாதி தடுக்கிறான். தன் மகள் ஓடைல் என்ற இன்னொரு அழகியை ஓடேட் வடிவத்தில் அரச குமாரனை மயக்க வைக்கிறான். அப்புறம் – போதும், இணையத்தில் தேடினால் முழுக்கதையும் கிடைக்கும்.

நாலு விஸ்தாரமான காட்சிகள். குழு நடனமாகவும், தனி நடனமாகவும், ஜோடி நடனமாகவும் முப்பதுக்கு மேற்பட்ட நடனங்கள். கிட்டத்தட்ட ஐம்பது நடனக் கலைஞர்கள். ஓடேட் மற்றும் ஓடைல் பாத்திரங்களில் நடனமாடும் prima ballerina ஆன முதன்மை நர்த்தகி. வால்ட்ஸ், மார்ச், போல்கா, பாஸ்த் தெ தெக்ஸ், பாஸ் தெ ஆக்ஷன், பாஸ் தெ கெரக்தர் என்று நாட்டிய வகை, அமைப்புகள்.

இந்த நூற்றியிருபது வருடத்தில் ஸ்வான் லேக் கதையாடலில் துணிச்சலான சோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நாட்டிய அமைப்பிலும், காட்சியாக்கத்திலும் மாறுதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், ஷைகோவ்ஸ்கியின் இசை மட்டும் மாற்றமின்றி இன்னும் புத்தம் புதியதாகத் தொடர்ந்து வருகிறது. அந்த மேதையின் உழைப்பும் கலை நேர்த்தியும் ஒவ்வொரு இசைத் துணுக்கிலும் தெறித்துக் கிளம்பி மகத்தான ஓர் இசையனுபவத்தைக் கட்டி நிறுத்தும்போது மூன்று மணிநேரம் கடந்துபோனது தெரியாமல் நெக்குருகிப் போகிறோம்.

இசைக்கு அணி சேர்க்கும் விதத்தில் சோகம், மகிழ்ச்சி, பயம், குரூரம், கம்பீரம் என்று எல்லாப் பாவங்களோடும் அழகாகச் சுழன்றும், துவண்டும், கொடியாகத் துளிர்த்தெழுந்தும், அன்னமாக அசைந்து மேடைமுழுக்க நிறைந்து சூழ்ந்தும் நடனக் கலைஞர்கள். அழகான கறுப்பில் ஒரு ஆப்பிரிக்க நடனக்காரரும் அதில் உண்டு.

நாடகத்தின் கடைசிக் காட்சியில் அரச குமாரன் ஏரியில் குதித்து தன் தெய்வீகக் காதலை நிரூபிக்க, மந்திரவாதி மரணத்தைத் தழுவுகிறான். அன்னங்கள் நிரந்தரமாகப் பெண்களாக உருமாற, அரச குமாரனும், காதலி ஓடேட்டும் ஆவியாக சொர்க்கம் புகுகிறார்கள். போல்ஷாய் தியேட்டர் ஸ்வான் லேக் பாலே முடிவிலிருந்து இது வேறுபட்டது.

மாஸ்கோ போனாலும் போல்ஷாய் தியேட்டர் அன்னப் பறவைகளின் ஏரியை இப்போதைக்குக் காணமுடியாது. அங்கே மராமத்து வேலை நடக்கிறதாம். அது முடிந்தபிறகு, சோவியத் யூனியனின் சுவடு தெரியாமல், ரஷ்ய நாடு போல் அந்த அரங்கமும் உருமாறிப் போகலாம். அன்னப் பறவைகளுக்கும், ஷைக்கோவ்ஸ்கிக்கும், மக்கள்-சமூகக் கலை இலக்கிய வெளிப்பாடுகளுக்கும் இனியும் அங்கே இடம் இருக்குமோ தெரியவில்லை.
888888888888888888888888888888888888888888888888888888888888888

எடின்பரோ மட்டுமில்லாமல், இங்கிலாந்தில் முக்கிய நகரங்களில் எல்லாம் இலவசமாக விநியோகிக்கப்படும் பத்திரிகை மெட்ரோ. மாம்பலம் டைம்ஸ், மைலாப்பூர் டைம்ஸ் போல ஆனால் வாரம் ஒரு தடவை இல்லாமல், தினசரி இலவச சேவை.

காலையில் பஸ்ஸில் ஏறினால் ஒரு பெட்டி நிறைய வைத்து எடுத்துக் கொள்ளச் சொல்லி அன்போடு வழங்கப்படும் இந்த மெட்ரோ பேட்டைப் பத்திரிகை தானே என்று அலட்சியம் செய்யாமல், அரசியல், கலை, விளையாட்டுப் பெருந்தலைகள் அவ்வப்போது பேட்டி கொடுப்பதும் உண்டு.

மாம்பலம் டைம்சில் மன்மோகன் சிங்க் பேட்டி வருமோ என்னமோ, இரண்டு வாரம் முன்னால்தான் இவிடத்து மெட்ரோவில் பிரிட்டீஷ் பிரதமர் டோனி ப்ளேரின் பேட்டி வந்தது. நாலு நாள் முன்பு, மரியாதைக் கட்சித் தலைவர் ஜோர்ஜ் கேலவேயின் பேட்டி.

டோனி ப்ளேரைவிட, அவருடைய அடுத்த நிலை அமைச்சர் கார்டன் பிரவுன் சிறப்பானவர் என்று நினைக்கிறீர்களா என்று நிருபர் விசாரித்தபோது கேலவே கொடுத்த பதில் இது.

They both are the cheeks of the same arse.

எலக்-ஷன் நேரத்தில் என்னதான் எகிறினாலும் நம் அரசியல்வாதிகள் இப்படியெல்லாம் தெகிரியமாக நாக்கில் பல்லுப்போட்டுப் பேசமுடியாதாக்கும்.

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது