Sunday, March 06, 2005

பகாகா ... பகாகா .. பகாகா

நத்தார்தினம் (கிறிஸ்துமஸ்) வர இரண்டு மாதம் இருக்கும்போதே யார்க்ஷயரில் ஏகப்பட்ட தள்ளுபடி விற்பனைகள். உள்ளாடையிலிருந்து தங்க நகை வரை பலதும் சலுகை விலையில் கிடைப்பதால் ஹாலிபாக்ஸ் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

'ஐந்து புத்தகம் ஐந்து பவுண்ட்' - என்னைக் கவர்ந்த தள்ளுபடி விற்பனை இது. போன வாரம் புத்தகக் கடையில் நுழைந்து ஒரு சின்ன மூட்டை புத்தகங்களோடு திரும்பினேன். தொடர்கதை எழுதுவதைக் கூடத் தள்ளி வைத்துவிட்டுச் சுவாரசியமாக வாரக் கடைசியில் படிக்க எடுத்த முதல் புத்தகம் 'மார்க்கோ போலோவின் பயணக்குறிப்புகள்'. ('The Travels of Marco Polo' - Wordsworth Classics publication).

பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் (A.D 1271) வெனிஸ் நகரத்திலிருந்து உலகச் சுற்றுப்பயணம் கிளம்பியபோது மார்க்கோ போலோவுக்கு வயது பதினேழு தான்.

மங்கோலியாவில் குப்ளாய் கான் சக்கரவர்த்தியாக இருந்த காலம் அது. மங்கோலியாவில் அரச ஊழியத்தில் நிறையக் காலம் கழித்தாலும், மார்க்கோ போலோ மற்ற நாடுகளுக்கும் போயிருக்கிறான். போனதோடு மட்டுமில்லாமல் அவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்பும் எழுதி வைத்திருக்கிறான். அந்த நாடு நகரங்களில் தமிழகமும் உண்டு.

(திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழர்களில் ஒருவர் கூட இப்படித் தான் போன நாடுகளைப் பற்றிச் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், களப்பிரர் காலத்திலும், அதற்கு அப்புறமும் எழுதாத காரணம் என்னவாக இருக்கும்?)

பதினேழு வயது இளளஞன் எழுதியது என்பதாலோ என்னமோ மார்க்கோ எழுதியதில் பாதி நிஜம். பாதி கற்பனன. உண்மையும் கற்பனையும் இது இது என்று இனம் பிரித்து அறிய முடியாமல் இரண்டரக் கலந்திருப்பதால் இந்தப் பயணக் குறிப்புகளுக்கு அலாதியான சுவையுண்டு.

உதாரணத்துக்கு மார்க்கோ போலோவின் தமிழகப் பயணம் பற்றி - அடைப்புக்குறிக்குள் இருப்பவை நம்ம கைச்சரக்கு!

அவன் இலங்கை மூலமாக வந்தது மாபாருக்கு - மதுரை. 'செந்தர் பந்தி' அரசாண்ட காலம் அது. அதாவது பாண்டிய அரசன் சுந்தரபாண்டியன். மாறவர்மன்?

அப்போது பாண்டிய நாட்டில் மும்முரமாக முத்துக் குளித்திருக்கிறார்கள். வருடத்தில் மூன்று மாதம் - ஜூலையிலிருந்து செப்டம்பர் வரை - மட்டுமே நடந்தாலும் பாண்டிய நாட்டுக் கருவூலத்தில் பணத்தைக் குவித்த தொழில் அது.

("முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்முன்னாலே வந்துநின்றான் காலன்.சததமின்றி வந்தவனின்கைத்தலத்தில் பத்துமுத்தைபொத்திவைக்கப் போனான்முச் சூலன்"என்ற மஹாகவியின் குறும்பா நினைவு வருகிறது. காய் காய் தேமா/ காய் காய் தேமா / காய் காய் /காய் காய் / காய் காய் தேமா என்று குறும்பாவுக்கு அவர் சொன்ன இலக்கணமும்)

முத்துக் குளிப்பவர்களோடு மந்திர தந்திர்ம் தெரிந்த பிராமணர்களும் கடலுக்குப் போயிருக்கிறார்கள். அபாயகரமான சுறாமீன்களின் வாயைக் கட்ட உச்சரிக்கப்ப்டும் மந்திரங்களை இவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். சாயந்திரத்துக்கு மேல் இந்த மந்திரம் பலிக்காது என்று டைமிங் செய்து வைத்துக் கொள்வதால், இரவில் யாரும் முத்துக் குளிக்கப் போவதில்லை.
மீறிப்போனவர்கள் பசித்த சுறாமீனுக்கு ராச்சாப்பாடாவார்கள்.

மறைக்க வேண்டியதை மறைத்து குறைந்த பட்ச ஆடையே த்மிழர்கள் உடுத்தி இருக்கிறார்கள். செந்தர் பந்தி என்ற சுந்தர்பாண்டியனும் அப்படியே. ஆனால் அவன் அரசன் என்பதால் கை, கால், தோள், மார்பு என்று உடம்பு முழுக்க ஏகப்பட்ட நகைகளை அணிந்து இருக்கிறான். அதில் முக்கியமானது நூற்று நான்கு முத்துக்கள் கோர்த்த மாலை (நூற்றெட்டு இருக்கணுமேப்பா, சரியா எண்ணினியோ!).

நூற்று நாலு இருப்பதற்குக் காரணம் செந்தர்பந்தி தினம் பல தடவை அவன் வழிபடும் கடவுளை வணங்கி நூற்று நாலு தடவை ஒரு மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்பதுதான். அந்த மந்திரம் ரொம்ப சுலபமானது - "பகாகா ... பகாகா .. பகாகா"

(ரீல் விடுறான் பையன் என்று முதலில் தோன்றினாலும் கொஞ்சம் ஆராய்ந்தால் அது 'மகேசா .. மகேசா .. மகேசா'வாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அல்லது பசாசா என்று வைத்துக் கொண்டால், பரமேசா .. பரமேசாவாக இருக்கலாம்.).

சுந்தரபாண்டியனுக்கு ஆயிரம் மனைவிகள் மற்றும் வைப்பாட்டிகள். (முத்துக் குளித்து வந்த பணத்தில் பாதி இவர்கள் குளித்த, குளியாமல் இருந்த வகையிலேயே கரைந்திருக்கணுமே). இத்தனை பெண்கள் போதாதென்று தன் சொந்தத் தம்பி மனைவி மேல் ஒரு கண் செந்தர் பந்திக்கு. அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்று (பகாகா பகாகா சொல்லாத வேளைகளில்) மும்முரமாகச் செயல்பட்டிருக்கிறான்.

பார்த்தாள் பாண்டியனின் அன்னை. அவனைக் கூப்பிட்டு, "நீ இந்த மாதிரி அதர்மமான காரியம் எல்லாம் செய்தால், உனக்குப் பால் கொடுத்த் இந்த மார்பகத்தை அறுத்துப் போட்டு விடுவேன்" என்று சூளுரைக்க, பாண்டியன் அரண்டு போய் தம்பி பெண்டாட்டியை விட்டுவிட்டான்.

(மார்க்கோ போலோவுக்கு இந்தச் செய்தி எப்படிக் கிடைத்திருக்கும்? செந்தர் பந்தி அவன் தோளில் கை போட்டுக் கொண்டு என் சோகக் கதையைக் கேளுப்பா என்று சொல்லியிருக்க மாட்டான். பின்னே? வேறென்ன? கிசுகிசுவென்பது பதிமூன்றாம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது என்று தெரிகிறது.).

யாருக்காவது கொலைக் குற்றம் சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டால், குற்றவாளி ஏதாவது ஒருதெய்வத்துக்கு நேர்ந்து கொண்டு தன் உயிரைத் தானே போக்கிக் கொள்வதன் மூலம் சொர்க்கம் போகும் சலுகை அவனுக்கு வழங்கப்படுகிறது. ஏழு கத்திகளை வைத்து அங்கங்கே குத்தி, கடைசிக் குத்து நெஞ்சில் சதக்கென்று பதிய கைலாச பதவி அடைய வாய்ப்பு.

பசுவைத் தெய்வமாக வணங்குகிறார்கள். பசு மாமிசத்தைப் புசிப்பதில்லை. இறந்த மாட்டின் உடலை எடுத்துப் போய்ச் சாப்பிட த்னிப்பட்ட பிரிவினர் இருக்கிறார்கள். காய் (gaui) என்பது அவ்ர்கள் இனத்தின் பெயர். (வடமொழியில் / இந்தியில் காய் என்பது பசு; மார்க்கோ போலோ குறிப்பிடுவது 'இழிசினர்' என்று சங்க இலக்கியத்தில் வரும் தலித்துக்களையா?)

யாராவது கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அந்த ஆள் தெருவில் போகும்போது, கடன் கொடுத்தவன் சரசரவென்று அவனைச் சுற்றி ஒரு வளையம் வளைந்து விடுகிறான். பணத்தைத் திரும்பத் தரும் வரை அவன் அந்த வளையத்துக்குள்ளேயே நிற்க வேண்டியதுதான். செந்தர் பந்தியே ஒரு சந்தர்ப்பத்தில் அந்நிய நாட்டு வணிகன் ஒருவனிடம் இப்படிக் கைமாற்று வாங்கி, இந்தோ தரேன் .. அந்தோ தரேன் என்று நழுவிக்கொண்டிருந்தான். அவன் ஒரு நாள் குதிரையில் போகும்போது கடன் கொடுத்தவ்ன் அவசர அவசரமாகத் தரையில் அவனைச் சுற்றிக் கோடு வரைய, அரசன் கட்டுப்பட்டு அப்படியே நின்றான். அரண்மனையிலிருந்து பணம் எடுத்து வந்து அடைத்து சுந்தரபாண்டியனன விடுவித்துப் போனார்கள். (மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் அதற்கு முன் அடகு வைத்தானா என்ன?)

மக்கள் நாள் முழுக்க வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பை மென்று வழியெல்லாம் துப்புகிறார்க்ள். (நிச்சயம் மார்க்கோபோலோ தமிழ்நாடு வந்திருக்கிறான் - ரீல் விடவில்லை என்பதற்கு இது ஒன்றே போதும்!)

வெற்றிலை எச்சிலைத் தரையில் துப்பாமல் எதிரில் இருப்பவன் மூஞ்சியில் துப்பினால் அவனோடு சண்டை போட விருப்பப் படுகிறான் என்று அர்த்தம்.

(மீதி வெற்றிலையை மென்றபடியே) துப்பியவனும், (வெற்றிலைக்காவி வடியும் முகத்தைத் துடைக்காமலேயே) மற்றவனும் மன்னனிடம் போகிறார்கள். செந்தர் பந்தி ஆளுக்கு ஒரு வாளைக் கொடுக்கிறான். இர்ண்டு பேரும் உக்கிரமாகக் கத்திச் சண்டை போட்டு அதில் ஒருத்தன் பரலோகம் போகும்வரை சண்டை தொடர்கிறது.

("வெட்டிக்குங்கப்பா .. " என்று சாவகாசமாக இப்படிக் கத்தி எடுத்துக் கொடுத்து, துப்பல் சண்டையை எல்லாம் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கச் சுந்தரபாண்டியனுக்கு எப்படி நேரம் கிடைத்தது? பகாகா-பகாகா,ஆயிரம் மனைவி, தம்பி பெண்டாட்டி, அரசியல் நிர்வாகம், கைமாற்று வாங்குவது என்று நெட்டி முறியுமே நாள் முழுக்க!).

ரொம்ப வெப்பமான பிரதேசம் இது. குடிமக்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளிக்கிறார்கள். (வைகையில் தண்ணீர் நிறைந்திருந்த் காலம்!)

வருடத்தில் இரண்டு மாதம் மழை பெய்கிறது. மற்றப்படி, அனல் அடிக்கிறது. (மதுரைப் பக்கத்துக் காரனான எனக்கு மார்க்கோ போலோ சொல்வது புரிகிறது. நீண்ட நல்ல வாடைக்காலம் மதுரையில் நிலவியதாக நக்கீரர் சொல்வதுதான் விளங்கவில்லை - நெடுநல்வாடை அழகான கவிதை என்றாலும் கூட. ஒருவேளை அவர் மழைக்காலத்தை வாடைக்காலமாகச் சொல்கிறாரோ?).

நாட்டில் கொசுக்கடி அதிகம். மக்கள் கொசுவலை கட்டிக் கொண்டு அதற்கு உள்ளே தான் தூங்குகிறார்கள்.உள்ளே படுத்தபடி ஒரு கயிற்றை இழுத்ததும் வலை நாலு பக்கமும் கவிந்து கொள்கிறது.(நல்லவேளை, மார்க்கோ போலோ கொசுவலையைத் தூக்கிப் பார்த்து ரன்னிங்க் கமெண்டரி கொடுக்கவில்லை. அதுவும் செந்தர்பந்தியைப் பற்றி என்றால் இன்னொரு 'ஆயிரத்தொரு - மைனஸ் ஒண்ணு இரவுகள்' கிடைத்திருக்கும்)

கோவில்கள் நிறைய உண்டு. எல்லாக் கோவிலிலும் நிறைய் விக்கிரகங்கள். இந்த விக்கிரகங்களுக்குச் சேவகம் செய்யப் பெற்றோர் தம் பெண்மக்களை நேர்ந்து விட்டு விடுகிறார்கள். தினசரி காலையில் சாப்பாடு எடுத்து வந்து விக்கிரகத்துக்கு முன் வைத்து பாட்டுப்பாடி, உடம்பை அப்படியும் இப்படியும் வளைத்து (வயசான மாமிகள் பரத நாட்டியம் ஆடுவதைப் பார்த்தால் எனக்கும் இப்படித்தான் தோன்றுகிறது)
குதிக்கிறார்கள் இந்தப் பெண்கள். இது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடக்கிறது. சாமி சாப்பிட அவ்வளவு நேரமாகிறது.

(பரத்தை பற்றி பதிமூன்றாம் நூற்றாண்டு வெள்ளைக்காரன் சொல்கிறான் - இல்லையென்று என் முகத்தில் வெற்றிலை எச்சிலைத் துப்ப நிறையப் பேர் காத்திருப்பது தெரியும்).

(Halifax, West Yorkshire, 2002 Sep 28)

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது