Saturday, August 27, 2005

'ரேடியோ அண்ணா, மதறாஸ் நாலு'

“சங்கக் கூட்டம் போயிருந்தேன். பஸ் கிடைக்காமல் நடந்தே வரேன்”, மேல் மாடியில் குடியிருக்கும் ஆந்திராக்காரர் படியேறி வந்தபடி சொன்னார்.

மகாசபைக் கூட்டமாக இருக்கும். ராவ்காரு, ரெட்டிகாரு, ராஜுகாரு எல்லாரும் அந்தக் கால ஆஸ்டின், மோரிஸ் மைனர் கார் தொடங்கி புத்தம்புது கொரிய, ஜப்பான் கார் வரை சவாரி செய்து வந்து இறங்கியிருப்பார்கள். ஓட்டுப் போட்டுவிட்டு ரங்காராவ், ராமாராவ் மாதிரி கணீர் குரலில் நாட்டு நடப்பு பேசியிருப்பார்கள். அப்புறம் குண்டூர் மிளகாய் மணக்கும் கோங்குராவும், ஆவக்காயும், பருப்புப் பொடியும், புளிக்கீரையுமாக விருந்தெல்லாம் அமர்க்களப்பட்டிருக்கும். அந்த மிளகாயின் உச்ச எரிசக்தியில் ராக்கெட் போல் பறந்தே வந்திருக்கலாமே. பஸ் எல்லாம் எதற்கு?

சாப்பாட்டுக்காக இல்லையாம் கூட்டம். ரேடியோ அண்ணாவைச் சந்திக்கத்தானாம். ரேடியோவில் அந்த அண்ணகாரு - அன்னய்யா குழந்தைகள் நிகழ்ச்சி நடத்திய காலத்திலிருந்து இவர் அவருக்கு விசிறியாம்.

மேல்மாடிக்காரரை உற்றுப் பார்த்தேன். கிட்டத்தட்ட அறுபது வயது இருக்கும். இவர் ரேடியோவில் பாப்பா மலர் கேட்ட அந்த ஆறிலிருந்து இந்த அறுபதுவரை மேற்படி ரேடியோ அண்ணா சிரஞ்சீவியாக இருக்கிறாரா என்ன?

“பின்னே இல்லியா? அவருக்கு இப்போ நூறு வயசு. செஞ்சுரி போட்டாச்சு. ஸ்டில் கோயிங் ஸ்ட்ராங்”

நூறு வயது அண்ணாவும் அறுபது வயது குட்டித் தம்பி தங்கைகளும் பழைய நினப்புடா தாத்தாண்டி பழைய நினைப்புடா என்று கோஷ்டி கானம் பாடினார்களா? இல்லை ‘சந்தமாமா ராரா’ என்று மழலைக் குரலில் அறுபது வயதைக் கரைத்து விட்டு ஆனந்தமாக கமர்கெட் சாப்பிட்டார்களா? ஊதல், தொப்பி, குடை ராட்டின சவாரி எல்லாம் இருந்ததா?

நான் கேள்விப் பட்டியல் தயார் செய்வதற்குள் அவர் மூட்டைப் பிடித்தபடியே மாடியேறிப் போய்விட்டிருந்தார்.

போனவாரம் தான் வழிதவறி என்னிடம் வந்து சேர்ந்த கடிதம் ஒன்று வானொலி நேயர் சங்கத்துக்கு சந்தாவைப் புதுப்பிக்கச் சொல்லிக் கேட்டிருந்தது. அது ஓர் அன்னிய நாட்டு வானொலியைக் கேட்கிற ரசிகர்களின் சங்கம். நாற்பது வருடமாகத் தொடர்ந்து கேட்கிறார்களாம். அடுத்த வாரம் ஆண்டு விழாவாம். சந்தாதாரர்களுக்குக் குலுக்கல் முறையில் வெட் கிரைண்டர், மூணு அடுக்கு இட்லிப்பானை, லெதர் பை பரிசு எல்லாம் உண்டாம்.

ஒன்றில்லை, பத்தில்லை, நாற்பது வருடமாக வானொலி கேட்கிறார்கள். சின்னப்பையனாகக் கிட்டிப்புள்ளும் கோலியும் விளையாடும் பிராயத்தில் ரேடியோ லைசன்ஸ் கட்டி, இந்த அன்னிய நாட்டு வானொலியை ஒரு சுபயோக சுபதினத்தில் கேட்கத் தொடங்கியிருப்பார்கள். படிப்படியாக அடுத்த கிளாசுக்குப் பாஸ் ஆகி, கிரிக்கெட் காமெண்டரி கேட்டு, குரல் திடப்பட்டு, மீசை அரும்பும்போது இந்த வானொலி கேட்பதில் எந்த அசுவாரசியமும் தட்டாமல் இன்னும் கேள் என்று ஈர்த்திருக்கும். வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு, கிடைத்து, முதல் கருப்பு வெள்ளை டெலிவிஷன் பெட்டி வாங்கி ‘புரியலை பேச்சு உன்னோடது’ என்ற வினோதமான மொழிபெயர்ப்பில் ‘ஹம்லோக்’ சீரியல் பார்க்கும்போதும் அன்னிய நாட்டு வானொலி மீது விருப்பம் குறைந்திருக்காது. அப்புறம் வண்ணத்தில் சின்னத் திரை விரிந்து, சேனல் டிவி சீரியல்கள் நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டாலும், இந்த வானொலி மீது பிரேமை தீவிரமாகத் தொடர்ந்திருக்கும்.

இங்கே ஒரு பிளாஷ்பாக் வைக்கலாம். நான் வானொலி கேட்டு வளர்ந்த கதைச் சுருக்கம்.

அப்போதெல்லாம் தீபாவளிக்குக் கூட நம்ம ஊர் வானொலியில் சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் தென்னூர்காரர்கள் "வாங்க கண்ணுச்சாமி .. ஹெ.. ஹெ.. இன்னிக்குத் தீபாவளியாச்சே .. சாப்பிட்டீங்களா .. விதர்பாவிலே சர்க்கரைத் தொழிற்சாலையைத் திறந்து வைத்து உணவுப் பொருள் உற்பத்தியிலே நம்ம நாடு தன்னிறைவு அடையணும்னு நம்ம பிரதமர் பேசியிருக்காரே...படிச்சீங்களா" என்று நாட்டு நடப்பு விவாதிப்பார்கள்.

ஸ்ரீவைகுண்டத்தார் கொஞ்ச நேரம் கழித்து பக்க வாத்தியத்தோடு கர்நாடக சங்கீதக் கச்சேரி செய்வார். சாயந்திரம் வாசகர் கடிதம் படிப்பார். ராத்திரியில் அகில பாரத நாடகத்தில் "பிரிஜேஷ் சர்மா, உங்களைத் தூக்கித் தயிர்லே போடணும்" என்று எந்த மொழியிலும் சிரிப்பு வராத ஜோக் அடித்து, கெக் கெக் என்று சிரிப்பார். அவர் குரலின் பலத்தில் தான் உள்ளூர் வானொலியே நடந்தது என்று தோன்றுகிறது.

கரபுரா சத்தத்துக்கு நடுவில் ஞாயிறு பிற்பகலில் கிரிக்கெட் விளையாடப் போகாமல், ஒரு மணி நேர சினிமா ஒலிச்சித்திரம் கேட்ட அந்தக் காலத்தில் கூட அண்டை நாட்டு வானொலி என்றால் ‘வணக்கம் கூறி விடைபெறும்’ வரை சினிமாப் பாட்டுப் போடும் இலங்கை வானொலி மட்டும்தான். அங்கே ‘ஸ்ரீலங்கா பத்திரிகையை ஒழுங்காக வாசியுங்கள்’, ‘பம்பலப்பிட்டியா ஜவுளிக்கடையில் பாவிக்கும் புடவைகள் கிடைக்கும்’ என்று விளம்பரங்கள் வரும். அவற்றின் சுவாரசியம், ஒலிபரப்பான பாட்டுகளின் சுவைக்குச் சற்றும் குறைந்தது இல்லை.

அந்தப் பொற்காலத்தில், பொழுது போகாமல் நீளும் விடுமுறை நாட்களில் பெரியவர்கள் பகல் தூக்கத்தில் மும்முரமாக இருக்கும்போது ரேடியோவில் முள்ளை நகர்த்தி பாண்ட் சுவிட்ட்சைத் திருகிச் சோதனை செய்ய வாய்ப்புக் கிடைக்கும். பிபிசியில் வயதானவர்கள் என்னமோ நாளைக்கே உலகம் முடிந்து விடப்போகிறது என்பது போன்ற கவலை குரலில் தெரிக்க, ஹெட் மாஸ்டர் இங்கிலீஷில் நடுநடுவே உஸ் உஸ் என்று மூச்சு விட்டபடி பேசித் தள்ளுவார்கள். எப்போதாவது கவாஸ்கர் நூறு ரன் அடித்த ரன்னிங்க் காமெண்டரி துண்டு துணுக்காகக் காதில் வந்து விழும். வாய்ஸ் ஓஃப் அமெரிக்காவிலும் வெள்ளைக்காரர்கள் தான். இது கொஞ்சம் வித்தியாசமான உச்சரிப்பில் ரயிலையோ, பஸ்ஸையோ, சந்திரனையோ பிடிக்கப் போகிற வேகத்தில் இருக்கும்.

நாற்பது வருடமாகச் சங்கம் வைத்துக் கேட்கிறார்களே, அந்த வானொலி நிலையமும் அவ்வப்போது கையில் மாட்டும். கிய்ங்க் முய்ங்க் என்று நீள நெடுகப் பேசுகிறது தவிர சங்கீதம் எல்லாம் மருந்துக்குக் கூடக் கிடையாது. அங்கே தமிழிலும் நிகழ்ச்சி நடத்துவார்கள். அதுவும் பேச்சுத்தான். புரட்சி, திட்டம், வளர்ச்சி, ஏகாதிபத்தியம், நெல் விளைச்சல் என்று கொஞ்சம் மூக்கிலிருந்து தமிழ் பேசுகிறதைப் பத்து நிமிடத்துக்கு மேல் கேட்கப் பயம். எதிரி நாட்டு ரேடியோவைக் கேட்டால் போலீஸ் பிடித்துக் கொள்ளும் என்று யாரோ எச்சரித்து வைத்திருந்த காரணம்.

அந்த ஒலிபரப்பைக் கேட்டு யாரும் தேசப்பற்றைக் கைவிட்டுவிடுவார்கள் என்று அப்போதோ, இல்லை நாற்பது வருடம் கழித்து இப்போதோ கூடத் தோன்றவில்லை.

வெற்றிகரமாகத் தொடரும் அந்த வானொலி ரசனைக்கு இட்லிப் பானையும் லெதர் பையும் மட்டுமென்ன? கூடவே டிரான்சிஸ்டர் ரேடியோ, டேப் ரிக்கார்டர், டெலிவிஷன் பெட்டி எல்லாம் பரிசாகத் தரலாம். அதே அந்நிய நாட்டில் உற்பத்தியாகி, இங்கே கொட்டிவைத்து விற்கப்படுகிறவை.

தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி - ஆகஸ்ட் 7, 2005

Friday, August 26, 2005

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

சென்னை மகாலிங்கபுரம் கிருஷ்ணன் அம்பலத்தில் சற்று நேரம் முன் தொழுது வந்தேன்.

செத்தி மந்தாரம் துளசி
பிச்சக மாலகள் சார்த்தி
குருவாயூரப்பா நின்னெ கணிகாணேணம்.

நான் போன நேரம் கண்ணனுக்குத் திருமஞ்சன வேளை.

தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்துபோய் பொன்முகக் கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான் என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ. நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ.

பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர் நாணெத்தனையுமிலாதாய். நப்பின்னைகாணில்சிரிக்கும் மாணிக்கமே. என்மணியே. மஞ்சனமாடநீவாராய்.

(தொழுவத்தில் புகுந்து விளையாடிக் களித்துப் புழுதியளைந்த உன் திருமேனியைக் காண எனக்குப் பெருவிருப்பம் என்றாலும், அழுக்குப் பிள்ளையான உன்னைக் கண்டவர் பழிப்பர். உனக்கு நாணமே இல்லை. நப்பின்னை கண்டால் சிரிப்பாள். என் மாணிக்கமே, மணியே திருமஞ்சனமாட வா - பெரியாழ்வார் திருமொழி).

என்று யசோதை அழைத்த பிள்ளைக்குக் குளிரக் குளிரத் திருமஞ்சனம். தமிழ், கேரள சோதர, சோதரியர் கூட்டம் பெருகி வழிந்து வழி மறைக்கும் திருக்கோவில் உள்ளே எப்படியோ வலம் வைத்து வந்தேன்.

அம்பலப்புழை கிருஷ்ண அம்பலம் போல் இன்று இந்தக் கோவில் அங்கணத்தில் பெரிய உருளி வைத்துப் பால் ஊற்றிக் காய்ச்சிப் பால்பாயசம் செய்து கொண்டிருக்கிறார்கள். கண்ணப்பெருமானுக்கு நிவேதனமாகி இது அடியார்க்கெல்லாம் பிரசாதமாக இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்படும்.

பட்டத்ரியின் நாராயணீயத்தைக் கம்பீரமாகச் சொல்லியபடி ஒரு குழு அம்பல முற்றத்தில். சூழலில் விழாவின் உற்சாகம்.

ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே.

இரவு பத்து மணிக்கு அத்தாழ பூசையும், பின்னே அவதார பூஜையும் எழுந்நள்ளிப்புமாக இன்று அடியார்க்கு உறக்கமில்லை.

அப்புறம் கண்ணன் உறங்குவான்.

மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே. தாலேலோ
வையமளந்தானே. தாலேலோ.

Friday, August 19, 2005

நலமில்லை, நலமறிய ஆவல் இல்லை


‘எழுதப்பட்ட வார்த்தைகளை விட, இன்னும் எழுதப்படாதவையே சுவாரசியமானவை என்று ஜென் புத்தமதக் குருமார்கள் சொல்லியிருக்கிறார்களாம். அல்லது வரும் பவுர்ணமியன்று சொல்ல உத்தேசமாம்.

எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கடிதங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதும், எப்போதோ எழுதி அனுப்பி வந்து சேர்ந்து எல்லோரும் மறந்து போன பழைய கடிதாசுகளைத் தேடிப்பிடித்துப் படிப்பதும் இந்த ஆவலோடுதான்.

கல்ப கோடி காலம் முன்னால் நான் வீட்டுப் பரணில் குடைந்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் வீட்டில் வாசல்படி இருக்குமோ என்னமோ, பரண் கட்டாயம் இருந்தது. அங்கே என்ன என்ன அடைக்கலாம் என்பதற்கு விவஸ்தையே கிடையாது. ஆகவே பித்தளைக் குடம், சருவப் பானை முதல் தாத்தா காலத்துக் கனவுக் கன்னி படம் போட்ட சினிமா பாட்டுப் புத்தகம், நாலு ஆவர்த்தம் மாஞ்சா தடவி உருவேற்றிய நூல், அறுந்துபோன பட்டம் வரை தேடுகிறவர்களின் திறமைக்கும் பொறுமைக்கும் தகுந்தபடி கிட்டும். எனக்குக் கிட்டியது அரைக்கிலோ பழைய கடிதங்கள்.

அறுபது வருடமும் அதற்கு மேற்பட்ட பழமையும் உடைய அந்தப் புராதன வஸ்துக்களை நுனி வளைந்த இரும்புக் கம்பியில் எதற்கோ கழுவேற்றி வைத்திருந்தது.

உப்புப் பெறாத விஷயத்துக்காக வீட்டில் கோபித்துக் கொண்டு தேசாடனம் போன சொந்தக்காரர் ஒருவர் எழுதியது அதெல்லாம். ‘நான் சவுக்கியமில்லை. ஆலப்புழை கேளு நாயர் ஓட்டலில் காலை காரமாகப் புட்டும், சரியாக வேகாத கடலையும் சாப்பிட்டேன்’ என்று தடாரென்று பின்நவீனத்துவ இலக்கியம் மாதிரித் தொடங்கியவை பாதிக்கு மேல். கொச்சி, ஹுப்ளி, புனா, ஆக்ரா, ஹரித்துவார் என்று பல இடத்திலிருந்தும் எழுதிய தபால் அட்டைகள்.

அவை வழக்கமான சௌக்கியமில்லையில் தொடங்கி பலவித அசௌகரியங்களைக் கிரமமாகப் பட்டியலிடுவதை ஓட்டை விழுந்த பிரிட்டீஷ் போஸ்ட் கார்டின் ஓரத்தில் இங்கிலாந்து அரசர் தலையை நீட்டி அனுதாபத்தோடு பார்த்துக் கொண்டிருப்பார்.

‘அன்னபூர்ணாவுக்கு மைசூர் ரசம் வைக்கச் சொல்லிக் கொடுத்தேன். உப்புப் போட மறந்து போகிறாள். ஆபிசுக்கு டிராமில் போகிறேன். ஒரே நெரிசல். வங்காளி பாஷை பேசக் கஷ்டம். யாராவது இங்கே வந்தால் ரசப்பொடி, நார்த்தங்காய் ஊறுகாய் அனுப்பவும். பல்லில் எகிறு வீங்கி ..’ என்று தொடங்கும் துயர அத்தியாயத்தோடு மூடிவைத்துவிட்டு பரணை விட்டு இறங்கினேன்.

இந்த ‘பங்க பந்து’ வீட்டுச் சண்டையையே சாக்காக வைத்து ஆல் இண்டியா டூர் அடித்து, கல்கத்தாவில் குடியும் குடித்தனமுமாகச் செட்டில் ஆகி, எத்தனை எழுதியும் தீராத ஏகப்பட்ட கஷ்டங்களைத் தொடந்து அனுபவித்தவர். அதே காலகட்டத்தில் இரண்டாம் உலக மகாயுத்தம், இந்திய சுதந்திரப் போராட்டம் என்று சின்னச் சின்னதாக அங்கங்கே வேறே என்னெல்லாமோ நடந்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

பரணில் ஏடு தேடியது அறுபதுகளில். (இப்படிப் பன்மையைப் போட்டால் அந்தக் காலத்துக்கே ஒரு கம்பீரம் வந்துவிடுகிறது!) அப்போது, ஆப்பிரிக்காவின் பல பாகங்களிலிருந்து எங்களுக்குக் கடிதம் வரும். எங்களுக்கு என்றால் எட்டு ஏ வகுப்பில் படித்துக் கொண்டிருந்த வானரக் கூட்டத்துக்கு. விடுமுறையில் எல்லா நாட்டுத் தூதரகத்துக்கும் எழுதிப் போட்டு வரவழைப்பது.

அதென்னமோ கானா, உகாண்டாவிலிருந்து எல்லாம் டாண் என்று மாதம் பிறந்ததும் தவறாமல் அனுப்பிவிடுவார்கள். கருப்பு வெளுப்பில் நிறையப் படம் போட்டு வரும் பத்திரிகைகளில் அந்த நாடுகளில் எப்போதுமே சந்தோஷமாக ஆடிப் பாடிக் கொண்டிருக்கும் மக்களையும், மைக்குக்கு முன்னால் உற்சாகமாகச் சொற்பொழிந்து கொண்டிருக்கும் தலைவர்களையும் பார்க்கலாம். திடீர் திடீரெனப் பழைய தலைவர்கள் காணாமல் போய்ப் புதுத் தலைகள் முளைக்க, மக்கள் என்னமோ எப்பவுமே மகிழ்ச்சிக் கடலில் தான்.

கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும் வந்த பிற்பாடு கார்டும், இண்லண்ட் லெட்டரும் வாங்கி வந்து கடிதம் எழுத உட்காருவதைவிட, கம்ப்யூட்டரைத் திறந்து நொடியில் ஈ மெயில் அனுப்புவதும் பெறுவதுமே சுலபமான வேலையாகப் போய்விட்டது. இதிலும் சுவாரசியத்துக்குக் குறைச்சல் இல்லை.

நான் கேட்காமலேயே யார்யாரோ அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் அனுப்பி, மிசிசிப்பியில் வீடுகட்ட எனக்கு சகாய வட்டியில் முப்பதாயிரம் டாலர் வழங்கியிருப்பதாக அறிவிக்கிறார்கள். மிசிசிப்பியில் வீட்டைக் கட்டிவிட்டு, சென்னையில் உத்தியோகம் பார்க்கத் தினம் எப்படி வந்து போவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ‘வாங்கிப் போடுப்பா, நான் இல்லே இப்போ’ என்று நண்பர் தைரியம் சொல்கிறார்.

‘சென்னைக்கு மிக அருகே அறுபதாவது கிலோமீட்டரில் சகல வசதியும் நிறைந்த குடியிருப்பில்’ வீடு கட்டிப் போனவர். கும்மிடிப்பூண்டி லோக்கலில் தினசரி வேலைக்கு வந்து திரும்பும் ரயில்நீள அனுபவம் அவர் சொல்லும் தைரியத்துக்குப் பின்னால் திடமாக நிற்கிறது.

உயரத்தை உடனடியாக உயர்த்த உத்திரவாதம் சொல்லி, மாத்திரை அனுப்புவதாக வாக்குத் தரும் ஈமெயில்கள் பத்தே பத்து டாலர் கொடுத்தால் போதும் என்கின்றன. திடீரென்று ஏழெட்டு இஞ்ச் உயர்ந்து, போன மாதம் தைத்த பேண்ட் கணுக்காலிலோ, முழங்காலிலோ நிற்கிற அசௌகரியமும், துணி விலை, தையல் கூலி, வாங்க நாலு தடவை வண்டியில் போன பெட்ரோல் செலவு என்று செலவழித்த பணம் பாழாகிற கவலையும் ஏற்படுவதால் மாத்திரை வேண்டாம் என்று தள்ள வேண்டியிருக்கிறது.

போனவாரம் ஆப்பிரிக்காவிலிருந்து ஒருவர் எழுதியிருந்தார். அங்கே என் நெருங்கிய அல்லது தூரத்து உறவினர் ஒருத்தர் இருக்கிறார். அதாவது இருந்தார். அவர் பெயர்கூட கிட்டத்தட்ட என் பெயர் தான். அங்கே சர்க்காரில் பெரிய பதவி வகித்தாராம். என்னென்னமே தகிடுதத்தம் செய்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்து வெளிநாட்டில் வங்கியில் எல்லாப் பணத்தையும் முதலீடு செய்துவிட்டு போன வருடம் இறந்து போய்விட்டார் பாவம். போகிற போது நான் தான் அவருக்கு ஒரே தாயாதியோ, பங்காளியோ என்று எப்படியோ தெரிந்து, எனக்கு அந்தச் சொத்தைக் கொடுத்துவிடச் சொல்லியிருக்கிறார். மின்னஞ்சல் அனுப்பிய பொதுநல விரும்பிக்கு நான் என் பேங்க் அக்கவுண்ட் நம்பர், விலாசம் சொன்னால் போதும். பணத்தை அனுப்பி வைப்பாராம். அவருக்கு நான் முன் கூட்டியே யிரம் டாலர் இதற்கான செலவுகளுக்காக அனுப்பிவைத்தால் போதும்.

கோடிக் கணக்கில்ஆப்பிரிக்கப் பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு அப்புறம் தூக்கம் வராமல் தவிக்கலாமா இல்லை தமிழ் சினிமா எடுக்கலாமா என்று பூவா தலையா போட்டுப் பார்க்கும்போது அடுத்த பிளாட் அனந்தாச்சாரி வந்தார். அவருக்கும் இதேபோல் ஒன்றல்ல, ஏழு கடிதங்கள் வந்திருக்கின்றனவாம். நெக்வே சாரி, உக்யோம்னோ சாரி, ம்னெயோபொ சாரி என்றெல்லாம் பெயர் கொண்ட அவருடைய ஆப்பிரிக்க சொந்தக்காரர்கள் அனைவரும் கோடி கோடியாக அவர் பெயரில் எழுதி வைத்துவிட்டுப் போன வருடம் இறந்து போய்விட்டார்கள். ஆயிரம் டாலர் அனுப்பினால் போதும் அதைப் பெற.

பணத்துக்குப் பதிலாகப் பத்துக் கிலோ ஆப்பிரிக்காவில் அச்சுப் போட்ட பழைய பத்திரிகை அனுப்பலாமா என்று விசாரிக்க வேண்டும். பரணில் இருக்கிறது.


(தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி - ஜூலை 31, 2005)

Sunday, August 14, 2005

பெரியாத்தா


அவங்க ஒரு பக்க முகம்
(வலது பக்கம்)
எல்லாரையும் போலத்தான்.

ஆனா இன்னொரு பக்கத்துலே
தசையெல்லாம் சேர்ந்து வீங்கி
இறுகிக் தழும்பு பிடிச்சு
கொத்துக் கறி கணக்காக் கிடக்கு.

எரிஞ்சு போச்சோ,
திராவகம் தெளிச்சு வெந்து போனதோ
நமக்கு ஒண்ணும் தெரியாதுங்க.

ஒத்தைக் கண்ணு
ஒரு முலையை அறுத்து எடுத்தாச்சு.
கருப்பையும் போயாச்சு.

சோளக்கொல்லை பொம்மை போல
சேலை சுத்தி
பாதி முக்காடு போட்ட
நரைச்ச தலையிலே
கரையான் அரிச்ச மாதிரி
ஒட்ட வெட்டின முடி.

எந்நேரமும் இங்கே
அம்மாக்காரிங்களுக்கு
ஒத்தாசை பண்ற அம்மாச்சி.
சம்பளம் வாங்காத நரசம்மா.

தெருவிலே பிறந்து விழுந்த
எல்லாப் புள்ளைங்களையும்
குளிப்பாட்டுற பெரியாத்தா.

அதுங் கையிலே
ஒரு வாளி நிறையத் தண்ணியும்
துண்டு சோப்பும்
ஒரு குளிக்காத கொழந்தப் புள்ளையும்
கொடுங்க சொல்றேன்.

பிள்ளை ரொம்ப அழுக்கா இருந்துச்சின்னா
ரொம்பவே மேல்.
கரிஞ்சு போகாத பாதி முகத்திலே
எப்பவுமே பாதியிலே நிக்கற சிரிப்பு
சிரிச்சு முடிக்காமலேயே
முழுசானதாத் தோணும் அப்போ.

பரிசு கிடைச்ச மாதிரி
பிள்ளையை வாங்கித்
துணியை உருவறபோது
வலது கண்ணு
குறுகுறுன்னு மின்னும்.

இப்ப டிரவுசரைக் அவுக்குதே
வாலுப் பய
இந்த மாதிரி கையிலே கிடைச்சா
பெரியாத்தாளுக்கு
பெறகென்ன சந்தோசம் வேணும்னேன்.

பெரியாத்தா நடைபாதையிலே
ரோட்டைப் பார்த்துக்
குந்தியிருக்கு.
அதோட சேலை
முழங்கால் வரைக்கும் ஏறிக்கெடக்கு.

பொடியன் கண்ணுலே சோப்பு எரியுது போல.
மேலெல்லாம் நுரை. துள்ளறான்.
என்னா அழும்பு. என்னா அழும்பு.

பெரியாத்தா காலை நீட்டி
அதும் மேலே நீளவாக்கிலே
குப்புறத்திப் போட்ட பயபுள்ள
தொப்பலா நனைஞ்சிருக்கான்.

பெரியாத்தா கைக்கு வாகாப்
நீலக் குவளை ஒண்ணு
பக்கத்து வாளித் தண்ணியிலே
படுகுஷியா மிதக்குது.

ஆத்தா காலு ரெண்டும்
ஆகாசத்தைப் பாத்து நிமிர்ந்து கெடக்கு.
அதுங் கைவிரல்
பயலோட புட்டத்தை இறுக்கிப் பிடிச்சுக்
கால்லே கவுத்து வச்சபடிக்கு
உடம்பை நீவிநீவி
சோப்பைத் தேய்க்குது.

பெரியாத்தா கணுக்கால்லே
மூக்கு அழுந்தின கொழந்தப் பையன்
திமிற முடியாமக் கிடக்கறான்.

வளைஞ்சு நெளிஞ்சு
வழுக்கற அவன் உடம்பிலேருந்து
கருப்பு சிலேட்டுலே வழிஞ்ச மாதிரி
சோப்பு நுரை
முட்டி மோதி, கலைஞ்சு திரும்ப எழும்பி
மேலே கீழே பக்கவாட்டிலே வழியுது.

பயலைத் திருப்பிப் போடுது பெரியாத்தா.
அதுங் காலுக்கு நடுவுலே
உதைக்கறான் அவன்.
ஓன்னு அழுதுக்கிட்டு
உலகத்துக்கே முட்டி மடிச்சுக் காட்டறான்.

பெரியாத்தா
அவனோட ரெண்டு காலையும்
ஒண்ணாப் பிடிச்சபடி
முகத்தைக் கசக்கிக் கழுவுது.

காதை விரிச்சு,
மூக்கைத் திருகி
உள்ளே விரலைவிட்டு,
கையை முறுக்கி,
கொட்டையைப் பளபளன்னு கழுவி
குஞ்சைப் பிடிச்சு விளையாட்டா இழுத்து
மூணு குவளைத் தண்ணியை
சடசடன்னு மேலே ஊத்திப்
பிள்ளையைக் குளிப்பாட்டுது பெரியாத்தா.

பயலோட உடம்பிலேருந்து
பெரியாத்தா காலிடுக்கிலே
மடைதிறந்தது போல வழியற தண்ணி
நடைபாதைப் பக்கம்
பொங்கி வழிஞ்ச நட்சத்திர
நுங்கும் நுரையுமாப் பெருகி
நீண்ட குளியல் ஆறாக நடக்க
ஓரமாகக் காத்திருந்த எலிவளை
உள்ளே இழுத்து விழுங்குது.

வெள்ளம் வடிஞ்ச அப்புறம்
பெரியாத்தா பிள்ளையை
தலைக்கு உசரத் தூக்கித்
தரையிலே நிப்பாட்டுறா.

முழுக்க நனைஞ்ச பிள்ளை
முழுசாத்தான் இருக்குது.
வேதப் புத்தகத்துலே வருவாரே
பிரளயம் முடிஞ்சு பிழச்ச நோவா
அவர் போல தள்ளாடிக்கிட்டு
கால் வளஞ்சு நிக்கறான் பயல்.

அவன் கம்புக்கூட்டுலே பெரியாத்தா கை
பிடிச்சு இறுக்கி நிப்பாட்டினாலும்
தன் கால்லே தான் அவன் நிக்கறான்
சண்டைக்காரன் ஆயிட்டான் பாருங்க
தம்மாத்தூண்டு பயலா இருக்கச் சொல்லவே.

பெரியாத்தா துண்டை எடுத்து
அவன் தலையிலே போட்டுத்
துவட்டி விடுது.
தலை நிக்காம அவன்
மாட்டேன் மாட்டேன்னு
தன்பாட்டிலே ஆட்டிக்கிட்டே கிடக்கான்.

பெரிய பெரிய கட்டிடமா
அவனைச் சுத்தி எழும்பி
இரைச்சல் போட்டு மிரட்டும்
உலகத்தைப் பார்க்கிறான்.

அதுக்கு பதில் சொல்றது எப்படின்னு
அவனுக்குத் தெரியுமே.
உலகத்தைக் குறிவச்சு அவனோட
தண்ணித் துப்பாக்கியை நீட்டறான்
(அப்படிப் போடுடா பயலே)
வளைச்சு மூத்திரம் அடிக்கறான்.

காலை வெளிச்சத்திலே
உற்சாகமா மின்னி மினுங்கி வழியுது அது.


(அருண் கொலட்கரின் 'காலா கோடா போயம்ஸ்' தொகுதி - The Ogress (பூதகி) கவிதை -
மொழியாக்கம் இரா.மு நவம்பர் 7 2004)

Saturday, August 13, 2005

எந்தையும் தாயும்

கவனத்தோடு எடுத்து வந்து *1




பெருமையோடு பரத்தி *2

அன்பில் அமிழ்த்தி *3
சுடரொளிரப் பறந்திடட்டும் தாயின் மணிக்கொடி. *4 இந்தியா - 58 காண இன்னும் இரண்டே நாள். *5

வாழிய பாரத மணித் திருநாடு.


*1 கவிதை பாரதி - பேச்சு ம.பொ.சி - பாடல் பட்டம்மாள்

*2 கவிதை குல்ஸார் - பாடல் மன்னா டே (உருது)

*3 குரல்கள் லதா மங்கேஷ்கர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் (கன்னடம்)

*4 குரல் ஏசுதாஸ் (மலையாளம்)

*5 கவிதை பாரதி - குரல் எம்.கே.தியாகராஜ பாகவதர்

*6 கவிதை பங்கிம்சந்திர சாட்டர்ஜி (வங்காளி) பல்குரல் இசை

(நன்றி - ம்யூசிக் இந்தியா ஆன்லைன்)

Friday, August 12, 2005

பட்டாணியால் மூக்கை உருட்டி

நம்மோடு தான் நடக்கிறார்கள். ஆனாலும் தரைக்கு மேலே சற்றே, அதாவது ஒண்ணே முக்கால் மில்லி மீட்டர் உயரத்தில் மிதந்தபடி வருகிறார்கள். வித்தகர்கள் எனக்கு வியப்பை எழுப்புவது இப்படித்தான்.

"ஆஸ்திரேலியாவில் ஒரு வருடத்தில் ஒருவர் இருபத்தெட்டு புள்ளி ஒண்ணு கிலோகிராம் கோழிக்கறி சாப்பிட்டு, நூற்று நாலு புள்ளி ரெண்டு லிட்டர் பாலும், நூற்றுப் பத்தொன்பது புள்ளி ஒன்பது லிட்டர் குளிர் பானமும் குடிக்கிறார்”.

என்ன அங்கிள், சவுக்கியமா என்று உபத்திரவமில்லாமல் குசலம் விசாரித்தாலே பேச்சை எப்படியோ ஹைஜாக் செய்து இந்த மாதிரி புள்ளி விபரங்களைக் கொட்டும் ஒரு நெருங்கிய உறவினர் என் வீட்டிலிருந்து இருநூற்று ஐம்பத்தெட்டு கிலோமீட்டர் தூரத்தில் குடியும் குடித்தனமும் புள்ளியும் விவரமுமாக இருக்கிறார். இந்தக் கிலோமீட்டர் தகவலும் அவர் உபயம்.

கசாப்புக்கடையில் படியேற வேண்டும். தராசுத் தட்டில் எடைக்கல்லைப் பார்த்துப் பார்த்துப் போடவைக்க வேண்டும். இருபத்தெட்டு புள்ளி ஒண்ணு கிலோ வந்ததும் கையைப் பிடித்து இழுத்து நிறுத்த வேண்டும். அப்படியாக வாங்கிவந்த கோழி மாமிசத்தைக் கறி வைத்துக் கொஞ்சமும் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும். அப்புறம் கண்ணாடிக் குடுவையில் அளந்து அளந்து பாலும் சர்பத்தும் மடக்மடக் என்று தனித்தனியாகக் குடிக்க வேண்டும். கனகச்சிதமாக இப்படிச் செயல்படும் ஜீரண சிகாமணி மற்றும் கணித மாமணியான ஆஸ்திரேலியர் யார் என்று முதல்முதலில் இந்தப் புள்ளிவிவரத்தைக் கேட்டபோது தப்புத் தப்பாக ஆச்சரியப்பட்டேன். இதையெல்லாம் கர்ம சிரத்தையாக தேடிப்பிடித்துப் படித்து மனதில் இருத்திக் கொண்டு அவ்வப்போது என்னைப் போல் நாலு பேருக்கு அறிவு வளர்ச்சி அடையத் துணையாக எடுத்துச் சொல்கிறவரின் திறமைதான் மூக்கில் விரல் வைத்து அதிசயிக்க வேண்டியது என்று புரிந்தது கொஞ்சம் தாமதமாகத்தான்.

இண்லண்ட் லெட்டரில் ஆயிரத்து முன்னூற்று முப்பது குற:ளையும் நுணுக்கி நுணுக்கி எழுதிச் சாதனை படைத்த இன்னொருவரின் திறமை பற்றிக் கேட்டது முதல் ஆச்சரியத்தால் விரிந்த கண் இமை இன்னும் இயல்பு நிலைக்கு வந்து சேரவில்லை. நான் பள்ளிக்கூடத்தில் படித்தபோது பெரிசு ஒருத்தர் பக்கத்து வீட்டில் இருந்தார். யாருக்காவது கடிதம் எழுத உட்கார்ந்தால், இண்லண்ட் லெட்டரில் இருக்கும் மடிப்பைக் கூட விடமாட்டார். எருமை மாடு கன்று போட்டது, தனக்குக் கபம் கட்டி ஆடாதோடை கஷாயம் போடச் சொல்லிச் சாப்பிட்டது, இஷ்ட மித்ர பந்துக்கள் வந்தது, இருந்தது, சண்டை போட்டது, ஊருக்குப் போனது, பஞ்சாயத்துப் புளிய மரம் முந்தின வாரம் ஏலம் போன தொகை, மானாமதுரை பாசஞ்சர் உள்ளூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்வதில் நேர மாற்றம் என்று குத்து மதிப்பாக நூறு விஷயங்களை அனாசயமாக ஒரே கடிதத்தில் எழுதித் தள்ளுவார்.

ஒரு தடவை அவருக்குக் கையில் நகச்சுற்று வந்து எழுத முடியாமல் போனது. அரிந்த எலுமிச்சம் பழ மோதிரம் அணிந்து அறியாப் பாலகனான என்னை முன்னால் இருத்தி, இண்லண்ட் லெட்டரில் அதே தரக்கட்டுப்பாட்டோடு இன்னொரு நூறு சமாச்சாரம் எழுதச் சொல்லி என் ஞாயிற்றுக் கிழமையைப் பாழடித்தார்.

ஆனாலும் கோபத்தை விட அசாதாரணமானவர்களை கண்டால் ஏற்படும் ஆச்சரியம் தான் அப்போது வந்தது. இண்லெண்ட் லெட்டர் திருக்குறளார் இதையும் கடந்தவர். தபால் அட்டையில் தற்போது குறள் எழுத அன்னார் உத்தேசித்துள்ளாராம். இதற்கு என்ன விதத்தில் ஆச்சரியப்படுவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

இவர்கள் போக, இன்னும் சில சாதனை வீரர்கள் என் பட்டியலில் உண்டு. மூக்கால் பட்டாணியை உருட்டிக் கொண்டு இருபத்தைந்து கிலோமீட்டர் போனவர் அவர்களில் ஒருவர்.

கட்டிலுக்குக் கீழே உருண்டு போன ஐந்து ரூபாய்க் காசை எடுக்கக் குனிந்து தேடினாலே மூச்சு வாங்குகிறது. இருபத்தைந்து கிலோமீட்டர் உருட்டிப் போனால் அப்புறமும் அந்தப் பட்டாணி அதே சைஸில் இருக்குமா? அதை ஆயுதம் தாங்கிக் கப்பல் போல் கொண்டு செலுத்திய மூக்கு அடுத்த முறை ஜலதோஷம் வந்தால் தும்முவதற்காவது அப்படியே இருக்குமா அல்லது அதுவும் பட்டாணி சைஸ¤க்குச் சிறுத்திருக்குமா? உலகில் வேறு யாரெல்லாம் இப்படி பட்டாணியால் மூக்கை உருட்டிச் சாதனை புரிந்திருக்கிறார்கள்?

இந்தச் சாதனையாளர் சிரமம் பார்க்காமல் இருநூற்று ஐம்பத்தெட்டு கிலோமீட்டர் இன்னொரு பட்டாணியை எடுத்து உருட்டிப் போனால் புள்ளிவிவர நிபுணர் இது சம்பந்தமான சகல புள்ளி விவரத்தையும் எழுதி மூக்குக்கு நேரே நீட்டி விடமாட்டாரா என்ன?

மூக்குப் பயணத்தில் இன்னொரு துணை வேணுமென்றால், பின்னாலேயே நடந்து நூறு கிலோமீட்டர் பயணம் போன இன்னொரு சாதனைச் சிற்பியைக் கூட்டிப் போகலாம். இந்த நடைப் பயணத்தில் அங்கே இங்கே கொஞ்சம் மாறுதல் செய்து சைக்கிளில் பின் நோக்கிப் பயணம் போய் ரிக்கார்ட் பிரேக் செய்தவர் உண்டு. அப்படிப் பின்னால் சைக்கிள் ஓட்டிப் போகும்போது வயலின் வாசித்தபடி ஐந்து மணி நேரத்தில் அறுபது கிலோமீட்டர் போய் ரிக்கார்ட், கேசட், சிடி என்று எல்லாவற்றையும் பிரேக் செய்து பொடித்துப் போட்டவரும் உண்டுண்டு. ஒவ்வொருத்தருக்கும் தலா நூறு ஆச்சரியக்குறியைத் தலைகீழாக எழுதி மரியாதை செலுத்த நான் தயார்.

இன்னும், அறுபத்தேழு தேர்தல்களில் நின்று வெற்றிகரமாக அறுபத்தியேழிலும் டெபாசிட் காலி ஆன சூப்பர் வேட்பாளர்கள், அறுபது மணி நேரம் நிறுத்தாமல் ஜோக் அடித்து சாதனை புரிந்த தென் ஆப்பிரிக்காக்காரர் (அதையெல்லாம் கேட்டு நிறுத்தாமல் அறுபது மணி நேரம் யாராவது சிரித்து அதிலும் ரிக்கார்ட் ஏற்படுத்தியிருக்கிறார்களா என்று தெரியவில்லை!) என்று ஏகப்பட்ட வித்தியாசமானவர்கள் என் வீர வணக்க லிஸ்டில் உண்டு.

அடுத்தவர்கள் கவனத்தைக் கவர்வது தான் இந்த மாதிரி சாதனையாளர்கள் மற்றும் திறமைசாலிகளின் லட்சியம் என்று யாராவது சொன்னால் நாம் நம்ப மாட்டேன். இப்படிப்பட்ட தகவல் மாதத்துக்கு ஒன்றாவது இடம்பெறாவிட்டால் அப்புறம் என்னத்துக்குப் பத்திரிகை படிக்க வேணுமாம்?

இவர்கள் போக, இன்னும் வெளிச்சத்துக்கு வராத எண்ணற்ற சாதனைத் திலகங்கள் இருப்பதை எப்போதோ படித்த ஒரு சிறுகதை மூலம் தெரிந்து கொண்டபோது அடைந்த ஆச்சரியம் இன்னொரு ரகம்.

தினசரி தோசை சாப்பிடும் குடும்பத்தில் குடும்பத் தலைவி கணக்குப் போட்டுப் பார்க்கிறாள். அது இந்த ரீதியில் இருக்கிறது. ஒரு நாளைக்கு இருபது தோசை சுடுவதாக வைத்துக் கொண்டால் மாதத்துக்கு அறுநூறு தோசை. வருடத்துக்கு ஏழாயிரத்து இருநூறு. பத்து வருடத்தில் எழுபத்தி ரெண்டாயிரம். பதினைந்து வருடத்தில் தோசை சுட்ட கணக்கு லட்சத்தை எட்டி விடலாம்.

ஒரே காரியத்தை தினம் தினம் செய்ய வேண்டியிருப்பதில் எந்த சலிப்பும் இல்லாமல் இதை ஒரு கடமையாகக் கருதி நிறைவேற்றும் இப்படிப்பட்ட கர்ம வீராங்கனைகள் எந்தத் திசையில் தோசைக்கல்லை அடுப்பில் போட்டாலும் அந்தத் திசை நோக்கி என் வந்தனங்கள். தோசை சாப்பிடுகிறவர்கள்? வேணாம், நான் இந்த ஆட்டத்தில் இல்லை.

தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி 31 ஜூலை 2005

Sunday, August 07, 2005

பேசா நாளெலாம் பிறவா நாளே


நாலு பலகையை இழுத்துப் போட்டு ஜமுக்காளம் விரித்து ஏழெட்டு நாற்காலியைப் பரத்தி, ஈசான்ய மூலையில் ஒரு மைக்கையும் பிரதிஷ்டை செய்கிறதை எங்கேயாவது பார்த்தால் நழுவி விடுகிற வழக்கம் எனக்கு. பேசக் கூப்பிட்டு மேடையேற்றி விட்டால் என்ன செய்வது என்று ஒரு நடுக்கம்.

பேசுகிறதுக்கெல்லாம் சளைத்த ஆசாமி இல்லைதான். ஆனால் பேச ஆரம்பிப்பதற்கு முன் மேடையில் வெட்டியாக உட்கார்ந்திருப்பதில் தான் பிரச்சனையே.

மேடைக்குக் கீழே, மூன்றாம் வரிசை வலது கோடியில் உட்கார்ந்திருக்கிற பெண்மணி எதற்கோ சிரிப்பை அடக்கிக்கொண்டு என்னையே பார்க்கிறதுபோல் இருக்கே? தலை வாரும்போது சீப்பைத் தலையிலேயே செருகி வைத்தபடிக்கே வந்துவிட்டேனா?

மேடையில் உட்கார்ந்தபடி தலையைத் தொட்டுத் தடவிப் பார்த்துக்கொண்டால், கீழே இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? தும்மல் வந்தால் தும்மலாமா? மூக்கைச் சொரியலாமா? பக்கத்தில் இருக்கிறவர் ஆரம்பித்து வைத்த கொட்டாவியைத் தொடரலாமா? இப்படி சின்னதும் பெரிசுமாக ஆயிரத்தெட்டு உளைச்சல்.

போதாக்குறைக்கு,. மேடையில் அந்தக் கோடியில் உட்கார்ந்திருக்கும் பேச்சாளர் அவசரத்தில் கைக்குட்டையையோ, கைக்குழந்தையையோ, மூக்குக் கண்ணாடியையோ, தெர்மாஸ் பிளாஸ்கில் சுக்குக் கஷாயத்தையோ விட்டுவிட்டு வந்திருப்பார். அதைக் கர்ம சிரத்தையாக யாராவது கொண்டுவந்து நம்மிடம் கொடுத்து அவரிடம் சேர்ப்பிக்கச் சொல்லி உத்தரவிட, அந்த மூலைக்கு கை கையாக மாற்றிக் கடத்திவிட வேண்டியிருக்கும்.

இந்தக் கஷ்டத்தை எல்லாம் கருதித்தான் மேடையேற வேண்டாம் என்று தீர்மானித்தது. ஆனாலும் சமயா சமயங்களில் இதுவும் தவறிப் போகும். எனக்கு நெருங்கிய நண்பர் ஒருத்தர் சமூக நலத்தில் ஆர்வம் மிகுந்தவர். அவரை வெளியூரில் பொதுக்கூட்டத்தில் பேசச்சொல்லிக் கூப்பிட்டிருந்தார்கள். "தனியாகப் போக என்னமோ போல இருக்கு, நீயும் வாயேன்"என்று என்னையும் துணைக்கழைத்துக் கொண்டார்.

பஸ் பிடித்து அவர் பேச வேண்டிய ஊரில் போய் இறங்கினோம். வாரச்சந்தை நடக்கிற தினம் போலிருக்கிறது. பக்கத்துத் திடலுக்குக் கூடை, பை சகிதம் போகிறவர்கள் வருகிறவர்கள் என்று ஏக நெரிசல். தக்காளி, மீன், சப்போட்டா பழம் என்று கதம்ப வாசனை.

தெரு ஓரமாக மேஜை போட்டு வைத்திருந்தது. மேடை எல்லாம் கிடையாது. கூட்டத்துக்கு அழைத்தவர் மேஜைக்கு அடியிலிருந்து கிளம்பி வந்து, ஒரு சின்ன சைஸ் மைக்கையும், குட்டியாக இரண்டு ஒலிபெருக்கியையும் எடுத்து மேஜையில் வத்தார்.

‘நம்ம சகலபாடி சிங்கப்பூர்லேருந்து வாங்கி அனுப்பிச்சிருக்கார்", பெருமையோடு பேட்டரியைப் பொருத்தி ஒலிபரப்பு சாதனங்களை இயக்கி, தாய்மார்களே பெரியோர்களே என்று எல்லோரையும் கூட்டத்துக்கு அழைக்க ஆரம்பித்துவிட்டார்.

அசந்துபோய் நின்ற எங்களை அப்படியே விடாமல், அடுத்த ஐந்தாவது நிமிடம் "மைக்கைப் பிடிங்க சார்" என்று நணபரிடம் கைமாற்றிவிட்டுப் பேசச் சொல்லிக் கேட்டுக்கொண்டார்.

நாலைந்து வாண்டுகளும், பொழுது போகாமல் சந்தைக்கடைப் பக்கம் வந்த சில பெரிசுகளும் முன்னால் நின்று பார்க்க, நண்பர் நடப்பது நடக்கட்டும் என்று திட சிந்தனையோடு சமுதாய முன்னேற்றத்துக்கான வழிமுறை பற்றிப் பேச ஆரம்பித்தார். பக்கத்தில் கையைக் கட்டிக்கொண்டு நான்.

அவர் மார்க்கெட்டில் மெகபோனைப் பிடித்தபடி கூவியழைத்து எலிப் பாஷாணம் விற்கிற மாதிரியும் நான் அவருடைய அசமஞ்சமான அசிஸ்டெண்ட் மாதிரியும் ரொம்ப நாள் கனவில் எல்லாம் அந்தக் காட்சி துரத்திக் கொண்டிருந்தது.

இது இப்படி என்றால், பேசுவதற்காக ஒரு சொற்பொழிவாளரைக் கூட்டி வந்த அனுபவம் இன்னும் விசித்திரம். அவரிடம் யாரோ சொன்னார்களாம், நான் இருந்த ஊரில் தாம்புக் கயிறு பிரபலம் என்று.

"ஆமா சார், இங்கே நாங்க நல்லாவே கயிறு திரிப்போம்" என்று பெருமையோடு நெஞ்சை நிமிர்த்தி நின்றேன். "எனக்கு ஒரு தாம்புக் கயிறு வாங்கிவந்து கொடுத்திடுங்க" என்று கண்டீஷனாகச் சொல்லிவிட்டார்.

அவர் பேசுவதைக்கூடக் கேட்காமல் தாம்புக் கயிறு வாங்கப் போய்த் திரும்பி வந்தேன். மேடையில் ‘எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்’ என்று கம்ப ராமாயணத்தில் ராமன் ஜனகனின் வில்லை வளைத்ததைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நம்ம ஆள் என்னைப் பார்த்தார். அவர் கை மேலும் கீழும் போகிறது. வில்லை வளைக்கிற ஆக்ஷன் இல்லையே இது? கிணற்றில் தண்ணீர் இழுக்கிற மாதிரி இல்லையோ இருக்கு.

அட, நம்மிடம்தான் சைகையில் கேட்கிறார். தாம்புக்கயிறு வாங்கியாச்சா என்று. இது புரிந்து நான் ‘வாங்கியாச்சு’ என்று தாமதமாகத் தலையாட்டியபோது கூட்டம் முடிந்து விட்டிருந்தது.

சில சமயங்களில் மேடையில் நடப்பதைவிட, சுற்றி நடப்பது சுவாரசியமாக இருக்கும். பாலக்காட்டுப் பக்கம் இசை மேதை ஒருவரின் நினைவு சங்கீத உற்சவம். நாலு நாள் நடக்கும் இந்த விழாவில் தொடர்ந்து யாராரோ பாடியும், வாத்தியம் வாசித்தும் மறைந்த இசைமேதைக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள். மேடை ஓரத்தில் மரமேஜை போட்டு ஒருத்தர் உட்கார்ந்திருந்தார். மடக்கிவிட்ட முழுக்கை சட்டையும், குறுந்தாடியும், எட்டு முழ வேட்டியுமாக மத்திய வயசுக்காரர். மேஜையில் அடுக்கி வைத்த ஒரு கத்தை காகிதங்களைச் சரி பார்ப்பதும், பக்கத்து ஸ்டாம்ப் பேடில் ரப்பர் ஸ்டாம்பை ஒற்றுவதும், முத்திரை குத்துவதும், அந்தப் பேப்பரை ஒவ்வொன்றாக பக்கத்து டிரேயில் போடுவதுமாக இருந்தார். பாட விண்ணப்பித்தவர்களின் படிவங்களாம் எல்லாம். பரிசீலித்து அவற்றை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதுமாகக் கடமையே கண்ணாகச் செயல்பட்ட அவரை எப்பேர்க்கொத்த கல்யாணியும், சஹானாவும், பைரவியும் எல்லாம் தொந்தரவு செய்ய முடியவில்லை.

மிருதங்க வித்துவான் கூடத் தாளம் தவறியிருப்பார். பாட்டுக்கு ஒத்தாசையாகக் காலப் பிரமாணத்தோடு கடுதாசி தவறாமல் முத்திரை குத்திய அந்தச் சேட்டன் செலுத்திய அஞ்சலி போல வருமா என்ன?

போன வருடம் தீபாவளி முடிந்து இரண்டு நாளைக்கு அப்புறம் நடந்த கூட்டத்துக்குப் போயிருந்தேன். கவிதைத் தொகுதி வெளியீடு. மேடையில் பேச்சு தொடந்தபடி இருக்க, பிளாஸ்டிக் தட்டில் காராபூந்தியும், மிக்சரும் நிறைத்து கூட்டத்துக்கு வந்த எல்லோருக்கும் வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். மேடையிலும் ஏறி ஒருத்தர் விநியோகத்தைத் தொடர்ந்தார். பேசிக் கொண்டிருந்தவர் முன்னும் ஒரு தட்டு நீட்டப்பட்டது.

கவிதையா காராபூந்தியா என்று தீர்மானிக்க அவர் கொஞ்சம் கஷ்டப்பட்டதாகத் தோன்றியது. நானாக இருந்தால் கவிதையை சந்தோஷமாக நிராகரித்து, மேடையிலிந்து விட்டு விடுதலையாகி, தட்டை வாங்கிக்கொண்டு கீழே இறங்கியிருப்பேன்.

(தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி - 24 ஜூலை 2005)

Saturday, August 06, 2005

சோபான சங்கீதமும் எடக்க வாத்தியமும்


கேரளக் கோவில்களில் நடை திறக்கும் நேரத்தில் மத்தளத்தை இசைத்து ஒருவர் பாடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

ஒரு பக்கம் சாதாரண மத்தளம் போல் அதிர்ந்து ஒலி எழுப்பும் தோல் உள்ளதால் தாள வாத்தியமாகவும், மறு புறம் பிருகடைகள் அமைந்து அவற்றை இறுக்கித் தளர்த்துவதன் மூலம் ஆதார சுருதி மீட்ட முடிவதால் இசைக் கருவியாகவும் அமைந்து தனியான கார்வையுடன் ஒலிக்கும் அந்த வாத்தியத்துக்கு எடக்க என்று பெயர்.

எடக்க பற்றி சுந்தர ராமசாமி தன் நாவலான ஜே.ஜே சில குறிப்புகளில் கூறுவது ரசமானது -

"இடைக்கா வாத்தியத்தின் சத்தம் நெஞ்சைத் தொடுகிறது. வர்ண வேலைப்பாடுகள் அதிகமற்ற ஓசைகள். ஒரு சுழற்சியில் மீண்டும் மீண்டும் சுற்றிவரும் ஓசை. ஆனால் மனத்தைச் சிறகு முளைக்கச் செய்கிறது. அதை வாசிக்கும் மாராரை ஓடிச்சென்று தழுவிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. 'இந்த நிமிஷத்திலிருந்து உம்முடனேயே இருக்கிறேன். எனக்குக் கற்றுத்தாரும்' என்று சொல்ல வேண்டும் போல் இருக்கிறது."

எடக்க வாசித்தபடி பாடும் சங்கீதம் கர்னாடக சங்கீதத்தின் கூறுகள் அனைத்தும் கொண்டது என்றாலும் அவசரமின்றி நிதானமாக வலித்து இழுத்துப் பாடப் படுவதாகத் தோன்றும். கோவில் சார்ந்த இசைமரபான அது சோபான சங்கீதம் என்று அழைக்கப்படும்.

கதகளி அரங்கில் செண்டை ஒலியோடு பாடகர்கள் பாடுவது சோபான சங்கீத முறையில் தான். கண், கை அபிநயங்களை (முத்திரைகள்) ஒவ்வொரு வாக்கியத்துக்கும், சில வேளை ஒவ்வொரு சொல்லுக்கும் அநேக விதத்தில் ஆட்டக் கலைஞர் வெளிப்படுத்த வேண்டியிருப்பதற்குச் சோபான சங்கீதத்தின் நெகிழ்ந்த அமைப்பு பெரிதும் உதவுகிறது.

புலர்காலை நேரத்தில் மலையாளக் கிராமத்து சிற்றம்பலத்தில் தொழுவதற்காகக் காத்திருக்கும்போது, காதில் கேட்டு மனதில் இழைந்து பரவும் சோபான சங்கீதம் எழுப்பும் உணர்வு உன்னதமானது.

தமிழகத் திருக்கோவில்களில் கைத்தாளம் மட்டுமே துணையாக, தமிழ் மரபார்ந்த பண்ணிசையாக ஓதுவார மூர்த்திகள் தேவாரப் பதிகங்கள் இசைப்பது வழக்கம். சோபான சங்கீதம் தரும் இசையனுபவம் அதே தன்மையானது.

இசை விமர்சகர் சுப்புடு ஒரு முறை தினமணியில் இசைவிழா சீசன் விமர்சனம் எழுதும்போது, "கேரளத்தில் சோபான சங்கீதம் என்று ஒன்று பாடுவார்கள். கேட்கச் சகிக்காது" என்று போகிற போக்கில் எழுதிப் போக, அதை மறுக்க வேண்டிய அவசியம் நேர்ந்தது.

சோபான சங்கீதத்தில் ஒரு கீற்றை இங்கே சுட்டியைச் சொடுக்கிக் கேட்கலாம்.

http://www.musicindiaonline.com/p/x/wJyuO89zEtNvwrOupt7D/

இளம் பாடகர் நிகில் பாடிய இந்த கானம் இடம்பெற்ற படம், மோகன்லால் நடித்த 'ராவணப் பிரபு'.

மேலே உள்ள புகைப்படம் மலையாளத் திரைப்படமான 'புனர்ஜனி'யிலிருந்து. எடக்கா வாசித்தபடி சோபான சங்கீதம் பாடி நிற்கும் சிறுவன் பிரணவ் மோகன்லால்.

Friday, August 05, 2005

உத்தரா ஸ்வயம்வரம் கதகளி



உத்தரா ஸ்வயம்வரம் கதகளி காணுவான்
உத்ராட ராத்ரியில் போயிருன்னு.
காஞ்சனக் கசவுள்ள பூஞ்சேலை உடுத்து அவள்
நெஞ்செய்யும் அம்புமாய் வந்நிருன்னு.

இறையிம்மன் தம்பி நல்கும் ஸ்ருங்காரப் பதலஹரி
இருஸ்வப்ன வேதிகளில் அலிஞ்சு சேர்ன்னு
கரளிலே களித்தட்டில் அறுபது திரியிட்ட
கதகளி விளக்குகள் எரிஞ்சு நின்னு.

குடமாளூர் சைரந்தியாய் மாங்குளம் ப்ருகந்தளயாய்
அரிப்பாட்டு ராமகிருஷ்ணன் வலலனாயி
துரியோதன வேஷமிட்டு குரு செங்கண்ணூரு வன்னு
வாரணாசி தன் செண்டை உணர்னு உயர்னு

ஆயிரம் சங்கல்பங்கள் தேருகள் தீர்த்த ராவில்
அர்ஜுனனாய் ஞான் அவள் உத்தரையாயி
அது கழிஞ்சு ஆட்டவிளக்கு அணைஞ்சு போய்
எத்ர எத்ர அக்ஞாத வாசமின்னும் தொடருன்னு ஞான்
-------------------------------------------------

உத்தரா சுயம்வரம் கதகளி காணவே
உத்ராட ராத்திரியில் போயிருந்தேன்.
தங்கச் சரிகைச்சேலை தழைய உடுத்தவள்
நெஞ்சில் எய்ய அம்போடு வந்திருந்தாள்.

இறையிம்மன் தம்பி நல்கும் இன்பகீத மயக்கங்கள்
இரு கனவரங்குகளில் கரைந்து சேர
மனமென்னும் மேடையில் அறுபது திரியிட்ட
கதகளி விளக்குகள் ஒளிர்ந்து நிற்கும்.

குடமாளூர் சைரந்திரியாக, மாங்குளம் ப்ருகந்தளயாக
அரிப்பாட்டு ராமகிருஷ்ணன் வலலனானார்.
துரியோதன வேடமிட்டுக் குரு செங்கண்ணூர் வந்தார்
வாரணாசியின் செண்டை விழித்து உயர்ந்தது.

ஆயிரம் கற்பனை ரதங்கள் உருவான இரவில்
அர்ஜுனனாய் நான். அவள் உத்தரையானாள்.
அது முடிந்து ஆட்ட விளக்கு அணைந்து போனது.
எவ்வளவு எவ்வளவு தலைமறைவாய்
என் வாழ்வு இதனைத் தொடர்கிறேன் நான்.



பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்
http://www.musicindiaonline.com/p/x/l4Ou8Im1ntNvwrOupt7D/


குறிப்புகள்
----------------
கவிஞர் ஸ்ரீகுமாரன் தம்பி
இசை வி.தட்சிணாமூர்த்தி
குரல் ஏசுதாஸ்
படம் டேஞ்சர் பிஸ்க்ட்
வெளியான ஆண்டு 1969


இறையிம்மன் தம்பி - மலையாள ஆட்டக்கதை (கதகளியின் முன்னோடி)யின் தந்தை. மகாபாரதத்தில் அர்ஜுனன் உத்தரையை மணந்ததைக் கூறும் பகுதியை 'உத்தரா ஸ்வயம்வரம்' என்ற ஆட்டக்தையாக உருவாக்கியவர் இவர். சுவாதித் திருநாள் மகராஜாவால் ஆதரிக்கப்பட்டவர். புகழ்பெற்ற தாலாட்டுப் பாடலான 'ஓமனத் திங்ஙள் கினாவோ' இறையிம்மன் தம்பி எழுதியதுதான். சுவாதித் திருநாள் குழந்தையாக இருக்கும்போது அவரை உறக்கம் கொள்ளவைக்க இசைத்த பாடல் அது.

குடமாளூர் - குடமாளூர் கருணாகரன் நாயர்
மாங்குளம் - மாங்குளம் வாசுதேவன் நம்பூதிரி (?)
ஹரிப்பாடு (குட்டனாடு பிரதேசம்) ராமகிருஷ்ணன்
இவர்கள் போன தலைமுறைகளின் பிரசித்தி பெற்ற கதகளி ஆட்டக் கலைஞர்கள்.

வாரணாசி - வாரணாசி மாதவன் நம்பூத்ரி
பிரபல செண்டை மேளம் இசைக் கலைஞர்

Tuesday, August 02, 2005

இவிடம் நாவிற்கினிய எள்ளுப் புண்ணாக்கு



அது என்னமோ தெரியவில்லை. சுவாரசியமான அறிவிப்புப் பலகைகள் என்னை விடாமல் துரத்துகின்றன.

ஒரு மழைக்கால சாயந்திரத்தில் கையில் உயர்த்திப் பிடித்த குடையோடு புறநகர் கடைத்தெருவில் போய்க் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இது -'இவ்விடம் நாவிற்கினிய அரிசி, குருணை, தவிடு மற்றும் எள்ளுப் புண்ணாக்கு கிடைக்கும்.'

அடுப்பில் ஏற்றி வடித்தால் பொலபொலவென்று மல்லிகைப்பூ வெண்மையோடு சோறாக உதிரும் அரிசி இந்த நாக்கு இருக்கும் வரை சுவையானதுதான். குருணை? நாலு நாள் காய்ச்சலில் நாக்கு வறண்டு போய் முடங்கும்போது, அல்லது டயட்டில் இருக்கச் சொல்லி டாக்டர் கட்டளை போடும்போது, கஞ்சி வைத்து ஒரு துண்டு நார்த்தங்காய் ஊறுகாயோடு சாப்பிட்டால் அதுவும் ஏறக்குறைய தேவாமிர்தம்தான். கோழிக்கும் போடலாம்.

அப்புறம் தவிடு? அதை எப்படிச் சாப்பிட்டு நாவிற்கு இனியது என்று சர்டிபிகேட் தருவது?

மாஸ்கோவில் தொழிற்சாலை அமைத்து, தவிட்டிலிருந்து பிஸ்கட் தயாரித்ததாக பழைய 'சோவியத் நாடு' வழவழ பத்திரிகையில் படித்த ஞாபகம். பத்து வருஷம் முன்னால் திடீரென்று ஒரு விடிகாலையில் அந்தப் பத்திரிகையும், அதை அச்சடித்து வெளியிட்ட சோவியத் யூனியனும் காணாமல் போக, மாஸ்கோ மட்டும் எஞ்சி நிற்கிறது. அங்கே தவிட்டு பிஸ்கட் தயாரிக்கிறார்களா என்ற விவரம் தெரியவில்லை.

இதெல்லாம் கிடக்கட்டும். அறிவிப்புப் பலகையில் கடைசி ஐட்டமான எள்ளுப் புண்ணாக்கு. எத்தனை யோசித்தும் அதில் மறைந்திருக்கும் இனிமை என்ன மாதிரியானது என்று புரியாமல் கடைக்காரரிடமே கேட்டுவிட்டேன்.

"அது ஒண்ணுமில்லே சார். கோழித் தீவனம், மாட்டுத் தீவனம்னு விளம்பரப்படுத்தி இன்னும் ரெண்டு போர்டை நிப்பாட்டி வைக்கலாம்னா அப்புறம் நான் கல்லா போட்டு உட்கார இடம் இருக்காது. அதான் எல்லாத்தையும் ஒரே போர்டாக்கிட்டேன். "

ஒரே போடாக அவர் போட்டபோது அவருக்குப் பின்னால் தேவத்தூதனின் சிறகுகள் முளைத்திருக்கிறதோ என்று கொஞ்சம் எக்கிப் பார்த்தேன். இப்படி மனிதன், மாடு, கோழி என்று எல்லா உயிரினத்தையும் ஒரே தட்டில் அல்லது போர்டில் வைத்துப் பார்க்கும் பரிபக்குவம் வருவது லேசான காரியமா என்ன?

பெங்களூரில் குடியிருந்தபோது ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு எதிரே புதுசாகக் கடை திறந்தார்கள். "பன்ரி', "பன்ரி' என்று அன்பொழுக அழைத்துப் போய், விடிகாலையிலேயே நெய் ஒழுகும் ரவா கேசரி, போண்டா விளம்பி, கடையின் விளம்பரப் பலகையைத் திறந்து வைக்கச் சொன்னார்கள்.

ஆங்கிலத்தில் எழுதிய போர்ட் அது. "டோர் டெலிவரி. உங்கள் வீடு தேடி வந்து எல்லா மொழியிலும் பால், பத்திரிகை வினியோகிக்கப்படும். "

மொழிவாரியான பால்? எனக்கு உண்மையிலேயே குழப்பம். 'பால்' என்பது 'ஹால்' ஆகவும், 'பல்' என்பது 'ஹல்' ஆகவும் மாறும் கன்னட மொழி கம்பீரமாக வலம் வரும் புண்ணிய பூமியில் அரை லிட்டர் தமிழ்ப் பால் கேட்டால் வீடு தேடி வந்து 'ஹல்'லை உடைத்துவிடுவார்களோ?

கடை ஆரம்பித்த நண்பரிடம் விளக்கம் கேட்க அவர் தலையில் கால் நூற்றாண்டு முன்னால் முடி இருந்த இடத்தைச் சொறிந்தபடி சங்கடமாகச் சிரித்தார்.

"பத்திரிகை ஏஜன்சி மட்டும்தான் முதல்லே எடுத்தேன். பாக்கெட் பால் வியாபாரமும் வச்சுக்கலாம்னு வீட்டுக்காரிதான் ஒரே அடம். எழுதக் கொடுத்திருந்த போர்டுலே கடைசி நிமிசத்திலே அவங்க விருப்பத்தையும் சேர்த்துட்டேன். "

அதே பெங்களூரில், இன்னொரு நண்பரைப் பார்க்க அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏழாவது மாடியில் இருந்த வீட்டுக்குப் போயிருந்தேன். பக்கத்து பிளாட்டில் பெயர்ப் பலகையைப் பார்த்துக் குழம்பிப் போய் நின்றுவிட்டேன்.
'டாக்டர் அனுமந்தப்பா, கால்நடை மருத்துவர், அவசர உதவிக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்...'

அவசர உதவிக்கு ஆதிமூலமே என்று அழைத்தால் கருணாமூர்த்தியாக ஓடி வரும் வெட்டினரி டாக்டருக்கு எல்லா விலங்கினமும் நன்றி சொல்லும்தான். ஆனால் ஒரு பசுமாடோ, யானைக் குட்டியோ, ஆட்டுக் கிடாவோ எப்படி அந்த ஏழாம் மாடிக்குப் படியேறி வந்து வைத்தியம் பார்த்துக் கொள்ளும்?

"டாக்டர் புதுசாக் குடி வந்திருக்கார். கிளினிக்லே வச்சிருந்த ஒரு போர்டையே இப்ப சிரத்தைக்கு இங்கே மாட்டிட்டார்'' என்றார் நண்பர் என் திருதிரு முழிக்கு விடையாக.

முந்தாநாள் கண் மருத்துவரின் கிளினிக் வாசலில் பார்த்த 'புறக்கண் நோயாளிகளுக்கு இங்கே மருந்து தரப்படும்' என்ற அறிவிப்பு என்ன மாதிரியானது என்று யோசித்துக்கொண்டே கம்ப்யூட்டரைத் திறந்து இண்டர்நெட்டில் மேய்ந்தேன்.

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகாத கண் நோயாளியான அவுட் பேஷண்ட் 'புறக்கண் நோயாளி' ஆன சூத்திரம் புரிந்தபோது, இணையத்தில் லத்தீன் மொழிப் பல்கலைக்கழகத்தின் தகவல் பக்கத்தில் இருந்தேன். கிடைத்த தகவல் இது -

'புராதன ரோம் நகரத்தில் துணிகளை பிளீச் செய்து தர நிறுவனங்கள் இருந்தன. பிளீச்சிங்குக்கு அமோனியா வேண்டுமே. அந்தக் காலத்தில் ஏது அமோனியா? அமோனியா நிறைந்த, அதாங்க ஒன் பாத்ரூமைத்தான் இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, "இங்கே சிறுநீர் கழிக்கவும்' என்று அறிவுப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்.

ரோமானியர்கள் பற்றி இன்னொரு செய்தியும் இணையத்தில் படிக்கக் கிடைத்தது. அவர்கள் பிளீச் செய்யப் பயன்படுத்தியது போக மீந்த மேற்படி திரவத்தை வாய் கொப்பளிக்கவும் உபயோகித்தார்கள். துர்நாற்றம் இல்லாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. ரோமாபுரியிலேயே லோக்கலாகக் கிடைத்தது தவிர, ஸ்பெயின் பிரதேசத்திலிருந்து வரவழைத்த சரக்குக்கும் ஏக டிமாண்டாம். அதி சக்தி வாய்ந்த கிருமிநாசினி இந்த வெளிநாட்டுப் பொருள் என்று பரவலான நம்பிக்கை.

'ரோமானியப் பேரரசின் இறக்குமதி லைசன்ஸ் பெற்ற கடை. இவ்விடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஸ்பெயினிலிருந்து வந்த நயம்...'

அறிவுப்புப் பலகை கற்பனையில் துரத்த ஆரம்பிக்க, கம்ப்யூட்டரை அவசரமாக மூடினேன்.

தினமணி கதிர் - 'சற்றே நகுக' ஜூலை 17, 2005

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது